திங்கள், 29 பிப்ரவரி, 2016

வேணாம் வரி விலக்கு...தமிழ் சினிமாவுக்கு.!

மொழியை வளர்ப்பதற்கும் பண்பாட்டினை காப்பதற்கும் பயன்படாத  தமிழ் சினிமாவுக்கு வரி விலக்கு கொடுத்து மக்களின்  வரிப்பணத்தை வீணாக்கவேண்டுமா? தமிழில் பெயர் வைப்பதாலேயே  மொழி வளர்ந்து விடுமா? இதுவரை வரிவிலக்கு பெற்ற படங்களினால் எத்தனை அடிக்கு  தமிழ் வளர்ந்திருக்கிறது? சொல்ல முடியுமா? இன்றைக்கும் தமிழன் இன்னொரு தமிழனை  சந்திக்கிறபோது  ஹலோ  ஹவ் ஆர் யுன்னுதானே கேட்கிறான்?
என்ன ப்ரோ சவுக்கியமாங்கிறான்  இன்னொருத்தன்.

ஆங்கிலம்  வேணாம்னு சொல்லவில்லை.ஆங்கிலேயன்  சுட்ட வடு அது காலங்களையும் கடந்து நிற்கும்.ஆங்கிலத்தை  அவசியப் படுகிற இடத்தில் சொல்லுங்கள்னுதான் சொல்றேன்.

மனைவியை  கொஞ்சுகிறபோது கூட  'டார்லிங்..'தான்.! ஏன் பெயரை சொல்லி  'கண்ணம்மா..இன்னிக்கி முன்னை விட அழகா இருக்கேடி செல்லம்"னா  அவள் முத்தம் கொடுக்கமாட்டாளா? முகம் திருப்பிக்குவாளா?


பண்பாட்டை  எந்த அளவுக்கு காப்பாத்தியிருக்கு தமிழ் சினிமா? மார்பை  மறைக்க வேண்டிய  துப்பட்டா  கழுத்தை சுத்திப் போட்டுக்கொள்ளத்தானே பயன் படுகிறது? மார்பகம்  தெரிய  தைரியமாக  ஆடைகள்  அணிந்து தெருவில் வருவதற்கு இந்த சினிமாதானே  காரணம்,

கதாநாயகிக்கு உள்ளாடை  அளவுக்கு கால்சட்டையை கொடுத்து  குலுங்க குலுங்க  ஆடவிட்டால்தான் கல்லா நிறையும்னு கணக்குப் போடுகிற தமிழ் சினிமாவுக்கு  எதற்காக  வரி விலக்கு கொடுக்கணும்?

கொப்புளிக்கிற ரத்தத்தை காட்டக்கூடாதுன்னு தணிக்கை குழு சொல்வதினாலேயே  வன்முறை இல்லைன்னு  ஆகிடுமா? அப்படிப்பட்ட  சினிமாவை காட்டினால்தான் ரசிகன் வருகிறான். ரசனை அந்த அளவுக்கு  தாழ்ந்து  போயிருப்பதற்கு  சினிமாதான் காரணம்.

இன்றைய தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகள் ,நடிகைகளின்  கவர்ச்சி இல்லை என்றால் காசு பார்க்கமுடியாது என்கிற அளவுக்கு மாறிக்கிடக்கிறது.
தமிழனின் அடையாளமே மாறிக்கிடக்கிறபோது எதுக்கு வரி விலக்கு என்கிற பம்மாத்து? மெட்ராஸ் ஹைகோர்ட்  என்பதை  தமிழுக்கு  மாற்ற முடியாமல்  தவிக்கிறார்கள். முதலில்  எங்கெங்கு  தமிழ் இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் தமிழை உட்கார வையுங்கள். பிறகு பார்க்கலாம் !



செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

ஆசைநாயகிக்காக கட்டிய அரண்மனை..

  அன்புள்ளவர்களே,
எத்தகைய  கட்டுரைகளை  விரும்புகிறார்கள் என்றால்  சினிமா,அடுத்து  செக்ஸ்  பிறகுதான் அறிவியல் சார்ந்த  கட்டுரைகள்.

எழுதுபவர்களுக்கு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? ஒருவகையில்  நீங்கள் தான்  செக்ஸ் எழுத்தாளர்களை  ஊக்குவிக்கிறீர்கள்  எனவும் சொல்லலாம். மிகவும்  வருத்தமுடன்தான் இதை பகிர வேண்டியதிருக்கிறது, கட்டுரைகளை பற்றிய  தங்களின்  கருத்துகளைக் கூட  சொல்வதில்லை. இது  என்ன மனப்பான்மை என தெரியவில்லை.

வருத்தமுடன் சொல்கிறேன் நண்பர்களே! வருத்தமுடன் சொல்கிறேன்.!! 

அது  ஓர்  அடர்ந்தகாடு..

மண்பாத்திரத்தில்  பால் சுமந்து வருகிறாள்  இளம் பெண். 1354-ம் ஆண்டு. அந்த காலத்தில்  ஏழைப் பெண்  எத்தகைய  ஆடைகள்  அணிந்திருக்க முடியும்? அவளின் வளமான  வலிமையான  இளமையை  மறைப்பதற்கு கூட  போதிய ஆடைகள்  இல்லை. அவளுக்கு தலையில் இருக்கிற  பால் பாண்டம் கூட  சுமையாக இல்லை. இளமையின் திமிறலை அவளால்  அடக்க முடிய வில்லை..( பாலிருக்கும் கிண்ணம்  மேலிருக்கும் வண்ணம்  நீ  செய்த கோலமல்லவா? என்கிற பாடல்தான்  நினைவுக்கு வந்தது.)

வீடுகளை  இழந்தவர்களும் ,வீட்டை விட்டு ஓடி வந்தவர்களும்  ஒன்று சேர்ந்து  வாழ்கிற  அந்த சிறிய  கிராமத்தில்  வாழ்கிறார்கள். அவர்கள்தான்  அந்த பால் விற்கிற  இளம்பெண்ணின்  வாடிக்கையாளர்கள். அவளது பெயர்  குஜ்ரி! அவளது  வாடிக்கையாளர்களில்  மான்களை  வேட்டையாட வருகிற ஒரு வேட்டைக்காரனும்  ஒருவன். அவனது   ஆடைகளும்  தோரணையும்  அவனை   பிரபு வீட்டுப் பிள்ளையாக  அடையாளம்  காட்டியது.

அவனுக்கு  அவள் மீது ஆசை, அவளுக்கும்தான்! 

அவன்  பெரிய வீட்டுப்பிள்ளை  என்பதால்  அல்ல. அவனை அவள் உளமார  நேசித்தாள்!

அவனும்தான். அவளுக்காக  எதற்கும்  துணிந்திருந்தான். 

அவன்  வேறு  யாருமில்லை ,துக்ளக். பெரோஸ் ஷா  துக்ளக்.

குஜ்ரியை  தன்னுடன்  டில்லிக்கு  வந்துவிடுமாறு  அழைத்தான். 

அவள் மறுத்து விட்டாள்!

அதனால் ஹரியானா  அருகே  ஹிசார் என்கிற இடத்தில் ஒரு மாளிகையை  கோட்டையுடன் உருவாக்கினான்.

அது சிதிலம் அடைந்து  கிடந்தாலும்  காதலின் சின்னமாக  நிற்கிறது.

  

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

ராணிகளை நிர்வாணமாக நிறுத்திய இந்திய மன்னன்.

வியப்புடன் பார்க்கவேண்டிய உண்மையான தகவல்தான்,

இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்களே என்கிற கோபம் சிலருக்கும், நம்மால் அப்படியெல்லாம்  வாழ முடியவில்லையே என்கிற தவிப்பு பலருக்கும்  உண்டாகலாம்.

ராஜஸ்தானத்து பரத்பூரை ஆட்சி செய்தவர்  கிஷான்  சிங் .உல்லாசப் பிரியர் . இவரது  வாழ்க்கையைப் பற்றி திவான் சரமணி தாஸ் புத்தகம்  எழுதியிருக்கிறார்.மன்னனின் விசித்திரமான ஆசைகளை அதில் விவரித்திருக்கிறார்.அதை பாஸ்கர் இணைய தளத்தில் காண முடிகிறது.

கிஷான் சிங். உல்லாசப் பிரியர்  மட்டும் இல்லை. நீந்துவதிலும் கெட்டிக்காரர் .நீந்தாமல் ஒரு நாளும் இருப்பதில்லை. அதற்காக உலகத்தில் எதைக் கேட்டாலும்  வாங்கிதருவதற்கு தயாராக இருந்தார் . இழப்பதற்கு தயார் இல்லை.விவரமான ஆளுதான்!

தனக்கான நீச்சல் குளத்தை அவரே  வடிவமைத்தார்  .

இறங்கி செல்வதற்கு பனிரெண்டு படிக்கட்டுகள். மாதங்களை குறித்தனவோ  என்னவோ!அத்தனைப் படிக்கட்டுகளும் சந்தனக்கட்டைகள்.

இளம் சிவப்பில் அதாவது பிங்க் வண்ணத்தில் பளிங்கு கற்களால் சுற்றுச்சுவர்களும். அதே வண்ணத்தில் குளத்தின் அடித்தளமும்!

நாணயம் கிடந்தாலும்  துல்லியமாக தெரியும்.அருவி நீரைப் போன்ற குளிர்ந்த  நன்னீர்.

மன்னனுக்கு நாற்பது மனைவிகள். நரை விழுந்து நாடி தளர்ந்த எல்லா மன்னர்களுமே இதில் மட்டும் 'குறை'ந்தவர்களாக இல்லாமல்  'நிறை'ந்தவர்களாகவே   இருந்திருக்கிறார்கள்.

இரவு நேரம். மன்னன் இப்போது நீராட செல்கிறார் .

அத்தனைப் படிகளிலும்  ராணிகள் நிற்கிறார்கள். நிர்வாணமாக ! படிக்கு ஒருவராக..

என்ன மது அருந்தாமலேயே  போதை வருகிறதா?

படிகளில் நின்றவர்கள் நீங்கலாக எஞ்சியவர்கள்  குளத்தினுள்!

முதல் படியில்  கால்வைத்த மன்னர்  நிர்வாணமாக நின்ற ராணியை இடது கரத்தால் தள்ளி வலது கரத்தால்  அணைக்கிறார்   இறுக்கமாக.

அவளது இளமை மேலும்  எதையோ எதிர்பார்க்கிறது.

இப்படி பனிரெண்டு படிகளிலும் நின்ற  பட்டத்து  மகிசிகளுக்கும்  வாய்ப்பு,

பனிரெண்டு  படிகளிலும்  இறங்கி தள்ளி அணைத்து  தள்ளி தண்ணீருக்குள்  இறங்கிவிட்டார் 

மனைவிகள் நாற்பது. அத்தனை பேர் கைகளிலும்  மெழுகு வர்த்தி. எரிகிறது.குளத்தை சுற்றிலுமுள்ள  விளக்குகள் அணைக்கப்பட்டன.  மன்னர்   ஒவ்வொரு ராணியுடனும் ஆடுகிறார் .

யாருடைய விளக்கு கடைசி வரை அணையாமல் நின்றாடுகிறதோ அவள்தான் அன்றைய இரவில் மன்னனின்  படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள்.

கிஷான் மன்னன் வாழ்ந்திருக்கிறானய்யா !!

  

சனி, 20 பிப்ரவரி, 2016

ஷாஜகான் காதல் காமமா? காதலா?

ஷாஜகான்-மும்தாஜ் மீது கொண்டது காதலா,காமமா?

காதல் என்கிறது தாஜ்மஹால்!

'இல்லை இல்லை அது காமம்தான்" என்கிறது அவளது மரணம்.

"ஏழு மனைவிகளில் மும்தாஜ்  நாலாமவள் .எப்படி காதல் ஆகும்?"

இதுவும் நல்ல கேள்விதானே?

காதல் என்பது மனம் சார்ந்ததா ,உடல் சார்ந்ததா?

ஒருவனுக்கு ஒருத்தி என்பது கற்புக்கு வேண்டுமானால் கேடயமாக இருக்கலாம். அது காதலை தடுக்கமுடியாது.

ஒரு செடியில் ஒரு பூ மட்டும்தான் பூக்கும் என்றால்  அது செடியே  இல்லை.

அதைப் போல ஒரு மனதில்  ஒரு தடவைதான் காதல் மலரும் என்றால் அது  மனமே அல்ல!

மனம் மலடு இல்லை.

அள்ள..அள்ள..குறையாத  அட்சய பாத்திரம்."

இது ஒரு தரப்பு  வாக்குமூலம்,

மறுதரப்பு என்ன சொல்கிறது?

மும்தாஜ் ஏன் மரணத்தை தழுவினாள்?

சாவின் பிடியில்  அவள் தவழ்ந்த போது அவளுக்கு வயது முப்பத்தி ஒன்பது.
ஜூன் 17......1631,.வருகிற  ஜூன் ஏழு வந்தால் 385 ஆண்டுகள் ! பதிமூன்று  பிள்ளைகளை பெற்றெடுத்து பதினான்காவது  தடவையாக கருவுற்று குழந்தை பெறும் தருவாயில்  இறந்திருக்கிறாள்.'போஸ்ட்பார்ட்ரன் ஹெமரேஜ் ' என்கிறது மருத்துவம்..

மும்தாஜை காமத்தின் வடிகால் என்பதாகவே  ஷாஜகான் கருதியிருக்கிறான்.' என்கிறது மறுதரப்பு.   தனது  ஏழு மனைவியரில் மும்தாஜ்  மட்டுமே கவனத்தை  ஈர்த்திருக்கிறாள் .

மனைவிகள் ஏழு பேராக இருந்தாலும்  அவர்களில் கணவனின் உண்மையான  அன்புக்கு ஆறுதலாக இருந்திருக்கிறாள் மும்தாஜ் என்பதுதான்  தாஜ்மகால்  சொல்கிற உண்மை.

ஆண் ஆதிக்கம் என்பது  புராணங்களில் இருந்து இன்றைய காலம் வரை  மாறாமல் இருக்கும் கிருமி.

ஒரு செடியில் பல பூக்கள் பூப்பதைப் போல ஒரு பெண்ணின்  மனதிலும் பல புஷ்பங்கள்  பூத்துக் குலுங்க  ஆண் சம்மதிப்பானா?

அப்படி சம்மதித்தால்  அவன் ஒரு நபும்சகன்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

54 ஆண்டு பயணம்.....

பத்திரிக்கை துறைக்கு வந்து அரை நூற்றாண்டை தாண்டியாகிவிட்டது, இன்னமும்  தொடர்கிறது, இறுதி மூச்சு இருக்கும்வரை!

 அதுவும் உடலும் மனமும் உறுதியாக இருக்கிற வரைதான் !

மனம் உறுதியாக இருக்கும். உடம்புதான் நாம் சொல்வதை கேட்பதில்லை. அது  அடங்காப்பிடாரி.அதையும் அடக்கியாளவேண்டும் என்றால் மனிதனின்  பொருளாதாரம் அனுமதிப்பதில்லை.

அமைதியாக இரு என்பார்கள் .பதட்டம் கொள்ளாதே என்கிறார்கள்.பத்திரிகைத்துறையில் இருப்பவர்களால் அது சாத்தியமா?  உதாரணத்துக்கு ஒரு நிகழ்வு.

மதுரையில் நடந்தது. 1979-ல்!

அகில இந்திய காங்.கட்சி தலைவராக இருந்த இந்திராகாந்தி மதுரைக்கு வந்தார்.அவருக்கு பழக்கடை பாண்டி தலைமையில் தெற்கு வெளிவீதி  காவல் நிலையம் அருகில் கருப்புக்கொடி காட்டுவதாக முடிவு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கில்  திமுகவினர் கூடிவிட்டார்கள், விமான நிலையத்திலிருந்து  புறப்பட்ட இந்திராகாந்தியின் காருக்கு  பின்னால்  ஆறாவது காரில்  மதுரை  பத்திரிகையாளர்கள் .அவர்களில் .அடியேனும் ஒருவன்.

திறந்த வெளிக் கார்  தெற்குவாசலை தொட்டதும் ஆர்ப்பாட்டம் வன்முறையாக  மாறியது.மலைப்பிஞ்சுகள்  சரமாரியாக பறந்தன.பத்திரிகையாளர்களும்  காயப்பட்டனர்.

"எங்களையுமா  பாண்டி அடிக்க சொன்னே?' என்று காரை விட்டிறங்கி  கேட்டால் அவர் சொன்னது 'ஓடுங்க..ஓடுங்க" என்பதுதான்! தோழர்களில் ஒருவர்  வீசிய  கல் எனது  வலது காலை பதம் பார்த்துவிட்டது. அந்த வீரத்தழும்பு  இன்னமும் இருக்கிறது.

காரில் இருந்த காந்தியை நெடுமாறன்,அப்துல்காதர்,சித்தன் ஆகியோர் குடைபோல் கவிழ்ந்து காப்பாற்றிய புகைப்படத்தை பிரபல நிறுவனத்திடம் இருந்து வாங்கி மதுரை மாலைமுரசில் 'எக்ஸ்குளுசிவ்'வாக  வெளியிடச்செய்தேன். அப்போதைய காங்.வழக்குரைஞர் பி.எஸ் .லக்ஷ்மிநரசிம்மனிடம் சர்க்யூட் ஹவுசில் வைத்து  எனது ரத்த காயத்தையும் காட்டினேன்.

இதற்கு பலன் என்ன தெரியுமா?

இந்திராகாந்தி தாக்கப்பட்ட வழக்கில் நானும் ஒரு சாட்சி. ஆனால் கடைசி வரை  நான் விசாரிக்கப்படவேயில்லை.ஆனால் சொன்னதாக போலிஸ் குற்றப்பத்திரிகையில் !

பின்னர் காங்.- திமுக .கூட்டணி  அமைந்தது. தலைவர்கள் ஒன்றாக  சேர்ந்து கொண்டார்கள். அரசியலில் கூட்டணி மாற்றங்கள் என்பது அதிசயம் இல்லை.கால மாறுதலை போலவே  அரசியல் மாற்றங்களும்.அங்கே நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர விரோதிகளும் இல்லை.

காவல்துறை என்பது இப்படிதான்  வழக்குகளை  பதிவு செய்யும் போலிருக்கிறது என்பதை தவிர வேறென்ன நினைப்பது?அப்போது  ஆட்சியில்  இருந்தவர்  எம்.ஜி.ஆர்.!

என்னால் மறக்கமுடியாத நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. 

திங்கள், 15 பிப்ரவரி, 2016

இவர்களும் ஜனாதிபதிகள்தான்...!

மழை நீரை உள் வாங்கிக்கொள்ளும் எல்லா சிப்பிகளுமே முத்துகளை  பிரசவிப்பதில்லை. பெரும்பாலும்  சுண்ணாம்பாகி  சுவரைத் தான் தழுவிக் கொள்கின்றன.அப்படித்தான் பெரிய பதவிகளை வகிப்பவர்களுக்கு சில பலவீனங்களும் இருக்கவே செய்யும். அது மனித இயல்பு. எல்லாருமே மகான்களாக இருந்துவிட்டால் அது உலகமாக இருக்காது.சாதுக்கள்  வாழ்கிற காடாக மாறலாம்.

அதைப்போலவே  பெரிய மனிதர்களிடம்  மனித இயல்புக்கு புறம்பான சில குணங்கள்  அமைந்திருக்கலாம். அந்த புறம்பானவைகள்  அவர்களது  இயல்பாக இருக்கலாம்.என்ன செய்யமுடியும்?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் காலடி வைத்த முதல் பிரம்மச்சாரி ஜேம்ஸ் புக்கானன். பதினைந்தாவது  பிரசிடென்ட். இவர் ஓர் 'கே' என்பதாக  கவுரவமாக  சொல்வார்கள். அந்த மாளிகையில்  இருந்த ஒரு ஆணுடன்  'உறவு' கொண்டு வாழ்ந்திருக்கிறார். இது அவரது 'மன' வாழ்க்கை. இன்று எத்தனையோ பிரபலங்கள். என்ன செய்யமுடியும்? தனிமனித சுதந்திரத்தை மனித ஒழுக்கம்  அடக்கி ஆள இயலாது.

முப்பதாவது பிரசிடென்ட்  கால்வின் கூல்டிக்.

இவருக்கு விசித்திரமான பழக்கம்.குதிரைப் பந்தயங்களை பார்ப்பது பிரபுக்களின் ஆசை என்பதை போல இவருக்கும் ஒரு வகையான ஆசை. தெருக்களில் நாய்கள் கூடுவதை நம்மில் எத்தனை பேர் ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்கிறோம். கால்வின் கூல்டிக்கிற்கும்  ஓர் ஆசை!  கோழிகளுடன் சேவல்  இணை  சேர்வதை பார்ப்பதற்கு ஆசை. தினமும் பண்ணைக்கு சென்று  வேடிக்கை  பார்ப்பார்.  ஒருநாள்  அந்த பண்ணையை பராமரிக்கும் வேலையாளிடம்  சென்று...

'அந்த சேவல் ஒரு நாளைக்கு  எத்தனைதடவை  கோழியுடன் இணை சேரும்?"

'டஜன் டைம்முக்கும் அதிகம் ஐயா!'

'ஒரு சேவல் ஒரு கோழியுடன் மட்டும்தான்  கூடுமா?"

'இல்லை ஐயா.! பல  கோழிகளுடன்  சேரும்"

'இதை அப்படியே திருவாட்டி கால்வின் கூல்டிக்கிடம் போய் சொல்லு!"

மிஸ்டர் பிரசிடென்டின் ஆசையை  என்ன சொல்வது?

மற்றொரு பிரசிடென்ட்  லிண்டன் ஜான்சனுக்கு  அவரது 'டிக்' மீது  ஆசை! ( ஆங்கில அகராதியை பார்க்க.)

ரொனால்டு  ரீகன் மீது   கற்பழிப்பு குற்றமும்  உண்டு.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு சரியானதுதானா?

எதிர்ப்பு எங்கு இல்லையோ  அங்கு வெற்றிங்கிறது  இல்லடான்னான்  ஒரு வெள்ளைக்காரன். நம்ம ஆளுங்க சொல்றதைவிட  அயல்நாட்டுக்காரன்  சொன்னாதானே மண்டைய்ல ஏறுது!

அதமாதிரிதான் காதலர் தின எதிர்ப்பும்! நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம்
.நாய்க்கும் கழுதைக்கும் கல்யாணம்னு  நடத்தி எதிர்ப்பை காட்டுறாங்களாம்.
அதுக்கு சாந்தி முகூர்த்தம் நடத்தினாங்களான்னு தெரியல. அதையும்  நடத்தி  இருந்தா  புண்ணியவான்களுக்கு  பொன்னாடை  போர்த்தி கவுரவம் பண்ணி  இருக்கலாம். மழை வரலேன்னாலும்  இதே மாதிரிதான் கல்யாணம் பண்றாங்க. தவளையைக் கூட விடுறதில்ல.இப்படி ஏட்டிக்கு போட்டி நடத்தி  பத்திரிகையில  பெயர்   வரணும்கிறதிலதான் குறியா இருக்காங்க,

கும்பிடுற சாமியே லவ் பண்ணித்தான்  கல்யாணம் கட்டியிருக்காங்க. கடவுளே  லவ் மேரேஜ்ங்கிறபோது இந்த குரூப் மட்டும் ஏன் இப்படி ராவடி  பண்ணுதுன்னு  தெரியல.ஜாதியை  கட்டி அழுகிறவங்களும் மதத்தை  கட்டி  மாவு  அறைக்கிறவங்களும்தான் இப்படி  எதிர்ப்புன்னு அலையிதுங்க. என்னத்த சொல்றது? மழை வெள்ள நிவாரணம் இன்னும் வரலியேன்னு  கவலைப்பட்டு கண்ணீர்  வடிக்கிற மக்களுக்கு  உதவியா  இவங்க ஏதாவது  செய்தா பாராட்டலாம்.என்ன மனுஷங்கய்யா !

ஒருத்தருக்கு ஒருத்தர்  பிடிச்சுதானே கல்யாணம் பண்ணிக்கிறாங்க, உனக்கேன்  நோவுதுங்கிறேன்? அதனால இந்த சமுதாயத்துக்கு  கால் ஒடிஞ்சிதா,கை விளங்காம போச்சா? முறையா மழை வராமல் போனதுக்கு  இந்த மாதிரி  ஆளுங்கதான் காரணம்..

காதலர் தினம்னு ஒருநாள்  கொண்டாடிட்டு போறாங்க. அப்பன் ஆத்தாவுக்கு தெரிஞ்சா கண்டிக்கட்டும் இல்லேன்னா கல்யாணம் பண்ணி வைக்கட்டும். அதுக்காகத்தான்யா ரொம்பபேரு  கொண்டாடுரானுக.பொண்ணு வயசுக்கு  வந்தா சடங்கு சுத்துறது  எங்க பொண்ணு  கல்யாண வயசுக்கு  வந்துட்டான்னு  மறைமுகமாக  சொல்றதுதானே! அத மாதிரி இதையும் நினைச்சுக்க. வயசுக்கு வந்து ரொம்ப நாளாச்சு நாங்க கல்யாணம் கட்டிக்கப்போறோம்னு  சொல்றதா நெனச்சு  கல்யாணத்தை பண்ணி வைன்னு  சொல்றாங்க. அதை புரியாமல்  எதிர்ப்பு அதுப்புன்னு ஏன் கலாட்டா பண்றிங்க?

சனி, 13 பிப்ரவரி, 2016

இது கிராமிய காதல்.

இது பட்டினத்துக் காதல் இல்லை. செல் வழியாக பேசத்தெரியாத  அசல் கிராமத்துக் காதல் நினைவுகள். உண்மையை சொல்லணும்னா இனக் கவர்ச்சியால்  விளைந்த காதல்.

அவன் தேர்ட் பார்ம் அதாவது எட்டாம் வகுப்பு. அவன்  படித்த பள்ளிக்கு பின்புறம்  ரீகல் டாக்கிஸ். ஆங்கில படங்களை மட்டுமே போடுவார்கள்.பகலில் நூலகம் ,மாலை ஆறு மணிக்குப் பிறகு ஆங்கிலப் படம். நண்பர்களுடன் ஒரு நாள் அங்கு படம் பார்த்த பிறகு அப்படி உதடுகளை கவ்வி முத்தமிடுவதில் அப்படி என்ன சுகம் இருக்கப்போகிறது  என்கிற எண்ணம் விதை விடுகிறது. அதுவே  அந்த ஆண்டு அவனது  தேர்வுக்கு குழியையும்  வெட்டிவிட்டது. அடுத்த வருடம்  தேறி விட்டான்  என்பது இருக்கட்டும். ஆனால் விதை  விட்ட முள்ளு மரம் மட்டும் குத்திக் கொண்டே இருந்தது.

மதுரைக்கு பக்கத்தில் திருமோகூர் .வைஷ்ணவ ஸ்தலம் .அழகான இரட்டைக்குளம்,ஒன்றில் தாமரைகள் மலர்ந்திருக்கும் .பக்கத்திலேயே இருந்த மற்றொரு குளத்தில் தாமரைகள் மலர்வதில்லை. குளத்தை ஒட்டி பெரிய ஆலமரம்.கண்மாய்க்கரையில். மத்தியான வெயிலில் ஆலமரத்தின் விழுதுகளை பிடித்தபடியே ஊஞ்சல் ஆடுவதில் இருக்கிற சந்தோசம் இருக்கிறதே ,அது குல சாமிக்கு ஆடுவெட்டி படையல் போட்டு சோறு தின்னுவதை விட சந்தோஷமாக. இருக்கும்.

அப்படி ஒருவாட்டி அங்கு போனபோதுதான் அவனுக்கும் ஆடு மேய்த்த  அவனொத்த வயசுக்காரிக்கும்   பழக்கம் ஏற்பட்டது.

'பெரிய வீட்டு கொலசாமி கும்பிடுக்கா வந்திருக்கிக?'.கேட்டாள்.

'ஆமா..இப்படி ஒத்தையில வந்திருக்கியே பயமா இல்லையா?'என்றான் .

'எதுக்கு பயப்படனும்.யாரும் கடிச்சா தின்னுறப்போறாக?

நெஞ்சில சூது வாது இல்லாம பேசுறா செவனம்மா.அதுதான் அவளின் பெயர்.

'அதுக்கில்ல பிள்ள.ஊரை விட்டு தள்ளி கம்மா  இருக்கு . எவனாவது வயக்காட்டுல ஒதுங்கி கால் கழுவ வர்ற போது தப்புத்தண்டாவா நடத்திட்டா என்ன பண்ணுவே?

'இந்தா இந்த தொரட்டி எதுக்கு இருக்கு? ஆட்டை பத்துறதுக்கு மட்டும் இல்ல .வச்சு ஒரு இழுப்பு இழுத்திர மாட்டா இந்த செவனு? ஒருத்தனும் எங்கிட்ட   கெட்ட நெனப்போட வந்திர முடியாது."

இப்படித்தான் அவனுக்கும் அவளுக்கும்  'பழக்கம்' ஏற்பட்டது. பெரியவீட்டில்  கரும்பு பந்தல் போட்டு மூனு நாள் குலசாமி கும்பிடுவது வழக்கம். மதுரையில் இருந்து கூட்டு வண்டி கட்டிதான் திருமோகூர் வருவார்கள். போக்குவரத்து  பஸ்கள் அவ்வளவாக இல்லாத காலம். மதுரை டவுனுக்குள் மட்டும் அலுமினியக்கலரில் டி.வி.எஸ் .பஸ்  ஓடிகொண்டிருந்தது..

மூணாவது நாள். வீட்டிலேயே கிடா  வெட்டி விருந்து. பய காலம்பரவே கம்மா கரைக்கு போய்விட்டான். அவனுக்கு முந்தியே செவனம்மாளும் கரையில்.! ஆலமர விழுதை பிடித்தபடி ஊஞ்சல்  ஆடிக்கொண்டிருந்தாள் .அவள் அப்படி தொங்கியபடியே ஆடுவதை பார்த்த அவனுக்கு என்னவோ போலிருந்தது. காற்றில் தாவணி ஒதுங்குவதை அவள் கவலைப்பட்டதாக இல்லை. கள்ளம் கபடம் இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தாள்.

அவனுக்கோ மதுரை ரீகல் டாக்கீஸில் படம் பார்ப்பதைப் போல் இருந்தது.

அவள் ஆடி முடித்ததும் தொண்டை கமற,உடம்பில் ஒரு உதறலுடன் கேட்கிறான்.

'செவனு! மதுரையில ஒரு இங்கிலிஸ் படம் பார்த்தேன்.பொம்பளையின்  ஒதடோடு ஒதடு வச்சு முத்தம்  கொடுக்கிராய்ங்க. அதத்தான் இங்க புருஷன் பொண்டாட்டி பண்ணுவாய்ங்களா? நீ பொம்பளயாச்சே! அதான் கேட்டேன்"

இதை கேட்டு முடிப்பதற்குள் பயம், பதற்றம்,வீட்டில் சொல்லிவிடுவாளோ என்கிற அச்சம் எல்லாம் சேர்ந்துகொண்டது.

இதற்கு செவனம்மா என்ன சொல்லியிருப்பாள்னு நெனைக்கிறீங்க?

அவனைத்தான் கேட்கணும்.

'சத்தியம் பண்ணிருக்கு செவனு.! வீட்டில் சொல்லாதுன்னு நம்பலாம்." என்ற படியே பெரிய வீட்டுக்கு போய் விட்டான். அந்த பக்கமா  அவள் கிராஸ் பண்ணிப் போனாலே  அவனுக்கு நடுக்கம்தான்,

சேதாரம் இல்லாமல் மதுரை போய் சேர்ந்தான்.

கிராமத்துப் பெண்கள் எப்பவுமே நெருப்புதான்!

திங்கள், 8 பிப்ரவரி, 2016

பள்ளி கல்வி கொள்ளை...

நியூ  அட்மிஷன்!

கை சப்புகிற  சின்னஞ் சிறார்களில்  இருந்து  அரைக்கால்  டவுசர், முழுக்கால்  டவுசர் பசங்கள் வரை பள்ளிகளில்  சேர்வதற்கு புதிய  அட்மிஷன்  வாங்க அலை அடிக்கிற காலமிது. முதல் நாள்  ராத்திரியே  பள்ளிக்கூட தெருவில் சுவர் ஓரமாக இடங்களை  ரிசர்வ் பண்ணிக்கொள்வார்கள்..அடாது மழை பெய்தாலும், பனி பொழிந்தாலும்  இடத்தை விட்டு நகர மாட்டார்கள். குடை  எதற்காக இருக்கிறதாம்? ஒரு முக்காடு போட்டுக் கொண்டு தூங்காமல்  காத்திருப்பார்கள் .பெத்த அம்மா நோயில் கிடந்தாலும்  ஆப் அடித்து விட்டு படுத்துக்கொள்ளும் உத்தமபுத்திரர்கள் அப்ளிகேஷன் பாரம் வாங்குவதற்கு கிடையாய் கிடப்பார்கள். நல்ல வேளை,காமராஜர் ஆட்சி காலத்திலேயே  போலீசார் முக்காடு கேஸ் போடுவதற்கு தடை போட்டாகிவிட்டது, அந்த பிரிவையே  ரத்து செய்து விட்டார் அந்த பெருமகன்.

இல்லாவிட்டால் அத்தனை போரையும் அள்ளிக்கொண்டு போய் '  திருடும் எண்ணத்துடன் இருட்டில் முக்காடு போட்டுக்கொண்டு பதுங்கியிருந்தார்கள்"என முக்காடு கேஸ் போட்டிருப்பார்கள்.கேவலம்.

நல்ல பள்ளிகள் என பெயர் எடுத்துவிட்டதாலேயே  அந்த பள்ளிகளில் அவர்கள் வைத்ததுதான்  சட்டம் என்றாகிவிட்டது. பில்டிங் நன்கொடை என்கிற பெயரில் பெருமளவு பணம் மக்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது.இப்படி பல வகைகளில்  பணம் கட்டாயமாக  வசூல்  செய்யப்படுகிறது. இதற்கு அரசும் ஒத்துழைக்கிறது. அதிகாரிகளும்  உடந்தை!
மக்களின் நாயகன் என்று சொல்லப்படுகிற நடிகர் ஒருவரின் பள்ளியும் இதற்கு விலக்கு இல்லை.அந்த பள்ளிக்கு உரிய  அங்கீகாரம்  கூட ஒரு முறை  காலதாமதமாக  ரினிவல் பண்ணப்பட்டதாக  சொல்லப்படுகிறது.  இப்படி கல்வியில் கொள்ளை அடிப்பது ஆட்சிகள் மாறினாலும் தொடர்வதுதான்  வேதனை.

தனியார் பள்ளிகளில் கல்வி போதனை  கவனமுடன் இருக்கிறபோது அரசு பள்ளிகளில் இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? யார் காரணம்? ஆசிரியர்களின்  அலட்சியத்துக்கு ஆணிவேர்  எங்கிருக்கிறது? கண்டறிந்து  களைய வேண்டிய  அரசு கைகளை கட்டிக்கொண்டு  'கண்டும்  காணாமல் போவது ஏன்?

எல்லாவற்றிலும்  அரசுக்கு 'பங்கு' இருக்கிறது!

காலம் காலமாக பள்ளிக்கல்வியிலிருந்து கல்லூரிக் கல்வி  வரை  தனியார் கொள்ளை அடிப்பதற்கு  துணை நிற்பது  அரசுதான்.

கல்வி இன்று நல்ல வியாபாரமாகிவிட்டது.

சனி, 6 பிப்ரவரி, 2016

நடிகைகள் போர்க்கொடி!

நடிகை பார்வதி அண்மையில் 'ராணி' வார இதழுக்கு அளித்த பேட்டியில் 'ஹீரோவுக்கு இணையாக ஹீரோயினுக்கும் சம்பளம் கொடுக்கவேண்டும்' என  சொல்லியிருந்தார்.

அவர் சொன்னதிலும் நியாயம் இல்லாமல் இல்லை..ஹீரோவை விட  அதிகமாக  உழைப்பதும் உரித்துக்கொள்வதும் ஹீரோயின்கள்தான்! பனி மலையிலும் சூட் கோட்  போட்டுக்கொள்வார், நாயகன்.,ஆனால் கதாநாயகிகளுக்கு  அரை நிர்வாண  கவர்ச்சி  ஆடைகள்தான்! அந்த பனிக்காட்டிலும் அப்படியே  உருள விடுவார்கள்.நாயகனை விட  குறைவான  சம்பளம் வாங்கினாலும் சகித்துக் கொண்டு போவது அவர்களது  தலை விதி! என்ன பண்ணுவது  கதாநாயகனை கடவுளாகவும் தலைவனாகவும்  காலம் காலமாக தொழுது  வருகிறானே தமிழ் ரசிகன்.

அவனுக்கு அப்பன் பெரியவன் இல்லை.அம்மா பெரியவள் இல்லை.
எல்லாமே கதாநாயகன்தான் ! அவனுக்காக  தீ குளிப்பான் ! அப்படிப்பட்ட நாயகனுக்கு சம்பளத்தை கோடிகளில் கொட்டுவது அவசியம்தானே!

ஆனால் ஆணும் பெண்ணும் சமம்தான்.! அரசியல் சட்டம் அப்படித்தானே  சொல்கிறது. பார்வதி சொன்னதைப் போல 'பெண்களுக்கும்  சமமாக  சம்பளம் தரவேண்டும் ' என்கிற குரல் எழும்பி இருக்கிறது..அது  நடந்தும் இருக்கிறது..!

கங்கனா ரனாவத், தீபிகா படுகோனே  இருவரும் பார்வதியின்  வாய்ஸை எதிரொலித்திருக்கிறார்கள்.

இதன் பலனை அறுவடை செய்திருக்கிறார் கத்ரினா.! பிட்டூர் என்கிற படத்தில்  ஹீரோ ஆதித்யாவுக்கு சமமாக கத்ரினாவும் நாலு கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இது  ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கும் பரவாமல் இருக்க முடியுமா? தற்போது அத்தகைய சக்தி  நயன்தாராவுக்கு  மட்டுமே இருக்கிறது.