Saturday, February 13, 2016

இது கிராமிய காதல்.

இது பட்டினத்துக் காதல் இல்லை. செல் வழியாக பேசத்தெரியாத  அசல் கிராமத்துக் காதல் நினைவுகள். உண்மையை சொல்லணும்னா இனக் கவர்ச்சியால்  விளைந்த காதல்.

அவன் தேர்ட் பார்ம் அதாவது எட்டாம் வகுப்பு. அவன்  படித்த பள்ளிக்கு பின்புறம்  ரீகல் டாக்கிஸ். ஆங்கில படங்களை மட்டுமே போடுவார்கள்.பகலில் நூலகம் ,மாலை ஆறு மணிக்குப் பிறகு ஆங்கிலப் படம். நண்பர்களுடன் ஒரு நாள் அங்கு படம் பார்த்த பிறகு அப்படி உதடுகளை கவ்வி முத்தமிடுவதில் அப்படி என்ன சுகம் இருக்கப்போகிறது  என்கிற எண்ணம் விதை விடுகிறது. அதுவே  அந்த ஆண்டு அவனது  தேர்வுக்கு குழியையும்  வெட்டிவிட்டது. அடுத்த வருடம்  தேறி விட்டான்  என்பது இருக்கட்டும். ஆனால் விதை  விட்ட முள்ளு மரம் மட்டும் குத்திக் கொண்டே இருந்தது.

மதுரைக்கு பக்கத்தில் திருமோகூர் .வைஷ்ணவ ஸ்தலம் .அழகான இரட்டைக்குளம்,ஒன்றில் தாமரைகள் மலர்ந்திருக்கும் .பக்கத்திலேயே இருந்த மற்றொரு குளத்தில் தாமரைகள் மலர்வதில்லை. குளத்தை ஒட்டி பெரிய ஆலமரம்.கண்மாய்க்கரையில். மத்தியான வெயிலில் ஆலமரத்தின் விழுதுகளை பிடித்தபடியே ஊஞ்சல் ஆடுவதில் இருக்கிற சந்தோசம் இருக்கிறதே ,அது குல சாமிக்கு ஆடுவெட்டி படையல் போட்டு சோறு தின்னுவதை விட சந்தோஷமாக. இருக்கும்.

அப்படி ஒருவாட்டி அங்கு போனபோதுதான் அவனுக்கும் ஆடு மேய்த்த  அவனொத்த வயசுக்காரிக்கும்   பழக்கம் ஏற்பட்டது.

'பெரிய வீட்டு கொலசாமி கும்பிடுக்கா வந்திருக்கிக?'.கேட்டாள்.

'ஆமா..இப்படி ஒத்தையில வந்திருக்கியே பயமா இல்லையா?'என்றான் .

'எதுக்கு பயப்படனும்.யாரும் கடிச்சா தின்னுறப்போறாக?

நெஞ்சில சூது வாது இல்லாம பேசுறா செவனம்மா.அதுதான் அவளின் பெயர்.

'அதுக்கில்ல பிள்ள.ஊரை விட்டு தள்ளி கம்மா  இருக்கு . எவனாவது வயக்காட்டுல ஒதுங்கி கால் கழுவ வர்ற போது தப்புத்தண்டாவா நடத்திட்டா என்ன பண்ணுவே?

'இந்தா இந்த தொரட்டி எதுக்கு இருக்கு? ஆட்டை பத்துறதுக்கு மட்டும் இல்ல .வச்சு ஒரு இழுப்பு இழுத்திர மாட்டா இந்த செவனு? ஒருத்தனும் எங்கிட்ட   கெட்ட நெனப்போட வந்திர முடியாது."

இப்படித்தான் அவனுக்கும் அவளுக்கும்  'பழக்கம்' ஏற்பட்டது. பெரியவீட்டில்  கரும்பு பந்தல் போட்டு மூனு நாள் குலசாமி கும்பிடுவது வழக்கம். மதுரையில் இருந்து கூட்டு வண்டி கட்டிதான் திருமோகூர் வருவார்கள். போக்குவரத்து  பஸ்கள் அவ்வளவாக இல்லாத காலம். மதுரை டவுனுக்குள் மட்டும் அலுமினியக்கலரில் டி.வி.எஸ் .பஸ்  ஓடிகொண்டிருந்தது..

மூணாவது நாள். வீட்டிலேயே கிடா  வெட்டி விருந்து. பய காலம்பரவே கம்மா கரைக்கு போய்விட்டான். அவனுக்கு முந்தியே செவனம்மாளும் கரையில்.! ஆலமர விழுதை பிடித்தபடி ஊஞ்சல்  ஆடிக்கொண்டிருந்தாள் .அவள் அப்படி தொங்கியபடியே ஆடுவதை பார்த்த அவனுக்கு என்னவோ போலிருந்தது. காற்றில் தாவணி ஒதுங்குவதை அவள் கவலைப்பட்டதாக இல்லை. கள்ளம் கபடம் இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தாள்.

அவனுக்கோ மதுரை ரீகல் டாக்கீஸில் படம் பார்ப்பதைப் போல் இருந்தது.

அவள் ஆடி முடித்ததும் தொண்டை கமற,உடம்பில் ஒரு உதறலுடன் கேட்கிறான்.

'செவனு! மதுரையில ஒரு இங்கிலிஸ் படம் பார்த்தேன்.பொம்பளையின்  ஒதடோடு ஒதடு வச்சு முத்தம்  கொடுக்கிராய்ங்க. அதத்தான் இங்க புருஷன் பொண்டாட்டி பண்ணுவாய்ங்களா? நீ பொம்பளயாச்சே! அதான் கேட்டேன்"

இதை கேட்டு முடிப்பதற்குள் பயம், பதற்றம்,வீட்டில் சொல்லிவிடுவாளோ என்கிற அச்சம் எல்லாம் சேர்ந்துகொண்டது.

இதற்கு செவனம்மா என்ன சொல்லியிருப்பாள்னு நெனைக்கிறீங்க?

அவனைத்தான் கேட்கணும்.

'சத்தியம் பண்ணிருக்கு செவனு.! வீட்டில் சொல்லாதுன்னு நம்பலாம்." என்ற படியே பெரிய வீட்டுக்கு போய் விட்டான். அந்த பக்கமா  அவள் கிராஸ் பண்ணிப் போனாலே  அவனுக்கு நடுக்கம்தான்,

சேதாரம் இல்லாமல் மதுரை போய் சேர்ந்தான்.

கிராமத்துப் பெண்கள் எப்பவுமே நெருப்புதான்!

No comments:

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...