
முதுமை என்பது ஒரு வரப்பிரசாதம்தான்.பேரன்,பேத்திகள் இவர்களுடன் வாழ்வது மகிழ்வான வலி நிவாரணி. எத்தகைய மன அழுத்தமாக இருந்தாலும் அவர்களுடன் பேசும்போது காணாது போய்விடும். ஆனால் அது துணை இழந்தவர்க்கு கிடைப்பதில்லை.பணம் இல்லாதவர்க்கும் கிட்டுவதில்லை என்பது முக்கியம்.
தாயை அவர்கள் மட்டும்தானா இழக்கிறார்கள்.மனைவியை தந்தை இழக்கிறானே..தாயின் பாசத்தை மட்டுமே பெற்ற பிள்ளைகள் தந்தையின் அருமையை அறிவதில்லை.இப்படி வாழக்கூடியவர்கள் தத்தமது நிலைப்பாடுக்கு ஆயிரம் காரணம் வைத்திருப்பார்கள்..அது நியாயமாகவும் இருக்கக்கூடும்.ஆனால் முதுமை அதனது வலிமையைக் காட்டும்போது அந்த முதியவனால் தாங்க முடியாது போனால்...?
இன்று அதிகாலையில் எனக்கே ஒரு நிகழ்வு!
குளியலறையில் அமர்ந்து எழுந்த எனக்கு வழக்கமான தலை சுற்றல். எனக்கு கழுத்து வலி கொடுத்திருக்கிற அருட் கொடை! ஸ்பாண்டலைட்டிஸ் என்பார்கள்.அதற்கு மாத்திரை மருந்துகள் என்பது பயிற்சி மட்டுமே! அலுவலகம் செல்லும் அவசரகதியில் சில நாட்களில் பயிற்சி சாத்தியமாவதில்லை
.டு-வீலரில் பயணிக்காதே. சென்னை மாநகர சாலைகளில் மேடும் பள்ளமும் குண்டும் குழியும் எலும்பு தேய்வை அதிகமாக்கிவிடும். கூடவே இடுப்பு எலும்பும் தேயும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நமது ஏழ்மைக்கு அதெல்லாம் தெரியுமா?
சரி விஷயத்துக்கு வருவோம்.
தலை சுற்றிய நான் தரையில் விழுந்துவிட்டேன்.இது இரண்டாம் முறை.தடால் என்ற சத்தம் கேட்டு எனது துணைவி காப்பாற்றிவிட்டாள். தகவல் அறிந்து கடைசிமகள் இல்லம் வந்து விட்டாள்.மருமகன் பேத்தியுடன் வந்துவிட்டார்.மருத்துவமனையில் இருந்து மகளின் பதட்டக்குரல்.மூத்த பெண் கவலையில்!இன்னும் யார் கஷ்டப்படுவார்களோ தெரியவில்லை.
அவர்களுக்கு நான் கொடுக்கிற தண்டனைதானே இது.?! எனது மகன்களுக்கு தெரியாது.அவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என்பது எனது விருப்பம்
.போனஸ் வாழ்க்கைதானே நான் வாழ்வது,
எனக்கு சுகம் ,சுயமாக வாழ்வதுதான்! வாழ்ந்து காட்டுவேன்.