வெள்ளி, 11 மார்ச், 2016

பூசனம் பூத்துப்போச்சு......

வலைப்பூ  வாசிக்கும்  வாசக நண்பர்களே..

                          அண்மையில்  மதுரைக்கு போயிருந்தேன்.பொறந்த ஊராச்சே
.போயி ரொம்ப நாளாச்சு அதான்  ஒரு விசிட் கொடுத்தேன்.ரொம்பவே  மாறிப்  போயிருக்குங்க.குடியிருந்த வீடு இப்ப கடையா மாறிப் போயிருக்கு.சுத்தமா டவுனுக்குள்ள யாரும் குடியிருக்கல்ல.ஊருக்கு  வெளியே வீடு கட்டி அங்க போயி இருக்காங்க பழகுன  மூஞ்சியை  பார்க்க முடியலியேன்னு கவலையோடு கீழப்பெருமாள் மேஸ்திரி  வீதி வழியா நடந்து போயிகிட்டிருந்தேன்.

திடீர்னு ' என்னப்பு . இங்கிட்டு என்ன சங்கதி?'ன்னு ஒரு குரல் .என் பழைய  சேக்காளி.வெங்கிட்டு.கல்லாவ்ள உக்காந்திருந்தான்.

'என்னடா வீட்டை வெங்கல சாமான் விக்கிற கடையா  மாத்திட்டியே ஏன் என்னாச்சு?'

'மாப்ள.ஊரோடு ஒத்துப்போயிருன்னு முன்னோர்கள் சொல்லிருக்காங்கன்னா  அர்த்தம் இல்லாம இல்ல. எல்லாப் பயலும் வித்துப்புட்டு மணலூரு செலைமான் உத்தங்குடி ஒத்தக்கடைன்னு  குடி போயிட்டாய்ங்க. இங்கிட்டு எல்லாம் கடையா போச்சு. இதில நாமட்டும் உக்காந்திருந்தா பொண்டு  புள்ளைகள் கடைத்தெருக்குள்ள நடமாடமுடியும் னு நெனக்கிறியா?,.அதான் அழகரு கோவில் பக்கமா  இடத்தை வாங்கி வீடு கட்டிட்டேன்."

'சரி, ஊட்டுல  கொழுந்தியா  சவுக்கியமா. இப்ப எத்தனை  புள்ளைங்க.?"

'ரெண்டும் ஆம்பளைப்பசங்கதான். ஒருத்தனுக்கு கல்யாணம் ஆயிருச்சி! சின்னப்பயலுக்கு  பொண்ணு பாக்கிறேன்.' என்றவன் கடைப்பையனை  கூப்பிட்டான்.'காப்பி கிளப்ல ரெண்டு காப்பி  வாங்கிட்டு வா..சீனிய  கொஞ்சமா போடச்சொல்லு" என்று காசும் கொடுத்தனுப்பினான். 'மாப்ள  மெட்ராஸ்ல என்ன பண்றே .எத்தனை புள்ளைங்க?'என்னை  விசாரிக்க  ஆரம்பிச்சான்.

'அதே  நிருபர் தாண்டா! பசங்க எல்லாம் செட்டில் ஆயாச்சு! ஏதோ போவுது.! வண்டி மக்கர் பண்ணாம போகுது. சரி..நம்மகூட  குண்டு விளையாடிட்டு  இருப்பானே  கொன்னவாயன் இப்ப என்ன பண்றான்?'

'அந்த பிசினாரிய கேக்கிரியா...ஒரு வலுசாரிய கட்டிக்கிட்டு  குடும்பம் நடத்துனான். அவ பக்கத்து வீட்டுக்காரி . என்ன மை போட்டாளோ அவ  காலடியிலேயே  கிடந்தான்.ஒரு நா லோட்டாவை எடுத்து நெத்திப்பொட்டுல  போட்டு அவனை  காலி பண்ணிட்டா. போலிஸ் கேஸ் ஆச்சு. எஸ்.ஐ.க்கு  என்ன மந்திரம் போட்டாளோ  அவனுக்கே வப்பாட்டியா  ஆயிட்டா.! இப்ப சென்ட்ரல் மார்க்கெட்ல  கர்மம் புடுச்சவதான் சண்டியர்..... வெவகாரம் பண்ணா வெளக்குத்தூண் போலிஸ்  லாக் அப்தான் ! ஒரு காலத்தில  ஒரு பய கூட  சீந்த மாட்டான். இப்ப அது  சண்டியர்த்தனம் பண்ணுது. அது கிடக்கட்டும். மத்தியானம் நம்ம ஊட்டுலதான் சாப்புடனும். வெஞ்சனம்  என்ன வைக்க சொல்ல.?"

'குட்டிப்பை  வைக்க சொல்லு. மெட்ராஸ்ல  ஆட்டுக்குட்டியின்  பை  கெடைக்கிறது  ரொம்பவும் கஷ்டம். சிலாட்டர்  ஆபீஸ்தான் போகணும்."

'மாப்ள. அது  இடுப்பு வலிக்கு நல்ல மருந்துப்பா! சரி...இப்ப எந்த கட்சிக்கு மெட்ராஸ்ல மெஜாரிட்டி?'

'சரியா சொல்ல முடியாது. ஜெயலலிதாவுக்கு  அவ்வளவா நல்ல பேரு இல்ல. வெள்ள நிவாரண உதவி சென்ட்ரல் கவர்மெண்டு கொடுத்தது.அதை சரியா கொடுக்கல. நானே நாலு நாளா  தண்ணிக்குள்ள கெடந்து கஷ்டப்பட்டேன்.எங்க ஏரியாவ்ள யாருக்கும் கிடைக்கல்.ரோடெல்லாம் நாஸ்தியா கெடக்கு.! மதுரை எப்படி?'

'இங்கேயும்  அம்மாவுக்கு  சரியில்ல. நம்ம விசயராசுக்கு அதான்பா  விசயகாந்து பேரும்  கெட்டுப்போயி  கெடக்கு. நரிமேடு.கரிமேடு,கீரத்துரை  அவனியாபுரம் இங்கெல்லாம் செங்கொடிக்கு நல்ல மரியாதை. ஆனா ஓட்டா மாறனுமே...கேடிகே தங்கமணி பி.ராமமூர்த்தி ,ஜானகியம்மா அளவுக்கு இப்ப யாருக்கும்  செல்வாக்கு இல்லப்பா.. '

'வைகோவுக்கு ?'

'விசயகாந்தை  அவர்  நம்பிட்டிருக்காரு! எனக்கென்னமோ  அதெல்லாம் பூசனம் புடுச்ச ஊறுகா  மாதிரி தெரியிது. சரி..சரி..!வா ஊட்டுக்கு  போலாம். சாப்பிட்டிட்டு  தூக்கம் போட்டுட்டு  அழகரையும் கும்பிட்டிட்டு  கோவில் வடை வாங்கிட்டு  ஊருக்கு கெளம்புறேன். முன்ன மாதிரி வடை  நல்லா இருக்குமா?'

'தெரியலடா  மாப்ள.!'
  

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...