Thursday, March 24, 2016

அன்புள்ள வைகோ அவர்களுக்கு,.....

மதிப்பிற்குரிய வைகோ அவர்களுக்கு,
                                                                அரைகுறையாக அரசியல் தெரிந்த ஓர் அரை வேக்காடு எழுதுவது....... முதலிலேயே என்னைப்பற்றி சொல்லிக் கொள்வது நல்லதுதானே! நீங்கள்  மாவீரன் பிரபாகரனை பற்றி ரொம்பவும் அக்கறையுடன் பேசி வந்ததால் அது உண்மையாக இருக்கும் என்று நம்பி  ஏமாந்த தம்பிகளில் அடியேனும் ஒருவன்..உங்கள் பேச்சின் வேகத்தை நம்பி ஏமாந்த எண்ணற்றவர்களில் நானும் ஒருவனாக இருந்ததற்காக வெட்கப்படாமல் இருக்க முடியுமா?

                                                         ஒரு தலைவராக இருந்தீர்கள்.மக்கள் நலக் கூட்டணியை அமைத்தீர்கள்.எவ்வளவு பெரிய காரியம்.ஆனால் விஜயகாந்தை  சேர்த்ததுடன் நில்லாமல்  கேப்டன் விஜயகாந்த் அணி  என்பதாக மாற்றினீர்களே , பெற்ற குழந்தையை  நொடி நேரத்தில்..... எப்படி கம்சனாக  மாறினீர்கள்? மக்கள் நலக்கூட்டணியின் மற்ற தலைவர்களும்  கை தட்டி வரவேற்ற கேவலத்தை டி.வி.யில் பார்த்து நொந்து போய்விட்டேன்.ஒரு வேளை உங்களின்  தந்திரமாக இருக்குமோ? எதிர்பாராத விதமாக வெற்றி வாய்ப்பு வேறு விதமாக இருந்துவிட்டால் ஊடகங்களில் விஜயகாந்தின் அணி என்பதாகத்தானே வரும்...எதற்கு அப்படி நினைப்பானேன்  அ.திமுக, திமுக இரண்டு பெரிய கட்சிகளையும் மீறி உங்கள் அணிதான் வெற்றி பெறப்போகிறது.!!!

                                       ஆனால் தேர்தல் முடிவில் விஜயகாந்த் அணியில் உள்ள கட்சிகளின்  ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கும் தெரிந்துவிடும் .ஒவ்வொரு கட்சியின்  ஓட்டு சதவிகிதமும் மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை  கொண்டுவரும்.தனித்து நின்றே ஆட்சியை பிடிக்கும் அன்புமணியின்  முதல்வர் பதவி பிரகாசமாக தெரிகிறது என்று கேலிடாஸ் கோப்பில் படம் பார்த்துக் கொண்டிருக்கிற டாக்டர் ராமதாஸ் அவர்களின் கனவும் கலையும். உங்கள் கூட்டணியை முந்துவாரா பிந்துவாரா என்பதுதான் தெரியவில்லை.

                          உங்களுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி என்று தைரியமாக  சொல்லிவருகிறீர்கள் .அது உண்மைதானா? மனசாட்சி பதில் சொல்லுமா?
உங்கள் விஜயகாந்த் கூட்டணியில்  முதல்வர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டி ருக்கும் அவர் தொகுதிப் பங்கீட்டுக்கு பிறகு  செலவு செய்வாரா? அல்லது நீங்கள் அவருக்கு செலவு செய்வீர்களா? அதிமுகவின் வெற்றிக்கு  உதவுகிற வகையில் உங்கள் கூட்டணி அமையப்போவதாக சொல்வதையும் புறம் தள்ள முடியாது. அது சரி பணப்பிரச்னை,உங்களுடையது. பிரதான பெரிய கட்சியாக இருக்கிற தேமுதிக.தான் செலவு செய்யவேண்டும்.

                        பெரியவர் நல்லகண்ணு ஐயா அவர்கள் சொன்னது இன்னமும்  நினைவில் இருக்கிறது. முதல்வர் வேட்பாளராக  முன்னதாகவே அறிவிப்பது ஜனநாயகம் இல்லை என்று சொன்ன அந்த பெரியவர்  உங்களின் அறிவிப்பை எப்படி ஏற்றார் என்பது தெரியவில்லை. அரசியல் சாணக்கியர் ,மாக்கியவல்லி  விஜயகாந்த் நாளைய முதல்வர் என்பதை மக்கள் ஏற்பார்களா?

                 தமிழ்நாடு முழுவதும் காலே தேய்ந்து கட்டையாகிப் போனதாமே..
அதுதான் வைகோ கண்ட பலன்!

                                                                      அன்புள்ள,
                                                        உங்களின் மாஜி தம்பி
                                                           நன்மாறன்.

No comments:

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...