சனி, 9 ஏப்ரல், 2016

அதிமுக இழக்குமா......திமுக பிடிக்குமா?

ஆட்சியை  அதிமுக தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது ஆட்சியை  திமுக  கைப் பற்றுமா?

அனேகமாக  இவ்விரு அணிகளுக்கு இடையில்தான் போட்டி இருக்க முடியும் என்கிற நிலைமைக்கு  தமிழகம் வந்திருப்பதாகவே கருதலாம்.. சில, அல்லது பல தொகுதிகளில் வேண்டுமானால்  விஜயகாந்த் அணி  கடுமையான போட்டியை கொடுக்க முடியும். அது தலைவர்கள் போட்டியிடுகிற தொகுதியாக  இருக்கலாம்.ஆனால் ஆட்சியை பிடிக்கிற  அளவுக்கு கணிசமான இடங்களை கைப்பற்ற இயலுமா என்பது ஐயம்தான்! அந்த அணியில் இருக்கிற கட்சிகளுக்கு தங்களது  வாக்கு சதவிகிதத்தை  உயர்த்த வேண்டிய  அவசியம்,கட்டாயம் இருக்கிறது தேர்தல் கமிஷனின் அங்கீகாரம்,  சின்னங்களை இழந்துவிடக்கூடாது என்கிற சிக்கல் இருக்கிறது.அதற்காகவே  பரவலாக  தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளுக்கு கடுமையான நெருக்கடியை வி.அணி உருவாக்கும்.திராவிட  கட்சிகளுக்கு அந்த அணி தலைவலி என்பதில் ஐய மில்லை.

1952- தேர்தலில்  மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது உடையாத  கம்யுனிஸ்ட் கட்சி 131 இடங்களில் போட்டியிட்டு 62 இடங்களை கைப்பற்றியது.அதாவது தமிழ்நாடு ஆந்திரம் கர்நாடகம்,கேரளம் ஆகிய மாநிலங்கள் இணைந்திருந்த மாநிலமாக இருந்த காலத்தில்.!மொத்தம் 367 இடங்களில் காங்.கட்சியினால் 152 இடங்களைத்தான் பிடிக்க முடிந்தது. சின்ன  கட்சிகளை உடைத்து ஆட்சியை அமைத்த காங்.கட்சிக்கு கல்யாணசுந்தரம் ,ஜீவா,பி.ராமமூர்த்தி ஆகிய ஜாம்பவான்கள் சிம்ம சொப்பனமாக  இருந்தனர். அந்த காலம் இனிமேல்  வரப்போவதில்லை. எதிர்கட்சிகளால் சட்டசபையில்   பேச முடிந்தது.ஆணித்தரமான  வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் கடந்த சட்டசபை  நிகழ்வுகளை நினைத்தால் எத்தகைய  ஜனநாயகத்தை  நாம் பறி கொடுத்திருக்கிறோம் என்கிற உண்மை நம்மை சுடக் கூடும். .

அத்தகைய  கனவு காலத்துக்குள் செல்லாமல்  இன்றைய நிலைமையை  பார்க்கலாம். கலைஞருக்கு  அடுத்த இடம்  ஸ்டாலினுக்குதான் என்பதற்கு  ஆருடம் பார்க்கத் தேவையில்லை. ஆனால் அதிமுகவில் ஜெ.வுக்கு அடுத்த இடம்  ஜெ.வுக்குத்தான்.! இதை  உறுதி செய்வதற்குத்தான்  'அம்மா' முன்னிலைப் படுத்தப்படுகிறார். காலப்போக்கில் எம்.ஜி.ஆர் .என்கிற மூன்று எழுத்தை அந்த கட்சியினர் மறந்து போகலாம்.புதிய தலை முறையினருக்கு  அண்ணாவைப்  பற்றி அவ்வளவாக தெரியாது என்பதைப் போல எம்.ஜி.ஆரும்  தெரியாது போக நேரிடலாம்.இந்த தேர்தலில் ஜெ.வெற்றி பெற்றால் அவருக்கு  அடுத்த இடம் சசிகலாவுக்குத்தான் என்பது பதிவு செய்யப்படும் என்பதில்  சந்தேகமே இல்லை.

அதிமுகவுக்கு இந்த தேர்தலில் சகலவிதமான 'பலங்களும்' இருக்கின்றன. அதை சந்திக்கிற சக்தி திமுகவுக்கு இருக்கிறது.

ஆனால் வெற்றியை  எழுதப் போகிற மக்கள் என்ன நினைக்கிறார்களோ?


கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...