திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சரத்குமார் திரை உலகில் இல்லையா?

எனது  மனதில்  நீண்ட நாட்களாக  உறுத்திக் கொண்டிருக்கிற  கேள்விதான் இது..

அவருக்குரிய  ஒரு இடம் திரை உலகில் இல்லாமல் இல்லை. . இருக்கிறது.!

 அந்த இடத்துக்கு அவரால் வர முடியும் .பிறகேன்   அதைப்பற்றிய அக்கறை  இல்லாமல் இருக்கிறார்? அரசியலில் முழு மூச்சாக  இருப்பதுதான்  காரணமா?

அரசியலில் அவர்  கண்ட பலன் என்ன?

அவரது  செல்வாக்கு நிழலில் சிலர் வளர்ந்தார்கள்.வாழ்க்கையை  வளப்படுத்திக்கொண்ட பின்னர் 'போய்யா நாட்டாமை...!' என்று  டாட்டா காட்டிவிட்டுப் போய் விட்டார்கள், இன்று பொட்டி கடை போட்டு போட்டியாக  வளரப் பார்க்கிறார்கள்.

இதெல்லாம் அரசியலில் சாதாரணம் !

உறங்கும்போது முதுகில் குத்துவது  எந்த கட்சியில்தான் இல்லை. ஓடிப்போவதும் வந்து சேர்வதும் தானே இன்றைய அரசியல் கட்சிகளின்  ஒழுக்கம்.

இதெல்லாம் கிடக்கட்டும். திரை உலகை விட்டு ஒதுங்கி நிற்பது  நடிகர் சங்கத் தேர்தலில் தோற்றதின் விளைவா? ராதாரவி  நடிக்காமல்  ஒதுங்கி விடவில்லையே? அதே கம்பீரத்துடன்  தொடரவில்லையா? பின் சரத் மட்டும் விரதம் இருப்பதேன்?

ஹீரோயிசம் உள்ள கேரக்டர்களுக்கு  அண்டை மாநிலங்களை தேடித்தானே  திரை உலகம் போகிறது!தனக்கேற்ற கேரக்டரில் "சூப்பர் நெருப்புடா " என்று  உச்ச நடிகர் மிளிரவில்லையா ?

உங்களின் திரை உலக ஆலோசகர்கள் தவறான வழியைக் காட்டுகிறார்களோ என்னவோ? புதிய கருத்துகளுடன்  புதுமையை தரவேண்டும் என்கிற  ஆவேசத்துடன்  திரை உலகை முற்றுகையிட்டு வாய்ப்புகளை  தேடுகிறார்கள்.

அவர்களிடம் கேளுங்கள். உங்களுக்கு வெற்றிப்படங்களை கொடுத்த  இயக்குநர்களும் சில  கதைகளில் நடிப்பதற்கு உங்களின் அரசியல் இமேஜ் இடம் கொடுக்காதோ என்று தயங்கலாம். அதை உடைத்தெறியுங்கள் .கலந்து பேசுங்கள்.

இன்றைய  சுதந்திர நாளில் எனது கருத்தை  பதிவு செய்கிறேன். அதை ஏற்பதும் புறம் தள்ளுவதும்  உங்கள் சுதந்திரம்.

எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன்.