வெள்ளி, 30 செப்டம்பர், 2016

மகாளய அமாவாசை .........அனுபவம்.!

தமிழர்களின் நம்பிக்கைகளில் திதி கொடுப்பதும் ஒன்று. மூதாதையர்கள் அன்றுதான் பூமிக்கு வருவார்களாம்.

தை அமாவாசையில் திதி கொடுத்தால் பணம்,சுகம் தேடிவருமாம்.

அதனால் எதை மறந்தாலும்  மறப்பார்கள்  புரட்டாசி, தை மாத அமாவாசைகலை மறக்கமாட்டார்கள்.

செப் .முப்பது அதிகாலை ஏழு மணிக்கே எழுந்து வடபழனி சிவன் கோவிலுக்கு  சென்றால் ....கூட்டமான கூட்டம்.! எல்லாமே திதி கொடுப்பதற்குத்தான்!

அய்யருக்கு தட்சணை நூறு ரூபா. ஒரு ஆளின் கட்டணம்.

பந்தியில் உட்கார்வதுபோல இரண்டு வரிசை. ஒரு வரிசைக்கு இருபது பேர். ஆக நாற்பது பேர்! பரேடு எடுக்கும் அதிகாரி மாதிரி அய்யர்!

.அவர் மந்திரங்களை சொல்லிக்கொண்டே என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லிக் கொண்டு  அடுத்தடுத்த பாட்ஜ்களை முடித்துக்கொண்டிருந்தார்.

தொடக்கத்தில் ஐந்து நிமிடங்கள்  நீடித்த மந்திரங்கள்  போகப்போக மூன்று நிமிடங்களில்  முடிந்தது.ஒருவர் அமர்ந்து இருக்கிறபோதே  அந்த இடத்தைப் பிடிப்பதற்காக  வரிசையாக நின்றார்கள்.

காலையில் இருந்தே அகத்திக்கீரையை  தின்று கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் தின்பதை நிறுத்தி அசை போட ஆரம்பித்து விட்டது.

"என்னங்க..பசு கீரையை எடுத்துக்கலியே?"
"பெரியவங்க கோவிச்சுக்குவாங்களோ"
"சித்தே  முன்னாடி வந்திருந்தா  பசு எடுத்திருக்கும்!"
ஈரமான தரையில் அமர்ந்து காரியம் செய்தது கூட பெரிய காரியமாக தெரியவில்லை. பசு கீரையை தொடவில்லையே என்பதுதான் அவர்களது கவலையாக இருந்தது.

ஆக  மந்திரம் மட்டும் முக்கியமில்லை. கீரையை பசுவும்  எடுத்து  இருக்க  வேண்டும் என்பது மனிதனின் நம்பிக்கையாக  இருக்கிறது.

வியாழன், 29 செப்டம்பர், 2016

சிவலிங்கம் 'ஈவில்" என்கிறது சிறுவர்களது விளையாட்டு!( படத்துடன்)

காவிரி பிரச்னைக்கு பின்னர் தமிழ்நாட்டில் நடப்பவை  அனைத்துமே பகீர் ரகம்.! தமிழர்க்கு எதிராக கர்நாடகத்தில் வெறியாட்டம் நடந்தது, வெறுப்பு நெருப்பு இன்னும் தணிந்த பாடு இல்லை.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தமிழகத்திலும் சூழல் சரியில்லை.வதந்திகளுக்கு வாய் அகலமாகி  இருக்கிறது.

இந்து முன்னணி பிரமுகர் படுகொலையை  ..பாஜக அரசியலாக்குகிறது. அதே  நேரத்தில் வெள்ளைக்காரன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தமிழர்கள்  வணங்கி வருகிற சிவலிங்கத்தை 'கெட்ட சக்தியாக " சித்தரித்து  யூ டியூப் பில்  பாலகர்களை  விளையாட வைத்திருக்கிறது.

தமிழர்கள் மட்டுமில்லாது வட இந்தியாவிலும் சிவன் வழிபாடு உண்டு. லிங்க வழிபாடு உலகில் உள்ள தமிழர்களுக்கு பொதுவானது.வைணவர்களும்  வணங்கும்  கடவுள்.

அந்த கடவுளைத்தான் கெட்ட சக்தியாக  சித்தரித்திருக்கிறார்கள்.

மாடு எங்களின் கடவுள் என கலவரம் விளைவிப்பவர்களின்  கண்களில்  இந்த விளையாட்டு படவில்லையா? விலங்கை விட ஈசன் இழிவானவனாகி  விட்டானா?

கடவுள் மறுப்பாளர்கள் கூட  இந்த இழிவை  தாங்கிக்கொள்ள மாட்டார்கள். எங்கள் நாட்டின் மக்கள் வழிபடும் தெய்வத்தை கெட்ட சக்தி என சொல்லி  அதை ஒழிக்கவேண்டும் என்று சொல்வதை   எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?

அனைத்து உலகிலும்  திருநீறு  பூசப்பட்ட லிங்கம் கடவுள்.ஆனால் ஆங்கிலேயர்களுக்கு  ஈவில்!

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை தடவுகிற அந்த குட் அண்ட் ஈவில்  விளையாட்டு  வீடியோவை  தடை செய்தாக வேண்டும்.

செய்வார்களா?

தமிழர்களின் லிங்க வழிபாட்டுக்கு  தத்துவம் உண்டு.

அது ஆங்கிலேய  ஆய்வாளர்களும் அறிவார்கள். நடவடிக்கை எடுப்பார்களா?

அன்புள்ள எனது தமிழ் சகோதரர்களே.. இந்த பதிவை உங்களால்  பகிர முடியுமா?

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கண்ணே, கதவைத் திறடி..!

வீட்டுக்கு லேட்டாக வருகிற கணவன் யாராவது " கண்ணே,கண்மணியே ..வந்து கதவைத் திறம்மா" என்று  எப்போதாவது  சொல்லி இருப்பானா?
காலிங்பெல்லை ஒரு அழுத்து! வரவில்லையா...மறுமுறையும் கையை எடுக்காமல்  அழுத்துவான்.இவனுக்கே இப்படியென்றால் பகலெல்லாம்  வேலை செய்து களைத்துப் போன மனைவி கடுப்பு ஆவாளா, மாட்டாளா?

"வந்துட்டாரு மன்மதரு!  இனி தூக்கம் போச்சு..பத்து ரூபாய்க்கு மல்லிகைப்பூ
சேட்டுக்கடை அல்வான்னு வாங்கியாந்து  இம்சைகள் ஆரம்பிச்சிரும். இடுப்புக்கு நாம்ப  வெளக்கெண்ணை  தடவிக்கனும்"  என்று வரப்போகும்  தொல்லையை நினைத்து கண்ணை மூடியபடியே கிடப்பாள்.இதுவும்  ஒரு  வகை ஊடல்தான்! அவனின் கைகள் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று ஒரு கணக்கையே தொடங்கியிருப்பாள்!.

வெளியே நம்மாளு."அப்படியென்ன தூக்கம்? சனியன்..சனியன்"என்று மனசுக்குள் எரிவான்.கோபத்தை வெளிப்படையாக காட்ட முடியாதே! வீட்டுக்குள் சென்றதும் அவனது விரகதாபத்தை எப்படி தணித்துக் கொள்ள  முடியும்? என்றுதான் நினைப்பான்.
அதனால்  "யம்மா பத்மா...கதவை திறம்மா " என்றவாறே அப்புறம்தான்   கதவை தட்ட  ஆரம்பிப்பான்.

கலிங்கத்துப்பரணியை  புரட்டி,  கடை திறப்பு பகுதியை படித்தபோது  கதவை திறப்பதற்காக தலைவன் எப்படியெல்லாம் கரைகிறான் என்பது தெரிந்தது.  செயம்கொண்டாரின் தமிழ்...........     ஓர் அருவி! நனைந்தபடியே ரசிக்கலாம்.

போருக்கு சென்ற தலைவன் குறிப்பிட்ட கால அளவில் இல்லம் திரும்பவில்லை.

இன்னும் ஏன் வரவில்லை என்ற ஏக்கம் பயம் தலைவிக்கு  இருக்காதா? அது நாள் வரை தலைவனுடன் கனவில் சல்லாபம் கொண்டிருந்த அவளுக்கு  அங்கங்கள்  நோகாதா என்ன? மச்சங்கள் பார்ப்பதற்காக  உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை அதரங்களால் அளவு எடுத்தவனல்லவா! அவள் நாணிக்கொண்டு மறுத்தாலும் அதிலும் சொல்ல இயலாத சுகம்.

நினைத்துக் கொண்டே படுத்திருக்கிறாள் தலைவி!

கதவு தட்டுகிறான்  தலைவன்!

"என்னவளே..இனியவளே! சூதாடும் கருவி அளவே  உள்ள இள முலை உள்ளவளே! அது வளர்ந்து திமிறி நிற்கும் காலத்தில் துறவறம் பூண்டவர்களின்  நிலை என்னாகும்? தடுமாறி விடுவார்களே. உடுக்கையின் அளவே இடை! நீள் விழி! சாகாவரம் தரும் அமுதம் அல்லவா உனது சுகம்,கண்ணே ..கதவை திற" என தட்டுகிறான்.

"சூதளவு அளவெனும் இளமுலைத்
      துடி அளவு அளவெனும் நுண்இடைக்
காதளவு அளவெனும் மதர் விழிக்
   கடலமுது அனையவர்  திறமினோ!"--இப்படி  நீளுகிறது .செயங்கொண்டாரின் கற்பனை.!

தமிழை வாசிப்பது என்பது கதைப் புத்தகங்களை மட்டும் இல்லை. இலக்கியமும்  வாசிப்புக்குரியவை.தமிழ்  வளரும் .

எனது வலைப்பூவை   வாசிக்கும்  நண்பர்களே எனது பணிவான கோரிக்கை.எனக்கு உங்கள் ஆதரவு தேவை. குறைகளை சுட்டவும் திருத்தவும் என்னுடன்  இருப்பது  அவசியம் என கருதுகிறேன்.

முதல்வர் ஜெ உடல் நிலையும் உள்ளாட்சித் தேர்தலும்....!

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தேறிவிட்டது.வழக்கமான உணவுகளை  சாப்பிடத் தொடங்கிவிட்டார் என்று அறிக்கை விடும் அப்பல்லோ டாக்டர்கள் அவர் என்ன சாப்பிட்டார் என்பதையும் சொல்லியிருந்தால் இந்த மனுசப்பய மனசு குவாட்டரை இரைப்பைக்குள் இறக்கிய   உணர்வுக்கு  வந்திருக்கும்.

"அப்பாடா.... அம்மா சாம்பார் ஊத்தி சாப்பிட்டாராம்.ரசம் ஊத்திக்கிட்டாராம்னு மக்களும் மகிழ்ச்சியா இருப்பாங்க..கோவில் கோவிலா ஏறி எறங்குற மந்திரி , மாவட்டங்களும்  கஞ்சி குடிக்கிறத விட்டுட்டு  தயிர் சாதமாவது  சாப்பிடுவாங்க. பாவம் அவங்க அரிசி சோறு கறிக்குழம்பு பார்த்து ஒரு வாரம்  ஆகிப்போச்சாம் .வீட்டுக்காரர் இப்படி பத்தியம் கிடந்தா மத்தவங்க நிலைமை  என்னங்கிறத சொல்லத் தேவை இல்லை" இப்படியெல்லாம் எதிர்க் கட்சிகள்  பேசுமா பேசாதா?.

அம்மா ஆஸ்பத்திரியில் படுத்து இருக்காங்க என்பதையும் மறந்து அம்மாவின் விசுவாசிகள் முற்றுகை,அடிதடின்னு ஏறங்கி கேண்டிடேட்டை மாத்துன்னு  அறவழி போராட்டங்களில் எறங்கிட்டாங்க.

இவங்க இடி போதாதுன்னு  நீதிமன்றமும் இவ்வளவு அவசரமா உள்ளாட்சி தேர்தலை நடத்துறதுக்கு என்ன காரணம்னு கேட்டிருக்கு.

காவேரி பிரச்னையில் தமிழக, கர்நாடக முதல்வர்கள் சந்தித்து பேசவைத்து  விவகாரத்தை முடின்னு  உச்ச நீதி மன்றம் பாஜக அரசுக்கு  உத்திரவு போட்டிருக்கு. அதுக்கு அம்மா போகணும்கிற அவசியம் இல்ல. செகரட்டரியே பார்த்துக்குவார். ஆனா அம்மாவுக்கு என்ன என்கிற விஷயம் மந்திரிகளுக்கே  தெரியாது. சின்னம்மாவுக்கு  மட்டுமே  தெரிஞ்சிருக்கிற காய்ச்சல்தான்.

பத்திரிகைகளும் இப்பவே என்னவாக இருக்கும்கிறத ஊகித்து எழுத  ஆரம்பிச்சாச்சு.அதெல்லாம் நம்ப முடியாதுங்க.

சுப்பிரமணியசுவாமி சொன்ன மாதிரியே வெளிநாட்டுக்கு  கூட்டிட்டு போவாங்களோ என்கிற சந்தேகமும் மக்களுக்கு இருக்கு. ரஜினிகாந்த் மேட்டரிலும்  இப்படித்தானே நடந்திச்சுன்னு பேச ஆரம்பிச்சிட்டான். ஆனா  அந்த அளவுக்கெல்லாம் போகாமல் அப்பல்லோவில்  சரியாகிடும். உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் மாத்தப்படுவாங்கன்னு சொல்லிக்கிறாங்க.

அம்மாவினால் உள்ளாட்சி தேர்தலுக்கெல்லாம் பிரசாரம் பண்ண முடியாது. அம்மா வராமலேயே வெறும் அறிக்கை விட்டே ஜெயிச்சிட்டாங்கன்னு  சொல்ல வைக்கணும் .

அதாங்க உண்மை.

திங்கள், 26 செப்டம்பர், 2016

பிடிச்ச நரை முடி நடிகர்கள் ரஜினி,அஜித் இருவர் மட்டும்தான்!

கிருஷ்ணன் எங்கே போனாலும் அங்கு ஏதோ ஒரு வில்லங்கம்  விதை விடும்.  என்பார்கள்!.அரிதாரம் பூசினாலும் ஆயிரம் முகம்! பூசாவிட்டாலும் ஆயிரம் முகம் ராதாரவிக்கு.!

நேரம் கிடைத்தால் கடவுளுக்கும்  கிளவுஸ் போட்டுவிடக்கூடியவர்.

'ஆங்கிலப்படம்' ஆடியோ விழாவிலும் இயன்ற  வரை  ' பஞ்ச்'மேட்டர்களை  பவுன்ஸ்களாக  போட்டார்.

பேசிமுடியும் வரை கைதட்டல்கள்! வழக்கம்போல அன்றும் சிலரை "அவன் இவன் " என்று  உறவின் நெருக்கத்தை காட்டி  ஒரு விளக்கமும் சொன்னார்  பாருங்கள், பழனி தண்டாயுதபாணியே  நேரில் பஞ்சாமிர்தம் கொடுத்து விட்டு போயிருப்பான்..

ராதாரவி சொன்னதை வலைப் பூ  உடன்பிறப்புகளும் படிக்கட்டும்.

"புருஷன் பழனி முருகனுக்கு காவடி எடுத்திட்டுப் போனான்.உள்ளம் உருக கும்பிட்டுவிட்டு மலையை விட்டு இறங்கிவர்றான்.அப்ப செல்போனில்  பொண்டாட்டி கூப்பிடுறா!
என்னங்க. நம்ம பொண்ணு அடுத்தவீட்டுப் பையனோடு ஓடிப் போயிட்டான்னு கத்துறா.! இவன் அப்படியே பழனி மலையை  நோக்கி பார்க்கிறான். 'அடே முருகா! இதுக்காடா உனக்கு காவடி எடுத்தேன்னு சொல்லுவான் அத மாதிரி  ஒரு பக்தியில்தான் நெருக்கமானவங்களை 'டா' போட்டு பேசுவேன்..அதனால  யாரும் தப்பா எடுத்துக்க வேணாம்.

மாப்ள ராம்கியை இந்த படத்தில் வெள்ளை முடியோடு பார்த்தேன். சிலர்தான்  வெள்ளை முடியோடு தைரியமா வெளியே வருவாங்க.பப்ளிக்காகவும்  வருவாங்க.அந்த வகையில் எனக்கு பிடித்தவர் சூப்பர்ஸ்டார்தான்!அப்புறம் பெப்பர் சால்ட் னு சொல்வாங்களே  தல அஜித் [ அரங்கமே அதிர்கிறது.) இவங்க இரண்டு  பேரையும்தான் எனக்கு பிடிக்கும். அடுத்து மாப்ள ராம்கி. இந்த வயசிலேயும்  ஆள் அம்சமா வாட்ட சாட்டமாதான் இருக்கார். இந்த சமயத்தில்தான் தங்கச்சி  நிரோஷா எச்சரிக்கையா  இருக்கணும்.மாப்ளைய  கவனமா  பார்த்துக்கம்மான்னு  சொல்லணும்!

நானும் வெள்ளமுடியோடு நாலஞ்சு  மாசம் சுத்துனேன்.வயசாயிடுச்சுன்னு  சொல்லி  கையெடுத்துதான்  கும்பிட்டாங்க. அதென்ன எனக்கு வெள்ளை  முடின்னா வயசாயிடுச்சு .மத்தவங்கன்னா இளமை  திரும்பிடுதா!"

இப்படியும் பேசுவதற்கு  ஆட்கள் அவசியம்தான்!


ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

"பாரதிராஜாவுக்கு ஹீரோயின்களை மட்டுமே பிடிக்கும்"----ராதிகா.

பழைய டைரிகளை புரட்டுவது  ஒரு சுகம்தான்!

சீனியர் சிட்டிசன்கள்  தங்களின்  ஆரம்பகாலத்து தாம்பத்திய குறும்புகளை  நினைவுக்கு  கொண்டு வந்து அவர்களுக்குள் பேசிக் கொள்வதில்  கிடைக்கும்  ஆனந்தம் ....!

உடனே சொந்த  அனுபவமா என கேட்டுவிடாதீர்கள்.

அனுபவங்கள் அளவிட முடியாத அளவு. ஆனால் பகிர்ந்துகொள்ளத்தான்  அன்பு  மனைவி இல்லை.

விடுமுறை நாள் என்பதால்  பழைய டைரிகளை புரட்டினேன்.

வாசிப்பதற்கு  இதமாக இருந்தது.

"காதல் என்பது. காற்று மாதிரி.!உன்னால் பார்க்க முடியாது. உணரத்தான்  முடியும்"-----சொன்னவர்  சிலம்பரசன்.

இவரது  இரண்டு காதலிகளும் 'உணர' வைத்துவிட்டு  காற்றாக கரைந்து விட்ட  அனுபவம்.

"நாரதன்  படத்தில் காமடி ரோலுக்கு வேறு நடிகரைத்தான் டிக்  பண்ணி வைத்திருந்தேன்,கடைசி  நேரத்தில் கழுத்தை  அறுத்துவிட்டதால் நல்ல வேளையாக பிரேம்ஜி  கை கொடுத்தார்."------காயப்பட்ட டைரக்டர்  நாகா வெங்கடேஷ்  கண்ணீர் விடாத  குறை. ஆனால் கழுத்தை  அறுத்த அந்த  புண்ணியவான் யார் என்பதை மட்டும் சொல்லவில்லை. இதுதான்  நாகரீகம்.

"நாங்கள்  ஹீரோயின்கள். கொம்பு  இருக்கும்.பாரதிராஜாவுக்கு  ஹீரோக்களை பிடிக்கவே  பிடிக்காது.ஹீரோயின்களை  மட்டும்தான்  பிடிக்கும். பாக்யராஜை பார்த்து ' நீயெல்லாம் என்னடா நடிப்பு   நடிக்கிறே! இந்த பெண்ணைப் பாரு! என்னம்மா நடிக்கிது என்று சொல்லி  ஆங்கிள் வைப்பார்."-என்றவர்  ராதிகா.------உண்மையை  இப்படி ஊரெல்லாம்  டமாரம்  அடிக்கனுமா?

"குசேலன் படத்தில் நடித்தபோது அந்த சிரிப்பு நடிகர்  என்னை  படுக்கைக்கு  அழைத்தார். எப்படி அவரிடம் இருந்து தப்புவது என்பது தெரியவில்லை. இருந்தாலும்  தைரியமுடன் தாழ் போடாமல் கதவை சாத்தியிருந்தேன்.
.குடித்துவிட்டு  வந்திருந்தார்.படுக்கையில் ஓரமாக உட்கார்ந்தவர்  "பாப்பா   மாமா வந்திருக்கன்மா.." என்றபடி காலை தொட்டதும் ஒரே எத்து.."------ சொன்னவர்  சோனா.

இதெல்லாம் சகஜமப்பா!.


இசைஞானி சொன்னது என்ன?

நான் உன்னை நினைக்கும்போது,
நீ என்னை நினைப்பாயா?
உனக்குள் நான்
எனக்குள் நீ!-----என வாழ்ந்தவர்கள்தான் இயக்குநர் பிரியதர்சன், லிசி.

அண்மையில் சட்டபூர்வமாக பிரிந்து விட்டார்கள்.

லிசியின் பயங்கரமான குற்றசாட்டுகளை பற்றிய கவலை இல்லாமல் ,மண விலக்கு பெற்றவன் என்கிற வலி கூட இல்லாமல் அன்று  பேசினார் .

எதுவுமே நடக்கவில்லை.இதுவும் கடந்து போகும் என்கிற மன நிலையில்  இருந்தாரோ என்னவோ!

அவரது படங்கள் கமர்சியல் என்கிற மசாலா இல்லாமல்தான் இருக்கும். தேசிய விருது பெற்ற படமாக இருந்தாலும் 'காஞ்சிபுரம்' வணிக ரீதியாக  தோல்விதான்!

அவரது 'சில சமயங்களில்'படம் கூட குத்தாட்டமோ....  குமரி ஆட்டமோ இல்லாத  படம்தான்!

"இந்த படத்துக்கு இசை அமைத்திருக்கிற இளையராஜா என்ன சொன்னார்?"

"இப்படி ஒரு சப்ஜெக்ட்டை  எப்படி செலெக்ட் பண்ணே? என்பதுதான்  அவரது  ஒற்றை வாக்கியமாக இருந்தது.

"சில சமயங்களில் என்பது சரியான தமிழாக இல்லையே? சில நேரங்களில் என்பதாகத்தானே  இருந்திருக்கவேண்டும்.?" என்பது  இன்னொரு நண்பரின்  கேள்வியாக  இருக்க ,அதற்கு பதில்  சொல்ல முனைந்தார் பிரகாஷ்ராஜ்.

அதுவரை அமைதியாக சென்று கொண்டிருந்தது வாதப்பிரதிவாதங்களாக உரு கொண்டுவிட்டது.

" சரியான சமயமாக இல்லை,வேற சமயம் பார்த்து வான்னு  பேச்சு வழக்கில்  சொல்லத்தான் செய்கிறார்கள்.அது சாதாரண ஜனங்களின்  புழக்கத்தில்  இருப்பதுதான். அதை தமிழ் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? " என்று பிரகாஷ்ராஜ் கேட்க, அதை மறுத்து  'சமயம்' என்பது மதத்தை குறிக்கும்  என்று அந்த நண்பர் வாதாட களேபரமாகி விட்டது.

அவசரமாக உரையாடல் முடிக்கப்பட்டது.

சமயம் என்பது  இரண்டு பொருட்களில் பயன்பட்டாலும் இலக்கியவாதிகளுக்கு  சமயம் என்பது மதம் தான்.

சாதாரண மக்கள்  நேரம் என்பதற்கு பதிலாக  சமயம் என்பதை பயன்படுத்துகிறார்கள்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் நடந்த விவாதம்.

குப்தர்கள் காலத்தை சரித்திர ஆசிரியர்கள் பொற்காலம் என்பார்கள். ஆனால் ஆய்வாளர்களின் கருத்து வேறுபடுகிறது.மாறு படுகிறது.

சமஸ்கிருதம் அங்கீகாரம் பெற்றது குப்தர்கள் காலத்தில்தான்!ஏழைகளுக்கு  அசோக மாமன்னன் வழங்கிய நிலங்களை  கையகப்படுத்தி  பிராமணர்களுக்கு  வழங்கியது  குப்தர்கள் காலத்தில்தான்!போரில் நாட்டை  விரிவு படுத்தினார்கள்.நாளந்தா பல்கலைக்கழகத்தில்  ஆரிய பட்டர் தலைமை  தாங்கியபோது பிற கலைகளை திருடியதாக அவர் மீது  குற்றம் சாட்டப்பட்டது குப்தர்கள் காலத்தில்தான்! பூமி தன்னைத்தானே சுற்றி வருவதாக சொன்னவர் இவர்தான் என்பதும் அது மறுக்கப்பட்டதும் அவர்கள் காலத்தில்தான்!ஆக இது எப்படி பொற்காலம் ஆகும்?

ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழகத்தின் பொற்காலம் என்றால் அது பெருந்தலைவர்  காமராஜர் காலம்தான்!

அண்ணாவின் வழியில் பொற்கால ஆட்சியை  மீண்டும்கொண்டு வர  விரும்பியவர்  --ஆசைப்பட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அது நடந்ததா இல்லையா என்பதை ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும்.

எம்.ஜி.ஆரை  பத்திரிகையாளனாக நெருக்கத்தில் சந்தித்தது  அவர்  அதிமுகவை தொடங்கிய பின்னர்தான். அதற்கு முன்னர் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.ஆனால் நான்  நடிகர் திலகத்தின் பரம ரசிகன்.

நான் மதுரை மாலைமுரசில் செய்தியாளராக  பணி ஆற்றியபோது--

எம்.ஜி.ஆர். மதுரைக்கு  வந்திருந்தார். தி.மு.க.வில் மாவட்ட செயலாளராக  மதுரை எஸ்.முத்து  அதிமுகவில் இணைந்த நேரம்.

அப்போது  எம்.ஜி.ஆரின் செய்திகளை  தினத்தந்தி, மாலைமுரசு ஆகிய நாளேடுகள்  அவ்வளவாக பிரசுரிப்பதில்லை. எம்.ஜி.ஆரும் தனது பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு  அந்த நாளேடுகளின் செய்தியாளர்களை  அழைப்பதில்லை.

 பத்திரிகையாளர்களை மதுரை  பாண்டியன் ஹோட்டலில் எம்.ஜி.ஆர்   சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நானும் சென்றேன்.

மதுரையில் தினமலர் செய்தியாளராக இருந்த ரமேஷ்  என்னை பாண்டியன் ஹோட்டலில் பார்த்ததும் பதறிப் போய்விட்டார்.

'"கட்சிக்காரர்கள்  தப்பாக நடந்து கொள்ளப்போகிறார்கள் .போய் விடுங்கள்" என்று  அச்சப்பட்டார். அதையே மற்றவர்களும் சொன்னார்கள்.

இளங்கன்று பயமறியாது என்பார்கள். செய்தியாளர்கள் வரிசையில் நான்தான்  முதலாவது  ஆள்.! ( படத்தில் கோலம் போட்ட  முழுக்கை சட்டை போட்டவன்.)

தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் கட்டம்.

மதுரை முத்தண்ணன் என்னை  பதட்டமுடன் பார்க்கிறார்.

"நான் மணி!.மாலைமுரசு நிருபர்!"

மொத்த கூட்டமும் என்னையும் எம்.ஜி.ஆரையும் பார்க்கிறது.

"உங்களை நான் கூப்பிடலியே!" என்றவர்  பக்கத்திலிருந்த முத்தண்ணனை பார்த்து  எதோ கேட்க அவரும் ஏதோ சொல்கிறார்.

"இது பிரஸ் கான்பரன்ஸ். கேள்விப்பட்டுதான் வந்தேன். என்னுடைய டியூட்டி  நியுஸ்  கேதர் பண்ணுவது. அதுக்குதான் வந்தேன். வெளியே போகச்சொன்னால் போயிடுறேன். ஆனா இங்க என்ன நடந்ததுன்னு நான் கேள்விப்பட்டதைதான்   நியூஸா போடுவேன். அது தப்பா கூட போகலாம். இங்கேயே இருந்தால் நடந்ததை அப்படியே போடுவேன்"

இதை எப்படி சொன்னேன், எந்த வேகத்தில் அப்படி பேச முடிந்தது என்பதெல்லாம்  நான் கற்பனை செய்தது கூட இல்லை. ஆனால் அதுதான் நடந்தது.

அன்றைய மாலைமுரசுவில் எம்.ஜி.ஆர்.பேட்டி வெளிவந்தது. அதன்பிறகு  எம்.ஜி.ஆர். வந்தால்  ஜேப்பியார் போன் செய்து  முதலில் அழைப்பது  ரமேஷையும் என்னையும்தான்.

"டே ..மாப்ளைகளா...தலைவர் கேக்கிறார்டா! வாங்கடா " என்பார். ஆனால் எங்களை விட போட்டோகிராபர் ராமகிருஷ்ணன்  மிகவும் நெருக்கம்!

இந்த உறவு  நான் சென்னைக்கு  தேவி வார இதழுக்கு வரும் வரை இருந்தது. ஆனால்  காளிமுத்து அண்ணனின் கடைசி காலம் வரை நாங்கள்  இருவரும்  நெருங்கிய  நண்பர்கள்தான்!

அது ஒரு பொற்காலம்தான்!

புதன், 21 செப்டம்பர், 2016

பாக்யராஜும் வயசுப் பெண்களும்...!

மந்திரத்தில் மாங்காய் 'வரவழைக்கிறவர்கள்' கூட  நாலைந்து கடபுடா அப்ரகடபுடா சொல்ல வேண்டியதிருக்கும். அதற்கு ஏகப்பட்ட செட்டப்புகள்.!  ஆனால் பாக்யராஜ் மேடை ஏறிவிட்டால் ஏதாவது ஒரு குட்டி கதை குதித்துவிடும்.

அருவிகள் தழுவி வரும் மேற்குத் தொடர்ச்சி மழைக்காற்றின் மென்மையான  காற்றில் ரத்த வாடை பட்டு விடக்கூடாது என்று சொல்லி அய்யனார் வீதி என்கிற படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒரு அய்யர் ,அய்யனாராக மாறுவதுதான் கதை என்பதாக ஒன் லைனை சொல்லி வைத்தார் இயக்குநர் ஜிப்சி ராஜ்குமார். அய்யர் அனேகமாக பாக்யராஜாகத்தான் இருப்பார் என நம்பலாம் .உருமா கட்டிய இன்னொரு அய்யனார்  பொன்வண்ணனாக  இருக்கலாம்.

பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு வந்திருந்தவர்களை யாரையும் ஒரு கேள்வி கூட கேட்க விடாமல் விழா நடத்தியவர்களே பாராட்டித் தள்ளிவிட்டு கலைந்து விட்டார்கள்.

ஆனால் அத்தனை பேரிலும் காமடி மணம் கமழ பேசிய ஒருவர் பாக்யராஜ்தான் ! வழக்கம் போல  குட்டி கதை.!
"வெளியூர் பயணம் புறப்பட்டவன் ராத்திரி ஆகிவிட்டதால்  வழியில் இருந்த ஒரு ஊரில் தங்கிவிட்டு  காலையில் புறப்பட்டு போகலாம்னு தங்குவதற்கு  இடம் தேடினான்.

ஒரு வீட்டில் கதவை தட்டி உசுப்பி நிலைமையை சொன்னான். இன்னிக்கி ராத்திரி உங்க வீட்டில் தங்கிவிட்டு விடிந்ததும் கிளம்பிப் போய்விடுகிறேன் என்று  சொன்னான்.

'முடியாதுப்பா....இந்த வீட்டில் வயசுப் பொண்ணுக இருக்குன்னு சொல்லி அந்த வீட்டின்கதவை சாத்திட்டார் அந்த ஆள்.

அடுத்த வீட்டிலும் ''அதெல்லாம் சரிப்படாதுப்பா. எங்க வீட்டில் வயசுப் பொண்ணுக இருக்காங்கன்னு சொல்லிஅங்கேயும்  கதவை சாத்திப்பிட்டார்.

இதே மாதிரி அடுத்தடுத்த வீட்டிலும் சொன்னதால் கடைசியாக  கதவை தட்டிய வீட்டில் ரொம்பவும் முன் ஜாக்கிரதையுடன் 'அய்யா ...ராத்திரி ஆகிவிட்டதால் ஊருக்குப் போக முடியல. உங்க வீட்டில யாராவது  வயசுப் பொண்ணுங்க இருக்காங்களா ..ராத்திரி தங்கிட்டு விடிஞ்சதும் கிளம்பிப் போயிடுறேன்னு அப்பாவியாக  சொன்னான்.

அவ்வளவுதான் அத்தனை பேரும் அவனை மொத்தி எடுத்திட்டாங்க." என்று  ஒரு கதையை  சாமர்த்தியமாக  எங்கு சொருக வேண்டுமோ அங்கு  சொருகி விட்டு கலகலப்பாக்கி விட்டார்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

கமல்,ரஜினிக்காக நான் கதை பண்ணுவதில்லை!

தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்கள் உலகநாயகனும் ,சூப்பர்ஸ்டாரும்!

இவர்களுக்காக கதை பண்ணுவதற்கு எத்தனையோ இயக்குநர்கள்!

எத்தனையோ வருடங்கள்  கடந்த நிலையிலும் கதாநாயகன் வேடங்கள் விதம் விதமாக!

வித்தியாசமாகவே சிந்திக்கிறார்கள் இயக்குநர்கள்!

அவர்களில் மாறுபட்டவராக  பிரியதர்ஷன்,

"கமல்,ரஜினிக்காக கதை பண்ணுவீர்களா?" -கேட்டார் ஒரு செய்தியாளர்.

சிரிக்கிறார் பிரியதர்ஷன்." நான் யாருக்காகவும் கதை பண்ணுவதில்லை. கதைகளுக்கு தகுந்தவர்களை  தேர்வு செய்கிறேன்.! 'சில சமயங்களில்" என்கிற படம் எய்ட்ஸ் பற்றிய படம். டாக்குமெண்டரியாக எடுத்துச்சொன்னால்  அது ஜனங்களால் ஈர்க்கப்படுவதில்லை.அதையே வேறு பாணியில் சொன்னால்  ரசிக்கிறார்கள்"

"பெரிய இடைவெளி விழுந்ததற்கு என்ன காரணம்?"

"அதற்கு எவ்வளவோ காரணங்கள்.! ஒருவனது வாழ்க்கையில்  அப் அண்ட் டவுன் இருக்கவே  செய்யும் .என்னால் கமர்சியல் படம் பண்ண முடியாது.கதை என்பது இதயத்திலிருந்து வர வேண்டும்.இதுவரை தமிழ்,மலையாளம்,இந்தி என்று  தொண்ணூறு படம் பண்ணிவிட்டேன்.எல்லாமே மக்களின் பாராட்டை பெற்றவைதான்! இப்போது வருகிற புதியவர்கள்  முதல் படத்தில் பிரமாதம் காட்டுகிறார்கள். ஆனால் அடுத்த படங்களில்  அவர்களை பார்க்க முடியவில்லை "

''உங்களின் குரு யார்?"

"நான் பாலசந்தர், பாரதிராஜா ஆகியோரை பார்த்து  வளர்ந்தவன்அவர்கள்தான்  எனது  குருமார்கள்" என்கிறார் பிரியதர்ஷன்.

உயிர்தப்பி ஓடி வந்த ராதாரவியும் படக்குழுவினரும்!

காவேரி நதி நீர் பிரச்னை இன்னமும் கர்நாடகத்தில் அடங்கிய பாடாக இல்லை.. தமிழர்கள்  பயந்தபடி   வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது  சுவாதி கொலை வழக்கின் ஒரே குற்றவாளியான ராம்குமாரின் மரணம்தான் எதிர்கட்சிகளின் முக்கிய ஆயுதமாக இருந்து  கொண்டிருக்கிறது. ஈ ,எறும்புகளின் உயிர்க்காவது ஜீவகாருண்ய சபை இருக்கிறது. மனித உயிர்க்கு அப்படி எதுவும் இல்லை.மனிதன் ஆறறிவு  உள்ளவன்! (போங்கடா அறிவு ஜீவிகள் !)

நண்பர் ராதாரவிக்கு  போன் செய்தேன்.

 "எந்தப் படத்தின் ஷூட்டிங்கில்  இருக்கீங்க ரவி?" என்றேன்.

'இப்ப திண்டுக்கல்லில் இருக்கேன். நாளை குற்றாலம்!. சென்னைக்கு வர எப்படியும் நாலு நாளாகி விடும்.! சொல்ல முடியாம இருக்க முடியல. இப்ப நான் மறு பிறவி எடுத்து உங்ககிட்ட பேசிட்டிருக்கேன்" என்றவரால்  தொடர்ந்து  பேச இயலவில்லை!  மவுனமாக இருந்தார்,

அதிர்ச்சியாக இருந்தது!. ரவி இப்படி பேசியதில்லை.

"என்னாச்சு? என்ன நடந்தது ரவி! ரொம்பவும் போல்டான ஆளாச்சே நீங்க?"

"மைசூர்ல கன்னடத்துக்காரர்கள் சுத்தி வளைச்சிட்டாங்க.உயிர் பொழச்சதே  மறு  பிறப்பு .! நான் எவ்வளவோ எடுத்துச்சொன்னேன் இப்ப ஷூட்டிங் வேணாம் .காவேரி தண்ணீர் பிரச்னையை தீவிரமா கன்னட அமைப்புகள் எடுத்துக்கிட்டு பிரச்னையை பெருசா ஆக்குவாங்கன்னு  புரடக்சன்ல சொன்னேன் ஆனா . கமிஷனர் கிட்ட சொல்லி பக்கவா பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சிருக்கோம்னு  சொன்னாங்க. ஆனா பாதுகாப்பையும் மீறி  உடைச்சி  நொறுக்கிட்டாங்க. உயிர் தப்பி வந்ததை பத்தி இவ்வளவுக்குத்தான்  சொல்ல முடியும்!வேணாம் இதுக்கு மேல பேசுனா டென்சனாகி விடுவேன்" என்றார்.

பொதுவாக காவேரி பிரச்னை நடந்தபோதெல்லாம்  தமிழ் படத் தயாரிப்பாளர்கள்  தாக்கப்படுவதும் மடக்கப்படுவதும் வழக்கம்தான்! இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரத்குமார் ஆகியோர் தப்பிப் பிழைத்து  வந்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முடிவு யார் கட்டுவது, எப்படி செய்வது?

காவிரி தாயே  கண் திறம்மா!


ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

சுவாதி கொலை வழக்கு ராம்குமார் தற்கொலையா?

இன்று பதற வைத்த செய்தி .

ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட ராம்குமார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டதாக  வந்த பரபரப்பான செய்தி .....

தற்கொலையா,கொலையா என இரு வகையான கோணங்களில் மக்கள்  பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை நகரில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் பரவலான கொலை-தற்கொலை செய்திகளை நாளேடுகளில் படித்துவரும் மக்கள் இப்படித்தான்  புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

'நகரத்தில்தான் பாதுகாப்பு இல்லை என்றால்  சிறைக்குள்ளுமா இல்லை ? பாதுகாப்பு தேடி பரலோகம் செல்வதுதான் தமிழகத்தின்  கதியா?'

சிறையில் உள்ள மின்சார சுவிட்ச் போர்டில் உள்ள வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக  சிறைத்துறை போலீஸ் சொல்வதில் எத்தகைய  சத்தியம் இருக்குமோ தெரியவில்லை.

மிக மிக முக்கியமான கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ,அதுவும் தமிழகத்தையே  உலுக்கிய வழக்கு அது.! அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை நீதி தண்டிப்பதற்கு முன்னரே, யாரோ தண்டித்திருப்பது  அல்லது தற்கொலை செய்வதற்கு  இடம் அளித்திருப்பது திட்டமிட்டு நடந்ததாக கருத இடம் இருக்கிறது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரே குற்றவாளி ராம்குமார்தான் என்பதால்  அந்த வழக்கை சுலபமாக  அரசு  ஊற்றி மூடிவிட  முடியும். இதுதான் நடக்கப் போகிறது என்றால்?

நீதிமன்றங்கள்  இருந்து என்ன பயன்?

சுவாதியின் படுகொலையின் பின்னணியில் யாருடைய செல்வாக்கோ  யாரையோ காப்பாற்றுவதற்கு பயன்பட்டுக்கொண்டிருகிறது என்பது  சந்தேகமாகவே  இருக்கிறது.

சி.பி.ஐ. தலையிட்டால் ஒருவேளை  உண்மை வெளிப்படலாம்.

காதல் புனிதமானதா? அதிலும் சினிமா காதல் ......?

"பாடம் படித்து நிமிர்ந்த விழி-தனிற்பட்டுத் தெறித்தது மானின் விழி" என்றார்  பாவேந்தர்  பாரதிதாசன்.
"கண்ணிரண்டும்  ஆளை விழுங்கும் அதிசயம்" என்றார் கவியரசர் பாரதியார்.

எல்லாமே பெண்களின் விழிகளைப் பற்றியதுதான்.!

பெண்களின் விழிகளுக்கு  ஆணை  வீழ்த்தும் வலிமை உண்டு.

 கண் வழியே புகுந்து மனதில் நங்கூரமிட்டுக் கொள்கிற காதல் சில நேரங்களில் வெளியேறி விடுவது ஏன்?

காதல் நடிப்பில் கசிந்து உருகி, மருகி  நிஜமாகவே காதல் வயப்படுகிற நடிகர், நடிகைகளில் சிலர்   பாதி வழியிலேயே  அறுத்துக்கொண்டு ஓடி விடுவது  ஏன்?

பசி அடங்கி விடுவதாலா? அல்லது  புரிதல் என்பது இடையிலேயே  முறிந்து விடுவதாலா?

காதல் மன்னன் ஜெமினி கணேசன் - சாவித்திரி இருவரும் எப்படியெல்லாம்  காதலித்தார்கள். வளப்புத் தந்தையின்  துப்பாக்கி மிரட்டலுக்குப்  பயந்து  நள்ளிரவில்  ஜெமினியின் வீட்டில் அடைக்களமானவர் சாவித்திரி. அன்றைய  இரவில் அடைக்கலம் தந்த முதல் மனைவி பாப்ஜிக்கு  தனது சக்களத்தியாக  வரப்போவது அந்த  சாவித்திரிதான்  என்பது தெரியாது..

ஜெமினி கணேசனின்  ஆண் வாரிசு இல்லாத குறையை  களைந்தவர்தான் நடிகையர் திலகம் சாவித்திரி!

இருவரிடம் இருந்து வந்த புரிதல்  ஒரு கட்டத்தில் தடம் புரளவே  வாழ்விலும் பிரளயம் ஏற்பட்டது.

சாவித்திரி தனது உடல் பருமனை குறைப்பதற்காக  மாளிகையின் தென்புறத்தில் நீச்சல் குளம் கட்டுவதற்கு   பள்ளம் தோண்ட.......

"அது நல்லதல்ல. வீட்டிலிருக்கிற லட்சுமி வெளியேறிவிடுவாள் ..தரித்திரம் தாண்டவமாடும்" என்று ஜெமினி தடுத்ததை  சாவித்திரி கேட்கவில்லை
அதன் பின்னர் கணவனின் சொற்கள் அறிவுரைகள் அவ்வளவாக  மதிக்கப்படவில்லை. பிரிந்து வாழ நேரிட்டது. மதுப்பழக்கம் அவரை  விழுங்கத் தொடங்கியது. விலை உயர்ந்த  மது வாங்க வழியற்ற நிலையில் சாராயமும் குடித்தார்.

இது காதல் மடிந்த கதை.

அமிதாப்பச்சன்---ஜெயபாதுரியின்  காதலும்  திருமணத்தில் முடிந்த பிறகு ஒரு கட்டத்தில்  கல்யாண பந்தம்  பட்டுவிடக்கூடும் என்கிற நிலை ஏற்பட்டது.

நமக் ராம் என்கிற படத்தில் முதன் முதலாக இணை சேர்ந்து நடித்தவர் ரேகா. இவர் காதல் மன்னன்  ஜெமினி---புஷ்பவல்லிக்கு  பிறந்தவர்.

அழகும் பழகும் விதமும் அமிதாப்பை ரேகாவின் மடியிலேயே கிடத்தி விட்டது.

"அமிதாப் என் வாழ்க்கையில் வந்த பின்னர்தான் எனக்கு நல்லது-கெட்டதை புரிந்து கொள்ள முடிந்தது .நாங்கள் காந்தர்வமணம் செய்து கொண்டோம்"என்பதாக சொன்னார்,

ஜெயபாதுரி எவ்வளவோ தடுத்தும்  அமிதாப்-ரேகா காதல் கரை தாண்டியது.

பொறுத்தார் ஜெயா. மீட்டார் அமிதாப்பை!

1982-ஜூன் இருபத்தி  நான்காம்  தேதி பெங்களூரில்  நடந்த 'கூலி'  படப்பிடிப்பில் அடி வயிற்றில் பட்ட காயம் ,அதனால் ஆறு மாத காலம் சிகிச்சை ,ஜெயாவின் கவனிப்பு  என  அமிதாப்புக்கு    அதிகமாகவே நேரம் மிஞ்சியது. மனைவியின் கவனிப்பு  அவரை மாற்றியது.

இது காதல் மீண்ட கதை,

இதைப்போல சினிமாவில் எக்கசக்கம் இருக்கிறது.

அய்யர் வீட்டம்மாவும் மீன் வாசனையும்...!

ஞாயிறு...விடுமுறை நாள்.. நான்-வெஜ் விரும்பி ! பையை எடுத்துக் கொண்டு  புறப்பட்ட போது......

வீட்டுப் பூனையின்  குரல்..! " பொரட்டாசி  மாசம்! நெனவுல இருக்குல்ல.மனசில வச்சுக்கிட்டு  கடைக்கு போயிட்டு வாங்க!"

"தெரியும். சனிக்கெழமை நேத்தே  போயிருச்சி! உன்னால  நான்-வெஜ் சமைக்க முடியாதுன்னா இப்பவே சொல்லிரு. பாண்டியன் ஹோட்டலுக்குப் போயி பார்சல் வாங்கிட்டு வந்திர்றேன்!"

நெருப்பு மாதிரியான சூடு..வார்த்தைகளில்!

"சொன்னா கேக்கிற ஜென்மமா இருந்தா சொல்லலாம். வாக்கப்பட்டது கடுவன் பூனையா இருந்தா   கறியோ மீனோ அழுதுதானே ஆகணும்! போங்க  வாங்கிட்டு வாங்க.! சமைச்சு  கொட்டுறேன்! தின்ன வாயோடு கிட்ட வந்துடக் கூடாது. படுக்கை மச்சிலதான்!"

"அத அப்பறமா பாத்துக்கலாம்டி!'' சிரித்துக் கொண்டு மீன் மார்க்கெட் போனேன்.என்னை மாதிரி சாலிகிராமத்து ஆட்களுக்கு தெருஓர கடைகள்தான்! டைரக்டர் பாலுமகேந்திராவின்  ஸ்டுடியோவுக்கு  அருகில் தசரதபுரத்தில் இருக்கிறது.

வாவல் மீன் வாங்கவேண்டும்! கடைக்கார பெண்ணிடம் பேரம்  பேசிக் கொண்டிருந்தேன்! இல்லாவிட்டால் வீட்டம்மாவிடம் தனியாக வாங்க வேண்டியதுவரும்." மொகரக்கட்டையை பாத்துதான் கடைக்காரி காச புடுங்கியிருக்கா!" என்பதை  எத்தனையோ தடவை வாங்கிய தழும்புகள் நிறைய!

  பிராமணக்  குடும்பத்தை சேர்ந்த ஆச்சாரமான பெண்  மூக்கை  முந்தானையால் பொத்தியபடியே அந்த இடத்தை   கடந்து கொண்டிருந்தார்,

பரபரப்பாக நடந்துகொண்டிருந்த  அந்த  வியாபாரநேரத்திலும் மீன் காரம்மாவின்  கிண்டலுக்கு குறைவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த சக மீன்கார அம்மாவிடம்  " யக்கோவ்...அய்யரம்மா ...வடிகட்டி வாசம் புடிக்கிறதை பாத்தியா!" என்று சத்தமாகவே கமென்ட் அடிக்க எல்லோருமே  சிரித்தார்கள்.

அய்யரம்மாவுக்கு எப்படி இருந்திருக்குமோ , தெரியாது!

வீட்டுக்கு வந்த பிறகு வீட்டம்மாவிடமும் சொன்னேன்.

அவளும் சிரித்தாள்.

ஆனால் அந்த அய்யரம்மாவுக்கு எப்படி இருந்திருக்கும்? அதை நம்மில் எத்தனை பேர்  உணர்ந்து பார்த்திருப்போம்.?


"

சனி, 17 செப்டம்பர், 2016

திருநாவுக்கரசரால் கட்சியை காப்பாற்ற முடியுமா?

காங்கிரஸ் கட்சிக்கு  திமுக கடும் எதிரியாக விளங்கிய காலத்தில்  கவசமாக இருந்து  எதிர்த்து  வாள் சுழற்றிக் காத்தவர்  சிலம்புச்செல்வர் ம.பொ.சி.!

அவரின் தமிழரசுக்கழகத்தில்  இருந்த   நாவன்மை மிகுந்த சொற்பொழிவாளர்கள்  திமுகவின் எழுத்துக்கும் பேச்சுக்கும் சரிக்கு சரியாக மேடையிலும் ,பத்திரிகைகளிலும் பதிலடி கொடுத்தார்கள். வலிமை மிகுந்த திரை உலகில் வலுவாக இருந்த திமுகவுக்கு ஏபி. நாகராஜன் கடுமையான  சவாலாக இருந்தார்.குடும்பப் பாங்கான படங்களை கொடுத்தார்.

 அந்த காலத்தில்அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி  ஆகியோருக்கு இணையாக ம.பொ.சி.க்கும் மக்கள்  கூடினர். கண்ணதாசனின் பேச்சுக்கு சின்ன அண்ணாமலை பதில் சொல்வார். அந்த காலத்தில் இரு தரப்பு  மேடைகளுமே ஓரளவுக்கு ஆபாசத்தில் நனைந்தே இருந்தன என்பதையும் அதில் திமுக  விஞ்சி இருந்ததையும்  மறுக்க முடியாது.

சிற்றரசு,ஆசைத்தம்பி, நாஞ்சிலார்,சம்பத்,அரங்கண்ணல்,நாவலர், இப்படி மக்களை  கவர்ந்த பேச்சாளர்கள்  திமுகவில் இருந்தது போலவே, காங்.
கட்சியை காப்பாற்ற டி.கே. சண்முகம்,கவிஞர்கள்  கா.மு.ஷெரிப், கு.மா.பா.,,கு.சா.கி.,வானம்பாடி,படத்  தயாரிப்பாளர்கள் ,,ஜி.உமாபதி, வேணு, வவ்வாலடி  சம்சுதீன்எ ன சிறந்த பேச்சாளர்கள் இருந்தார்கள். புலவர் கீரனை போன்ற அற்புதமான நாவாற்றல்  மிகுந்தவர்கள்  ம.பொ.சி.யிடம் இருந்தார்கள்.

திருப்பூர் எஸ்.எம்.வின்சென்ட்,, டி.என்.அனந்தநாயகி ஆகிய பேச்சாளர்கள் காங்.கட்சிக்காக நாடெல்லாம் சுற்றி வந்தார்கள். நாவன்மையால் பெரும் கூட்டத்தை திரட்ட முடிந்தது. அய்யம்பேட்டை மாரிமுத்துவின் கலாநிகழ்ச்சி கிராம மக்களை காங்.கட்சிக்கு கொண்டு வந்தது.

சங்கப்பலகை, தமிழன் குரல், செங்கோல்,உமா,சாட்டை  ஆகிய  தமிழரசுக் கழக பத்திரிகைகள் திமுகவின் ஏடுகளின் கடுமையான விமர்சனங்களை  எதிர்கொண்டு அதே பாணியில் வறுத்து  எடுத்தன

.ம.பொ.சி.யை காங்.கட்சி  அவரது தமிழரசுக் கழகத்தை கலைக்க சொன்னபிறகுதான்  தேசிய கட்சிக்கு  ஏழரை  தொடங்கியது என்று சொல்லலாம். ம.பொ.சி. வெளியேறிய பின்னர் தேசிய கட்சி அதன் மரியாதையை  இழந்தது.

.இதைப் போல  தி.மு.க.வுடன் சிலம்புச்செல்வர்  இணங்கி  செயல்படத்தொடங்கியதும்  தமிழரசுக் கழகமும்  பலவீனம்  அடைந்தது.

திமுகவில்  இருந்து சம்பத், கண்ணதாசன் ஆகியோர் விலகி காங்.கட்சியில் சேர்ந்ததும்  ஒரு மாயை  இருந்தது.  காங். இழந்த பலத்தை திரும்பவும்  பெறத்தொடங்கியது போன்ற தோற்றம்.. காமராஜரின் அன்பை பெற்ற அவர்களால் கட்சிக்கு பலன்தான்! ப.நெடுமாறன் ,தஞ்சை ராமமூர்த்தி போன்றவர்களால்  வாலிப பட்டாளமும் கட்சிக்கு வந்தது. ஆனால் அவர்களையும்  நடிகர்  திலகம் சிவாஜியையும்   காங்..கட்சி முறையாக  பயன்படுத்தவில்லை.கோஷ்டி சேர்த்துக் கொண்டு  அவர்களை ஒதுக்கத் தொடங்கினார்கள். காங்.கட்சியின் கோஷ்டி மனப்பான்மையே  அதனுடைய சரிவுக்கு காரணமாக இருந்து வருகிறது.

அந்த கட்சிக்கு தமிழகத்தில்தமிழகத்தில்  சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு  செல்வாக்கு இல்லை.சொல்வாக்கு உள்ளவர்களும் கட்சியில்  இல்ல;

அன்றிலிருந்து திராவிடக்கட்சிகளின் தோளில் உட்கார்ந்துகொண்டுதான்  பலனை  அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்.

திருநாவுக்கரசரின் தலைவர் பதவி நியமனம் கூட ஒருவித சந்தேகத்தைத்தான்  எழுப்புகிறது. ஒரு காலத்தில்  ஜெயலலிதாவின்  நல்ல அன்பை  பெற்றிருந்த   திருநாவுக்கரசர்  எதிர்வரும் காலத்தில்  அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள உதவலாம் என டில்லி மேலிடம் கருதியிருக்கலாம்.

.காங் .கட்சியில் இருக்கும்  கோஷ்டிகளை திருநாவுக்கரசரால்  ஒன்று படுத்த முடியாது.

உள்கட்சி பிரச்னை ஒருபோதும்  முடிவுக்கு வரப்போவதில்லை. ஒன்று பட்ட காங்.கட்சி மீண்டும்  உருவாகும் வாய்ப்பும் இல்லை.

திருநாவுக்கரசரின்  பேச்சுக்கு ப.சிதம்பரம் கட்டுப்படுவாரா? முதலில் அது நடக்கட்டும்!பார்க்கலாம்!

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

திரிஷா வெடிக்கப் போகும்' 'நாயகி" குண்டு!

நாயகி  தமிழ்-தெலுங்கு இரண்டுமே   அசல் 'பிப்ளிக்கா ' பிராண்ட் படம்!

திரிஷா நடித்திருக்கிற  முதல்  ஹாரர் மூவி!
யார் மந்திரித்ததோ, அல்லது பில்லி சூன்யம் வைத்ததோ தெரியவில்லை.. பிரஸ்  ஷோ வும் நடக்க வில்லை. பகிரி படத்துக்குக் கூட  பரபரன்னு  பத்திரிகையாளர் காட்சி நடந்தது .ஆனால் பெரும்பொருட் செலவில் எடுக்கப்பட்டதாக  சொல்லும்  'நாயகி" படத்துக்கு தயாரிப்பாளர்கள்  மெனக்கெடவில்லை.

திரிஷாவை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு  கூப்பிடவில்லை. மன்னிக்க , புரமோஷன் நிகழ்ச்சியே  நடத்தவில்லை.என்கிறபோது  கூப்பிடவில்லை என்கிற பிரச்னையே வரவில்லையே!

இது பற்றி  திரிஷாவிடம் கேட்கலாம் என்று போனில் தொடர்பு கொண்டால் திரிஷாவின் அம்மாதான் லைனுக்கு வருகிறார். .கடவுளுக்கு போன் போட்டால்  பூசாரி  லைனில் வந்தால் எப்படி இருக்கும்?

பெரும்பாலும் பத்திரிகைகளில் வரக்கூடிய திரிஷாவின் பேட்டிகள்  அவரது  அம்மா சொன்னதாகவே  இருக்கும்.

டிவிட்டரில் தட்டுகிற  செய்தி மட்டுமே திரிஷாவின் சொந்த சரக்கு!

நாயகி பற்றி  விரைவில் மனம் திறப்பதாக சொல்லி இருக்கிறார். ஏன் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்பதற்கான விவரத்தை  செய்தியாளர்களிடம் சொல்லப்போவதாகவும்  சொல்லியிருக்கிறார்.

அவர் வெடிக்கப்போகும் குண்டுக்கு ஆந்திராவில் பதில் குண்டு தயாராவதாக  ஆந்திர பத்திரிகையாளர்கள் இப்போதே   சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதெல்லாம் கிடக்கட்டும்  அக்காவுக்கு எப்ப  கல்யாணமாம்?

காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டேன்.--நடிகை லிசி! ரஜினி மகள் வீட்டிலும் பிரச்னை!

அரண்மனையாக இருந்தாலும், ஆலயமாக இருந்தாலும்  அங்கு பெருச்சாளிகள்  இருக்கும்.கரப்பான்பூச்சிகளும் இருக்கும்.

ஆலயத்திலியே அவைகள்  வாழ்கிறபோது  மனிதன் வாழ்கிற இடங்களில்  வாழ முடியாதா என்ன?

மன்னனாக இருந்தாலும் சரி ,அவனுக்கு நிகரான கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி அவனது மாளிகைகளில் நச்சுப்பூச்சிகள் கூட  கூடு கட்டும்.!

இதைப் போலவே குடும்ப வாழ்வு பிரச்னைகளும்!

"ஒரே நிமிடம்தான் உயிர் வாழ்வேன் என்பதாக இருப்பினும் அந்த அறுபது நொடிகளும் உன்னை எப்படியெல்லாம் நேசித்தேன் என சொல்வதற்கும் போதாது கண்ணே!"

இப்படி கசிந்து உருகும் காதலர்கள் கூட மணமுறிவுக்கு பின்னர் எப்படியெல்லாம் கசந்து  வாழ்ந்தோம்  என்பதை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு  தயங்குவதில்லை.!

தற்போது  பிரிந்து வாழ்கிறவர்கள்  சூப்பர்ஸ்டார் ரஜினியின் சின்ன மகளும் சின்ன மருமகனும்!

சவுந்தர்யா ரஜினி--அஸ்வின் ராம்குமார். வைதிக முறைப்படி பத்துப் பொருத்தங்களும் பார்த்து முடித்து  நடந்த திருமணம்தான்! நான்காவது ஆண்டு! ஒரு ஆண் மகவு!

''படத்தயாரிப்புகள்  வேணாம்.எனக்கு ஒரு பேரப்பிள்ளையை பெத்துக் கொடுத்துவிட்டு வாழ்க்கையை வளப்படுத்தும் வேலையைப் பார்" என்று  பகிரங்கமாகவே  ரஜினி சொன்னார்.

மகள் கேட்டதாக தெரியவில்லை. மாற்று சிறுநீரக அறுவை  சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பின்னர் பல நாட்கள்  சின்ன மகள் வீட்டிலேயே தங்கியிருந்து  கணவன் -மனைவி இடையே இருந்த கசப்புகளை போக்கியிருக்கிறார். ஆனால் கட்டின கூட்டை கலைத்தாலும்  குளவி வேறு இடத்தில் கட்டி விடுமாம்..

சவுந்தர்யாவும் அஸ்வினும் மணமுறிவுக்கு தயாராகிவிட்டதாக  திரை உலகில்  பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

அஸ்வின்  'நோ கமெண்ட்ஸ்" என்கிறார்.

நறுக்கென "இல்லை " என்பதாக சொல்லாமல் ஏன் "நோ கமெண்ட்ஸ்" என்கிறார் என சந்தேகப் படுகிறார்கள்.!

இது ஒரு பக்கம்-

இன்னொரு பக்கம் " இன்றுதான் முழு விடுதலை கிடைத்திருக்கிறது" என்று நீதிமன்றத்தின் முன்பாக நின்றபடி நடிகை லிசி  சிரிக்கிறார்.

".  நான் வாழ்ந்த காலங்களில் அவரால்(  இயக்குநர்பிரியதர்சன்.)   காட்டுமிராண்டித்தனமாக   நடத்தப்பட்டேன்  என்கிற வலியிலிருந்து  நான் விடுதலை பெற்றுவிட்டேன் என்பது பேரானந்தம்"என்கிறார் லிசி!

இதற்கு  பதில் சொல்லவேண்டிய கடமை  இயக்குனருக்கு இருக்கிறது.
விஜய் -அமலாபால் மணமுறிவுக்கு கவலைப்படும் லிசி அதற்கான காரணங்களை  கண்டுபிடிப்பாரா?

இதுவும் சமூக சேவைதான்!


செவ்வாய், 13 செப்டம்பர், 2016

நாங்களும் சினிமா விழா கொண்டாடுவோம்ல!

கெளம்பிட்டாங்கய்யா .கெளம்பிட்டாங்கய்யா!

வடிவேலு ஸ்டைலில் சொன்னால்தான் ஒரு கிக். டாஸ்மாக் நாட்டில்  இப்படி ஒரு சினிமா விழா நடக்காமல் இருக்கலாமா என்று நினைத்தார்களோ  என்னவோ, கடந்த நான்கு ஆண்டுகளாக லெஸ்பியன்,ஓரினச் சேர்க்கை, பை-செக்சுவல்,திருநங்கை  தொடர்பான  குறும்பட  விழாவை  சென்னையில்  நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். சிறந்த படத்துக்கு ஒரு லட்சம் பரிசும்  உண்டு.!சென்னை ரெயின்போ நடத்திவரும் வித்தியாசமான  திரைப்பட விழாவுக்கு எத்தகைய  ஆதரவு  இருக்கிறது என்பது தெரியவில்லை.

அக்டோபரில் விழா.கண்டிப்பாக செல்லவேண்டும் என முடிவு எடுத்திருக்கிறேன்.எழுத்துலக வித்தகர்கள் சிலர்  அத்தகைய விழாக்களுக்கு  செல்வது வழக்கம் என்பதை  கேள்விப்பட்டிருக்கிறேன்.

பொதுவாக அனைத்துலக திரைப்பட விழா என்றால் ஒரு கும்பல் தேடித் போகும்!

தணிக்கை செய்யப்படாத படங்களை பார்க்க முடியும்  என சிலரும் 'எந்த  படத்தை  தமிழில் சுடலாம்' என ஒரு பிரிவினரும்  தாகத்துடன் செல்வார்கள். தற்போது இருபது வருடங்களுக்கு முந்தைய பிறமொழி படங்களை சுடுவதுதான்  அவர்களது சுகம். 

நவீன காலத்துக்கு ஏற்ப அந்த பழைய  படங்களுக்கு வர்ணம் அடிப்பது  சுலபம்!

விழாவுக்கு  சென்று வந்த பின்னர் விரிவாக எழுதும் ஆசை  இருக்கிறது. 

தயிர் சாதம் சாப்பிட்டால் என்ன பலன் ( ம்) ?

ஒரு காலத்தில் தொலைக்காட்சி  தொகுப்பாளினி!

மணவாழ்வு....மன உளைச்சல்... மண விலக்கு....தொகுப்பாளினி  என உருண்டு  உருண்டு   வந்திருப்பவர்  ரம்யா!

 பத்து நாள்  இல்லறம்.அதுவே சரியில்லை என்கிறபோது  எப்படி வரும் நல்லறம்?

. தொகுப்பாளினிக்கு  உரிய  வாய்  சாதுர்யம். மொழி  ஆளுமை. கட்டான  தேகம் என்று  கண்களுக்கு  எடுப்பாகவே இருப்பார் !

கிழவனும் சற்று  நிலை  குலைந்து போவான். அப்படியொரு  அமோக விளைச்சல்.! 

வேண்டுதல் இருந்து அங்கபிரதட்சனம் செய்தாலும் இப்படியொரு தொகுப்பாளினி  கிடைக்கமாட்டார்.

இயக்குநர் வெங்கட் பிரபு  அன்ட் கோ என்றாலே தமிழ்ச்சினிமாவில் அவர்களுக்கு என    தனி அடையாளம் உண்டு. ஏழுமலையானுக்கு  முகமெல்லாம் நாமம் மாதிரி,

  இவர்களுக்கு  உடம்பெல்லாம் மச்சம்.!

டைட் ஜீன்ஸ் ,கருப்பு டி  சர்ட் .அதில் KEEP CALM, AND EAT THAYIR SAATHAM. என்கிற  ஆங்கில  வாசகம்.!  இது  ரம்யாவின்  டி சர்ட்!

மத்தகத்துக்கு கவசம்  அணிந்த பட்டத்து யானையின் கம்பீரம்,   கர்வத்துடன்தான் மைக்  பிடித்தார்  ரம்யா!

தேங்காய்க்குள் பூ  இருக்கிறதா ,தண்ணீர்  இருக்கிறதா என்பதை  உடைத்துப்  பார்த்தால்தானே  தெரியும்?

ஆனால் உடைக்காமலேயே உள்ளிருப்பது  என்ன,எது என்பது  வெங்கட் பிரபுவுக்கு  தெரியும் என்பதால் ' சென்னை 28. செகன்ட் பார்ட்'டின்  டூப்பாடூ இசைத்தள விழா  முடிந்த  பிறகு  இயக்குநரிடம் அணுகி  அந்த  டி சர்ட்டின்  வாசகத்துக்கு  விளக்கம்  தெரியுமா  என  கேட்க ,அவரும் ''ஆமால்ல.. எங்கே  ரம்யா" என்று  தேடினார்.

ரம்யாவுக்கு   அடுத்த நிகழ்ச்சி என்னவோ  ..கிரேட்  எஸ்கேப்!

இயக்குநர் என்னிடம் கேட்டார் .''நீங்க  என்ன அர்த்தம் கண்டுபிடிச்சிங்க?'
தொடர்ந்து  அவரையும் மறந்து சிரிப்பு!

சத்தியமாக  அதன்  அர்த்தம் எனக்கு  தெரியவில்லை!

தயிர் சாதம்  சாப்பிடுவதற்கும்  அமைதியாக இருப்பதற்கும்  என்ன உறவு என்பதும்  எனக்கு தெரியாது.

உங்களில்  யாருக்கேனும்  தெரியுமா?  

திங்கள், 12 செப்டம்பர், 2016

காவேரியாவது, கஸ்தூரியாவது....?

தலைப்பைப் பார்த்ததும்  'சிக்கிச்சு வெள்ளாடு! இன்னிக்கி குர்பானி"தான்னு சிலர் வசவுகளால் அறுத்துப் போட  தயாராவார்கள் என்பது  தெரியும்!
'நடிகர்கள் சங்கம் ஏன் காவேரி சிக்கலுக்காக போராடவில்லை .கன்னட நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து போராடுகிறபோது  இங்க ஏன் போராடக் கூடாது ?"

இதுதான் இன்றைய தலையாய கேள்வியாக இருக்கிறது!

நடிகர்கள் போராடுனா காவிரியில் தண்ணீரை திறந்து விட்டிருமா கர்நாடக  அரசு? ஏன் நடிகர்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்கணும்? ஒரு சிலரின் அரிப்பைத தவிர வேறென்ன சொல்ல முடியும்? அரசாங்கத்தை விட  நடிகர்கள் சங்கம் என்ன  பெரிய மம்மாவா? 

'நாங்களே உச்ச நீதிமன்றம்தான் போனோம். எங்களை விட உங்க சங்கம்  பலமானதா? இத வச்சு  விளம்பரம் தேடப் பார்க்கிறீங்களா?'ன்னு அந்த அம்மா கேட்டுட்டா  மொத்த சங்கமும் ராஜினாமா கடுதாசி கொடுத்துடுமே! அவ்வளவு  தைரியசாலிகள்யா!

எந்த பிரச்னையானாலும்  'நாங்கள் தமிழர்கள்"னு சொல்லி  உணர்ச்சியா  பொங்குவாங்க! 

அதான்  பார்த்தமே...சொந்த நாட்டின் விடுதலைக்காக  அசல் தமிழர்கள்  கொத்துக் குண்டுகளுக்கு  பலியானபோது இங்க உள்ள நகல்கள்  பொய்யான  போராட்டம் நடத்திய கூத்தைத்தான் பார்த்தமே... திட்டம் போட்டுக் கொடுத்து  ராணுவ உதவி செய்தவர்களை எதிர்க்கும் திராணியற்ற நகல்களை  பார்த்தமே!

அசல் தமிழர்களின்  இனம் அழிக்கப்பட்டுவிட்டது. வீரத் தலைவன்  அடுகளத்தில் சாய்க்கப்பட்டு விட்டான்.எங்கே அரும்பை விட்டுவைத்தால்  விருட்சமாகி  விடுதலை வாங்கிவிடுமோ  என்று  பயந்து பச்சை  பாலகனையும்  கொன்றொழித்து விட்டார்கள்.

அப்போது  எவனாவது இங்கே   கணை  எடுத்தானா,தொடுத்தானா? சிங்களர்கள்  தமிழ்ச்சினிமாவில்  இருக்கிறார்கள்.அதை  நீ கண்டித்து  குரல்  எழுப்பி  இருக்கிறாயா?

அட அவ்வளவு ஏன்யா...காவிரி பிரச்னைக்காக  முழு அடைப்பு  கோரியது இங்குள்ள  விவசாயிகள்  சங்கம்.! நாடு ஸ்தம்பித்ததா?    

ஆனால் கர்நாடகத்தில்  ஸ்தம்பித்து நின்றதே! அது எப்படி?

நடிகர்களை பார்த்து  கேட்டவர்கள்   அப்படியே  அரசியல் கட்சிகளின்  தலைவர்களையும்  பார்த்து  கேட்டிருக்க வேண்டும். ஒரு தமிழனை  நாலைந்து  காலிகள்  சேர்ந்து  அடித்து மிதித்ததற்கு மத்திய அரசு  நடவடிக்கை  எடுக்கவில்லையே! அதை கேட்டியா?

நீதிமன்றம்தான்  முடிவு எடுத்து கர்நாடகத்தை  பணிய வைத்திருக்கிறது. அதில் மண் அள்ளிப் போட்டு விடாதீர்கள்    போலிகளே!


ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

அனுஷ்காவுக்கு திருமணமா? நடக்குமா??

பாரம்பரியமான பத்திரிக்கை ஆலமரத்தின்  நிழலில் வளர்ந்து கொண்டிருப்பவன்  நான்!

எனது தொழில் எழுதுவது! அதுவும் திரைப்படம் சார்ந்து !

அதனால் எனக்கு திரை உலகில்  நிறைய  நண்பர்கள்! கர்நாடகம் தவிர்த்து  ஆந்திரம் ,கேரளம் ஆகிய மாநிலங்களில் இருக்கிற திரைப்பட  பத்திரிகையாளர்களில் சிலர்  நண்பர்களாக  இருக்கிறார்கள்.

நாளும் பேசுவோம் தொலைபேசி வழியாக.!

அப்படிதான் இன்றும் பேசினேன். ஆந்திர பத்திரிகை தோழரிடம்!

"தனி ஒருவன்" தெலுங்கு  கலெக்சன் எப்படி?"

"ஒப்பினியன்  டிவைடடாக இருந்தாலும்  கலெக்சன் நல்லாவே  இருக்கு! படம் தப்பு பண்ணாது. இங்கே நயன்தாராவுக்கு  தனி  ஆடியன்ஸ்  இருக்காங்க,! விக்ரமின் 'லவ்" கேரக்டரை  ரொம்பவும்  ரசிக்கிறாங்க!"

"சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்தை தெலுங்கில்  ரீ மேக்  பண்ணப் போறாங்களாம். கனியே  என்னிடம் சொன்னார். பாகுபலி ராஜ மவுலியின் அப்பாதான்   தயாரிக்கப் போறாராம். அதில இம்பார்ட்டன்ஸ் என்னன்னா  ராஜமவுலி அல்லது சமுத்திரக்கனியே  முக்கிய கேரக்டரில் நடிக்கலாம்! ஆந்திராவில்  முக்கிய நியூஸ் என்ன?"

"அனுஷ்காவின் மேரேஜ் பற்றிதான் பேச்சா இருக்கு!"

"அப்பாடா... நாகார்ஜுனா ,ராணா, ஆர்யா, இப்படி நிறைய பேருடன்  வந்த கிசு கிசுக்களுக்கு  விடிவு  காலம். மாப்பிள்ளை  யார்? நடிகர்தானா?"

"இல்ல..மணியன்.! திரைத்துறை சேர்ந்தவர்தான்! ஆனா  மல்டி  மில்லினர். சேனல்கள் இருக்கு. பொலிடிகல்  லீடர் ஜெகனின்  நெருங்கிய நண்பர். ஆனா  சற்று  வயது அதிகம். இவரைத்தான் அனுஷ்கா கல்யாணம் பண்ணிக்கப் போறதா  ஊர்ஜிதம்  செய்யப்படாத ஒரு தகவல் ஓடிட்டு  இருக்கு! பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தே  இரண்டு வருஷம் இருக்கும். ஏற்கனவே  சொன்னதைத்தான் தலைப்புகளை மாத்தி தமிழ்நாட்டு பத்திரிகைகள்  போடுவதாக சொல்லி  சிரிக்கிறார். அவரது  வாயினால்  சொன்னால்தான்  மாப்பிள்ளை  யார்னு தெரியும்"

இவைதான்  எங்கள்  இருவரிடையே  நடந்த உரையாடல்..

அனுஷ்காவுடன்  படத்தில்  இருப்பது  அடியேன்தான். பிரசாத் படப்பிடிப்பு  நிலையம்  வந்திருந்த போது எடுத்துக் கொண்டபடம்.!

சனி, 10 செப்டம்பர், 2016

பிராமணர்களுக்கு மட்டுமே பிள்ளையார் சொந்தமா?

தமிழ்க்கடவுள் என்று முருகனை வழிபடுகிறவர்களுக்கு பிள்ளையார்  அறிமுகம்  ஆனது எப்படி?

அவர் தமிழர்களுக்கு  ஆதி கடவுள் இல்லை!

இடையில் வந்தவர் என்கிறது வரலாறு!

பல்லவ மன்னன் நரசிம்மன் காலத்தில் தளபதி பரஞ்சோதி, சாளுக்கிய மன்னன் மீது படை எடுத்து சென்றான்.வாதாபியில்  மன்னன் புலகேசியை  தோற்கடித்தான் .சாளுக்கியர்கள்  பிள்ளையாரை  வணங்குகிறவர்கள். கோட்டை மதிற்சுவரிலும்  பிள்ளையார் இருந்ததாக  ஆராய்ச்சியாளர்கள்  சொல்கிறார்கள். "வாதாபி  கணபதே " என்கிற பக்தி பாடலை கவனிக்க!

புலகேசியின் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட செல்வங்களில்  பிள்ளையார் சிலையும் இருந்தது.

பல்லவன் வணங்க ஆரம்பித்தான்.

மராட்டிய மன்னன் சிவாஜிக்கு குலதெய்வம்  பிள்ளையார்தான்! 1749---1818 வரை சிவாஜியின் ஆணைப்படி அரசினர் விழாவாக  அன்றைய பூனாவில் கொண்டாடப்பட்டிருக்கிறது. பெஷாவர் வீழ்ந்த பின்னர் அரசு விழா என்கிற தகுதியை அல்லது அந்தஸ்தை பிள்ளையார் இழந்து விட்டார்

.அரச குடும்பத்தினர் மட்டுமே கொண்டாடி வந்திருக்கிறார்கள்..  உயர்குடியினர் என்று சொல்லிக்கொள்பவர்களின்  ஆஸ்தான கடவுள் என்பதற்கான  விதை அப்போதுதான்   விதைக்கப் பட்டிருக்க வேண்டும்.இதன் விளைவுதான்  பிராமணர்கள்  மட்டுமே பிள்ளையாரை  கும்பிட  ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த முறையை  மாற்றியவர்  லோகமான்ய திலகர்

..விநாயகர்  விழாவை  பிராமணர்கள் அல்லாதவர்களும் கொண்டாட வேண்டும் என்பதற்காக  ஒரு  குழுவை  அமைத்தார்.

மராட்டியர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வந்திருக்கிறார்கள்.. ஆண்டுக்கு ஆண்டு  விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக  வடிவமைக்கப்பட்டன.அது  இன்றும்  தொடர்கிறது.

அந்த கலாச்சாரம் இல்லாமல்  வீட்டுக்குள் மட்டுமே களிமண் வடிவில் இருந்து வந்த விநாயகர்  இன்று தமிழகத்தின் தெருக்கள்தோறும் பிரமாண்டமான வடிவில்  அருள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 இதற்கு  காரணம் யாராக  இருக்க  முடியும் ?

இந்துக்கள் என்கிற தனி அமைப்பை  அரசியலுக்காக  வைத்துக் கொண்டிருப்பவர்களே என்றுதான்  சொல்ல முடியும்.!

நெற்றி வகிட்டில் மணமான பெண்கள் மட்டுமே  வங்காளத்தில் செந்தூரம் வைத்துக் கொள்வது    அவர்களது  கலாச்சாரம். இன்று தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் வரை பரவி இருக்கும் வங்கத்து கலாச்சாரம்  நாளைக்கு  காளி ஊர்வலத்தையும் இங்கு  கொண்டு வரலாம்.

.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

கமல்ஹாசன்: கேள்வி--பதில்.

எனக்கு பிடித்தவர்கள்  யார் எனக் கேட்டால் சட்டென்று பதில் சொல்லிவிடுவேன்.
காமராஜர், நடிகர் திலகம், உலக நாயகன் கவிப்பேரரசு.!

இதை சொல்வதற்கு நான் என்றைக்குமே தயங்கியதில்லை.

இதை சொல்வதால் யார் மனதும் புண்ணாகிவிடாது! நான் யாரையும்  தாழ்த்தவில்லை என்கிற மகிழ்ச்சி எப்போதும் இருக்கிறது.

உலகநாயகன் கமல்ஹாசனின் கேள்வி-பதிலில் நான் மயங்கி இருக்கிறேன்.அவருடன் நான் நெருக்கமாக இருப்பதற்கும் அதுவே  காரணம்..

இதோ அவரது  கேள்வி-பதில்!

உலகில் மனிதர்களே இல்லையென்றால் எப்படி இருக்கும்?
* கடவுளே இல்லாதிருக்கும்!
-----------------------------------------------------
காதல் என்றால் என்ன?
*ஊமையான உடற்பசி உன்னதப்படுத்தப்பட்டபோது காதல் பிறந்திருக்கலாம்!
-----------------------------------------------------
நீங்கள் ஒரு  விஞ்ஞானியாக ஆகி  இருந்தால்?
* ஊழல் இல்லாத அரசியல்வாதிகளை  நிறையவே  கண்டுபிடித்திருப்பேன்.
--------------------------------------------
எப்படியும் வாழலாம் என்ற நோக்கு இன்றைய மனிதர்களிடம் மிகுந்துவிட்டதற்கு என்ன காரணம்?
* 'இப்படி வாழ்" என்று வழி  காட்டியவர்கள் எப்படி எல்லாமோ வாழ்கிறார்கள்  என்பது புரிந்து விட்டதால்.!
-------------------------------------------
நீங்கள் தெய்வமாக மதிக்கும் இருவர் யார்?
*நான் யாரையும் தெய்வமாக மதிப்பதில்லை.மனிதர்களாக மதிக்கிறேன். எனக்கு பிடித்தவர்களை  தெய்வமாக்குவதில் விருப்பம் இல்லை!
----------------------------------------
உங்கள் பிறந்த நாள் அன்று உங்கள் தந்தை மரணம் அடைந்தது பற்றி?
*..என் பிறந்த நாளுக்கு உண்மையான சொந்தக்காரர்  அவர்தானே!
----------------------------------------
கடவுள் உங்கள் முன் தோன்றினால்?
*நான் இருக்கிறேன் என்பதற்கு எல்லா சான்றுகளும் இருக்கிற  உயர்ஜீவி மனிதன். "நீவிர்  யாரோ?"என்பேன்.
__________________________________
.நீங்கள் அதிக அளவில் வெற்றிகளை அடைவதின்  ரகசியம் என்ன?
*பல  தோல்விகள்.
______________________________
சுதந்திர தினம் கூட ஒரு சடங்காகி விட்டதே ?உண்மையான சுதந்திர உணர்வை இன்னமும் அடித்தட்டு மக்கள் நுகர்ந்தபாடில்லை ஏன்?
* அடித்தட்டுமக்கள் வரை பரவியிருந்த சுதந்திர தாகத்தை  அறிந்த அக்கால இளைஞர்கள்  அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக ஒன்றும் செய்யவில்லை. மாமா, தாத்தா  என்று உறவு கொண்டாடியதோடு சரி! நேருவையும் காந்தியையும்  சரியாக புதியதலைமுறைக்கு அறிமுகப்படுத்தவில்லை.
------------------------------------------------
அருமையான  காதல் கவிதை-அவுத்து விடுங்களேன்?
*கவிதையுடன்  காதல் கொண்ட காரணத்தால்  எழுதுகிறேன்.
கவிதையெனும் கலைரூபம் கைவருதல் வரமென்பர்
துடித்துவரும் சில பேர்க்கு -வெடித்துவரும்
சிலபேர்க்கு-படித்து வரும் ,என் போல
நடித்துவரும் சிலபேர்க்கு--கவிதையுடன்
காதல் கொண்ட காரணத்தால்  எழுதுகிறேன்.
அவுத்துவிட கவிதையென்ன ஆண்டி கட்டும்  கோவணமா?
----------------------------------------
இன்னும்  நிறைய இருக்கிறது. அவ்வப்போது  எழுதுவேன்.
 ...

வியாழன், 8 செப்டம்பர், 2016

செக்ஸ் அதிகம் வைத்தால் இதயத்துக்கு ஆபத்து!

  ஒரு மனிதன்  மன அழுத்தம் அல்லது  கவலையால் பாதிக்கப்பட்டால்  அவன் தேடுவது  மது அல்லது  மாது.!

இன்றைய  கலாச்சாரத்தின்  சாபக்கேடுகளில்  இவையும்  அடங்கும். உல்லாசமாக  குடிக்கிறேன் என சொல்கிறவனும்குடித்ததும்  பெண் உறவைத்தான்  தேடுகிறான். அவன் பணக்காரனாக  இருப்பான்.

நடுத்தர வகுப்பினன் குடித்தால் மனைவியைத் தொட அஞ்சுவான்.அல்லது  கெஞ்சுவான்.

பொதுவாக இது நாட்டு நடப்பு!

மது குடித்தால் உடலுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி என தவறாக கருதி  நாசமாகப்  போகிறவர்களே  அதிகம். அதிகமாக மதுவை  குடிப்பவனால் பெண்ணை  திருப்தி படுத்த முடியாது.

பெண்ணை  திணற அடித்துவிட்டேன்  என்று  சொன்னால்  அது பொய்!

காமம் என்பது  பசியைப் போல  உணர்வுதான்!

அதை  அடக்குவது  எளிதல்ல.

அடக்கக் கூடாது  என்பதற்காகத்தான்  திருமணம் என்கிற  உறவை  நமது  முன்னோர்கள்  ஏற்படுத்தினார்கள்.

அதற்கு சில நெறிகள் உண்டு.

உடல் வழியாக  உள்ளம் பெறுகிறது பேரின்பம்.

கயிலையில்  சிவனும் பார்வதியும்  காமம் பற்றி பேசியதை ஒட்டுக்கேட்ட  நந்தி அதை  உலகுக்கும் சொல்லிவைத்தான் என்பது  நான் எப்போதோ படித்தது. பிற  மதங்களும்  காமத்தை  குற்றம் என சொல்லவில்லை. பவுத்தமும் தவறாக பயன்படுத்தக்கூடாது  என்றுதான் சொல்கிறது.

ஆக காமம் என்பது  ஆபாசம் இல்லை.

அதை அளவுடன் அனுபவிப்பது   ஆரோக்கியம் என்கிறது  விஞ்ஞானம்!
அண்மையில் அமெரிக்காவில்  விஞ்ஞானிகள்  கண்டுபிடித்திருப்பது  சிலருக்கு  அதிர்ச்சியாக  இருக்கலாம்.

வயது கூடக்கூட செக்ஸை குறைத்துக் கொள்ளவேண்டும் .இளமையில்  வீரியம் இருக்கிறது  எனக் கருதி அடிக்கடி குருவி போல  கூடுவது அவனது  முதுமையில்  பலவீனத்தை கொடுத்து விடும் என்கிறார்கள். ஐம்பது வயதுக்கு மேல் அவனால் பெண்ணை  திருப்தி படுத்த இயலாது என கண்டுபிடித்திருக்கிறார்கள். 57-85  வயதுக்கு  உட்பட்டவர்கள் வாரத்தில் ஒரு தடவையோ அல்லது பலதடவையோ உடலுறவு  வைத்துக்கொண்டால்  அது  அவர்களின்  இதயத்தை  பலவீனப்படுத்திவிடும். அல்லது  ஸ்ட்ரோக்  ஏற்படலாம் என்பதாக  கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நமது கலாசாரத்தில்  அறுபது வயதானவர்களுக்கு  ஷஷ்டியப்த பூர்த்தி என கொண்டாடுவது  அவர்கள்  தெய்வத்துக்கு சமமானவர்கள். உடலுறவு கொள்ள மாட்டார்கள் என்பதை  உணர்த்துவதற்குத்தான் என்பதாக ஒரு நம்பிக்கை உண்டு.

ஆனால் அப்படி நடக்கிறார்களா என்பது வேறு! வேலைக்காரியை  தள்ளிக்கொண்டு போவது சாதரணமாக நடக்கவே  செய்கிறது.

ஆகவே  காமத்தில்  நாட்டமுள்ளவர்கள்  கவனமாக இருத்தல்  நலம்!

புதன், 7 செப்டம்பர், 2016

அமலா பால் மணவிலக்கு: யார் காரணம்?

காலையில் திருமணம். மாலையில் வரவேற்பு.பின்னர் முதல் இரவு.
விடிந்தால் நீ யாரோ நான் யாரோ ...பிடி  விவாகரத்து..!

உலகம் இவ்வளவு வேகமாக  ஓடும் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

காதல் என்பது வெறும் கவர்ச்சிதான் .கசக்கி எறியவேண்டிய வெற்று காகிதம்தான் என்பது இயல்பாகிவிட்டது.

ஒருதலையாக  காதலித்தவன் கொடுவாள் ஏந்தவும் ,அமில வீச்சு நடத்தவும்  தயக்கம் காட்டவில்லை. நாலு ஜனம் கூடுகிற இடம் என்றும் பார்ப்பதில்லை . ஆனால் நாலு  சுவர்க்கு தெரியாமல் காதலிப்பவர்கள் நாடறிய தாலி கட்டிக்கொண்டு  நாலே நாளில் வாழ்ந்து முடித்து  பிடி விவாகரத்து  என கோர்ட்டு  படி ஏறி விடுகிறார்கள்.மச்சம் பார்த்த மன நிறைவுடன்  முடிந்து விடுகிறது, காதல்  வாழ்க்கை!

இப்படித்தான்  ஆகிவிட்டது இயக்குநர் ஏஎல்.விஜய் -நடிகை  அமலாபாலின் காதல் வாழ்க்கை.

இதற்கு  யார் காரணமாக இருக்க முடியும்?

"நான் எடுக்கக்கூடிய  முடிவுகளுக்கு நிபந்தனை இல்லாமல்  ஆதரவு கொடுப்பவர்  எனது  சகோதரர் அபிஜித்பால்." என்று  அழுத்தம் திருத்தமுடன்  சொல்லியிருப்பவர்  அமலாவேதான்!

ஆக அமலாவின் விவாகரத்துக்கு பின்புலமாக  அபிஜித்பாலாக இருப்பாரோ?

சந்தேகம் வருவது  இயற்கைதான்!

"ஒரு பெண்  அவளது  தொழிலையும்  ஆசைகளையும்  எதற்காகவும்  தியாகம்  செய்துவிடமுடியாது, இந்த உலகில்  யாருக்காக  எனது ஆசைகளை கைவிடவேண்டும்.மகிழ்ச்சி  எனக்குள் இருக்கிறது. மற்றவர்களிடம் ஏன் தேட  வேண்டும்?" என  கேட்டிருக்கிறார்  அமலாபால்!

அவரது  வாதத்திலும்  நியாயம் இருக்கவே  செய்கிறது,

இவ்வளவு தெளிவாக  இப்போது சொல்கிறவர்  அதை திருமணத்துக்கு  முன்னரே  யோசித்திருக்கலாம் அல்லவா?

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

பீரங்கிபுரம்....ஸ்ரீகாந்த்...சஞ்சாரி விஜய்.

நெடுஞ்சாலை  செல்லும் வழியாக  செல்லும் கதை.

இதில் நாயகனாக நடித்திருப்பவர் சஞ்சாரி  விஜய் என்கிற கன்னட  நடிகர். இயக்கியிருப்பவர் ஜான் ஜானி  ஜனார்த்தனா, இந்த பெயருக்கான  பழைய  இந்திப் பட பாடலை  நமீதா  பாடியே  காட்டிவிட்டார். மோஷன் போஸ்டரை  வெளியிட்டவர்களில்  நமிதாவும் ஒருவர். மற்றவர்  ஸ்ரீகாந்த். போகிற போக்கை பார்த்தால் இவர்களைப் பின்பற்றி தமிழ்ச்சினிமாகாரர்களும் நாளை  பிளக்ஸ் போர்டு திறப்புவிழா நடத்தினாலும்  ஆச்சரியமில்லை.

காலம் போகிற போக்கை பார்த்தால்  புதுமை என்கிற பெயரில் நடிகர்களின்  ஆடைகளுக்கு சூடம் சாம்பிராணி காட்டும் விழா என்று ஊருக்கு ஊர்  நடத்தினாலும்  ஆச்சரியம் இல்லை.

ரசிகர்கள் என்கிற  பிரிவினர் என்றைக்கு  சுயமரியாதை உள்ளவர்களாக  மாறுகிறார்களோ  அதுநாள் வரை பாலாபிசேகம் மொட்டை அடித்தல் போன்ற ரசனை  மாறவே போவதில்லை. சரி  விஷயத்துக்கு  வருவோம்.

சென்னையிலிருந்து  ராஜஸ்தான் வரை சாலைப் பயணம். படக்குழுவினர்  படப்பிடிப்பு நடத்தியபடியே  செல்வார்கள். எங்கு அன்றைய படப்பிடிப்பு முடிகிறதோ  அங்கு மொத்த யூனிட்டும்  டேரா  அடித்து தங்கிவிடும். விடிந்ததும்  மறுபடியும் படப்பிடிப்பு பயணம்.

இப்படியாக  படப்பிடிப்பு  நடந்து கொண்டிருக்கிறது.

விழாவில் பேசிய  ஸ்ரீகாந்த் " கலைக்கு  மொழி இல்லை." என சொல்லி  கன்னட நடிகரை  பாராட்டிப் பேசினார்..

சிக்கலில்  மாட்டாமல்  இருந்தால் சரி!

திங்கள், 5 செப்டம்பர், 2016

இயக்குநர் முருகதாஸ் என்றால் இளக்காரமா?

நூறு மீட்டர் ரேசில் ரிக்கார்ட் பிரேக்  பண்ணியவன்  நடக்கும்போது  தவறி விழுந்தால் நாடே சேர்ந்து சிரிக்கும்.

அதைப் போலதான் சினிமாவிலும்.! வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் சற்று  இடறினாலும் கூட அதை பூகம்பம் மாதிரி சித்தரிப்பாளர்கள்.

ரசிகர்கள் கவலைப்படவில்லை என்றாலும் சக சினிமாக்காரர்கள்  அனுதாபத் தீர்மானங்களை  நிறைவேற்றி கருப்புக்கொடி குத்திக் கொள்வார்கள்.அது உண்மையான  அனுதாபம் இல்லை.

'தொலைஞ்சான்டா" என்று நெஞ்சுக்குள்ளேயே நிறைவேற்றிக் கொண்ட ஆசை.இடத்தை கைப்பற்ற நடக்கும் முயற்சியே அது!

அது அண்மையில் இயக்குநர் முருகதாசுக்கும் நடந்திருக்கிறது.

தமிழில் ஓடிய மவுனகுரு படத்தை  இந்தியில் இயக்கினார். சோனாக்ஸி சின்ஹா முக்கிய வேடம். தயாரிப்பும் முருகதாஸ்தான். அகிரா என்கிற  அந்தப் படம் வசூலில் சுமார்.

தமிழிலும் தெலுங்கு ,இந்தி, என அண்டை மாநிலங்களிலும்  புகழ் சேர்ந்துவிட்டதே  என்கிற கடுப்பில் இருந்தவர்களுக்கு  அந்த செய்தி பஞ்சாமிர்தமாக தொண்டையில் இறங்கியிருக்கிறது.

தெலுங்கிலிருந்து  முருகதாசை எப்படியாவது விரட்டிவிடவேண்டும் என்று  காத்திருந்த சிலர் மகேஷ்பாபுவிடம்  வத்தி வைத்திருக்கிறார்கள். பெரும்பொருள் செலவில் எடுக்கப்படும் மகேஷ்பாபுவின் படத்தை  முருகதாஸ் இயக்குவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்பதுதான்  அவர்களின்  இலக்கு.

எவ்வளவோ பிளாப்புகளை கொடுத்துவரும் ராம்கோபால் வர்மாவை இன்னமும் புரட்சிக்காரர் என்று பூமாலை சூட்டிக் கொண்டிருப்பவர்களின் பேச்சை  மகேஷ்பாபு  கேட்பாரா?

பார்ப்போம்  அதையும்,!