சனி, 17 செப்டம்பர், 2016

திருநாவுக்கரசரால் கட்சியை காப்பாற்ற முடியுமா?

காங்கிரஸ் கட்சிக்கு  திமுக கடும் எதிரியாக விளங்கிய காலத்தில்  கவசமாக இருந்து  எதிர்த்து  வாள் சுழற்றிக் காத்தவர்  சிலம்புச்செல்வர் ம.பொ.சி.!

அவரின் தமிழரசுக்கழகத்தில்  இருந்த   நாவன்மை மிகுந்த சொற்பொழிவாளர்கள்  திமுகவின் எழுத்துக்கும் பேச்சுக்கும் சரிக்கு சரியாக மேடையிலும் ,பத்திரிகைகளிலும் பதிலடி கொடுத்தார்கள். வலிமை மிகுந்த திரை உலகில் வலுவாக இருந்த திமுகவுக்கு ஏபி. நாகராஜன் கடுமையான  சவாலாக இருந்தார்.குடும்பப் பாங்கான படங்களை கொடுத்தார்.

 அந்த காலத்தில்அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி  ஆகியோருக்கு இணையாக ம.பொ.சி.க்கும் மக்கள்  கூடினர். கண்ணதாசனின் பேச்சுக்கு சின்ன அண்ணாமலை பதில் சொல்வார். அந்த காலத்தில் இரு தரப்பு  மேடைகளுமே ஓரளவுக்கு ஆபாசத்தில் நனைந்தே இருந்தன என்பதையும் அதில் திமுக  விஞ்சி இருந்ததையும்  மறுக்க முடியாது.

சிற்றரசு,ஆசைத்தம்பி, நாஞ்சிலார்,சம்பத்,அரங்கண்ணல்,நாவலர், இப்படி மக்களை  கவர்ந்த பேச்சாளர்கள்  திமுகவில் இருந்தது போலவே, காங்.
கட்சியை காப்பாற்ற டி.கே. சண்முகம்,கவிஞர்கள்  கா.மு.ஷெரிப், கு.மா.பா.,,கு.சா.கி.,வானம்பாடி,படத்  தயாரிப்பாளர்கள் ,,ஜி.உமாபதி, வேணு, வவ்வாலடி  சம்சுதீன்எ ன சிறந்த பேச்சாளர்கள் இருந்தார்கள். புலவர் கீரனை போன்ற அற்புதமான நாவாற்றல்  மிகுந்தவர்கள்  ம.பொ.சி.யிடம் இருந்தார்கள்.

திருப்பூர் எஸ்.எம்.வின்சென்ட்,, டி.என்.அனந்தநாயகி ஆகிய பேச்சாளர்கள் காங்.கட்சிக்காக நாடெல்லாம் சுற்றி வந்தார்கள். நாவன்மையால் பெரும் கூட்டத்தை திரட்ட முடிந்தது. அய்யம்பேட்டை மாரிமுத்துவின் கலாநிகழ்ச்சி கிராம மக்களை காங்.கட்சிக்கு கொண்டு வந்தது.

சங்கப்பலகை, தமிழன் குரல், செங்கோல்,உமா,சாட்டை  ஆகிய  தமிழரசுக் கழக பத்திரிகைகள் திமுகவின் ஏடுகளின் கடுமையான விமர்சனங்களை  எதிர்கொண்டு அதே பாணியில் வறுத்து  எடுத்தன

.ம.பொ.சி.யை காங்.கட்சி  அவரது தமிழரசுக் கழகத்தை கலைக்க சொன்னபிறகுதான்  தேசிய கட்சிக்கு  ஏழரை  தொடங்கியது என்று சொல்லலாம். ம.பொ.சி. வெளியேறிய பின்னர் தேசிய கட்சி அதன் மரியாதையை  இழந்தது.

.இதைப் போல  தி.மு.க.வுடன் சிலம்புச்செல்வர்  இணங்கி  செயல்படத்தொடங்கியதும்  தமிழரசுக் கழகமும்  பலவீனம்  அடைந்தது.

திமுகவில்  இருந்து சம்பத், கண்ணதாசன் ஆகியோர் விலகி காங்.கட்சியில் சேர்ந்ததும்  ஒரு மாயை  இருந்தது.  காங். இழந்த பலத்தை திரும்பவும்  பெறத்தொடங்கியது போன்ற தோற்றம்.. காமராஜரின் அன்பை பெற்ற அவர்களால் கட்சிக்கு பலன்தான்! ப.நெடுமாறன் ,தஞ்சை ராமமூர்த்தி போன்றவர்களால்  வாலிப பட்டாளமும் கட்சிக்கு வந்தது. ஆனால் அவர்களையும்  நடிகர்  திலகம் சிவாஜியையும்   காங்..கட்சி முறையாக  பயன்படுத்தவில்லை.கோஷ்டி சேர்த்துக் கொண்டு  அவர்களை ஒதுக்கத் தொடங்கினார்கள். காங்.கட்சியின் கோஷ்டி மனப்பான்மையே  அதனுடைய சரிவுக்கு காரணமாக இருந்து வருகிறது.

அந்த கட்சிக்கு தமிழகத்தில்தமிழகத்தில்  சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு  செல்வாக்கு இல்லை.சொல்வாக்கு உள்ளவர்களும் கட்சியில்  இல்ல;

அன்றிலிருந்து திராவிடக்கட்சிகளின் தோளில் உட்கார்ந்துகொண்டுதான்  பலனை  அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்.

திருநாவுக்கரசரின் தலைவர் பதவி நியமனம் கூட ஒருவித சந்தேகத்தைத்தான்  எழுப்புகிறது. ஒரு காலத்தில்  ஜெயலலிதாவின்  நல்ல அன்பை  பெற்றிருந்த   திருநாவுக்கரசர்  எதிர்வரும் காலத்தில்  அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள உதவலாம் என டில்லி மேலிடம் கருதியிருக்கலாம்.

.காங் .கட்சியில் இருக்கும்  கோஷ்டிகளை திருநாவுக்கரசரால்  ஒன்று படுத்த முடியாது.

உள்கட்சி பிரச்னை ஒருபோதும்  முடிவுக்கு வரப்போவதில்லை. ஒன்று பட்ட காங்.கட்சி மீண்டும்  உருவாகும் வாய்ப்பும் இல்லை.

திருநாவுக்கரசரின்  பேச்சுக்கு ப.சிதம்பரம் கட்டுப்படுவாரா? முதலில் அது நடக்கட்டும்!பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...