Friday, September 23, 2016

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் நடந்த விவாதம்.

குப்தர்கள் காலத்தை சரித்திர ஆசிரியர்கள் பொற்காலம் என்பார்கள். ஆனால் ஆய்வாளர்களின் கருத்து வேறுபடுகிறது.மாறு படுகிறது.

சமஸ்கிருதம் அங்கீகாரம் பெற்றது குப்தர்கள் காலத்தில்தான்!ஏழைகளுக்கு  அசோக மாமன்னன் வழங்கிய நிலங்களை  கையகப்படுத்தி  பிராமணர்களுக்கு  வழங்கியது  குப்தர்கள் காலத்தில்தான்!போரில் நாட்டை  விரிவு படுத்தினார்கள்.நாளந்தா பல்கலைக்கழகத்தில்  ஆரிய பட்டர் தலைமை  தாங்கியபோது பிற கலைகளை திருடியதாக அவர் மீது  குற்றம் சாட்டப்பட்டது குப்தர்கள் காலத்தில்தான்! பூமி தன்னைத்தானே சுற்றி வருவதாக சொன்னவர் இவர்தான் என்பதும் அது மறுக்கப்பட்டதும் அவர்கள் காலத்தில்தான்!ஆக இது எப்படி பொற்காலம் ஆகும்?

ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழகத்தின் பொற்காலம் என்றால் அது பெருந்தலைவர்  காமராஜர் காலம்தான்!

அண்ணாவின் வழியில் பொற்கால ஆட்சியை  மீண்டும்கொண்டு வர  விரும்பியவர்  --ஆசைப்பட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அது நடந்ததா இல்லையா என்பதை ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும்.

எம்.ஜி.ஆரை  பத்திரிகையாளனாக நெருக்கத்தில் சந்தித்தது  அவர்  அதிமுகவை தொடங்கிய பின்னர்தான். அதற்கு முன்னர் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.ஆனால் நான்  நடிகர் திலகத்தின் பரம ரசிகன்.

நான் மதுரை மாலைமுரசில் செய்தியாளராக  பணி ஆற்றியபோது--

எம்.ஜி.ஆர். மதுரைக்கு  வந்திருந்தார். தி.மு.க.வில் மாவட்ட செயலாளராக  மதுரை எஸ்.முத்து  அதிமுகவில் இணைந்த நேரம்.

அப்போது  எம்.ஜி.ஆரின் செய்திகளை  தினத்தந்தி, மாலைமுரசு ஆகிய நாளேடுகள்  அவ்வளவாக பிரசுரிப்பதில்லை. எம்.ஜி.ஆரும் தனது பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு  அந்த நாளேடுகளின் செய்தியாளர்களை  அழைப்பதில்லை.

 பத்திரிகையாளர்களை மதுரை  பாண்டியன் ஹோட்டலில் எம்.ஜி.ஆர்   சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நானும் சென்றேன்.

மதுரையில் தினமலர் செய்தியாளராக இருந்த ரமேஷ்  என்னை பாண்டியன் ஹோட்டலில் பார்த்ததும் பதறிப் போய்விட்டார்.

'"கட்சிக்காரர்கள்  தப்பாக நடந்து கொள்ளப்போகிறார்கள் .போய் விடுங்கள்" என்று  அச்சப்பட்டார். அதையே மற்றவர்களும் சொன்னார்கள்.

இளங்கன்று பயமறியாது என்பார்கள். செய்தியாளர்கள் வரிசையில் நான்தான்  முதலாவது  ஆள்.! ( படத்தில் கோலம் போட்ட  முழுக்கை சட்டை போட்டவன்.)

தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் கட்டம்.

மதுரை முத்தண்ணன் என்னை  பதட்டமுடன் பார்க்கிறார்.

"நான் மணி!.மாலைமுரசு நிருபர்!"

மொத்த கூட்டமும் என்னையும் எம்.ஜி.ஆரையும் பார்க்கிறது.

"உங்களை நான் கூப்பிடலியே!" என்றவர்  பக்கத்திலிருந்த முத்தண்ணனை பார்த்து  எதோ கேட்க அவரும் ஏதோ சொல்கிறார்.

"இது பிரஸ் கான்பரன்ஸ். கேள்விப்பட்டுதான் வந்தேன். என்னுடைய டியூட்டி  நியுஸ்  கேதர் பண்ணுவது. அதுக்குதான் வந்தேன். வெளியே போகச்சொன்னால் போயிடுறேன். ஆனா இங்க என்ன நடந்ததுன்னு நான் கேள்விப்பட்டதைதான்   நியூஸா போடுவேன். அது தப்பா கூட போகலாம். இங்கேயே இருந்தால் நடந்ததை அப்படியே போடுவேன்"

இதை எப்படி சொன்னேன், எந்த வேகத்தில் அப்படி பேச முடிந்தது என்பதெல்லாம்  நான் கற்பனை செய்தது கூட இல்லை. ஆனால் அதுதான் நடந்தது.

அன்றைய மாலைமுரசுவில் எம்.ஜி.ஆர்.பேட்டி வெளிவந்தது. அதன்பிறகு  எம்.ஜி.ஆர். வந்தால்  ஜேப்பியார் போன் செய்து  முதலில் அழைப்பது  ரமேஷையும் என்னையும்தான்.

"டே ..மாப்ளைகளா...தலைவர் கேக்கிறார்டா! வாங்கடா " என்பார். ஆனால் எங்களை விட போட்டோகிராபர் ராமகிருஷ்ணன்  மிகவும் நெருக்கம்!

இந்த உறவு  நான் சென்னைக்கு  தேவி வார இதழுக்கு வரும் வரை இருந்தது. ஆனால்  காளிமுத்து அண்ணனின் கடைசி காலம் வரை நாங்கள்  இருவரும்  நெருங்கிய  நண்பர்கள்தான்!

அது ஒரு பொற்காலம்தான்!

No comments:

விவசாயம் இல்லாத மந்திரக்கிணறு...!

கிணறு வெட்டினாலே அது விவசாயம் பண்ணுவதற்காக இருக்கும் அல்லது  குடிக்க மற்ற அன்றாட வீட்டு வேலைகளுக்காக இருக்கும். கிணறு என்றால் கட்டாயம் ...