ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

காதல் புனிதமானதா? அதிலும் சினிமா காதல் ......?

"பாடம் படித்து நிமிர்ந்த விழி-தனிற்பட்டுத் தெறித்தது மானின் விழி" என்றார்  பாவேந்தர்  பாரதிதாசன்.
"கண்ணிரண்டும்  ஆளை விழுங்கும் அதிசயம்" என்றார் கவியரசர் பாரதியார்.

எல்லாமே பெண்களின் விழிகளைப் பற்றியதுதான்.!

பெண்களின் விழிகளுக்கு  ஆணை  வீழ்த்தும் வலிமை உண்டு.

 கண் வழியே புகுந்து மனதில் நங்கூரமிட்டுக் கொள்கிற காதல் சில நேரங்களில் வெளியேறி விடுவது ஏன்?

காதல் நடிப்பில் கசிந்து உருகி, மருகி  நிஜமாகவே காதல் வயப்படுகிற நடிகர், நடிகைகளில் சிலர்   பாதி வழியிலேயே  அறுத்துக்கொண்டு ஓடி விடுவது  ஏன்?

பசி அடங்கி விடுவதாலா? அல்லது  புரிதல் என்பது இடையிலேயே  முறிந்து விடுவதாலா?

காதல் மன்னன் ஜெமினி கணேசன் - சாவித்திரி இருவரும் எப்படியெல்லாம்  காதலித்தார்கள். வளப்புத் தந்தையின்  துப்பாக்கி மிரட்டலுக்குப்  பயந்து  நள்ளிரவில்  ஜெமினியின் வீட்டில் அடைக்களமானவர் சாவித்திரி. அன்றைய  இரவில் அடைக்கலம் தந்த முதல் மனைவி பாப்ஜிக்கு  தனது சக்களத்தியாக  வரப்போவது அந்த  சாவித்திரிதான்  என்பது தெரியாது..

ஜெமினி கணேசனின்  ஆண் வாரிசு இல்லாத குறையை  களைந்தவர்தான் நடிகையர் திலகம் சாவித்திரி!

இருவரிடம் இருந்து வந்த புரிதல்  ஒரு கட்டத்தில் தடம் புரளவே  வாழ்விலும் பிரளயம் ஏற்பட்டது.

சாவித்திரி தனது உடல் பருமனை குறைப்பதற்காக  மாளிகையின் தென்புறத்தில் நீச்சல் குளம் கட்டுவதற்கு   பள்ளம் தோண்ட.......

"அது நல்லதல்ல. வீட்டிலிருக்கிற லட்சுமி வெளியேறிவிடுவாள் ..தரித்திரம் தாண்டவமாடும்" என்று ஜெமினி தடுத்ததை  சாவித்திரி கேட்கவில்லை
அதன் பின்னர் கணவனின் சொற்கள் அறிவுரைகள் அவ்வளவாக  மதிக்கப்படவில்லை. பிரிந்து வாழ நேரிட்டது. மதுப்பழக்கம் அவரை  விழுங்கத் தொடங்கியது. விலை உயர்ந்த  மது வாங்க வழியற்ற நிலையில் சாராயமும் குடித்தார்.

இது காதல் மடிந்த கதை.

அமிதாப்பச்சன்---ஜெயபாதுரியின்  காதலும்  திருமணத்தில் முடிந்த பிறகு ஒரு கட்டத்தில்  கல்யாண பந்தம்  பட்டுவிடக்கூடும் என்கிற நிலை ஏற்பட்டது.

நமக் ராம் என்கிற படத்தில் முதன் முதலாக இணை சேர்ந்து நடித்தவர் ரேகா. இவர் காதல் மன்னன்  ஜெமினி---புஷ்பவல்லிக்கு  பிறந்தவர்.

அழகும் பழகும் விதமும் அமிதாப்பை ரேகாவின் மடியிலேயே கிடத்தி விட்டது.

"அமிதாப் என் வாழ்க்கையில் வந்த பின்னர்தான் எனக்கு நல்லது-கெட்டதை புரிந்து கொள்ள முடிந்தது .நாங்கள் காந்தர்வமணம் செய்து கொண்டோம்"என்பதாக சொன்னார்,

ஜெயபாதுரி எவ்வளவோ தடுத்தும்  அமிதாப்-ரேகா காதல் கரை தாண்டியது.

பொறுத்தார் ஜெயா. மீட்டார் அமிதாப்பை!

1982-ஜூன் இருபத்தி  நான்காம்  தேதி பெங்களூரில்  நடந்த 'கூலி'  படப்பிடிப்பில் அடி வயிற்றில் பட்ட காயம் ,அதனால் ஆறு மாத காலம் சிகிச்சை ,ஜெயாவின் கவனிப்பு  என  அமிதாப்புக்கு    அதிகமாகவே நேரம் மிஞ்சியது. மனைவியின் கவனிப்பு  அவரை மாற்றியது.

இது காதல் மீண்ட கதை,

இதைப்போல சினிமாவில் எக்கசக்கம் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...