Tuesday, September 27, 2016

கண்ணே, கதவைத் திறடி..!

வீட்டுக்கு லேட்டாக வருகிற கணவன் யாராவது " கண்ணே,கண்மணியே ..வந்து கதவைத் திறம்மா" என்று  எப்போதாவது  சொல்லி இருப்பானா?
காலிங்பெல்லை ஒரு அழுத்து! வரவில்லையா...மறுமுறையும் கையை எடுக்காமல்  அழுத்துவான்.இவனுக்கே இப்படியென்றால் பகலெல்லாம்  வேலை செய்து களைத்துப் போன மனைவி கடுப்பு ஆவாளா, மாட்டாளா?

"வந்துட்டாரு மன்மதரு!  இனி தூக்கம் போச்சு..பத்து ரூபாய்க்கு மல்லிகைப்பூ
சேட்டுக்கடை அல்வான்னு வாங்கியாந்து  இம்சைகள் ஆரம்பிச்சிரும். இடுப்புக்கு நாம்ப  வெளக்கெண்ணை  தடவிக்கனும்"  என்று வரப்போகும்  தொல்லையை நினைத்து கண்ணை மூடியபடியே கிடப்பாள்.இதுவும்  ஒரு  வகை ஊடல்தான்! அவனின் கைகள் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று ஒரு கணக்கையே தொடங்கியிருப்பாள்!.

வெளியே நம்மாளு."அப்படியென்ன தூக்கம்? சனியன்..சனியன்"என்று மனசுக்குள் எரிவான்.கோபத்தை வெளிப்படையாக காட்ட முடியாதே! வீட்டுக்குள் சென்றதும் அவனது விரகதாபத்தை எப்படி தணித்துக் கொள்ள  முடியும்? என்றுதான் நினைப்பான்.
அதனால்  "யம்மா பத்மா...கதவை திறம்மா " என்றவாறே அப்புறம்தான்   கதவை தட்ட  ஆரம்பிப்பான்.

கலிங்கத்துப்பரணியை  புரட்டி,  கடை திறப்பு பகுதியை படித்தபோது  கதவை திறப்பதற்காக தலைவன் எப்படியெல்லாம் கரைகிறான் என்பது தெரிந்தது.  செயம்கொண்டாரின் தமிழ்...........     ஓர் அருவி! நனைந்தபடியே ரசிக்கலாம்.

போருக்கு சென்ற தலைவன் குறிப்பிட்ட கால அளவில் இல்லம் திரும்பவில்லை.

இன்னும் ஏன் வரவில்லை என்ற ஏக்கம் பயம் தலைவிக்கு  இருக்காதா? அது நாள் வரை தலைவனுடன் கனவில் சல்லாபம் கொண்டிருந்த அவளுக்கு  அங்கங்கள்  நோகாதா என்ன? மச்சங்கள் பார்ப்பதற்காக  உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை அதரங்களால் அளவு எடுத்தவனல்லவா! அவள் நாணிக்கொண்டு மறுத்தாலும் அதிலும் சொல்ல இயலாத சுகம்.

நினைத்துக் கொண்டே படுத்திருக்கிறாள் தலைவி!

கதவு தட்டுகிறான்  தலைவன்!

"என்னவளே..இனியவளே! சூதாடும் கருவி அளவே  உள்ள இள முலை உள்ளவளே! அது வளர்ந்து திமிறி நிற்கும் காலத்தில் துறவறம் பூண்டவர்களின்  நிலை என்னாகும்? தடுமாறி விடுவார்களே. உடுக்கையின் அளவே இடை! நீள் விழி! சாகாவரம் தரும் அமுதம் அல்லவா உனது சுகம்,கண்ணே ..கதவை திற" என தட்டுகிறான்.

"சூதளவு அளவெனும் இளமுலைத்
      துடி அளவு அளவெனும் நுண்இடைக்
காதளவு அளவெனும் மதர் விழிக்
   கடலமுது அனையவர்  திறமினோ!"--இப்படி  நீளுகிறது .செயங்கொண்டாரின் கற்பனை.!

தமிழை வாசிப்பது என்பது கதைப் புத்தகங்களை மட்டும் இல்லை. இலக்கியமும்  வாசிப்புக்குரியவை.தமிழ்  வளரும் .

எனது வலைப்பூவை   வாசிக்கும்  நண்பர்களே எனது பணிவான கோரிக்கை.எனக்கு உங்கள் ஆதரவு தேவை. குறைகளை சுட்டவும் திருத்தவும் என்னுடன்  இருப்பது  அவசியம் என கருதுகிறேன்.

No comments:

விவசாயம் இல்லாத மந்திரக்கிணறு...!

கிணறு வெட்டினாலே அது விவசாயம் பண்ணுவதற்காக இருக்கும் அல்லது  குடிக்க மற்ற அன்றாட வீட்டு வேலைகளுக்காக இருக்கும். கிணறு என்றால் கட்டாயம் ...