
'முதல்வர்' ஜெயலலிதாவை பற்றி எனக்கு அதிகமாக தெரியாது.
ஆனால் அவர்' கொள்கை பரப்பு செயலாளராக' இருந்தபோது வாரம் இருமுறை சந்திக்கும் வாய்ப்பினை மூன்று மாத காலம் பெற்று இருந்தவன் நான்!
அவ்வப்போது கார்டனுடன் தொலைபேசியில் பேசவும் இயலும்!
அந்த காலத்தில் பூசாரிகள் யாரும் இடையில் இருந்தது இல்லை.
அன்புடன் பேசுவார்.
நான் 'தேவி' வார இதழில் திரைப்பட செய்தியாளராக பணியாற்றினேன். நண்பர் திரு.ஜேம்ஸ் செய்தி ஆசிரியராக இருந்தார். ஆசிரியர் பொறுப்பில் ஐயா .பா.ராமச்சந்திர ஆதித்தனார்.இவருக்கு .தமிழ் மீது தனித்த பற்று உண்டு. அதனால்தான் அவர் தமிழ் ஈழத்தை விரும்பினார்.விடுதலை இயக்கங்களை ஆதரித்து எழுதவும் பணித்தார். அதனால்தான் மாவீரன் பிரபாகரனை சந்திக்கிற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.
ஒரு நாள் ஐயா அழைப்பதாக கூறவே நான் மாலைமுரசு அலுவலகம் சென்று அவரது அறையில் சந்தித்தேன்.
"அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிவித்திருக்கிறார். நமது 'தேவி'யில் ஜெயலலிதாவின் கேள்வி-பதில் வந்தால் சிறப்பாக இருக்கும்.ஜேம்சும் இதைத்தான் சொல்கிறார். நீங்கள் அந்த அம்மாவை சந்தித்துப் பேசிப்பாருங்களேன்?"என்றார்.
கார்டனுடன் தொடர்பு கொண்டு பேசிய அரை மணி நேரத்தில் பதில் வந்தது.
"அம்மா வரச்சொல்றாங்க!"
அப்போது என்னிடம் 'சுவேகா" என்கிற மொபெட் இருந்தது. அந்த காலத்தில் அவ்வளவாக போக்குவரத்து நெரிசல் இல்லை.ஆயிரம் விளக்கில் இருந்து கார்டனுக்கு பத்து நிமிடத்தில் சென்று விட்டேன்.
வரவேற்பு அறையில் அமர்ந்தேன். பணியாள் முதலில் தண்ணீர் கொடுத்து விட்டு "காப்பியா,டீயா?" என கேட்க எல்லாமே நடந்து முடிந்த அடுத்த கால் மணி நேரத்தில் அம்மா வந்து விட்டார்,
அறிமுகம் செய்து கொண்டேன்.
"தேவியின் வாசகர்கள் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று ஐயா விரும்புகிறார்?"
மறு நொடியே பதில் வந்தது. "ஒ.கே.! அறிவிப்பு போட்டுவிட்டு அதன்பின்னர் அந்த கேள்விகளை அப்படியே கொண்டு வந்து விடுங்கள். நீங்களாக கடிதங்களை தேர்வு செய்ய வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்.அடுத்த நாள் போனில் தகவல் சொன்னதும் பதிலை வாங்கி செல்லுங்கள். புகைப்படங்களை நானே தந்து விடுகிறேன்"என்றார்.
மகிழ்வுடன் திரும்பி ஐயாவிடம் சொல்ல அந்த வாரமே 'தேவி'யில் அறிவிப்பு வெளியானது.
குவிந்த கடிதங்களை கொண்டுபோவதும் பதில்களை வாங்கி வருவதுமாக மூன்று மாதங்கள் ஓடியது. வாரம் தோறும் என்னை அழைத்து கருத்துகளை கேட்பார். நானும் எனக்கு தெரிந்த அரசியலை அவரிடம் சொல்வேன்.
அதிமுகவில் என்ன அரசியல் நடந்ததோ தெரியாது. வலம்புரி ஜான் என்பவர் அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் " அதிமுக எதிர்ப்பு பத்திரிகையில் கொ.ப.செ. எழுதலாமா?" என கண்டித்து ஒரு கட்டுரை வெளியானது.
மறுநாளே என்னை போனில் அழைத்து " மணி..இந்த வாரத்துடன் கேள்வி பதிலை நிறுத்தி விடுவோம். காலம் கனிந்து வரும்போது எழுதுகிறேன். ஆசிரியரிடம் சொல்லி விடுங்கள்!"என்றார்.
இந்த வார்த்தை இன்னமும் என் நினைவுகளில் கல்வெட்டாய் பதிந்து இருக்கிறது.
ஆசிரியரிடம் சொன்னபோது மெல்லிய சிரிப்பு !
அதற்கு பின்னர் மேடத்தை சந்திக்கவே இல்லை.
காரணம் அரசியல்!
இங்கு வெளியிடப்பட்ட படம்தான் அன்றைய தேவியில் முதலில் வந்தது.