Saturday, October 1, 2016

நடிகர் திலகத்திடம் மாட்டிய நிருபர்கள்!

அக்.1.....

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள். எண்பத்திஎட்டு  ஆண்டுகள்..

அவரைப் பற்றி  நிறைய எழுதலாம்.இருந்தாலும் அவருடன் அந்த பொன் மாலைப் பொழுதில்  வாய் விட்டு சிரித்து  உரையாடிய  நாளை மறக்க முடியாது.

 திரைப்படப் பத்திரிகையாளர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை தொடங்கிய பின்னர்  அவரது ஆசியை பெறவேண்டும் என நான் ஆசைப்பட்டேன். மற்றவர்களும் விரும்பினார்கள்.நிர்வாகிகள் மட்டும் சந்தித்தால் போதும் என  முடிவு செய்து அன்னை இல்லத்துக்கு சென்றோம்.

அண்ணனுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. கிச்சன் வரை சென்று அவருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறேன்.அம்மா தான் பரிமாறுவார்.

"எனக்குதான் சுகர்.அவனுக்கு எதுவுமில்ல. கூட ரெண்டு இட்லி  வைம்மா" என கமலா அம்மாவிடம் சொன்னதை எப்படி மறக்க முடியும்?

அத்தகைய உறவு  இருந்ததால்  அன்னை இல்லத்தின் மாடியில்  அவரை சந்தித்தோம்.

சிம்மத்தின் குரல்.கம்பீரம் குறையாமல் அதே நேரத்தில் கனிவான  குரலில்  "வாங்க..வாங்க..என்ன எல்லோரும் ஒண்ணா கிளம்பி வந்திருக்கிங்க?"
என்று வரவேற்றார்.

அங்கிருந்த சோபாக்களை பத்திரிகை சகோதரர்கள் நிரப்பினார்கள்.

"ண்ணே! நாங்க எங்களுக்காக ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம்.உங்களின் ஆசி  வேணும்.நான் தலைவர்'" என்றதும் மேலும் கீழுமாக என்னை பார்த்தார்.

"அப்ப..உன்னை இனிமே நான் வாங்க போங்கன்னுதான் சொல்லணும். ஏன்னா  நீங்க தலைவராச்சே?"

சற்றும் நகைக்காமல் என்னை பார்த்தார். " படவா! அப்பறம் இவுகளை  பத்தி  சொல்லு,!"

''இவரு பேரு பிஸ்மி! எதையுமே  ஸ்ட்ரைட்டாதான் எழுதுவாரு."

"ஓ....! அப்ப மத்தவங்கள்லாம் கோணலாதான் எழுதுவாங்க. இவரு மட்டும் நேரா  எழுதுவாராக்கும்? "

இப்படி  நையாண்டியாக  அன்றைய மாலை நேரம் கடந்தது.

மற்ற சகோதரர்களை வழி அனுப்பிவிட்டு நான் மட்டும் தனியாக சந்தித்தேன்.

என்னை அவர் தனியாக சந்திக்க விரும்பியதால் ...!

''எதுக்குடா ..கிசுகிசு எழுதி மத்தவனுங்க வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டிக்கிறே? எல்லோரும் கம்ப்ளெயின்ட் பண்றானுங்க.அப்படி எழுதி  என்னத்த  கோட்டை கட்டிக்கப்போறே? " என்று அன்புடன் கண்டித்தார்.

ஆனால் பத்திரிகைகளின் பொருளடக்கத்தில் கிசுகிசுவும் நிரந்தர  இடம் பெற்றுவிட்டதால் தவிர்க்க முடியவில்லை. அதற்கு பின்னர் சில காலம் அவரின் கண்களில் சிக்காமலேயே  ஸ்டுடியோ ரவுண்டு போய் வந்தேன்.

ஆனால் இன்றைய வளரும்  நடிகர்கள்  பத்திரிகையாளர்களை விட்டு விலகியே  பழகுகிறார்கள்.

No comments:

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...