சனி, 1 அக்டோபர், 2016

வெட்கக்கேடு...! நாம் எப்படி உருப்படுவோம்?

அக்டோபர் இரண்டு.

நாட்டுத்தந்தை காந்தியடிகள், ஆண்மை மிகு லால்பகதூர் , கர்மவீரர் காமராஜர்  இவர்களை நினைவு  கொள்கிற நாள்! அதாவது இன்று மட்டுமே நினைக்கப்படுகிற தலைவர்கள்.விடுதலைப் போராட்ட தளபதிகள். இந்த தேசம்  மறக்கக்கூடாத தலைவர்கள். இந்திய துணைக்கண்டத்தில்  வாழ்கிற  மாணவர்கள் அனைவரும் இவர்களை வெறும் பெயரளவிலேயே தெரிந்து வைத்திருக்கிற தியாகிகள்.!

இவர்களது வீரப் போராட்டமோ ,,எப்படி சிறைப்பட்டு சித்திரவதை அனுபவித்தார்கள் ,என்பதோ ,இந்த தேசம் காப்பாற்றப்படுவதற்காக  எப்படி செயல்பட்டார்கள் என்பதோ...எந்த மாணவனுக்காவது முழுமையாக தெரியுமா?

யாராவது ஒரு நடிகனைப் பற்றி கேளுங்கள். விளக்கமாக சொல்வான். நடிகனது, பிறப்பு, வளர்ப்பு, படங்களின் பட்டியல் என பக்காவாக தெரிந்து  வைத்திருப்பான்.ஆனால் தலைவர்களின் வரலாறு சுத்தமாக தெரியாது, அரசியல்தலைவர்கள், ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டாமா?

அவர்களுக்கு கையூட்டு பெறுவது மட்டுமே தெரியும். நடிகனது பிறந்தநாள் விழாவுக்கு தலைமை தாங்குவார்கள். தேர்தல் வந்தால் செல்வாக்குள்ள  நடிகர்களைத் தேடி ஓடுவார்கள். நாடு நாசமாவது  இவர்களால் தான்!

உலகத்தில் மிகவும் மோசமான சர்வாதிகாரிகளில் ஹிட்லரும் ஒருவன்.

அவனது 'மெய்ன் காம்ப்' என்கிற 'எனது போராட்டம் ' புத்தகத்தின் தமிழாக்கத்தை இன்று வாசித்தேன். காந்தியடிகளின் நாளில் சர்வாதிகாரியை  புரட்டலாமா என சிலர் நினைக்கலாம்.

கல்வி கற்றுக் கொடுப்பது பற்றி அந்த கொடியவனின் பார்வை என்னவாக இருக்கும் என்கிற  உந்துதல்தான் காரணம். ச.சுப்ரமணியம் மொழிபெயர்த்திருந்த அந்த புத்தகத்தில் ஹிட்லரின் கருத்து..

"பள்ளிக்கூடங்களில்  உலக சரித்திர பாடம் கற்றுக்கொடுக்கும் முறை  மிகவும் அதிருப்திகரமாக இருக்கிறது,சரித்திர பாடம் கற்றுக்கொடுப்பதன்  நோக்கம் சில தேதிகளையும்  சம்பவங்களையும்  மாணவர்கள்  உருப்போட்டு  மனப்பாடம் செய்ய வேண்டுமென்பதல்ல. ஒரு தளபதியோ, அல்லது வேறொருவரோ பிறந்த தினம்,ஒரு மன்னரின் பட்டாபிசேக  நாளை அறிந்து கொள்வதில் மாணவர்களுக்கு  என்ன சிரத்தை இருக்க முடியும்? அவை அவ்வளவு முக்கியமான விஷயங்களா?
 சரித்திர  பிரசித்தமான சம்பவங்களுக்கு  காரணங்களையும்  அச்சம்பவங்களை உருவாக்கிய  சக்திகளையும்  ஆராய்ந்தறியும்படி செய்வதுதான்  சரித்திர பாடத்தின் தத்துவம்"

ஹிட்லரின் கருத்து  ஜெர்மனிக்கு மட்டும்  பொருந்தக் கூடியது என்பதாக நான் கருதவில்லை.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், ஜெய்ஹிந்த்செண்பகராமன், இப்படி இன்னும் எத்தனையோ  தியாகிகளை  நமது இளைய தலைமுறை  தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நமது சட்டமன்ற உறுப்பினர்கள்,மக்கள் சபை உறுப்பினர்கள்,நமது அமைச்சர்கள் இவர்களில் எத்தனை பேருக்கு   இந்திய விடுதலைப் போரும்,அதில் பங்கேற்ற தலைவர்களின் தியாகமும் எந்த அளவுக்கு தெரியும்? நான் அறிந்தவரை பொதுவுடமை கட்சி தலைவர்களுக்கு  உலக அரசியல் மட்டுமல்ல , உள்ளூர்  அரசியலும் தெரிந்திருக்கிறது. பாஜக வினர் ஆர்,எஸ்.எஸ் .தலைவர்களை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆட்சி பீடத்தில் அமரும் வாய்ப்பு பெற்ற திராவிட கட்சிகளின் தலைவர்களுக்கு  தெரிந்திருந்த போதிலும்  அவர்கள் ஆட்சியில் அமரும் போது சரித்திர தலைவர்களை  மேலெழுந்தவாரியாக  மட்டுமே காட்டுவார்கள்.

இந்த நிலை மாறவேண்டும்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...