Sunday, October 9, 2016

இவள் கண்ணகியா, இல்லை சீதையா?

"குடிக்காதே! வேணாம்.உனக்கு மட்டும் கேடு இல்லை.நம்ம குடும்பமே நாசமா போயிடும் .போகாதே!"

தாலியை காட்டி கெஞ்சுகிறாள் பெண்டாட்டி. பெயர் பொன்னம்மாள்.

"நான் சம்பாதிக்கிறேன்.மாடு கணக்கா உழைக்கிறேன்.உடம்பு வலிக்கிதிடி!"என்கிறான் புருஷன் பால்ராஜ்.

பொன்னம்மாளுக்கு வயது இருபத்திஆறுதான் . கான்வென்ட் பள்ளியில்  ஆசிரியை.

"உடம்பு வலிக்கிதா..வா  நான் சுடுதண்ணி வச்சு குளிப்பாட்டுறேன். தலைவலி தைலத்தை கலந்தா வலி போயிடும். வாய்க்கு ருசியா சமைக்கிறேன் .சொல்லு மீனா,கோழியா?"

"சரக்கு போட்டுட்டு வாரேன். கோழி குழம்பு வச்சு மீனை வறுத்து வை. சூப்பரா  இருக்கும்."

''ஊர்ல இருக்கிறவங்கெல்லாம் டீச்சர் புருஷன் குடிகாரன்னு பேசுறது உன் காதுல  ஏறலியா? உன்னை டாஸ்மாக் குருவின்னு சின்னபுள்ள கூட  கேலி  பண்ணுதுய்யா....ரோட்டுல தல நிமிந்து நடக்க முடியல! இன்னிக்கி ரெண்டுல  ஒன்னு பாத்திடனும்னுதான் லீவு போட்டு உட்காந்திருக்கேன்.இன்னிக்கி நீ குடிக்க போகக்கூடாது."

பொன்னம்மாள் ஒரு முடிவுக்கு வந்தவளாக பேசுகிறாள்.

அவனோ குடிக்காமல் விடப்போவதில்லை என்கிற முடிவுக்கு எப்போதோ வந்து விட்டான்.

"போனா என்னடி செய்வே? அம்மா விட்டுக்குத்தானே போவே.! போ...ஒரு வாரம் கழிச்சு வா. இல்லேன்னா ஒரு மாசம் கழிச்சு வா! நீ இல்லேன்னா  ஒண்ணும் குடி முழுகிப் போகாது. போய்த்தொலை. நான் நிம்மதியா  கு டிச்சிட்டு வாரேன்"

ஆவேசம் வந்தவளாக  மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீது  ஊற்றிகொண்டாள் பொன்னம்மாள்.

பொன்மேனியை  தீ நாக்குகளுக்கு  ஆகுதியாக்கும்  முடிவில்!

, " இப்ப சொல்லு...இதை மீறியும் நீ போகத்தான் போறியா?"

"என்னடி சீன் காட்டுறியா? போடி வெக்கம் கெட்ட நாயே!" என திட்டிவிட்டு வாசல்படி தாண்டி நடக்கிறான்.

அவளுக்கு எங்கிருந்துதான்  அந்த தைரியம் வந்ததோ.... அப்படியே அவனை பின் தொடர்கிறாள். வழி நெடுகிலும்  போகாதே ,,திரும்பிடு என்று அழுதபடியே !
அவன் கொஞ்சமும் கவலைப்படாமல் டாஸ்மாக்கில் நுழைய, இவளோ  அந்த இடத்திலேயே தன்னை கொளுத்திக்கொண்டுவிட்டாள்.

புனிதவதி  தீ குளிக்கிறாள்.

இது கற்பனை அல்ல. உண்மையில் நடந்த நிகழ்வு.

சென்னை  எக்ஸ்பிரஸ்  நாளேட்டில் வந்திருந்தது.

இவளை  சீதையில் சேர்ப்பதா, அல்லது  கண்ணகியில் சேர்ப்பதா?

பொன்னம்மாள்  நவீன சீதை.இவளது சாபம் என்னவாக  இருக்கமுடியும்?

No comments:

விவசாயம் இல்லாத மந்திரக்கிணறு...!

கிணறு வெட்டினாலே அது விவசாயம் பண்ணுவதற்காக இருக்கும் அல்லது  குடிக்க மற்ற அன்றாட வீட்டு வேலைகளுக்காக இருக்கும். கிணறு என்றால் கட்டாயம் ...