சனி, 8 அக்டோபர், 2016

திராவிட கட்சிகளை மன்னிக்கவே முடியாது.

தமிழகத்தின் பல்வேறு  சமூக அவலங்கள், சீர்கேடுகளுக்கு  இடம் கொடுத்ததே, திராவிட கட்சிகள்தான்.! ஆட்சியையும் ,கட்சியையும்  காப்பாற்றிக் கொள்ள மதவாத கட்சியான பா.ஜ.க.வேர் பிடிப்பதற்கு  நிலம் கொடுத்து ,நீர் ஊற்றியவர்கள் அவர்கள்தான்!

ஏனைய மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்.வலுவாக தளம் அமைத்துக்கொண்ட பிறகு தமிழகத்தில் பிராமணர்கள் வசம் இருந்த பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். காலை, மாலைகளில்  'ஸாகா" அமைத்தது..ஊர்வலம் நடத்தியது. .இருந்தாலும்  அது வலிமை பெறவில்லை.. ஜனசங்கம் அரசியல் ரீதியாக  இறங்கியதும் ஆபத்தை உணர்ந்த தந்தை பெரியார்  அதை தலை தூக்காமல் தடுத்தார்,பொதுவுடமை இயக்கங்களும்  முழு மூச்சுடன் மத வாதத்தை  எதிர்த்தன. ஆட்சிகள் மாற்றம் வந்தது.

அறிஞர் அண்ணாவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களின் பாதுகாப்புக்காக ,அரசியல் வளர்ச்சிக்காக  பிஜேபிக்கு ஆதரவளித்தார்கள். எத்தகைய பேரிடருக்கு தாம்பூலம் வைத்து வரவேற்பு அளித்திருக்கிறோம் என்பது தெரிந்தே அந்த குற்றத்தை செய்தார்கள்.

தமிழகத்தின் நலம் பின்னுக்கு தள்ளப்பட்டது,தனி நபர் நலன் முன்னிலை  பெற்றது. மத்தியில் தங்களின் செல்வாக்கு சொல்வாக்கு இரண்டும் குறையாமல் இருந்தால் அது போதும் என்று கரையான் புற்றுக்குள் பாம்பு  வளர்த்தார்கள்.

காங்., பிஜேபி மாறி மாறி மத்தியில்ஆட்சிக்கு  வந்தாலும் மாநிலத்தில் திராவிட கட்சிகளை தவிர வேறு கட்சிகள் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை நன்றாக அறிந்திருந்த தேசிய கட்சிகளுக்கு திராவிட கட்சிகளின் தோள்கள்  சுகமான சுமைதாங்கிகளாக இருந்து வருகிறது. மத்தியில் வலிமையாக இருக்கும் கட்சிக்கு பல்லக்கு சுமப்பதற்கு  திராவிட கட்சிகள் தயங்கியதில்லை.

இதன் விளைவுதான் பிஜேபி தமிழகத்தில் ஆணிவேர் பிடித்து இருக்கிறது. மதவாதங்களுக்கு இடம் தராத மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தனது  நிம்மதியை இழப்பதற்கு  அடிப்படையாக இருந்தது  திராவிட கட்சிகள்தான் என்பதை  மறுப்பதற்கில்லை.

எதிர்வரும் காலங்களில் மதவாதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்படுமேயானால் அதற்கு முழுக் காரணம் திராவிட கட்சிகள்தான்.

அவர்களை மன்னிக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...