ஞாயிறு, 27 நவம்பர், 2016

அம்மாவை மறக்கடித்த மோடி வித்தை!

தமிழக   அரசியல் தலைவர்கள்  'அம்மா'வையும்  மறந்து விட்டார்கள். அப்போலோவையும் மறந்து விட்டார்கள். அவர்களுக்கு இப்போது செலெக்டிவ்   அம்னிஷியா ! தற்போது  நினைவில் இருப்பது 'நமோ  நமோ' தான்!

மளிகைக்கடை மாதிரி தெருவுக்கு ஒரு கட்சி   நடத்துகிறவர்களைக் கூட விடாமல் தினமும்  அழைத்து வந்து அம்மாவை  நேரில் பார்த்தது போல  ரிப்போர்ட் கொடுக்க வைத்த சீசன்  தற்போது முடிந்திருக்கிறது.  கட்சியின் மந்திரவாதிகளின்  வசம் அப்போலோ  முதலாளி  கை பாணமாகி விட்டார்.

500,1000 ரூபாய்  நோட்டுகள் செல்லாது என கடந்த எட்டாம் தேதி பிரதமர்  மோடி அறிவித்த பிறகு எம்பெருமான் உலக பெருமுதலாளி ஏழுமலையானே நிர்க்கதியாக நின்று விட்ட பிறகு அம்மாவை பற்றிய கவலை எவர்க்கும் இல்லாது போயிற்று!

தமிழகத்தின் தேசிய சரக்குக்கடையே படுத்து விட்டது. கடந்த மாத டாஸ்மாக்  வியாபாரத்தை விட நடப்பு நவம்பரில் முப்பது சதவிகிதம் வியாபாரம் கம்மி என்கிறது ஒரு மீடியா. தமிழ்நாட்டு அரசுக்கு மூவாயிரம் கோடி இழப்பு  என்கிறார்கள்.

விற்பனை வரி வருவாய் குறைந்திருக்கிறது. கார் ,வீடு,பத்திரப்பதிவுகளில்  சறுக்கல். பத்திரப்பதிவில் எண்பத்தி ஐந்து கோடி குறைவு என்கிறார்கள்.

பிரதமர் மோடியினால் நிகழ்ந்திருக்கும் பொருளாதார இழப்பு பற்றி தமிழக  அரசு எவ்வித அறிக்கையும் கொடுக்கவில்லை. ஸ்தம்பித்து கிடப்பது பொருளாதாரம் மட்டும் இல்லை. ஏழை எளியவர்களின் வாழ்க்கையும்தான். கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி  சாமான்யர்களின் நடைமுறை வாழ்க்கையையும் மோடியின் திட்டம் முடக்கிப் போட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வாராக்கடன் என சொல்லி விஜய்மல்லையா போன்ற பணமுதலைகளை காப்பாற்றி இருப்பது  ஒருவகையான அரசியல் சாணக்கியம்தான்!

தமிழக அரசியல் கட்சிகள் பெயருக்குத்தான் எதிர்ப்பு காட்டி வருகின்றன.
நாளைய தேர்தல் கூட்டணி பற்றிய கவலையில் மக்களின் நலனை மறந்து விட்டார்கள். மக்களும் நாளைக்கே தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் யார் இரண்டாயிரம் தருவார்களோ அவர்களுக்கே வாக்கு போடுவார்கள்.

அது அவர்களின் தேர்தல் கால வருமான உயர்வு!கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...