தமிழக அரசியலில் ஒழுக்கம் என்பது தொலைந்து போய் அறுபது ஆண்டுகள்.

தனி நபர் விமர்சனம் தவிர்க்கப்படவேண்டியவை, ஆனால் தகுதி அற்றவர்கள் தலைமைக்கு வருகிறபோது தவிர்க்க இயலாது போகிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அது தேசியவியாதி ஆகி இருக்கிறது.
நேற்று வரை ஜெயலலிதா என சொல்லியவர்கள் இன்று முதல்வர் ஜெயலலிதா என சொல்கிறார்கள்,, அம்மா ,மக்கள் முதல்வர், புரட்சித் தலைவி என பெயர் சொல்லாமல் அடைமொழியால் மட்டுமே அழைத்தவர்கள்
மரணித்தபிறகு ஜெயலலிதா என சொல்கிறார்கள்.முகம் நிலம் பட குனிந்து வணங்கியவர்கள் சசிகலாவையும் அப்படி வணங்குவார்களா? ஜெயலலிதாவின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக்கூடாது என தடை விதிக்கப்பட்ட எம்.நடராஜனை ஜெயலலிதாவின் இறுதி நிகழ்ச்சியில் காண முடிந்தது.
இனிமேல்தான் அவரது அரசியல் முழு வீச்சில் இருக்கப்போகிறது.
இதுதான் விசுவாசம் என்பதின் பொருளா? செஞ்சோற்றுக் கடன் என்பதின் விரிவாக்கமா?
முதல்வராக இருந்து ரகசியமாக சிகிச்சை அளிக்கப்பெற்ற செல்வி.ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட சமாதியின் ஈரம் இன்னும் முற்றிலும் காயவில்லை.மருத்துவமனை மர்மமும் வெளிப்படவில்லை.
அதற்குள் பதவிச்சண்டை. ஜெயலலிதாவினால் விரட்டப்பட்டும் பின்னர் அழைக்கப்பட்டும் ஒட்டிக் கொண்டுவிட்ட உடன்பிறவா சகோதரி பொதுச்செயலாளர் என அறிவிக்கப்படலாம் .என்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வேட்பாளராக அவரை அதிமுக அறிவிக்கவேண்டும் என சிலர் அழுத்தம் கொடுப்பதாகவும் பேசப்படுகிறது.
இது அந்த கட்சிக்கு வளர்ச்சியாக இருக்குமா, நரம்புத் தளர்ச்சியாக இருக்குமா?
சிங்கத்தின் கர்ஜனையை கேட்டு பழக்கப்பட்டுவிட்ட மக்கள் 'மியாவ்' சப்தத்துக்கு மயங்குவார்களா?? செல்வியார் இடத்தை யாராலும் நிறைவு செய்யமுடியாது என்பது இன்டர்நேஷனல் ட்ருத். மற்ற கட்சித் தலைவர்கள் அவரிடம்உரத்துப் பேசுவதற்கே தயங்குவார்கள்.அவர்கள் புதிய தலைமைக்கு கட்டுப்படுவார்களா?. தங்களது கட்டுக்குள் கொண்டுவரவே முயற்சி செய்வார்கள்.தங்களை விட்டால் அதிமுகவினால் தனித்த வெற்றியை முன்னர் போல பெற முடியாது என்பது அவர்களது கணிப்பாகவே இருக்கும்.
தனித்து போட்டியிட்டு வெற்றி பெற அதிமுகவினால் இனி இயலுமா? மக்களை கவரும் தலைமை இருக்கிறதா? ஜெயலலிதாவுக்கு இருந்த கரிஸ்மா ,செல்வாக்கு,காந்த சக்தி அவர்களில் யாருக்கு இருக்கிறது?
பெரிய கேள்விக்குறி!
எவரும் இருப்பதாக நமது கண்களுக்கு தெரியவில்லை. அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாரை ஏற்க மறுத்தவர்கள் இந்த சசிகலாவையோ அல்லது மற்றவர்களையோ சக்தி வாய்ந்தவர்களாக கருதுவார்களா?
இனிதான் சொத்து பிரச்னைகள், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளின் வாரிசு பிரச்னை என வரிசை கட்டப் போகின்றன?
"ஜெயலலிதா உயிர் பிழைத்தால் அது மெடிக்கல் மிரக்கிள் என சொன்ன சுப்பிரமணியன் சுவாமி அவரது திருவாயினால் " நிச்சயம் அதிமுக பிளவு படும்" என கணிக்கிறார். அவர் பாஜகவின் சாணக்கியனாக கருதப்படுகிறவர். வலுவான உளவுப்படையை தனித்து இயக்கி வருகிறவர்.
பாஜகவின் கைப்பிடியில்தான் தற்போதைய அதிமுக சிக்கி இருக்கிறது. டெல்லியின் அனுமதி இல்லாமல் சுயமாக முடிவெடுக்கும் தைரியம் அந்த கழகத்துக்கு இல்லை.இத்தகைய பலவீன பின்னணியில் அதிமுக இருக்கிறது.
வலுவான திமுக தனக்கு சமமான எதிர்க்கட்சியை இழக்கிறது என்றே சொல்லலாம். தனது கட்டுக்கோப்பை திமுகவும் இழக்குமேயானால் தமிழகம் தேசியக் கட்சிகளின் வணிக சந்தை ஆகிவிடும் !இது பேராபத்து.!
தமிழக அரசியலில் அடுத்த கட்டம் இப்படித்தான் இருக்கும்.
ஜெயலலிதா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது உயிலை பத்திரிகையாளர் சோவை வைத்து எழுதி இருப்பதாக சொல்கிறார்கள் .அது உண்மையாக இருந்தால் வெளியாகும் பட்சத்தில் புதியதொரு பிரச்னை எழும்.
பார்க்கலாம். இனி மீடியாக்களுக்கு கொழுத்தவேட்டைதான்!