செவ்வாய், 31 ஜனவரி, 2017

அம்மா அழகியா...மகள் அழகியா..சொல் மனமே சொல்லு.!

சிவகாசி பொண்ணு ஸ்ரீதேவி!

தமிழ்ச்சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் .வாலிபர்களின்  வசந்த காலத்து வாசமலர். வணிக ரீதியாக தனக்கென  ஒரு  சந்தையை உருவாக்கிக்கொண்டவர்.

நீச்சல் உடையில் இளைஞர்களின் உள்ளங்களில் நீந்தியவர். வடக்கு அழைத்ததும்  வாழ்க்கையிலும் மாற்றம். மூக்கில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை அவரது கரம் பற்றி  சிகரம் நோக்கி அழைத்துச்சென்றது.

அது என்னவோ தெரியவில்லை. சென்னையிலிருந்து சென்ற வைஜெயந்திமாலா ஹேமாமாலினி, ஸ்ரீ தேவி  ஆகியோரை  உச்சத்தில்  வைத்து  ஆராதித்தது வடஇந்திய திரை உலகம்.!

ஆனால் மண வாழ்க்கையில்   மட்டும் வஞ்சகம் .

இவர்கள்  இரண்டாவது மனைவியாகவே  வாழ வேண்டியதாகிவிட்டது. தங்களை விட வயதானவர்களுக்கு வாழ்க்கைப் பட்டாலும் கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சியை அனுபவிக்க நேர்ந்தது.

போனி கபூரின் இரண்டாவது மனைவியாக வாழ்ந்து வருகிற ஸ்ரீதேவிக்கு  இரண்டு மகள்கள்.

அம்மா அழகா மகள் அழகா என இவர்கள் போட்டியில் இறங்கி இருக்கிறார்களோ என எண்ணத்தோன்றும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்கள்.
அவர்களே வெளியிடுகிறார்கள்.படத்தில் அம்மாவுடன் ஜான்வி!

காரணம் வாய்ப்பு தேடுவதாக இருக்கலாமோ என வடஇந்திய மீடியாக்கள்  எழுதுகின்றன,

நீங்களும் அவர்களின் புகைப்படத்தை பாருங்கள். ஏறுதழுவுதல் காளைகளின் திமில்கள் என மதர்த்து நிற்கும் இளமையைப் பாருங்கள்.

இப்போது தீர்ப்புகளை நீங்களே எழுதுங்கள்.

திங்கள், 30 ஜனவரி, 2017

மதவாத சேனைகள். ஒருமைப்பாட்டின் எதிரிகள்.

குடியரசுத் தலைவரின் விருது பெற்றவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

இயக்கிவருகிற படத்தின் பெயர் பத்மாவதி.

சித்தூர் ராணி பத்மாவதிதான்  இந்த பத்மினி.

 சரித்திரம் தழுவிய  திரைப்படத்தில் பத்மாவதியாக நடிப்பவர்  தீபிகா படுகோனே. அலாவுதீன் கில்ஜியாக நடிப்பவர் ரன்பீர்சிங். பத்மாவதியின் கணவராக நடிப்பவர்  ஷாகித் கபூர்.

சித்தூர் ராணி பத்மினி என்கிற பெயரில் தமிழிலும் ஒரு படம் வந்திருக்கிறது.
 ஒருசில  வரலாற்று நிகழ்வுகள் திரைப்படத்துக்கு உரியவையாக அமைவது  உண்டு.அத்தகைய  வாய்ப்பு பத்மாவதிக்கும் இருக்கிறது.

பத்மாவதியை பற்றி பலர் எழுதியதை படித்திருக்கிறேன்.

அற்புதமான அழகியாம் அந்த பத்மினி. சிற்பி செதுக்காத சிலை. பளிங்கு மேனி. தண்ணீர் அருந்தினாலோ, வெற்றிலை சவைத்தாலோ  விழுங்குவது தொண்டையில் தெரியுமாம்.உருது கவிகள் மாய்ந்து மாய்ந்து வரிகளில்  வசியம் தடவி இருக்கிறார்கள். அவளின் அழகை கேள்விப்பட்டு சித்தூர் மன்னன் ராவல் ரத்தன் சிங் இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டான் என குறிப்புகள் காட்டுகின்றன.

பன்சாலி படமாக எடுத்து வருவது அந்த பேரழகியைத்தான்!

ஜெய்ப்பூரில் படம் எடுக்கப்பட்டபோது..ஒரு கும்பல்  இந்து சேனா என தன்னை சொல்லிக்கொண்டு இயக்குநரை அறைந்திருக்கிறது. படப்பிடிப்பு சாதனங்களை உடைத்து நொறுக்கி இருக்கிறது.

"கபர்தார்,! சரித்திர நிகழ்வுகளை தவறாக சித்தரித்திருப்பதாக அறிகிறோம். பன்சாலிக்கு ஆதரவு காட்டும் பாலிவுட் படைப்பாளிகளையும்  கொன்றொழிப்போம்.சாவு நிச்சயம்" என இந்த அமைப்பு மட்டும் இல்லாமல்  மற்றொரு கும்பலும்  மிரட்டி இருக்கிறது.செட்டுக்கு தீயிட்டிருக்கிறது.அதன் பெயர் கர்ணி சேனா.!

"இது  இந்து நாடு! எங்களின் கலாச்சாரத்துக்கு  இழிவு ஏற்படுவதை அனுமதிக்க மாட்டோம்" என சொல்லி இருக்கிறார்கள்.

ஐவருக்கு மனைவி ..அழியாத பத்தினி.என பாஞ்சாலியை  சித்தரித்திருக்கிற  பாரதம் சொல்கிறதே...இந்த சேனைகள் என்ன சொல்கின்றன.?

எது படமாக்கப்படுகிறது. என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல்  வன்முறைக்கு வாக்கப்பட்டுள்ள இந்த அமைப்புகளை தடை செய்திருக்க வேண்டாமா அகண்ட பாரதம் கேட்கிற பாஜகவினர்.!

சிவசேனாவே  தணிக்கைக் குழுவின் முடிவு வரட்டும் என காத்திருக்கிற போது பெட்டிக்கடை சேனாக்கள் மட்டும் கொதித்திருப்பது ஏன்? இவர்கள் அவர்களது கலாச்சாரம் காக்கிற துவாரபாலகர்கள் இல்லை..ஒருமைப்பாடுக்கு ஊதுவத்தி கொளுத்தி வைத்து எரியூட்டக்கூடியவர்கள். அரசு அடக்கியாக வேண்டும்.

படத்தில் "எத்தகைய இன்டிமேட் காட்சிகளும் இல்லை என பன்சாலி உறுதி கொடுத்துள்ளபோது  சேனாக்கள் மட்டும் கத்தி அருவாள் தீவட்டி தூக்கிகொண்டு  அலைவது ஏன்?

பத்மினி தீ குளித்ததை சித்தரிக்கவேண்டாம் என்கிறார்களா?

சரித்திரம் மரணிப்பதில்லை சேனாக்களே!

.    

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இதெல்லாம் பார்த்தா வாழவே முடியாது!

"எத வாங்கிட்டு வரச்சொன்னா என்னத்த வாங்கிட்டு வந்திருக்கீங்க?"

"மீனுதானே வாங்கிட்டு வரச்சொன்னே...அதான் வாங்கிட்டு வந்திருக்கேன்.!"

"என் மாமியா எந்த நேரத்தில ஒங்கள பெத்துப் போட்டுச்சோ...நான் கெடந்து  அல்லாடுறேன். நெய் மீனு வாங்கிட்டு வாங்கன்னு சொல்லித்தானே  அனுப்பினேன். "

"ஆமாடி...நானும் அப்படித்தான் கேட்டேன். கடைக்காரி எந்த ஊருய்யா நீன்னு  கேட்டா...மதுரைன்னு சொன்னேன்.  இதுதான் நெய் மீனுன்னு சொல்லி கடைக்காரிதான் கொடுத்தனுப்பினா. சென்னைய்ல வஞ்சர மீன்னு சொல்லுவாங்களாம்."

"நாக்க சொட்டாம் போட்டு தின்னத்தான் தெரியும். இது வஞ்சர மீனும் இல்ல, அதுல ஒத்த முள்ளுதான் இருக்கும்.இதில நெறைய முள்ளு இருக்கு!. கழுவும் போதே கைய்ல குத்துது வாய்ல வைக்கும்போது எத்தன குத்துமோ..?மீனு வாங்கிறதுக்கு கூட தெறம் இல்லாத மனுசன கட்டிட்டு ..."

"நீ போக வேண்டியதுதானே?"

"ஒமக்கு சவரட்சனம் பண்றதே பெரிய காரியம்.இதில நான் மார்க்கெட்டுக்குப் போயி இடிபட்டு நொம்பலப்பட்டு வாங்கிட்டு வந்து ஆக்கிப் போட்டு படுக்கைய  வேற போடனுமாக்கும்?"

"அடியே  வாய் ரொம்பத்தான்டி நீளுது. ஞாயித்துக்கிழமைன்னு  வாய்க்கு ருசியா தின்னனும்னு ஆசைப்பட்டா ஆயிரத்தெட்டு நொட்ட சொல்ற! கோழி வாங்கலாம்னா  ஊசி போட்ட கோழி ஒடம்புக்கு ஆகாதுன்ற.. மட்டன்  வாங்கலாம்னா கொலஸ்ட்ரால்.இனி பேசாம கழனிபுளிச்சாறு ஊத்தி திங்க வேண்டியதுதான்டி!"

"இந்த லட்சணத்தில நான் முழுகாம இருக்கனும்னுங்கற ஆசை. தினமும் அந்த தொல்ல வேற. ..மாசமா இருந்தா வாய்க்கு ருசியா சாம்பலதான் திங்கணும்.போதும்யா சாமி. அத வேற வயத்துல சொமந்துகிட்டு ..ஆசைப்பட்டத திங்க முடியாம தொன்னாந்துதான் நிக்கணும்!"

"ஏன்டி  எதுக்கு எத கொண்டாந்து சேக்கிற..இனிமே ரெண்டு பேரும் சேர்ந்தே  மார்க்கெட்டு போகலாம். வாய பொத்திட்டு நிக்கிறேன். வாங்குறத வாங்கு. காசமட்டும் நான் கொடுத்திடுறேன்.இன்னிக்கி வாய கெளராம இரு. கொழம்பு கூட வேணாம் வெறும் மோர் போதும். பேச்ச வளக்காத!"

அடுத்த நொடியே அங்கேர்ந்து  வெளியே  வந்திட்டேன்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? எல்லார் வீட்டிலேயும் இப்படித்தானா?

இந்த சண்டே பெரிய மோதல் இல்லாம முடிஞ்சிது. நைட் எபெக்ட் எப்படி இருக்குமோ?பேசாம சரண்டர் ஆகிடவேண்டியதுதான் ,குடும்பம்னா பொண்டாட்டி காலில் விழுறது தப்பில்ல,

புதன், 25 ஜனவரி, 2017

குடியரசும் கோலாகலமும் குருதியில் நனைந்து.....

நமது நாட்டினை மீட்டெடுத்த காந்தியடிகளை நினைவில் இருத்தி எனது கருத்தினை பதிவிடுகிறேன்.

ஏற்பதும் மறுப்பதும் அவரவர் உரிமை.

மணிக்கணக்கில் நின்றோம்.மயக்கம் வந்தது. நாட்கணக்கில் நின்றோம் நாடி தளர்ந்தது. ஆனாலும் ஏடிஎம் என்கிற சொர்க்கவாசல் கதவு சிலருக்கே திறந்து  மூடியது.

ஆனாலும் ஒரு செல்வந்தனைக்கூட  வரிசையில் பார்க்கமுடியவில்லை. புறவாசல் வழியாக வந்து சென்றுவிட்டதாக சொன்னார்கள். அப்போதுதான்  இது பணநாயக நாடு ,,பாமரர்களுக்கான நாடு இல்லை என்பதை உணர்ந்தோம். கோடீஸ்வரர்கள் வாங்கிய கோடிக்கணக்கான  கடன்களை 'வாராக் கடன் " என சொல்லி தள்ளுபடி செய்த மாண்புமிகு மோடிஜி அரசு  வறியவர்கள் வாங்கிய  கல்விக்கடனை வசூலிப்பதில் அமீனாக்களையும் விஞ்சியது.

மோடி அவர்கள் அடிக்கடி பல நாடுகளுக்கு சென்று வந்தது நமது நாட்டினை  அடிமைப்படுத்துவதற்காகவோ?

கிழக்கிந்திய கும்பினி நமது அகண்ட பாரதத்தை வணிக சந்தையாக மாற்றியதைப் போல மோடிஜியும் அயல்நாட்டு வணிகத்தை இறக்குமதி செய்து  இந்தியர்களின் வணிகத்தை அழிக்க முயற்சிக்கிறாரோ?

ஐயம் எழாமல் இல்லை. அதன் முன்னோடியாகத்தான் செல்லாத நோட்டு  அறிவிப்பும் மக்களின் அவதியும்,

சிறு வணிகம் அழிய தொடங்கிவிட்டதே! தொடர்ச்சியாக கலாச்சாரம் பலி பீடத்தில்!

சிறுமதியாளன் ஒருவன்  நம்மைப் பார்த்து பொறுக்கி என சொன்னதையும்  "நமது" அரசு  பதக்கம் என அணிந்து கொண்டதே!

நம்மவர்களை நமக்கே எதிரியாகதிருப்பிவிட்ட  கும்பினியானைப் போல தற்போதும் நடக்கத் தொடங்கியிருக்கிறது.

ஒரு அம்மையார் சொல்கிறார் "குரூப் செக்ஸ்" என்றால் இப்படித்தான் கூடுவார்கள் என மெரினாவில் திரண்ட மாணவ மாணவியரைப் பார்த்து சொன்னார். நா தடித்திருந்தது போலும்!

"அனுபவம் பேசுகிறது" என தலையில் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. எந்த தாயாவது தனது பிள்ளைகளைப் பார்த்து இப்படி சொல்வாளா?

அந்த அம்மையாரைப் போலவே  திரை உலகிலிருந்து சிலரும், சமுதாய காப்பாளர்கள் என பலரும் நஞ்சு நாக்குடன்  கலந்தனர்.

அரசின் சாதுரியம்.அவர்களின் கரங்களில் குத்துவாளினை ஏந்த வைத்தது.

காவலர்களை அரக்கத்தனமுடன் வெறியேற்றி வைத்தது. அனுப்பியது. அவர்களும் தீயிட்டனர். மண்டைகளை பிளந்தனர்.

குருதியால் நனைந்த சாலைகளில் அணிவகுப்பு. கொடி ஏற்றல்.

குடியரசை  கொண்டாடிவிட்டார்கள் கொடிய அரசாக!

வாழக்கூடிய குருத்துகள் மீது  ஏறி நடந்து கடமை ஆற்றியிருக்கிறார்கள்.!

ஜனகணமன தேசிய கீதம் பாடிய மாணவர்களை தாக்கிய காவல்துறையின் தேசிய பற்றை பாராட்டவில்லை என்றால்...

நான் இந்தியனே இல்லை என்றாகிவிடும்!நம்மவர்களை நமக்கே விரோதியாக மாற்றுவதும் சாணக்கியம்தானோ!

ஆகவே வாழ்க தமிழக அரசுடைய காவல்துறை!

வரப்போகுது ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து?

தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிற  ஏறுதழுவுதல் என்கிற சல்லிக்கட்டுக்கு  ஆதரவான சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு  மனோஜ்  கோஸ்வால் என்பவர் தற்போது டில்லியில்  முகாம்  அடித்திருக்கிறார்,

ஏறுதழுவுதலுக்கு எதிரானவர் இவர்.

"தமிழக அரசு பிறப்பித்திருக்கிற அவசர சட்டத்தை எதிர்த்து நான் மட்டுமல்ல, ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம் .இதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை" என்று  செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார்.

எனக்குள்ள ஐயம் என்னவென்றால் "தமிழக அரசு பிறப்பித்துள்ள சட்டத்தை  உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றாலும் தடை செய்ய முடியாது" என்று  சொன்ன வழக்குரைஞர்களும் ,முன்னாள் நீதி அரசர்களும்  எந்த அடிப்படையில்  அத்தகைய  உறுதியை தந்தார்கள் என்பதுதான்  புரியவில்லை.

அரசின் அழுத்தம் காரணமாக இருக்குமா? தெரியவில்லை.

மாணவர்கள் மட்டுமல்ல மக்களும்  எதிர்நோக்கியிருக்கிற கேள்வியே  இது.!

செவ்வாய், 24 ஜனவரி, 2017

மாணவர்கள் மீது வன்முறை. உண்மை என்ன?

மாணவர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்காதவர்களும்  மாணவர்கள் தாக்கப்பட்ட பிறகு   நீதி விசாரணை,சி.பி.ஐ விசாரணை என  வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
இது ஒரு வகையான அரசியல்தான்! ஆதாயம் இல்லாமல் அரசியல் கட்சிகள்  அறிக்கைகள் வாசிப்பது இல்லை.அடிபட்ட மாணவர்கள்,கீழ்த்தரமாக மாணவிகளிடம் நடந்த போலீசார்கள்., குடிசையை கொளுத்திய போலீஸ்காரர்கள், கடைகளை சூறையாடிய கண்ணியமிக்க காவலர்கள்  இவர்களைப் பற்றிய கவலை எந்த கட்சிக்கும் இல்லை. மேலோட்டமாக  கண்டிக்கிறோம் என சொல்லிவிட்டு கலைகிறார்கள்.

மெரினாவில்,தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் மாணவர்கள் மீது கடுமையாக  தடியடி நடத்துவதற்கு அதிமுகவை சேர்ந்த சில அமைச்சர்களே காரணம் என  விகடன் இணைய தளம் சந்தேகப்படுகிறது.

காவல்துறையோ வேறுவிதமான அபாயகரமான காரணங்களை சொல்கிறது..நக்சலைட்டுகள் ஊடுருவி இருந்தனர் என்பதாக  தடியடி நடத்தியபின்னர் கோவை அதிகாரி ஒரு பட்டியலை தருகிறார்.

அச்சமாக இருக்கிறது. முன்னரே ஏன் அவர்களை கண்டறியவில்லை.கைது செய்யவில்லை.மாணவ அமைப்பினரிடம் ஏன் சொல்லவில்லை என்கிற  பலவிதமான ஐயங்கள்.

அப்பாவி மாணவர்களை உக்கிரமுடன் தாக்கியதை மறைப்பதற்கு இத்தகைய  காரணங்களை முன் வைக்கிறார்களோ என சந்தேகம் வருகிறதே!

ஆளும்கட்சியின் அமைச்சர்கள் தங்களது சொந்த தொகுதியில் மக்களாலும் மாணவர்களாலும் விரட்டப்பட்டதின் விளைவுதான் அரக்கத்தனமான தாக்குதலுக்கு காரணமா?

புரியவில்லை ஐயா!

ஊடுருவியவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அது உண்மைதான் என உறுதி  செய்து கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது.

ஆனால் குடிசையை கொளுத்திய பெண் போலீஸ்,கடைகளை சூறையாடிய காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?தரக்குறைவாக மாணவிகள் பெண்களிடம் நடந்தவர்களை என்ன செய்வீர்கள்?

ஒன்றும்  செய்ய மாட்டீர்கள் என்பது ஊகம்தான் .என்றாலும் .........?


அடுகளத்தில் ஒப்பாரியா என கேட்டு  ஊத்தி மூடி விட மாட்டீர்களே?

திங்கள், 23 ஜனவரி, 2017

காதல் பற்றி ஸ்ருதிஹாசன் கருத்து.

என்னடா தமிழ்நாடே பற்றி எரிகிறபோது இவன் நடிகைகளைப் பற்றி ஆராய்ந்து  கொண்டிருக்கிறானே என சிலர் நினைக்கலாம். அழுகிற பிள்ளைக்கு  குச்சி மிட்டாய் கொடுப்பதில்லையா அதுதான் தற்போது  தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நடந்தேறியிருக்கிறது. திமுக உள்ளிட்ட கட்சியும் இதில் அடக்கம். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட  அவசர சட்டம் போல இதர மாநிலங்களும்  சில பிரச்னைகளுக்காக இதைப்போன்று  அவசர சட்டம்  நிறைவேற்றினால் மத்திய அரசின் நிலை என்னாகும்? ஆக இது ஒரு கண் துடைப்பு சட்டம்.இந்த சட்டத்தை முழுமையாக படித்து அறிந்து அது பற்றிய  கருத்தை சட்ட வல்லுநர்கள் தெளிவாக சொன்னால்தான் மாணவர்கள் உள்பட  தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டார்களா இல்லையா என்பது தெரியும்.

இன்று பிறப்பித்திருக்கிற அவசர சட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏன் நிறைவேற்றவில்லை, முக்கிய எதிர்கட்சியான திமுகவும் மவுனம் சாதித்தது ஏன்? பீட்டாவை பற்றி இரு கட்சியுமே ஏன் மவுனம் சாதித்தன?

இதற்கெல்லாம் விடை தேடினால் அது கன்னித்தீவு கதையாகிவிடும்! அதனால்தான் சினிமாவின் பக்கம் சாய வேண்டியதாகிவிட்டது.

காதலைப் பற்றி ஸ்ருதிஹாசன் என்ன சொல்கிறார்?

"இது பாஸ்ட் புட் கலாச்சாரம். அதைப்போலத்தான் காதலிப்பதும் கழற்றி விடுவதும் பாஸ்ட்டாகவே நடக்கின்றன. கல்யாணம் கூட அப்படிதான் ஆகிவிட்டது. டைவர்ஸ் சர்வ சாதாரணம்." என்கிறார்.

நடிகையின் நிர்வாணம்; படம் எடுத்த காதலன்!

கட்டிலை பகிர்ந்த பிறகு நிர்வாணம் என்ன புனிதமா?

"எடுறா மாப்ள போட்டோவை! நான் நிற்கிறேன் பிறந்த மேனியா?"

இப்படி சொல்வதற்கும் பாரத நாட்டில் ஒரு பெண். அதுவும் ஒரு பிரபல  நடிகை. இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இருவரும் சேர்ந்துதான்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்ப் படத்திலும் நடித்திருக்கிறார் இலியானா. அவரின் காதலன் ஆண்ட்ரு நீபோன். இவர்கள்  லிவ் இன் ரிலேசன் என வாழ்க்கையை அனுபவித்து
கொண்டு  வருகிறார்கள்.

பாத் டப்பில் காதலி முழுமையான நிர்வாணத்தில் படுத்திருக்க படம் எடுத்திருக்கிறார் காதலர். கண்ணகி  வாழ்ந்த நாடு தமிழ்நாடு. பாஞ்சாலி  வாழ்ந்தது  வடநாடு!

தேன்கூட்டில் கல் எறிந்தவனின் கதை.

நெடிது வளர்ந்திருந்த அழகிய மரத்தில் ஒரு தென் கூடு.அல்ல அல்ல தேன்கூடு!

தினமும் ஒருவன் அதன் கீழ் நின்றபடி வேடிக்கை பார்த்தான்.

அந்த கூட்டின் தேனை சுவைக்க சிலர் திட்டமிட்டார்கள். அதில் ஒரு பாடகனும்  ஒருவன்.

தங்களால்தான் தேனீக்கள் அந்த மரத்தில் கூடு கட்டியதாக உரிமை எடுத்துக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் தேனீக்களே  அந்த தேனை குடித்து விடுமோ என்கிற அச்சம் அவர்களுக்கு வந்து விட்டது. மொத்த தேனையும் தாங்களே  அனுபவிக்க வேண்டும் என்கிற பேராசை.!

மரத்தை குத்தகைக்கு எடுத்திருந்த ஒருவன் இந்த தருணத்தில்தான் அங்கு  வருகிறான்.அவனிடம் ஆள் அம்பு சேனை என எல்லாம் உண்டு. பாடகன் உள்பட  உரிமை கொண்டாடிய அத்தனை பேரையும் அழைத்து  மிரட்டினான்.

அவர்களும் தங்களை விலக்கிக்கொண்டு  குத்தகைதாரனுக்கு  ஆதரவாக வணக்கம் வைத்துவிட்டனர்.

நெடிது வளர்ந்திருந்த மரம் என்பதால் மரத்தில் ஏறி தேன் எடுக்கமுடியவில்லை. அடியில் இருந்தபடியே கூட்டின் மீது கல் எறிந்தான்.

தேனீக்களுக்கு இருக்கும் இயல்பான கோபம் எல்லா திசைக்கும் பாய்ந்தது. அனைவரையும் கொட்டி விட்டு ஆவேசத்தை தனித்துக் கொண்டது. ஆனால்  யாருக்கும் தேன் கிடைக்கவில்லை. நிலத்தில் கொட்டி வீணாகியது. 

புதன், 18 ஜனவரி, 2017

இந்தி எதிர்ப்பு போரும் ஏறுதழுவுதலுக்கான போராட்ட முன்னெடுப்பும்.

1965--ஜனவரி 25-ம் நாள்!

என்னால் மறக்கமுடியாத நாள். ஒன்று திரண்ட மாணவர்கள் நான்கு மாசி வீதி  வழியாக  ஆதிக்க இந்தியை எதிர்த்து ஊர்வலமாக செல்கிறார்கள். பத்திரிகையாளனான நானும் உடன் செல்கிறேன். 'தமிழ் நாடு 'நாளிதழில்  செய்தியாளன். ஊர்வலம் வடக்கு மாசி வீதி வழியாக செல்கிறது. இராமாயண சாவடியை தாண்டியதும் அங்கிருந்த காங்.கட்சி அலுவலகத்தில் இருந்து ஆயுதங்களுடன் வந்த கும்பல் மாணவர்களை  வெட்டுகிறது. ஆவேசம் கொண்ட மாணவர்கள் சிதறி ஓடுகிறார்கள். அவர்களது ஆவேசம் நகரில்  பல வித வன்முறைகளில் திரும்புகிறது.

மாணவர்களை வெட்டியவர்களில் முக்கியமானவர் காங்.பேச்சாளர் வீரையா என மாணவர்கள் இனம் காட்டுகிறார்கள்.

பொங்கி எழுந்த மாணவர்களின் அடக்கமுடியாத ஆத்திரம் தென்மாவட்டங்களில் தீயாக பரவுகிறது. மதுரைக் கல்லூரி மாணவர்களும்  மருத்துவக்கல்லூரி மாணவர்களும் தங்களது கல்லூரிகளில் கறுப்புக்கொடிகளை ஏற்றி  ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.வகுப்புகளுக்கு செல்லவில்லை. அன்றைய மெட்ராஸ் மாநிலத்தில் காங்.கட்சியின் ஆட்சி.  அடக்குமுறையினால் ஆர்ப்பாட்டத்தை அடக்கிவிடலாம் என எண்ணி  மலபார் போலீசையும் ரிசர்வ் போலீசையும் இறக்கிவிடுகிறது.

நான் மதுரைக் கல்லூரிக்கு முன்னதாக நிற்கிறேன். ரிசர்வ் போலீசுக்கு பக்கமாக!

மாணவர்களுக்கு அவர்களைப் பார்த்ததும் ஆவேசம் பீறிடுகிறது. முழக்கங்கள்  வீதி வரை கேட்கின்றன.

திடீரென போலீசு படை கல்லூரிக்குள் கல்லூரி முதல்வரின் அனுமதி இல்லாமல் செல்கிறது. ஆஸ்டலில் பாதுகாப்பாக பதுங்கிய மாணவர்களை  தலையை குறி வைத்து தடிகளை இறக்குகிறார்கள். ஆஸ்டல் சுவரெல்லாம்  ரத்தம். இதைப்போலவே மற்ற கல்லூரிகளிலும் அராஜகம்.
இதன் பிறகுதான் மாநிலம் முழுவதும் போராட்டம் விரிவடைகிறது. துப்பாக்கி சூடு,தடியடி. எழுபது பேர் இரண்டு போலீசார் உட்பட மாண்டனர் என்பது எனது நினைவு!

அன்றைய பிரதமர் லால்பகதூர்சாஸ்திரி இந்தி திணிப்பு இருக்காது என்கிற  உறுதி மொழி கொடுத்த பின்னர்தான்  மாணவர்களின் கிளர்ச்சி அடங்கியது.இன்றைய ஜல்லிக்கட்டு போராட்டம் அதிமுக ஆட்சியில் நடக்கிறது. காங்.ஆட்சியினரைப் போல இவர்களும் போலீசை நம்புகிறார்கள் .அதனால்தான் தடியடி.

சாஸ்திரியைப் போல
 இன்றைய பிரதமர் மோடி அவசர சட்டம் பிறப்பித்தால்  எரிமலை அடங்கலாம்.

நடக்குமா?

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

உங்கள் நாட்குறிப்பில் 2017- ஜன 18-ம் நாளினை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் .தமிழகமே மாணவ மாணவியர்,இளையோர் என பெருங்கடலாக   தமிழகத்தை  சூழ்ந்து சூளுரைத்த திருநாள்.இரவும் பகலும் வெயில் பனி என பார்க்காமல் தொடர்ந்து  போராடிய அந்த வேள்வியில் தங்களையே ஆகுதி ஆக்கிக்கொண்ட  அந்த தியாக தெய்வங்களின் திருவடிகளுக்கு எனது வணக்கங்கள்! கைபேசி ,டார்ச் ஒளியில் தங்களை இனம் காட்டிய தன்மானசிங்கங்கள். மின் விளக்குகளை அரசு அணைத்தது. ஜாம்மர் வைத்து தகவல் பரிமாற்றம், தொலைக்காட்சி ஒளிபரப்பு தடை என அரசு இழிவான நடவடிக்கையில் இறங்கியதை எப்படி மறக்க முடியும்?


"தமிழ்மக்கள்,தமிழ் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போல எந்நாளும் இருந்ததில்லை" என்று பாவேந்தன் பாரதிதாசன் பாடியதை பார்  அதிர மாணவர்கள் நிகழ்த்திக் காட்டிய நாள்.சென்னை கடற்கரை இதற்கு முன் சுனாமியைத்தான் பார்த்திருக்கிறது. இன்றுதான் மனித சுனாமியை பார்த்தது.

"ஏறு தழுவுதல் எனும் எங்களது இன்றைய ஜல்லிக்கட்டை மீட்டெடுக்கும் வரை  எங்களது போராட்டம் நிற்கப்போவதில்லை.பிச்சை கேட்போம் என நினைத்தாயா?எங்களது கலாச்சாரம் மடிய ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் "என்று  ஒரு மாணவி கனன்று முழங்கியதை  தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். "எங்களது மூதாதையர் முறம் கொண்டு புலியை விரட்டியவர்கள். கொண்டு வா சிங்கத்தை அடக்குகிறோம்" என கர்ஜித்த அந்த மாணவியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

மாணவர் எழுச்சியை மகத்தான புரட்சியை கண்டும் காணாததுமாதிரி தமிழக அரசும் மத்திய அரசும் நடந்து கொண்டிருப்பதும், தடியடி நடத்தி மாணவர்களின் மண்டையை பிளந்ததும் அரசுகளின் அந்திம காலத்தையே உணர்த்துகிறது.

"ஓட்டுக் கேட்டு வீட்டுக்கும் வாசலுக்கும் வந்து சென்றவர்கள் கடந்த ஏழு நாட்களாகியும் எங்களை வந்து பார்க்கவில்லையே ..இனி வரமுடியுமா " என்று இன்னொரு மாணவி தூக்குக்கயிறு கொடுத்ததைப் போல கேட்டாரே ...வெட்கப்படவேண்டும். எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் !

"பிரதமரை சந்தித்து மனு கொடுப்பது போல நாடகமாடுவது போதும். தடையை உடைத்து தமிழகம் திரும்பாவிட்டால் அத்தனை அதி.முக. எம்.பி.க்களும் ,எம்.எல் .ஏ.க்களும் பதவி விலக வேண்டும்" என்று அலங்காநல்லூர் மக்கள் அடங்கா சினமுடன்  நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.

"தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி சற்றும் நிலைக்காது.மாளும்" எனப் பாடியவனும் பாவேந்தன்தான்!! தமிழனுக்கு வீழ்ச்சியில்லை தமிழன் கீர்த்தி தாழ்வதில்லை என சொன்னவனும் அந்த புரட்சிக்கவிஞன்தான்!

இந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்திய முழுப் பெருமையும் மாணவர் உலகுக்கு மட்டுமே சொந்தம். அந்த வெற்றியில் குளிர் காய்ந்தது வேண்டுமானால்  அரசியல் கட்சியாக இருக்கலாம்.காரணம் அன்றைய  மாணவர்களில் பெரும்பான்மையினர் தி.மு.க. என்பதை மறக்க இயலாது. ஆனால்  ஏறுதழுவுதல் தடையை நீக்கும் போராட்டத்தில் எந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை என்பது உண்மை.இதை உணர்ந்து அரசியல் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு தருவதுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். .

கைது செய்யப்பட்டவர்கள் மீது வஞ்சினம் கொண்டு எதிர்வரும் காலத்தில் பொய் வழக்குகளை போலீசார் போடக்கூடாது. ஆளும் கட்சியின் பிரபலங்களின் ஏவுதலுக்கு இணங்கி துன்புறுத்தவும் கூடாது.

ராணுவத்தை விட வலிமை வாய்ந்தது மாணவர் படை. இப்படி தோற்கின் எப்படி வெல்லும்!

திங்கள், 16 ஜனவரி, 2017

சீசரை கொலை செய்த உயிர் நண்பர்கள்.!

இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும்  உண்மை நிகழ்வை  தழுவியதுதான்!

ரோமப்பேரரசு மன்னன்  ஜூலியஸ் சீசரை கொல்வதற்கு  அவனது  மெய்யன்பர்களே  திட்டம் வகுத்தார்கள்.

மார்க்கஸ் புருட்டஸ்,சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்சினஸ் ஆகியோர்  இன்னும் பலருடன் ஒன்று கூடினர். பங்குனி பதினைந்தாம் நாள்.

"சீசரின் போக்கு பிடிக்கவில்லை. வர வர தனது ஆதிக்கத்தை வலிமைப் படுத்திக்கொண்டே  போகிறார். கிரிகோரியன் காலண்டர் மாற்றத்துக்கு  இப்போது என்ன அவசியம் வந்தது?" என்கிறான் ஒருவன்.

"நமக்கு மதிப்பு அளிப்பதிலும் ஒரு மாற்றம் தெரிகிறது. என்ன செய்வது  ?"
என்கிறான் இன்னொருவன்.

"சீசருக்கு  வலிப்பு  வரும் என்கிறார்கள். அதனால் அவனுக்கு  ஆட்சி செய்வதற்கு  போதிய ஆற்றல் இல்லை என சொல்லி  கதையை முடித்து விடவேண்டியதுதானே?"

"மக்களின் மதிப்பை பெற்றவர் சீசர். கொதித்து எழ மாட்டார்களா?"

"அதற்குத்தான் புருட்டஸ் இருக்கிறாரே  அவரது நாவன்மை மக்களை  மாற்றிவிடும் !"

"அதுவும் சரிதான்!அப்படியானால் இன்றே முடிவு கட்டிவிடலாம்"

செனட்  சபைக்கு வந்தார் சீசர்,

முதல் குத்து  கழுத்தில்  குத்தியவன் சர்விலஸ் கஸ்கா.தொடர்ந்து அத்தனை செனட்டர்களும்  குத்துகிறார்கள் .புருட்டசும்  ஒருவன்.

மரணம்  நெருங்குகையிலும்  புருட்டசை  பார்த்த  சீசர்  கேட்ட  கேள்வி " நீயுமா  என் குழந்தையே! யூ டூ  மை சைல்ட்?"

பாம்பேயின் சிலை அருகில் சீசர் விழுந்தபோது  அவரின் உடலில் முப்பத்தி ஐந்து  கத்திக்குத்து காயங்கள்.

பதவி ஆசைக்குப் பலியானார்  ஜுலியஸ் சீசர்.

முதல்வரை விட பொதுச்செயலாளர் உயர்வா?

என்னமோ தெரியவில்லை. ஜெ.யின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல்  தோசை சட்டியில் இட்லி அவிப்பது மாதிரி ஆகிவிட்டது. ஆளாளுக்கு  நாட்டாமை. திண்ணையில் உட்கார்ந்து  நாடகம் பார்த்தவர்கள்  நான்தான்டா ஹீரோ என கிளம்பி இருக்கிறார்கள்.

சில்பா முடி வைத்தவர்கள் தியாகராஜபாகவதர் ஆகமுடியும் என்றால் ஊரில்  உள்ளவர்கள் எல்லோரும் எப்போதோ பாகவதர் ஆகி இருக்கமுடியும்! அங்கு தானே கடவுள்  இனிய குரல் என்கிற சிறப்பினை வைத்துத் தொலைந்து விட்டான். அதே நிலையில்தான் இன்று அதிமுக இருக்கிறது.கை தூக்க முடியும் என்பதால் கிரிக்கெட் மேட்சில் நடுவரை நியமித்த கதையாகி  விட்டது. அது  அவர்கள் பிரச்னை!

பொதுவிழாவில் முதல்வருக்கு அளிக்கவேண்டிய மரியாதையை  இந்தியா டு டே விழா குழுவினர் ஏன் தரவில்லை என்பதுதான்  கேள்வி!

நடுநாயகமாக  அமரவைக்கப்படவேண்டிய முதல்வர் பன்னீர்செல்வத்தை  இடது ஓரமாக தள்ளியதும் கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை  நடுநாயகமாக  உட்கார வைத்ததும்  முதல்வர் பதவியை இழிவு படுத்தியதாகாதா? அது தமிழகத்தின்  தலை குனிவு!

முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் அவருக்கும் அருகில் அமர வேண்டியவர்க்கும்  இடையே இடை வெளி அதிகமாக இருக்கும். அது முதல்வரின் விருப்பம்.

ஆனால் அத்தகைய இடைவெளியை  இந்தியா டு டே விழாவில் பார்க்க  முடிந்தது. அதை  ஏற்படுத்தியது  விழா குழுவா,அல்லது தனி நபரின் கண்டிசனா? தெளிவுபடுத்தவேண்டிய  அவசியம் அந்த விழா குழுவினருக்கு  இருக்கிறது. இது  தீண்டாமையில் என்ன வகை என்பது தெரியவில்லை.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

நொறுக்கினார் முதுகெலும்பை......

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். வாழ்க இவ்வையகம்!

பாரதிதாசனை  படிப்பதுண்டு. எனக்கு அவனது கவிதைதான்  மதுச்சாலை, மாந்தி மாந்தி அருந்துவேன்.

இன்று நமது தமிழர் திருநாள்! ஆனந்த கூத்திடும் அற்புத நாள்.

காலையில் எழுந்ததுமே  அவனது வேத நூலில் தேடிப்பிடித்து  வாசித்தேன்.

அது  இதுதான்!

"தறுக்கினாற் பிற தேசத்தார் 
       தமிழன்பால்  என் நாட்டான்பால்
வெறுப்புறும் குற்றஞ் செய்தா
      ராதலால் விரைந்தன்னாரை 
நொறுக்கினார் முதுகெலும்பைத் 
     தமிழர்கள் என்ற சேதி 
குறித்த சொல் கேட்டின்பத்திற்
    குதிக்கும் நாள் எந்நாளோ?"



செக்கர்வார்சடை பெம்மானே...நெற்றிக்கண்ணை திறப்பது எப்போது?

வலைப்பூவின் ஆதரவாளர்கள் அனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

அம்மையுடன் அமர்ந்திருக்கிறான் கயிலைநாதன். அருகில் அன்னை பராசக்தி. இருவர் முகத்திலும் கவலைக் கீற்றுகள்.

"தேவி...! ஏனிந்த வாட்டம்?"

"நீங்கள் அறியாததா? திருவிளையாடல் என்றால் எம்பிரானுக்கு  தேன் அருந்துவது போலல்லவா? புன்னகை பூத்த  தங்களது  திருமுகமும் வாட்டமுற்று இருப்பது  நான் அறியாதது இல்லை"

"மெய்தான் சக்தி! மூவேந்தர் ஆண்ட ஐவகை நில மக்களும்  மகிழ்ச்சியுடன்  தைத் திருநாளை  கொண்டாடுகிறார்கள்  என நினைக்கிறாயா? வாசலில் புதுக்  கோலமிட்டு பூசணிப்பூவை வைத்து புத்தாண்டை வரவேற்பார்களே! ,புத்தாடை அணிந்து புத்தரிசியும் பாலும் கலந்து பொங்கலோ பொங்கல் என ஆனந்த கூத்திடுவார்களே...அவையெல்லாம் இல்லாமல் போய்விட்டதே! உழவனின் முகத்தில் ஏழைகளின் அகத்தில் ,இல்லத்தரசிகளின் வதனத்தில் வாட்டமும் ஏமாற்றமும்தானே  இருக்கிறது."

பார்வதி சிரிக்கிறாள்.

"தேவியாரின் நகைப்புக்கு  காரணம் தெரியவில்லை.?"

"தங்களின் திருவிளையாடலை விஞ்சுவதற்கு மானிடர்களும் தயாராகி விட்டனர்.மோடி என்பவரும் சசிகலா என்பவரும் களத்தில் இறங்கிவிட்டனர். அவர்களின் ஆட்டம்தான்  தமிழர்களின்  வாட்டத்துக்கு காரணம்.ஒரு அரைகுறை  தன்னை கவிஞன் என சொல்லிக்கொள்பவன்  தங்களுக்கு  அனுப்பியிருப்பதை வாசிக்கிறேன். கேளுங்கள்.
மானத்தை விற்றுத்தான்
மடி நிறைய வேண்டுமா?
மாற்றானின் காலணி ஆவதா,
எமது கலாசாரம்?
அறு  பட வேண்டாமா
அவனது கால்கள்?

செக்கர்வார்சடைப்பெம்மான்
சிவந்த கண்களுடன்
மூன்றாம் கண்ணைத் திறந்தபோதும்,
முனை மழுங்கவில்லை கீரனின் வீரம்!

கஞ்சி போட்ட சட்டையில்
நஞ்சினை கலந்த அரசியல்,
நாதியற்ற இனமல்ல
நெற்றிக்கண் எமக்கும் உண்டு!

இப்படி எழுதி அனுப்பி இருக்கிறான். நெற்றிக்கண்  நீங்கள் திறக்கப்போகி றீர்களா? இல்லை அவனை திறக்க அனுமதிக்கப்போகிறீர்களா?"

சிவனார் பேச்சற்றுப் போனார்.
          

வியாழன், 12 ஜனவரி, 2017

காளைகளைப் பற்றி கபோதிகளுக்கு தெரியுமா?

ஜல்லிக்கட்டை  அனுமதிப்பதில்  காவிகளுக்கு என்ன  அவஸ்தை என்பது புரியவில்லை. மனித உயிர்களுக்கு  பாதுகாப்பு இல்லை என்கிறார்கள்.

கவுரவக்கொலை ,பாலியல் கொலை ,அரசியல் கொலை என எத்தனையோ  வகையான கொலைகளில்மனிதர்கள்   கொல்லப்படுவது  அவர்களது ஞானக்கண்களுக்கு  தெரியவில்லையா?

ஏறுதழுவுதல் ,காளை அணைதல்,ஜல்லிக்கட்டு  என பல பெயர்கள் இருப்பதால்  எங்கள் காளைகளுக்கும்  எத்தனையோ பெயர்கள்..தெரியுமா  உங்களுக்கு?

வரிசைப் படுத்தி மதுரையிலிருந்து திரு.மாரிமுத்து எனது பேரன்  எனக்கு ஒரு பட்டியலை அனுப்பி இருக்கிறார்.

படியுங்கள்.
அத்திக்கருப்பன்.        கடுமறையான்,    கண்ணன் மயிலை,   கட்டைக்காளை
அழுக்கு மறையன்    கட்டுக்கொம்பன்,    கட்டைவால் கூளை,
அன்றிகாலன்,     கண்ணன் மயிலை,   கத்திக்கொம்பன்,   கள்ளக்காடன்,
ஆளை வெறிச்சான்,    கள்ளக்காணன்   கட்டைக்கொம்பன்,  கருங்கூளை
ஆணைச்சொரியன்,  கழற்வாய்  வெறியன்,   கழற்சிக்கண்ணன் , கருப்பன்,
காரிக்காளை,   காற்சிலம்பன் ,   குட்டைச்செவியன்,  குண்டுக்கண்ணன்,   குட்டை நரம்பன்,  குத்துக்குளம்பன்,  குட்டைச்செவியன்,  குள்ளக்கருப்பன் ,
கூழைச்சிவலை,   கொட்டைப்பாக்கன்,  எரிச்சுழியன்,  ஏறு வாலன்,
நாரைக்கழுத்தன்,,  நெட்டைக்கொம்பன்,   நெட்டைக் காலன் ,  படைப்பு பிடுங்கி,
படலைக்கொம்பன்,  பட்டிக்காளை, பனங்காய் மயிலை, பசுக்கழுத்தன்,
பால் வெள்ளை ,   பொட்டைக்கண்ணன்   பொங்குவாயன்....

இத்தகைய  பெயர்கள் எங்களின்  ஜல்லிக்கட்டுக்காளைகளுக்கு  பெயர்கள்  உண்டு,

இதனை  உணராத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?

சு.சாமியின் எச்சரிக்கை, காவிகளுக்கு அடிமை ஆகுமா தமிழகம்?

'சிந்து சமவெளி நாகரீகம் என்பது சுமேரிய -எகிப்திய  நாகரீகத்துக்கு  இணையாக,  திராவிட நாகரீகம்  தொன்மை ஆனது.

குஜராத்தில்  நடந்த அகழ்வாராய்ச்சியில்  காணப்பட்ட  எழுத்துகள் பிராமி மொழி----திராவிட மொழிகளின் விரிவுதான்! இதை நினைவு படுத்த வேண்டிய  அவசியம் ஏன்?சிந்து வெளி நாகரீகம் தம்முடையது  என  ஆரியர்களும்  வாதிட்டு வருகிறார்கள். அதை நிலை நிறுத்த எத்தனையோ வழிகளை கண்டு பிடிக்க முயலுகின்றனர்.

ஆரியர்கள்  நுழைந்த பிறகுதான் குதிரைகள் வந்தன. இதையும்  நாம் மனதில்  அழுத்தமாக பதிய வைத்துக்கொள்ளவேண்டும்.!

சிந்துவெளி முத்திரைகளில்  எங்குமே  குதிரைகள் காணப்படவில்லை. குதிரைகளின் எலும்புகளும்  எங்குமே இல்லை.இதை  குறிப்பிடுவதற்கு  காரணம் இருக்கிறது.மாட்டு வண்டிகள்  இருந்தன என சொல்லப்படுகிறது.

 திராவிட நாகரீகம் காளைகளின் முத்திரைகள்  கொண்டது நமது  தொன்மையை  குறிக்கும்  சான்று அது..அந்த முத்திரைகளை குதிரையாக கணினி வழியாக மாற்றம் செய்கிற முயற்சி  வட நாட்டில் நடந்தது. ஆக நமது நாகரீகத்தின் தொன்மையான முத்திரைகளை  அழிக்கும் முயற்சி  இன்றல்ல முன்னரே  தொடங்கப்பட்டதுதான். அந்த முயற்சியை முறியடிக்கவேண்டும் என்கிற முனைப்பு  முந்தைய அதிமுக  ஆட்சியினரிடம் இல்லை. ஆனால் தமிழ் அறிஞர்கள் பலர் முன்னெடுத்து சென்றதால் முயற்சி   முடக்கப்பட்டது.ஆனால் தற்போது  காளையை பரி ஆக்கும் முயற்சியின் முன்னெடுப்புத்தான் ஏறு தழுவுதலை  சட்ட ரீதியாக  அழிக்கப் பார்க்கிறார்களோ என்னவோ.? நினைக்காமல் இருக்கமுடியவில்லை. யுனிகார்ன்  என்பதை குதிரையாக  சித்தரிக்க முற்பட்டனர்.இந்த யூனிகார்ன்  வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்கிற வாதமும்  எடுபடவில்லை. அதன் வடிவமைப்பு  யுனிகார்னுடன் ஒத்துப்போகவில்லை

இன்று  பிஜேபியின்  ஊதுகுழலான சுப்பிரமணிய சுவாமி  எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அது மிரட்டல்தான்.

"நீதிமன்றம் முடிவு செய்வதற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு  நடந்தால் ஆட்சி கலைப்பு நடத்தலாம்" என்கிறார்.

காவிகளுக்கு  அடிமை ஆகுமா நம்நாடு? மீண்டும்  கலாச்சாரம், பண்பாடு  சிதைக்கப்படுமா?

திராவிட நாகரீகத்தின் தொன்மையான அடையாளமாக  திகழும் காளை முத்திரைகளை  மாற்றத் துணிந்தவர்கள்  எதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான்  அண்மையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள்.

காவிக்கொடியின் கீழ்  ஒரே இந்தியா என சொல்லி  அடிமைப் படுத்த நினைக்கிறார்கள்.

பொருளாதார ரீதியாக  ஏழையாக  மாற்றப்பட்டு விட்டோம். வறுமைப்பட்ட விவசாயிகளுக்கும்  வாழ்வுரிமை  பறிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி ஒவ்வொன்றாக  நாம் அடி வாங்கி வருகிறோம்.

புதன், 11 ஜனவரி, 2017

சனியன் மாடியில் இருக்காரு!

மன்னாரு:   "என்னடா சாமியாராகப் போறியா? ஏன் இந்த விரக்தி?

திருடன்"  " பின்ன என்னப்பா ...ஒருத்தன் பையிலேயும் பர்ஸ் இல்ல. ரூபா  நோட்டும் இல்ல எப்படி தொழிலை விருத்தி பண்றது?

மன்னாரு: "?????????????????????"

-------------------------------------------------------
அரசியல்வாதி : " ரூபா நோட்டு தட்டுப்பாட்டை போக்குறதுக்கு அதிகமா அச்சடிக்கனும்னு  ராமதாஸ் சொல்லிருக்காரு!"

காண்ட்ராக்டர்.: " அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு  வாங்கிக் கொடுப்பா! கமிசன் தர்றேன்.!"

மன்னாரு: ?????????????????????


----------------------------------------

ஜோதிடர்.:  " உங்க  ஜாதகப்படி இப்ப சனியன்  உச்சத்துல இருக்கான்!"

பெண்.:  " சத்தம் போட்டு சொல்லாதிங்க! என் புருசன் மாடியில்தான் இருக்காரு!"

---------------------------------------

ஒருத்தி.:  "ஆபீஸ் விட்டு வந்ததும் எம்புருசன் ஆசை ஆசையா எனக்கு  காப்பி போட்டுக் கொடுத்திட்டுதான்  குளிக்கவே  போவாரு!"

மற்றவள்.: "அம்புட்டு  ஆசையாடி உம் மேல,?"

ஒருத்தி.:  " அதெல்லாம் இல்ல.காப்பித்தூளுக்கு பதிலா  தெரியாம  சீயக்கா  தூளை  போட்டுட்டேன் .அதிலேர்ந்து  ஒரு பயம், அவருதான் இப்ப  கிச்சன்  இன்சார்ஜ்,"

மற்றவள். " கொடுத்து  வச்சவடி !"

" பவள  இதழ்களுக்குள்  நிலவு  பாய்ந்தது!"-----பாரதி.

"பவள இதழ்களுக்குள்  நிலவு  விரிந்தது!"------அம்பிகாபதி.

"கண்ணிரண்டும்  ஆளை விழுங்கும்  அதிசயம்!"-----பாரதி.

"பாடம் படித்து  நிமிர்ந்த  விழி, தனிற்பட்டுத் தெறித்தது  மானின் விழி! "----பாரதிதாசன்.



எத்தனை நாளைக்கு இந்த நாடகம்?

'தொல்லாணை  நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட  புகழ்சால் சிறப்பின்  நிலந்தரு திருவின் நெடியோன்' என்று தமிழ்ச்சங்கம்  இருந்ததை உறுதி  செய்வது மதுரைக்காஞ்சி. பெரிய திருமொழியில்  ஆண்டாளும், சங்கத்தமிழ் மூன்றும் தா என்று  அவ்வையும்,'நன் பாட்டுப்புலவனாக சங்கம் ஏறி' என தேவாரத்தில் அப்பரும் 'தென்தமிழ் நன்னாட்டுத் திருநீர் மதுரை' என சிலம்பும் தமிழ்ச்சங்கம்  இருந்ததை செப்புகின்றன.

திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதியை தயாரித்தவர் வெளிநாட்டவர் எமனோ பர்ரோ.

தொல்காப்பியர் குறிப்பிடும் மொத்த அடிப்படைத் தமிழ் எழுத்துகள்  முப்பத்தி மூன்று என்கிறார்கள்.

இவை போன்று மேலும் பல சிறப்புகள் மொழிக்கும் இனத்துக்கும் இருக்கின்றன.

இருந்தும் என்ன பயன்?

தமிழகத்தில் தமிழனே இல்லை கடல் கடந்து வாழ்ந்த  தமிழர்களையும்  சிங்களன்  கொன்று  குவித்துவிட்டான் இன்று நம்மிடையே  வாழ்கிறவர்களும்  சாதிகளால் வேறுபட்டு இன உணர்வுக்கு மாறுபட்டு பதவிகளுக்காக  விலை போகிறவர்கள்தான்!

தமிழர்களின் ஏறு தழுவதல் என்பது  மிச்சமிருக்கும் தமிழ்  அடையாளம்.

அதையும் வடவர்கள் தகர்த்துகே கொண்டிருக்கிறார்கள்.

காளை தழுவுதல் என்பது தமிழனின் புத்தாண்டில் கொண்டாடப்பட்டு வந்தது.. அந்த புத்தாண்டு நாளையே  சித்திரைக்கு கடத்திக் கொண்டு போய்விட்டது  ஜெயலலிதாவின் ஆட்சி! 'நான் தமிழச்சி" என்று சொல்லியே நாமத்தை போட்டுவிட்டுப் போய்விட்டார்.

அந்த வீர விளையாட்டை மீட்டெடுக்கவேண்டும் என்று அனைத்துக்கட்சியினரும்  முழங்குகிறார்களே அவர்கள் ஒன்று பட்டு போராடுவோம் என கை கோர்த்தது உண்டா? தேர்தல் கால கூட்டங்களில் மட்டும் கை இணைத்து உயர்த்துவார்கள்.மக்களின் ஓட்டு வேண்டும்.கையூட்டும் தருவார்கள்.

மாணவர்கள் போராடினால் தூண்டிவிட்டு குளிர் காயப் பார்ப்பார்கள்.

அதிமுகவுக்கு  அம்மா  சேர்த்து வைத்தவைகளை--- பதவிகளை பங்கு போடுவதில் பங்காளிச்சண்டை.கட்சியின் வளர்ச்சியில் எள் முனை அளவு கூட பங்கு பெறாதவர்கள் முதல்வர் பதவிக்கு  குறி வைத்திருக்கிறார்கள்.

ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு நூற்றுக்கணக்கில் விவசாயிகள் செத்துக் கொண்டிருப்பது பற்றி கவலை கிடையாது. வங்கி வாசல்களிலும் ஏடிஎம் கூண்டுகள் முன்பாகவும் மக்கள் வாடி வதங்கி காய்வது பற்றி  அவர்கள்  நாணப்படவில்லை.அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்தால் என்ன நடக்காமல் போனால் என்ன? கடந்த வருடம்தான் நடக்கவில்லையே!அதுவும் அம்மா ஆட்சியில்!

இன்னும் நான்கே நாட்கள்தான் இருக்கின்றன.

கட்சியின் பொதுச்செயலாளர் கொடுத்த அறிக்கையை அதிமுக எம்.பி,க்கள்  சுமந்து கொண்டு பிரதமரை பார்க்க சென்றார்கள். அவரோ சந்திப்பதையே தவிர்த்து சந்தியில் நிற்க வைத்து விட்டார்.அவசரச்சட்டம் கொண்டுவரச்சொல்கிற ஆளும் கட்சியினர் இது நாள்வரை என்ன செய்தனர்?
பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ன செய்தது?

எத்தனை நாளைக்கு இந்த நாடகம் என்பது தெரியவில்லை.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் அதில் பிஜேபியும் கலந்து கொள்ளும் என்று தமிழிசை சொல்வதுதான் கோமாளித்தனமாக இருக்கிறது.

திங்கள், 9 ஜனவரி, 2017

புலம்பலை kelungk

புலம்பலைக் கேளுங்கள் ...!


இது  முந்தையப் பதிவு.
 நீ அருகில் வந்ததும் வெட்கம் விளக்கு அணைக்கிறது.
இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது.
ரத்த நாளங்களில் உணர்வுகள் அலை அடிக்கின்றன.
நீ அணைப்பாய் என எனது தேகம் ஏங்குகிறது.
ஏன் காலம் தாழ்த்துகிறாய் ?
என்னை வாரி எடுத்துக் கொள்.
அணைத்துப் பார்.
அடங்கிக் கிடப்பேன்.
உனது கர்வம் தலை நிமிர்ந்து பார்க்கும்.
எவ்வளவு அழகு நான் என்பது உனக்குப் புரியும்!
நமது தழுவல் உனக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
அடுத்தவர்கள் உன்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள்.
அத்தனை பேர் நெஞ்சிலும் பொறாமைத் தீ பற்றிக் கொள்ளும்.
உன்னை அணைத்து இருப்பதால் எனக்கும் பெருமை.
என்னைப் பற்றி உனது தோழிகள் கேட்பார்கள் .
எனது பெயர் என்ன என விசாரணை செய்வார்கள்.
எனக்குப் பெருமை சேர்க்க மாட்டாயா?
எழிலார்ந்த கரங்களால் எடுத்துத் தொட்டுத் தடவிப் பார்.
உனக்கும் எனக்கும் எவ்வளவு பொருத்தம் என்பது தெரியும்.
கன ,கச்சிதம் கண்ணே!
காலம் தாழ்த்தாதே !
எடுத்துக் கொள் .
எவளாவது கிழவி கையில் மாட்டிக் கொள்ளப் போகிறேன்.
காலம் கேட்டுக் கிடக்கிறது.
என்னை உன் வீட்டுக்கு கொண்டு போய் அந்தரங்க அறையில் அணைத்துப் பார்!
நம்மைப் பற்றி கவிப் பேரரசு வைரமுத்து கவிதை எழுதி இருக்கிறார்.
''கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே'' என்று பாடி இருப்பது உன்னையும் என்னையும் நினைத்து தான்.

இதுவரை புலம்பியது ''ப் ரா'வின் புலம்பல்!!

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரளும் எம்.எல்.ஏ.க்கள்!?

கியாஸ்  கசிந்து நெருப்பு பற்றினால் வீட்டையே காலி பண்ணிவிடும் என்பார்கள். அதைப்போல் தான் முன்னாள் முதல்வர்  ஜெயலிதாவின்  மரணம்  இயற்கையா அல்லது  சதியா என்கிற மர்ம முடிச்சு மெது மெதுவாக அவிழத் தொடங்குகிறது..வெடிக்குமா,தப்புமா என்பது போகப்போக தெரியவரும்.!

 உயர்நீதி மன்றத்தில் தனி நபர்  தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில்  அப்பல்லோ மருத்துவ மனை நிர்வாகம் " ஜெயலலிதாவுக்கு  அளிக்கப்பட்ட  மருத்துவ சிகிச்சையை பற்றிய விவரங்களை  சீலிட்ட கவரில் வைத்து" தாக்கல் செய்வதாக உறுதி அளித்திருக்கிறது.உண்மையை சொல்லுமா  மறைக்குமா என்பது  அம்மாவின் ஆவிக்கு மட்டுமே  தெரியும். அப்பல்லோ பொய் சொன்னால் டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனை விட்டு வைக்குமா?

மூன்று நீதிபதிகள் கொண்ட குழு  ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க  வேண்டும் என மனுதாரர் கேட்டிருப்பதற்கு   தமிழக அரசு  நான்கு வாரத்தில்  பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது   உயர் நீதிமன்றம் போட்டிருக்கும்  உத்தரவுதான்!

டி..என்.பி.எஸ் .சி..க்கு தமிழக அரசு நியமித்த பதினோரு உறுப்பினர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டதை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தமிழக அரசு நிர்வாகத்துக்கு மண்டை இடி, மாட்டப்போவது  யாரோ!

சசிகலா புஷ்பா  கேட்டிருந்த சி.பி.ஐ .விசாரணை கோரிக்கை பற்றி 'பணியாளர்  மற்றும் பயிற்சித்துறை விசாரணை செய்து  சசிகலா புஷ்பாவுக்கு  அறிக்கையை  கொடுக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டிருப்பது  பொதுச்செயலாளர் சசிக்கு கொடுக்கப்பட்டிருக்கிற நெருக்கடிதான்!

அத்தனை எம்.எல்.ஏ,க்களும் சசிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என சொன்னாலும் முப்பத்தி ஐந்து  எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்.ஸின் விசுவாசிகள்  என சொல்லப்படுகிறது. இத்தகைய  நிலையில்தான்  புதிய குடியரசு தலைவரை  ஜூலை  இருபத்தி ஐந்துக்குள்  தேர்வு செய்தாக வேண்டும். பிஜேபி.யின் வேட்பாளரை  ஆதரிப்பதாக வெங்கையா நாயுடுவிடம்  சசிகலா  உறுதி அளித்திருக்கிறாராம். அந்த உறுதி எந்த அளவுக்கு  நிற்கும் என்பதற்கு  உறுதி  இல்லை.

பாராளுமன்றத்தில் பி.ஜே.பி.க்கு போதிய பலம் இருந்தாலும்  ராஜ்யசபாவில்  வலு குறைவுதான்! ஆனாலும்  ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதை பி.ஜே.பி.கவனிக்க வேண்டியதிருக்கிறது.

அத்வானி,முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், சுமித்ரா மகாஜன் ஆகியோர்  பெயர்  வட்டமிட்டாலும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியையும்  கணக்கில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.சரத் பவாரை காங்.கூட்டணி நிறுத்தலாம்.

ஆக அதிமுக பிரபலங்கள் மீதான நடவடிக்கைகளின்  'தன்மை' ஜூலைக்கு  பின்னரே கடுமையாகும் என்கிறார்கள்.அதுவரை மிரட்டல் மட்டும் தொடருமாம்,

அது சரி  கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கஷாயம் குடிக்கிறவர்களிடம் மிரட்டல் எடுபடுமா என்ன? ஜெயலலிதா என்ற பெண் சிங்கத்தையே  வீழ்த்தியவர்கள் ஆச்சே!

















ஞாயிறு, 8 ஜனவரி, 2017

கொடி ஏற்றப்போவது சசியா, ஒ.பி.எஸ்சா?

வதந்திகளுக்கு  வால் முளைத்தால்  வானமே  வளையும் என்கிறபோது  வாயும்  முளைத்து விட்டால் என்ன ஆகும்?

ஜெ.யின் மரணத்தில் சந்தேகம் என்பது கிட்டத் தட்ட மறைந்து  தற்போது  யார்  முதல்வராக வருவார், குடியரசு  நாளன்று  கோட்டையில் கொடி ஏற்றப்போவது எவராக இருப்பார் என்கிற  விவகாரம்தான்   ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கட்சி, ஆட்சி  நிர்வாகத்தில் இருக்கிறவர்களுக்கு  அம்மா என்பவரே   மறந்து போய்விட்டார். சொந்த அம்மாவையே  மறந்தவர்களுக்கு அம்மா  ஜெயலலிதாவை மறப்பதற்கு  நாளும் கிழமையும் தேவையா என்ன? அவர்களின் கண்களில் மின்னுவது  எஞ்சியிருக்கிற நான்கறை வருஷங்கள்தான். அமுதம் சுரக்கும்  ஆண்டுகளாச்சே! அதனால்  சின்னம்மாதான்  அவர்களின் தேசிய கீதமாக இருக்கிறார் . ஆனால் சட்ட  பஞ்சாயத்து  இயக்கம்எ ன்கிற  சமூக ஆர்வலர்கள் அமைப்பு  நடத்திய கருத்துக் கணிப்பில் சசிக்கு எதிராக 97 சதம் மக்கள் வாக்கு அளித்து  இருக்கிறார்கள். சென்னை, கோவை,நெல்லை ஆகிய மாவட்டங்களில்  கணிசமான எதிர்ப்பு இருப்பதாக  ஆங்கில இணையதளம் எழுதி  இருக்கிறது.

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்  கிழங்கை தூக்கி  பிரியாணியில்  போடு  என்கிற  கதையாக  குடியரசு நாளில்  கொடி ஏற்றப்போவது சசிகலா தான் என்கிற  கிளைக்கதையும்  ஓடுகிறது. ஓபிஎஸ் சபாநாயகராம். திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோரில் ஒருவர்  நிதி மந்திரி என்று ஆருடமும்  சொல்கிறார்கள்.

பனிரெண்டாம் தேதி  முதல்வராக  சசி பொறுப்பு ஏற்பார் .அவரே  கொடி ஏற்றுவார் என்றும் சூடம் அணைக்கிறார்கள். ஆனால்  ராஜ்பவன் வட்டாரமோ  தற்போதைய  பன்னீர்தான்  கொடி ஏற்றுவார். ஆளுநர்  மும்பை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால்  சென்னை வருவது சந்தேகமே என்கிறது.

இவைகளை விட இனிமேல்  பெட்ரோல் பங்குகளில்  டெபிட் கார்டு கிரடிட் கார்டு  வாங்கமாட்டார்களாம். ஜல்லிக்கட்டு,விவசாயிகள்  மரணம் பற்றி  இளையவர்கள் சென்னையில் நடத்திய பெரும் ஆர்ப்பாட்டம் அரசுக்கு  சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. மோடி மகராஜ் ஜியின் புண்ணியம் இது!

என்னமோ போடா  ராகவா!


சனி, 7 ஜனவரி, 2017

' இன்னோவா ' சம்பத்துக்கு....மந்திரித்தது யாரு?

கற்ற தமிழும், பெற்ற திறைமையும் அன்னைக்கு நிகரானவை. அதுவே  விலை பேசப்பட்டால்?

பதில் சொல்ல வேண்டிய கடமை இன்னோவா சம்பத்துக்கு இருக்கிறது.

"குயில் அல்ல; காகம்தான்! சிங்கம் அல்ல; சிறு நரிதான்! வேங்கை அல்ல; வீட்டுப் பூனைதான்! கொள்கைவாதி அல்ல.கோமாளிதான்!

இப்படித்தான் தன்னை மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கிறார்  நாஞ்சில்  சம்பத் எனப்படுகிற  இன்னோவா சம்பத்.!

"சசிகலாவை பொதுச்செயலாளராக  ஏற்பதற்கு எனக்கு தகுதி இல்லை"  என்று  சொன்ன சொல் உல்டா அடித்து உத்திரத்தில் தொங்கியது எப்படி? எதனால்?

'பொல்லா சிறகு விரித்து ஆடிய வான்கோழி எப்படி அய்யா  மயிலாக  மாறியது? எந்த போதி மரத்துக்கு அடியில் ஞானம் பெற்றார் என்பதை சொல்லக்கூடாதா?

சணலில் நெய்த சட்டை போட்டிருப்பதால்  உண்மை  அவரை சுடவில்லை.

கை சுத்தம், வாக்கு சுத்தம்   என்பதற்கு  சம்பத்திடம்  அர்த்தம் கேட்கவே  கூடாது.

தமிழக அரசு முத்திரையுடன் போலி பால்கோவா  விற்பனை செய்யப்படுகிறதாம். அத்தகைய முத்திரை குத்தப்பட்ட  அரிச்சந்திரன்  இன்னோவா  சம்பத்!

எதற்காக  சம்பத் அப்படி எல்லாம் சொல்லிவிட்டு இப்படி பல்டி அடிக்கவேண்டும்?

எதிர்பார்ப்பு  அதிகமோ?

வெள்ளி, 6 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு நடக்கும்மாண்ணே?

"அண்ணே,,அண்ணே ,,,பொங்கல் வரப்போகுது இன்னும் பத்துநாள்தான் இருக்கு! ஜல்லிக்கட்டு  நடக்கும்மாண்ணே? நம்ம கவர்மெண்டும் மோடி  கவர்மெண்டும் ஒண்ணுமே  பண்ணலியே? விவசாயிகள் தற்கொலை  பண்ணிக் கிட்டதைக்கூட  கண்டுக்கவே இல்லையே? அவ்வளவு பெரிய மேட்டருக்கே  கொட்டாவி கூட விடாதவங்க  ஜல்லிகட்டுக்கு மட்டும்  மல்லுக்கட்டவா போறாங்க?"

"தமிழ்நாட்டுல ஒத்துமைங்கிறது  கொஞ்சம் கூட கிடையாதுடா தம்பி!. வயலு வரப்பு  தாவா மாதிரி கட்சிக்காரங்க மோதிக்கிட்டு இருக்காங்க. வேறுபாடு பாக்காம ஒண்ணா இருந்து போராடி இருந்தா மத்திய அரசு மசிஞ்சுருக்கும்.
அதிமுகவுக்குள்ள இருக்கிறவங்க யாரு கட்சிக்குள்ள நாட்டாமை பண்றதுங்கிறதில கவனமா இருக்காங்க. அவங்களுக்கு ஜனங்களை பத்தின கவலை இல்லவே இல்ல. விவசாயி வயசானதால் செத்தான்..நோய் வந்து செத்தான்னு ஒரு மந்திரியாரே சொல்றாருன்னா..பார்த்துக்க.

திமுகவுடன் நாம்ப சேருவதான்னு வைகோ ராமதாஸ், திருமாவளவன் இப்படி அவங்கவங்க தனிக்கச்சேரி நடத்துனா வெளங்குமா? பலமா இருக்கிற கட்சியோடு  மத்தவங்க சேர்ந்து  கோடி பிடிச்சாதானே  அரசு அசைஞ்சு கொடுக்கும்!"

"அது சரிண்ணே! யானை அணிவகுப்பு  நடக்குது.....குதிரை பந்தயம் நடக்குது..நாய் கண்காட்சியும் நடக்குது. ஆனா இந்த ஜல்லிக்கட்டுக்கு மட்டும்  ஏன் இப்படி  வம்படி பண்றாங்க?"

"தம்பி!சிந்து சமவெளி நாகரீகம்னு சொல்வமே,,,அந்த நாகரீக காலத்து விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு. அஞ்சாயிரம் வருசத்துக்கு  முந்தினது. வீர  விளையாட்டு .இத தடை பண்ணுனதே மேனகா காந்திதான். சமூக ஆர்வலர்கள்னு சிலர் ஜல்லிக்கட்டுக்கு தடையா இருக்காங்க. அவசர சட்டம் போடலாம். தேர்தல் வர்றதா இருந்தா ஒரு வேலை  ஓட்டுக்காக  பண்ணிருப்பாங்க. பாக்கலாம். ஜல்லிக்கட்டு நடக்குதான்னு! ஆனா சில நீதிபதிகள்  ஆதரவா இல்லடா.! அதனால அவசர சட்டத்தை ரெண்டு நாளைக்கு முன்னால கொண்டாந்தா  எதிர்த்து யாரும் கோர்ட்டுக்கு போக முடியாதுடா!"

"என்ன நடக்குதுன்னு பாக்கலாம்!"

வியாழன், 5 ஜனவரி, 2017

மோடிக்கு சல்மான்கான் அப்பாவின் கோரிக்கை!

புத்தாண்டு நள்ளிரவு என்றாலே மதுவும் மகிழ்ச்சியும்தான்!

இது  மேலைநாட்டு கலாச்சாரம். ஆணும் பெண்ணுமே மது அருந்துவார்கள். ஆடுவர்,பாடுவர் அனைவர் மத்தியிலும் முத்தமிட்டுக் கொள்வர்.  இவை எல்லாம் இல்லை என்றால் அங்கே துக்கம் துயில் கொள்கிறது என பொருள்.
ஆனால் அத்தகைய கலாச்சாரம் இங்கே  துக்கத்திலும் மது அருந்துகிறது. கள்ளப் புணர்வு கொள்கிறது.

நாம் தொலைத்துக் கொண்டிருக்கிற அடையாளங்களில் பண்பும் ஒன்று என்றாகிவிட்டது.

துப்பட்டா இல்லாமல் வருகிற பெண்களின் மார்பகங்களை உற்று நோக்குவதும், மார்புகளின்  சரிவுகளை ரசிப்பதும் , கிளிவேஜ் எனப்படும்  மையப்பகுதிகளில் மயக்கம் கொள்வதும் இன்றைய இளையோர்களது  ரசனையாக  இருக்கிறது.

தப்பாகச்சொல்லவில்லை பெண்களும் அப்படித்தான் வருகிறார்கள். ஆண்களுக்கு இருக்கிற வக்கிரப் பார்வைக்கு இரை போடுகிறவகையில்தான்  ஆடைகளை அணிகிறார்கள். லேக்கிங்க்ஸ் எனப்படும் இறுக்கமான ஆடை  அவர்களது  தொடைப்பகுதி, கணுக்கால் ,இடைகளை ஆபாசமாக காட்டுவதை விரும்புகிறார்கள்.

இப்படி இருபாலருக்கும்  பதின்ம பருவத்தின் ஹார்மோன்கள் இனிய தொல்லைகளைத்தான் தரும்...தந்து கொண்டிருக்கிறது..

ஆனால் இது வரம்பு மீறுவது,எல்லை தாண்டுவது என்பது இரு பாலரும்  கூடும் நெருக்கமான பெருங் கூட்டத்தில்தான்!

 பெங்களூரு சிட்டி சென்டரில் நடந்த  மானபங்கப் படலம் அதைத்தான் காட்டுகிறது..! ஆண்கள்  அத்துமீறி நடந்திருக்கிறார்கள்..மனிதர்களாக  நடந்து கொள்ளவில்லை. .

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கானின் தந்தை சலீம்கான்  பிரதமர் மோடிக்கு அனுப்பிய டிவிட்டர் செய்தியில் " ஆங்கில புத்தாண்டு நாளின்போது பெண்கள் இழிவாக நடத்தப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் மானபங்கப்படுவது அடிக்கடி நிகழ்கிறது

..இளைஞர்கள்  இரு புறமும் கூரான ஆயுதம் போன்றவர்கள். நாமும் இளைஞர் பருவத்தைக் கடந்து வந்தவர்கள்தான். ஆனால் ஒருபோதும் இத்தகைய இழிசெயல்கள் நடந்ததில்லை.நரேந்திர சகோதர. வாலிபர்களுக்கு  புத்தி சொல்லுங்கள்" என சொல்லி இருக்கிறார்.

அவர்கள் காலம் வேறு ...இக்காலம் வேறு ..காலமாற்றம் என்பதை மறந்து  அவர் சொன்னாலும்  பிரதமர் காதில் விழுமா என்பதுதானே கேள்வி!  

புதன், 4 ஜனவரி, 2017

மன்னிப்பு கேட்டது தவறு சுராஜ்!

இது  காலம் கடந்த பதிவுதான்! 

வித்யாபாலனின்  'பேகம்  ஷான் ' படத்தின்  ஸ்டில்  பார்க்கும்வரை!  அங்கேதான்  இயக்குநர் சுராஜ்  நடிகைகள் நயன், தமன்னா  ஆகியோரிடம்  மன்னிப்பு  கேட்டிருக்கக்கூடாது  என்கிற  எண்ணம்  தோன்றியது. 

சுராஜ் பேசியதின்  தொனியில்  ஆணாதிக்கத்தின்  திமிர்  இருந்தது. அதையே  அவர்  மென்மையாக  பேசியிருந்தால்  பிரச்னை  எழ வாய்ப்பு  இருந்திருக்காது. 

ஆத்திரப்பட்ட  நடிகைகள்  இரண்டுபேருமே 'இதற்கு  மேலும்  கவர்ச்சிக்கு  எல்லை  வகுக்க முடியாது" என்கிற  நிலையில் உச்சம்  தொட்டவர்கள்தான்.

ஆனால்  கவர்ச்சியாக  நடிப்பதோ  அத்தகைய கேரக்டர்களில்  நடிப்பதோ  தவறில்லை. ஆனால்  நடிக்க மறுப்பது  அவர்களது உரிமை.

இயக்குநர்  திலகம்  அமரர்  பாலசந்தர்  விலைமாதுகளின்  அவலத்தை  படமாக்கவில்லையா?  சாதனை படைத்த நடிகைகள்  நடித்திருந்தனர்.  தப்புத்தாளங்கள்  சரிதா, அரங்கேற்றம்  பிரமிளா  ஆகியோரின்  நடிப்பு  மக்கள் மனதில்  அருவெறுப்பை  தரவில்லையே!  பிரமிக்க வைத்தனர்.

அதைப்  போலவே  ஸ்மிதா பட்டேல் இன்னும் பலர்  வடக்கிலும்  சாதனை  செய்தனர்., வித்யாபாலன்  போன்றோரும்  தற்போது  நடிக்கவே செய்கிறார்கள். கேரக்டருக்கு  தகுந்த கவர்ச்சி  காட்ட தயங்கியதில்லை. 

டர்ட்டி பிக்சர்  படத்துக்கு அடுத்து  பேகம் ஷான்  என்கிற படத்தில்  முக்கியமான  படத்தில்  நடித்து வருகிறார். 

இந்தியா  துண்டாடப் பட்ட  1947-ல்  பஞ்சாபில்  விபசார விடுதி  ராணியாக  வாழ்ந்தவளைப்  பற்றிய  கதை. அதில் விலை மாதுவாக வித்யா பாலன். நசிருதீன் ஷா ,ஆஷிஷ்வித்யார்த்தி ,ராஜேஷ் சர்மா  போன்ற திறமைசாலிகளும் நடித்து வருகிறார்கள். அவர்களும்  பணம்  வாங்கிக்கொண்டுதான்  நடிக்கிறார்கள். 

திரையுலகமே  கவர்ச்சியை நம்பித்தான்  இருக்கிறது, நடிகைகளும்  பணத்தை நம்பித்தான்  நடிக்கிறார்கள். யாரும் கலைச்சேவை  செய்ய வரவில்லை. 

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வாய்ப்பு இருக்கிறதா?

இப்படியும்  சிந்திக்கலாமே....?

அரியணை சசிக்குத்தான் என்றாகிவிட்டது .கட்சிப் பதவியில் இருப்பவர்களின் ஒட்டு மொத்த ஆதரவும் அவருக்குத்தான்!    மனசாட்சி என்பது  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுடன் சேர்ந்து உடன்கட்டை  ஏறி விட்டதால் தொண்டர்கள் மட்டுமே இன்னமும் 'அம்மா...அம்மா ' என  அழுது  கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய முதல்வரான பன்னீர்செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை  அதிமுகவின் நியமன பொதுச்செயலாளர்  சசிகலாவிடம் கொடுத்து விட்டதாக  ஒரு தகவல் உண்டு. அனேகமாக  அவர் அரசியலில் இருக்கமாட்டார்  என்பதாகவும் சொல்கிறார்கள்.பாஜக.வின் சாணக்கியத்துக்கு  தன்னால் ஈடு கொடுக்க முடியாது என்பதாக கருதினால்  பன்னீர்செல்வம் துறவறம் செல்வதை தவிர  வேறு வழி இல்லை. அவர் மிகவும் புண் படுத்தப்பட்டிருக்கிறார்  என்பதும் உண்மை.

குறுக்கு வழிகள் மட்டுமே அரசியல்வாதிகளின்  புனித யாத்திரைக்கானது!

அதை பாஜக பயன்படுத்த நினைக்கலாம்.

அனேகமாக அது திமுகவின் பக்கமாக சாயலாம்.

எப்போது அந்த சாய்தல் படலம்?

அனேகமாக அதிமுகவின் ஆட்சி காலத்தை பொருத்து இருக்கலாம்!

முதல்தகவல்படி  பன்னீர் விலகி அந்த இடத்துக்கு சசிகலா வருவாரேயானால் பாஜக தனது காயை நகர்த்த தொடங்கிவிடும்.முன்னாள் தமிழக அரசு தலைமைச்செயலாளர் மீது  நடத்திய ரெய்டு அதன் தொடர்பாக மாட்டியிருக்கும் மணல் கொள்ளை மன்னர்களை வைத்து  புதிய ரெய்டு  தொடங்கலாம்.வாய்ப்பு இருக்கிறது.. சொத்து குவிப்பு வழக்கின் முடிவு எப்படி இருக்கலாம் என்பது தெரியவில்லை.ஒருவேளை அது அதிமுகவுக்கு பாதகமாக இருந்தால்  தமிழக அரசு கலைக்கப்படலாம் அல்லவா?. அதன் பின்னர் நடக்கும் இடைத்தேர்தலில் பாஜக---திமுக கூட்டணி அமையலாம் என்பது சிலரது  ஹேஸ்யம்.முதல்வர் பதவிக்கு  ஸ்டாலின் முன் நிறுத்தப்படலாம் என்பதாகவும் சொல்கிறார்கள்.

இப்படிம் ஒரு மாற்றம் வருமானால் அதிமுகவுக்கு காங்.துணை நிற்கும். அதற்கு திருநாவுக்கரசர் பதிகம் பாடவே செய்வார்.


இப்படியெல்லாம் நடக்கக்கூடுமா? உறுதியாக சொல்ல முடியவில்லை.  அதற்கு ஆறு மாதம் ஆகலாம்!   சிம்மமாக இருந்த ஜெயலலிதா இப்படி மரணிப்பாரா என யாராவது நினைத்திருப்பார்களா?

ரகசியம் என்பது ஒரு கட்டத்தில் மேடை ஏறவே செய்யும்!

பொறுத்திருந்து  பார்க்கலாம்!

செவ்வாய், 3 ஜனவரி, 2017

ஒ.பி.எஸ்.சின் பதவியின் நாள் எண்ணப்படுகிறது....

ஏறத்தாழ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவம் முடித்து வைக்கப்பட்டதைப் போல  இந்நாள் முதல்வர் ஓ.பி.எஸ்.சின் பதவியும் முடிவடையும் கட்டத்துக்கு வந்து விட்டது..

சசியை விட வயதில் மூத்தவர்.அனுபவத்திலும் இளையவர் இல்லை. இருந்தாலும் சசியின் காலில் விழுந்திருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு  அவர் இறங்கி இருக்கிறார் என்பது புரிகிறது. ஒரு வேளை ஜெ.யின் கார்  டயரை தொட்டு கும்பிட்ட  நினைவோ என்னவோ!

முன்னரே பதிவிட்டிருந்ததைப் போல ஜனவரி பதினைந்தாம் தேதிக்குள்  சசிகலாவுக்கு முதல்வர் மகுடம் சூட்டப்பட்டுவிடும் என்றே தெரிகிறது. அதற்கான முன்னோட்டம்தான் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

பன்னீர்செல்வம்( முக்குலத்தோர்.) தம்பிதுரை, எடப்பாடி,( கவுண்டர்.) ராஜலட்சுமி,( தலித்.) பொள்ளாச்சி ஜெயராமன்,( செட்டியார்.) கே.பி.முனிசாமி,( வன்னியர்.) அன்வர் .(முஸ்லிம்.) ஆகியோர் கையெழுத்திட்டு முன் மொழிந்த தீர்மானம்  அதைத்தான் நினைவூட்டுகிறது..

பன்னிர்செல்வத்தை முன்னிறுத்தி அரசியல் பண்ணிய பாஜக தனது அடுத்த  கார்டு எதுவாக இருக்கும் என்பதை  திர்மானித்திருக்கிறதா இல்லையா என்பது உடனடியாக தெரியப்போவதில்லை. கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்பார்கள். அதுவரை ராமமோகனராவின் பிடி தளராது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கடுமையாக கண்காணிக்கப்படுவார்கள்  என்பதாகவே சொல்கிறார்கள்.

சசிகலாவின் கணவர் நடராஜனின்  சாணக்கியம்  அரசு வட்டாரத்தில் அதிரடியாகவே வேலை செய்யும் என்பதால்  கட்சிக்குள் சசிக்கு எதிர்ப்பு என்பது இருக்கப்போவதில்லை. ஆனால் அடிமட்ட தொண்டர்கள், கிளை கழகங்கள்   ஜெயலலிதாவுக்கு கட்டுப்பட்டு நடந்ததைப் போல  இனி  நடக்காது என்று நம்பலாம். பல இடங்களில் கொடிகளை இறக்கிவிட்டனர். சென்னையிலேயே  சுவரொட்டிகளில் சின்னம்மாவின் படத்தை மட்டும்  கிழித்து இருக்கிறார்கள்.

இது  நாளடைவில் வலுப்பெறுமா,வலுவிழக்குமா என்பது அரசியல் வானிலையை  பொருத்தது!

திங்கள், 2 ஜனவரி, 2017

விவசாயிகள் தற்கொலை கவலைப்படாத அரசுகள்.!

தமிழர்களின் வேதம் என்கிறார்கள்  திருக்குறளை!

மத்திய மாநில அரசுகளும் குறளை போற்றுகின்றன. சிலைகளும்  ஆங்காங்கே!

ஆனால் யாராவது  திருவள்ளுவனை மதிக்கிறார்களா? தமிழகத்தில்  வாழ்கிற தமிழர்கள்  மாலை போட்டு மரியாதை செய்வதுடன் முடிந்து விடுகிறது. எத்தனை மந்திரிகளுக்கு எத்தனை குறள் தெரியும்?

ஆண்டவனுக்கே வெளிச்சம்!

இந்த லட்சணத்தில் 'உலகமே விவசாயிகளின் பின்னால்தான் இருக்கிறது' என அந்த முனிவன் சொன்னது  அவர்களுக்கு தெரியவா போகிறது?

நட்ட விதை முளைக்கவில்லை. நாற்று நடக்கூட தண்ணீர் கிடையாது. மழையும் பெய்வதில்லை. பெய்தாலும் நாசம் பண்ணுகிறது. இல்லாவிட்டால்  பூமியை நனைப்பதில்லை. கண்மாய்கள் களவாடப்பட்டு விட்டன. அங்கே  கட்டிடங்கள் முளைத்திருக்கின்றன. ஆழ்கிணறு வழியாக வெளிநாட்டு நிறுவனங்கள்  நிலத்தடி நீரை  உறிஞ்சி விட்டன. ஆற்று மணல் கொள்ளையால் ஆற்றுப்பாசனம் அழிந்து விட்டது. அப்புறம் எப்படி கண்மாய்  பாசனம் உயிருடன் இருக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள்தான் காரணம்!
ஊழலில் விளையாடியவர்கள் உழவர்களின் வாழ்வில் மண்ணள்ளி போட்டு விட்டார்கள்.

இன்று வரை முப்பத்தி மூன்று விவசாயிகள் தற்கொலை அல்லது மாரடைப்பு  என பரலோக பதவி சேர்ந்து விட்டனர். ஆனால் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு அல்லது மத்திய அரசு நெல் முனை அளவு கூட கவலைப்படவில்லை.எக்கேடு கேட்டால் எங்களுக்கென்ன எங்கள் நாடகத்தை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என பொய்யாக கண்ணீர் விட்டு எதற்காகவோ புலம்புகிறார்கள்.ஆட்சிக்கட்டிலில் அமர்வது நீயா நானா என லாவணி பாடுகிறார்கள். அவர்களுக்கு பதவிகள் வேண்டும்.

பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறார்கள். சிவப்புச்சட்டைக்காரர்கள் மறியலுடன் அன்றைய போராட்டத்தை  முடிக்கிறார்கள். திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கலைகிறார்கள். ஆனால்  விவசாயிகளின்  மரணத்தை அவர்களால் தடுக்க முடிகிறதா? காலத்துடன் தண்ணீர் கொண்டு வந்திருந்தால் அவலம் நிகழ்ந்திருக்காதே!

கடன் வாங்கிய  அசலையும் வட்டியையும் தள்ளுபடி செய்வது பற்றியோ, இழப்பீடு தருவது பற்றியோ  எந்த மந்திரியும் கவலைப்படவில்லை.

என்ன நாடு இது? ச்சே!

சசியின் சவுக்குக்கு ஆடுகிறாரா தம்பிதுரை?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒ.பி.எஸ்..என்கிற பன்னீர்செல்வம்.

அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின்  மிகுந்த நம்பிக்கையை பெற்றிருந்ததால் ஜெ.சிறைப்பட்ட காலத்தில் முதல்வராக பணியாற்ற பணிக்கப்பட்டவர். ஒரு முறை அல்ல.இரண்டு முறை!

 ஜெ.மரணம் அறிவிக்கப்பட்டதும் அழக்கூட  நேரம் இல்லாமல் பன்னீர்செல்வத்தை  முதல்வராக தேர்வு செய்தனர் .நல்ல நேரம் கூட பார்க்கவில்லை. நள்ளிரவில் பதவிப்பிரமாணம் செய்விக்கப்பட்டார்.

தற்போது அவரை நீக்கிவிட்டு  சசிகலாவை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வற்புறுத்துகிறார் பாராளுமன்ற துணை அவைத்தலைவர்  தம்பிதுரை,,

காரணம் தனது தனிப்பட்ட கருத்து என்கிறார்.

அதற்கான அவசியம் என்ன...?

"கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் ஒருவரிடம்தான் இருக்கவேண்டும்.அதற்கு சின்னம்மா முதல்வராக வேண்டும்" என்பது  அவரது 'தனிப்பட்ட" கருத்தாம்!

சரி...ஆட்சித்தலைமையில் இருக்கும் ஓபிஎஸ்.சிடம் கட்சித் தலைமையை யும்  ஒப்படைத்து இருக்கலாமே.. இதுதானே தம்பிதுரையின் ஆசையும்! .சாமான்யத் தொண்டன் ஜெயலிதாவின் சமாதியில் தற்கொலை செய்யத்துணிந்தானே!.!சசிக்கு பதவி கொடுப்பதை எதிர்த்துத்தானே!
கட்சி வளராது போய்விடுமா? எதை காரணமாக சொல்லப்போகிறீர்கள். ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பவர்களுக்கு உரிய பதிலை சொல்லாமல் யாருக்கோ முடி சூட்ட பார்க்கிறீர்களே ஏன்?

கேட்டால் 'அம்மாவுடன் முப்பதாண்டு காலம் தன்னை வருத்திக் கொண்டு வாழ்ந்தவர் "என்கிறீர்கள். இது ஒன்றே கட்சித்தலைமை பதவிக்கு தகுதியாகிவிடுமா? ஓபிஎஸ்.சை வெளியேற்றிவிட்டு சசியை அங்கு அமர்த்தவேண்டும் என்பது யாருடைய கட்டளை?

ஜெயலிதாவினால் வெளியேற்றப்பட்டவர்கள் உள்ளுக்குள் வந்தது எப்படி?

இன்னும் நாலரை ஆண்டுகாலம் பதவியை அனுபவிக்க வேண்டும்.என்பதற்காக  எவ்வித உரிமையும் இல்லாமல் கார்டனை  ஆக்கிரமித்திருக்கும் சக்திக்கு அவ்வளவு பயம் ஏன்?

அவர் கையில் சவுக்கு!
. ஆடுகிறீர்கள்.

இல்லாவிட்டால் "சின்னம்மா அப்ரூவர் ஆகி இருந்தால் அம்மா இருந்திருக்கமாட்டார்கள்" என்று வளர்மதியால் சொல்ல முடியுமா?

வர வர அதிமுக மர்ம தேசமாகி வருகிறது.