Wednesday, January 11, 2017

எத்தனை நாளைக்கு இந்த நாடகம்?

'தொல்லாணை  நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட  புகழ்சால் சிறப்பின்  நிலந்தரு திருவின் நெடியோன்' என்று தமிழ்ச்சங்கம்  இருந்ததை உறுதி  செய்வது மதுரைக்காஞ்சி. பெரிய திருமொழியில்  ஆண்டாளும், சங்கத்தமிழ் மூன்றும் தா என்று  அவ்வையும்,'நன் பாட்டுப்புலவனாக சங்கம் ஏறி' என தேவாரத்தில் அப்பரும் 'தென்தமிழ் நன்னாட்டுத் திருநீர் மதுரை' என சிலம்பும் தமிழ்ச்சங்கம்  இருந்ததை செப்புகின்றன.

திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதியை தயாரித்தவர் வெளிநாட்டவர் எமனோ பர்ரோ.

தொல்காப்பியர் குறிப்பிடும் மொத்த அடிப்படைத் தமிழ் எழுத்துகள்  முப்பத்தி மூன்று என்கிறார்கள்.

இவை போன்று மேலும் பல சிறப்புகள் மொழிக்கும் இனத்துக்கும் இருக்கின்றன.

இருந்தும் என்ன பயன்?

தமிழகத்தில் தமிழனே இல்லை கடல் கடந்து வாழ்ந்த  தமிழர்களையும்  சிங்களன்  கொன்று  குவித்துவிட்டான் இன்று நம்மிடையே  வாழ்கிறவர்களும்  சாதிகளால் வேறுபட்டு இன உணர்வுக்கு மாறுபட்டு பதவிகளுக்காக  விலை போகிறவர்கள்தான்!

தமிழர்களின் ஏறு தழுவதல் என்பது  மிச்சமிருக்கும் தமிழ்  அடையாளம்.

அதையும் வடவர்கள் தகர்த்துகே கொண்டிருக்கிறார்கள்.

காளை தழுவுதல் என்பது தமிழனின் புத்தாண்டில் கொண்டாடப்பட்டு வந்தது.. அந்த புத்தாண்டு நாளையே  சித்திரைக்கு கடத்திக் கொண்டு போய்விட்டது  ஜெயலலிதாவின் ஆட்சி! 'நான் தமிழச்சி" என்று சொல்லியே நாமத்தை போட்டுவிட்டுப் போய்விட்டார்.

அந்த வீர விளையாட்டை மீட்டெடுக்கவேண்டும் என்று அனைத்துக்கட்சியினரும்  முழங்குகிறார்களே அவர்கள் ஒன்று பட்டு போராடுவோம் என கை கோர்த்தது உண்டா? தேர்தல் கால கூட்டங்களில் மட்டும் கை இணைத்து உயர்த்துவார்கள்.மக்களின் ஓட்டு வேண்டும்.கையூட்டும் தருவார்கள்.

மாணவர்கள் போராடினால் தூண்டிவிட்டு குளிர் காயப் பார்ப்பார்கள்.

அதிமுகவுக்கு  அம்மா  சேர்த்து வைத்தவைகளை--- பதவிகளை பங்கு போடுவதில் பங்காளிச்சண்டை.கட்சியின் வளர்ச்சியில் எள் முனை அளவு கூட பங்கு பெறாதவர்கள் முதல்வர் பதவிக்கு  குறி வைத்திருக்கிறார்கள்.

ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு நூற்றுக்கணக்கில் விவசாயிகள் செத்துக் கொண்டிருப்பது பற்றி கவலை கிடையாது. வங்கி வாசல்களிலும் ஏடிஎம் கூண்டுகள் முன்பாகவும் மக்கள் வாடி வதங்கி காய்வது பற்றி  அவர்கள்  நாணப்படவில்லை.அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்தால் என்ன நடக்காமல் போனால் என்ன? கடந்த வருடம்தான் நடக்கவில்லையே!அதுவும் அம்மா ஆட்சியில்!

இன்னும் நான்கே நாட்கள்தான் இருக்கின்றன.

கட்சியின் பொதுச்செயலாளர் கொடுத்த அறிக்கையை அதிமுக எம்.பி,க்கள்  சுமந்து கொண்டு பிரதமரை பார்க்க சென்றார்கள். அவரோ சந்திப்பதையே தவிர்த்து சந்தியில் நிற்க வைத்து விட்டார்.அவசரச்சட்டம் கொண்டுவரச்சொல்கிற ஆளும் கட்சியினர் இது நாள்வரை என்ன செய்தனர்?
பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ன செய்தது?

எத்தனை நாளைக்கு இந்த நாடகம் என்பது தெரியவில்லை.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் அதில் பிஜேபியும் கலந்து கொள்ளும் என்று தமிழிசை சொல்வதுதான் கோமாளித்தனமாக இருக்கிறது.

No comments:

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...