வெள்ளி, 13 ஜனவரி, 2017

செக்கர்வார்சடை பெம்மானே...நெற்றிக்கண்ணை திறப்பது எப்போது?

வலைப்பூவின் ஆதரவாளர்கள் அனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

அம்மையுடன் அமர்ந்திருக்கிறான் கயிலைநாதன். அருகில் அன்னை பராசக்தி. இருவர் முகத்திலும் கவலைக் கீற்றுகள்.

"தேவி...! ஏனிந்த வாட்டம்?"

"நீங்கள் அறியாததா? திருவிளையாடல் என்றால் எம்பிரானுக்கு  தேன் அருந்துவது போலல்லவா? புன்னகை பூத்த  தங்களது  திருமுகமும் வாட்டமுற்று இருப்பது  நான் அறியாதது இல்லை"

"மெய்தான் சக்தி! மூவேந்தர் ஆண்ட ஐவகை நில மக்களும்  மகிழ்ச்சியுடன்  தைத் திருநாளை  கொண்டாடுகிறார்கள்  என நினைக்கிறாயா? வாசலில் புதுக்  கோலமிட்டு பூசணிப்பூவை வைத்து புத்தாண்டை வரவேற்பார்களே! ,புத்தாடை அணிந்து புத்தரிசியும் பாலும் கலந்து பொங்கலோ பொங்கல் என ஆனந்த கூத்திடுவார்களே...அவையெல்லாம் இல்லாமல் போய்விட்டதே! உழவனின் முகத்தில் ஏழைகளின் அகத்தில் ,இல்லத்தரசிகளின் வதனத்தில் வாட்டமும் ஏமாற்றமும்தானே  இருக்கிறது."

பார்வதி சிரிக்கிறாள்.

"தேவியாரின் நகைப்புக்கு  காரணம் தெரியவில்லை.?"

"தங்களின் திருவிளையாடலை விஞ்சுவதற்கு மானிடர்களும் தயாராகி விட்டனர்.மோடி என்பவரும் சசிகலா என்பவரும் களத்தில் இறங்கிவிட்டனர். அவர்களின் ஆட்டம்தான்  தமிழர்களின்  வாட்டத்துக்கு காரணம்.ஒரு அரைகுறை  தன்னை கவிஞன் என சொல்லிக்கொள்பவன்  தங்களுக்கு  அனுப்பியிருப்பதை வாசிக்கிறேன். கேளுங்கள்.
மானத்தை விற்றுத்தான்
மடி நிறைய வேண்டுமா?
மாற்றானின் காலணி ஆவதா,
எமது கலாசாரம்?
அறு  பட வேண்டாமா
அவனது கால்கள்?

செக்கர்வார்சடைப்பெம்மான்
சிவந்த கண்களுடன்
மூன்றாம் கண்ணைத் திறந்தபோதும்,
முனை மழுங்கவில்லை கீரனின் வீரம்!

கஞ்சி போட்ட சட்டையில்
நஞ்சினை கலந்த அரசியல்,
நாதியற்ற இனமல்ல
நெற்றிக்கண் எமக்கும் உண்டு!

இப்படி எழுதி அனுப்பி இருக்கிறான். நெற்றிக்கண்  நீங்கள் திறக்கப்போகி றீர்களா? இல்லை அவனை திறக்க அனுமதிக்கப்போகிறீர்களா?"

சிவனார் பேச்சற்றுப் போனார்.
          

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழன் என்று சாதி பார்த்து வாழ ஆரம்பித்தானோ அன்றே தொடங்கியது அவன் வீழ்ச்சி. இன்று சிவன் இருந்தால் அவனுக்கே பணம் கொடுத்து அவனை மழுங்கடிப்பர்கள்.

மணியன் சொன்னது…

மெய்தான்! அவனது வீழ்ச்சி பேரழிவைத் தரும் என்பதை எவரும் உணரவில்லையே

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...