புதன், 25 ஜனவரி, 2017

குடியரசும் கோலாகலமும் குருதியில் நனைந்து.....

நமது நாட்டினை மீட்டெடுத்த காந்தியடிகளை நினைவில் இருத்தி எனது கருத்தினை பதிவிடுகிறேன்.

ஏற்பதும் மறுப்பதும் அவரவர் உரிமை.

மணிக்கணக்கில் நின்றோம்.மயக்கம் வந்தது. நாட்கணக்கில் நின்றோம் நாடி தளர்ந்தது. ஆனாலும் ஏடிஎம் என்கிற சொர்க்கவாசல் கதவு சிலருக்கே திறந்து  மூடியது.

ஆனாலும் ஒரு செல்வந்தனைக்கூட  வரிசையில் பார்க்கமுடியவில்லை. புறவாசல் வழியாக வந்து சென்றுவிட்டதாக சொன்னார்கள். அப்போதுதான்  இது பணநாயக நாடு ,,பாமரர்களுக்கான நாடு இல்லை என்பதை உணர்ந்தோம். கோடீஸ்வரர்கள் வாங்கிய கோடிக்கணக்கான  கடன்களை 'வாராக் கடன் " என சொல்லி தள்ளுபடி செய்த மாண்புமிகு மோடிஜி அரசு  வறியவர்கள் வாங்கிய  கல்விக்கடனை வசூலிப்பதில் அமீனாக்களையும் விஞ்சியது.

மோடி அவர்கள் அடிக்கடி பல நாடுகளுக்கு சென்று வந்தது நமது நாட்டினை  அடிமைப்படுத்துவதற்காகவோ?

கிழக்கிந்திய கும்பினி நமது அகண்ட பாரதத்தை வணிக சந்தையாக மாற்றியதைப் போல மோடிஜியும் அயல்நாட்டு வணிகத்தை இறக்குமதி செய்து  இந்தியர்களின் வணிகத்தை அழிக்க முயற்சிக்கிறாரோ?

ஐயம் எழாமல் இல்லை. அதன் முன்னோடியாகத்தான் செல்லாத நோட்டு  அறிவிப்பும் மக்களின் அவதியும்,

சிறு வணிகம் அழிய தொடங்கிவிட்டதே! தொடர்ச்சியாக கலாச்சாரம் பலி பீடத்தில்!

சிறுமதியாளன் ஒருவன்  நம்மைப் பார்த்து பொறுக்கி என சொன்னதையும்  "நமது" அரசு  பதக்கம் என அணிந்து கொண்டதே!

நம்மவர்களை நமக்கே எதிரியாகதிருப்பிவிட்ட  கும்பினியானைப் போல தற்போதும் நடக்கத் தொடங்கியிருக்கிறது.

ஒரு அம்மையார் சொல்கிறார் "குரூப் செக்ஸ்" என்றால் இப்படித்தான் கூடுவார்கள் என மெரினாவில் திரண்ட மாணவ மாணவியரைப் பார்த்து சொன்னார். நா தடித்திருந்தது போலும்!

"அனுபவம் பேசுகிறது" என தலையில் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. எந்த தாயாவது தனது பிள்ளைகளைப் பார்த்து இப்படி சொல்வாளா?

அந்த அம்மையாரைப் போலவே  திரை உலகிலிருந்து சிலரும், சமுதாய காப்பாளர்கள் என பலரும் நஞ்சு நாக்குடன்  கலந்தனர்.

அரசின் சாதுரியம்.அவர்களின் கரங்களில் குத்துவாளினை ஏந்த வைத்தது.

காவலர்களை அரக்கத்தனமுடன் வெறியேற்றி வைத்தது. அனுப்பியது. அவர்களும் தீயிட்டனர். மண்டைகளை பிளந்தனர்.

குருதியால் நனைந்த சாலைகளில் அணிவகுப்பு. கொடி ஏற்றல்.

குடியரசை  கொண்டாடிவிட்டார்கள் கொடிய அரசாக!

வாழக்கூடிய குருத்துகள் மீது  ஏறி நடந்து கடமை ஆற்றியிருக்கிறார்கள்.!

ஜனகணமன தேசிய கீதம் பாடிய மாணவர்களை தாக்கிய காவல்துறையின் தேசிய பற்றை பாராட்டவில்லை என்றால்...

நான் இந்தியனே இல்லை என்றாகிவிடும்!நம்மவர்களை நமக்கே விரோதியாக மாற்றுவதும் சாணக்கியம்தானோ!

ஆகவே வாழ்க தமிழக அரசுடைய காவல்துறை!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...