Wednesday, January 18, 2017

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

உங்கள் நாட்குறிப்பில் 2017- ஜன 18-ம் நாளினை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் .தமிழகமே மாணவ மாணவியர்,இளையோர் என பெருங்கடலாக   தமிழகத்தை  சூழ்ந்து சூளுரைத்த திருநாள்.இரவும் பகலும் வெயில் பனி என பார்க்காமல் தொடர்ந்து  போராடிய அந்த வேள்வியில் தங்களையே ஆகுதி ஆக்கிக்கொண்ட  அந்த தியாக தெய்வங்களின் திருவடிகளுக்கு எனது வணக்கங்கள்! கைபேசி ,டார்ச் ஒளியில் தங்களை இனம் காட்டிய தன்மானசிங்கங்கள். மின் விளக்குகளை அரசு அணைத்தது. ஜாம்மர் வைத்து தகவல் பரிமாற்றம், தொலைக்காட்சி ஒளிபரப்பு தடை என அரசு இழிவான நடவடிக்கையில் இறங்கியதை எப்படி மறக்க முடியும்?


"தமிழ்மக்கள்,தமிழ் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போல எந்நாளும் இருந்ததில்லை" என்று பாவேந்தன் பாரதிதாசன் பாடியதை பார்  அதிர மாணவர்கள் நிகழ்த்திக் காட்டிய நாள்.சென்னை கடற்கரை இதற்கு முன் சுனாமியைத்தான் பார்த்திருக்கிறது. இன்றுதான் மனித சுனாமியை பார்த்தது.

"ஏறு தழுவுதல் எனும் எங்களது இன்றைய ஜல்லிக்கட்டை மீட்டெடுக்கும் வரை  எங்களது போராட்டம் நிற்கப்போவதில்லை.பிச்சை கேட்போம் என நினைத்தாயா?எங்களது கலாச்சாரம் மடிய ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் "என்று  ஒரு மாணவி கனன்று முழங்கியதை  தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். "எங்களது மூதாதையர் முறம் கொண்டு புலியை விரட்டியவர்கள். கொண்டு வா சிங்கத்தை அடக்குகிறோம்" என கர்ஜித்த அந்த மாணவியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

மாணவர் எழுச்சியை மகத்தான புரட்சியை கண்டும் காணாததுமாதிரி தமிழக அரசும் மத்திய அரசும் நடந்து கொண்டிருப்பதும், தடியடி நடத்தி மாணவர்களின் மண்டையை பிளந்ததும் அரசுகளின் அந்திம காலத்தையே உணர்த்துகிறது.

"ஓட்டுக் கேட்டு வீட்டுக்கும் வாசலுக்கும் வந்து சென்றவர்கள் கடந்த ஏழு நாட்களாகியும் எங்களை வந்து பார்க்கவில்லையே ..இனி வரமுடியுமா " என்று இன்னொரு மாணவி தூக்குக்கயிறு கொடுத்ததைப் போல கேட்டாரே ...வெட்கப்படவேண்டும். எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் !

"பிரதமரை சந்தித்து மனு கொடுப்பது போல நாடகமாடுவது போதும். தடையை உடைத்து தமிழகம் திரும்பாவிட்டால் அத்தனை அதி.முக. எம்.பி.க்களும் ,எம்.எல் .ஏ.க்களும் பதவி விலக வேண்டும்" என்று அலங்காநல்லூர் மக்கள் அடங்கா சினமுடன்  நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.

"தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி சற்றும் நிலைக்காது.மாளும்" எனப் பாடியவனும் பாவேந்தன்தான்!! தமிழனுக்கு வீழ்ச்சியில்லை தமிழன் கீர்த்தி தாழ்வதில்லை என சொன்னவனும் அந்த புரட்சிக்கவிஞன்தான்!

இந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்திய முழுப் பெருமையும் மாணவர் உலகுக்கு மட்டுமே சொந்தம். அந்த வெற்றியில் குளிர் காய்ந்தது வேண்டுமானால்  அரசியல் கட்சியாக இருக்கலாம்.காரணம் அன்றைய  மாணவர்களில் பெரும்பான்மையினர் தி.மு.க. என்பதை மறக்க இயலாது. ஆனால்  ஏறுதழுவுதல் தடையை நீக்கும் போராட்டத்தில் எந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை என்பது உண்மை.இதை உணர்ந்து அரசியல் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு தருவதுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். .

கைது செய்யப்பட்டவர்கள் மீது வஞ்சினம் கொண்டு எதிர்வரும் காலத்தில் பொய் வழக்குகளை போலீசார் போடக்கூடாது. ஆளும் கட்சியின் பிரபலங்களின் ஏவுதலுக்கு இணங்கி துன்புறுத்தவும் கூடாது.

ராணுவத்தை விட வலிமை வாய்ந்தது மாணவர் படை. இப்படி தோற்கின் எப்படி வெல்லும்!

No comments:

விவசாயம் இல்லாத மந்திரக்கிணறு...!

கிணறு வெட்டினாலே அது விவசாயம் பண்ணுவதற்காக இருக்கும் அல்லது  குடிக்க மற்ற அன்றாட வீட்டு வேலைகளுக்காக இருக்கும். கிணறு என்றால் கட்டாயம் ...