Monday, January 30, 2017

மதவாத சேனைகள். ஒருமைப்பாட்டின் எதிரிகள்.

குடியரசுத் தலைவரின் விருது பெற்றவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

இயக்கிவருகிற படத்தின் பெயர் பத்மாவதி.

சித்தூர் ராணி பத்மாவதிதான்  இந்த பத்மினி.

 சரித்திரம் தழுவிய  திரைப்படத்தில் பத்மாவதியாக நடிப்பவர்  தீபிகா படுகோனே. அலாவுதீன் கில்ஜியாக நடிப்பவர் ரன்பீர்சிங். பத்மாவதியின் கணவராக நடிப்பவர்  ஷாகித் கபூர்.

சித்தூர் ராணி பத்மினி என்கிற பெயரில் தமிழிலும் ஒரு படம் வந்திருக்கிறது.
 ஒருசில  வரலாற்று நிகழ்வுகள் திரைப்படத்துக்கு உரியவையாக அமைவது  உண்டு.அத்தகைய  வாய்ப்பு பத்மாவதிக்கும் இருக்கிறது.

பத்மாவதியை பற்றி பலர் எழுதியதை படித்திருக்கிறேன்.

அற்புதமான அழகியாம் அந்த பத்மினி. சிற்பி செதுக்காத சிலை. பளிங்கு மேனி. தண்ணீர் அருந்தினாலோ, வெற்றிலை சவைத்தாலோ  விழுங்குவது தொண்டையில் தெரியுமாம்.உருது கவிகள் மாய்ந்து மாய்ந்து வரிகளில்  வசியம் தடவி இருக்கிறார்கள். அவளின் அழகை கேள்விப்பட்டு சித்தூர் மன்னன் ராவல் ரத்தன் சிங் இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டான் என குறிப்புகள் காட்டுகின்றன.

பன்சாலி படமாக எடுத்து வருவது அந்த பேரழகியைத்தான்!

ஜெய்ப்பூரில் படம் எடுக்கப்பட்டபோது..ஒரு கும்பல்  இந்து சேனா என தன்னை சொல்லிக்கொண்டு இயக்குநரை அறைந்திருக்கிறது. படப்பிடிப்பு சாதனங்களை உடைத்து நொறுக்கி இருக்கிறது.

"கபர்தார்,! சரித்திர நிகழ்வுகளை தவறாக சித்தரித்திருப்பதாக அறிகிறோம். பன்சாலிக்கு ஆதரவு காட்டும் பாலிவுட் படைப்பாளிகளையும்  கொன்றொழிப்போம்.சாவு நிச்சயம்" என இந்த அமைப்பு மட்டும் இல்லாமல்  மற்றொரு கும்பலும்  மிரட்டி இருக்கிறது.செட்டுக்கு தீயிட்டிருக்கிறது.அதன் பெயர் கர்ணி சேனா.!

"இது  இந்து நாடு! எங்களின் கலாச்சாரத்துக்கு  இழிவு ஏற்படுவதை அனுமதிக்க மாட்டோம்" என சொல்லி இருக்கிறார்கள்.

ஐவருக்கு மனைவி ..அழியாத பத்தினி.என பாஞ்சாலியை  சித்தரித்திருக்கிற  பாரதம் சொல்கிறதே...இந்த சேனைகள் என்ன சொல்கின்றன.?

எது படமாக்கப்படுகிறது. என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல்  வன்முறைக்கு வாக்கப்பட்டுள்ள இந்த அமைப்புகளை தடை செய்திருக்க வேண்டாமா அகண்ட பாரதம் கேட்கிற பாஜகவினர்.!

சிவசேனாவே  தணிக்கைக் குழுவின் முடிவு வரட்டும் என காத்திருக்கிற போது பெட்டிக்கடை சேனாக்கள் மட்டும் கொதித்திருப்பது ஏன்? இவர்கள் அவர்களது கலாச்சாரம் காக்கிற துவாரபாலகர்கள் இல்லை..ஒருமைப்பாடுக்கு ஊதுவத்தி கொளுத்தி வைத்து எரியூட்டக்கூடியவர்கள். அரசு அடக்கியாக வேண்டும்.

படத்தில் "எத்தகைய இன்டிமேட் காட்சிகளும் இல்லை என பன்சாலி உறுதி கொடுத்துள்ளபோது  சேனாக்கள் மட்டும் கத்தி அருவாள் தீவட்டி தூக்கிகொண்டு  அலைவது ஏன்?

பத்மினி தீ குளித்ததை சித்தரிக்கவேண்டாம் என்கிறார்களா?

சரித்திரம் மரணிப்பதில்லை சேனாக்களே!

.    

No comments:

சுட்டுக் கொன்றாலும் தப்பில்லை.!

                             மகாசிவராத்திரி. ஈஸ்வரை தரிசனம் செய்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் லலிதா.( பெயர் மாற்றப்பட்டு...