வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

நிர்வாண மகாராஜாவின் தர்ம தரிசனம்.

பசி வரும். அதை புசிக்கும் விதம்தான் வேறுபட்டிருக்கும்.

இரைக்காக வேட்டையாடுவது விலங்குகளுக்கு விலங்கு வேறு பட்டிருக்கும். வேட்டை ஆடும் விதமும் மாறுபட்டிருக்கும். பொதுவாக அவைகளின் குறி வேட்டையாடப்படும் விலங்கின் கழுத்தாகவே இருக்கும்.

அதைப்போலவே மனிதனின் ரசனையும் வித்தியாசமாகவே இருக்கும். சாதாரணனுக்கே அனுபவிக்கிற ஆசை விதம் விதமாக இருக்கிற போது மகாராஜாக்களின் ஆசையைப் பற்றி கேட்பானேன்?

அண்மையில் இந்திய நடிகை ஒருவர் பிரபலமானவர் .அவருக்கு இயற்கையான  செக்ஸ் தான் பிடிக்கும் என்றிருக்கிறார், அதாவது ஆண் மேலாக   இருந்து புணர்ச்சியில் ஈடுபடுவதை !

இது மனித இயல்பு. வேறு ஒருவர் மற்றொரு விதமாக ! மாறுபடவே செய்யும்.

பாட்டியாலாவின் மன்னர் பூபேந்தர் சிங் ஆண்டுக்கு ஒரு தடவை,,,,தன்னை முழு நிர்வாணமாக தனது பிரஜைகள் முன்னாக ...

அப்படி தன்னைக் காட்டிக்கொண்டதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. தனது ஆண்மை இன்னும் வலிமையாகவே இருக்கிறது என்பதுதான் அது!

 பிரஜைகளுக்கு 'அதை' காட்டவேண்டிய அவசியம் என்ன? அது என்ன அவரது  கடமையா?

வேடிக்கையாக இல்லையா?

இன்னொருவர் இருக்கிறார். அவர் கபூர்தாலாவின் அரசர்.


இவருக்கு அனிடா டெல்கடோ என்கிற ஸ்பானிஷ் டான்சரை
கல்யாணம் செய்து கொள்ளும் ஆசை! பல முறை புரபோஸ் பண்ணியும் அவரது இசைக்கு ஆட அந்த அந்நிய மயில் இணங்கவில்லை. ஆனால் ஆசைப்பட்டவளை அவர் மறக்கவும் தயாராக இல்லை.

பலமுறை கல் எறிந்ததில் ஒரு கல் அனிடாவின் மனதில் காதலை ஏற்படுத்திவிட்டது.

படுக்கை அறையில் அவர் பேசுவது அவளுக்கும் அவள் பேசுவது அவருக்கும் புரிய வேண்டாமா? பிரஞ்சு மொழி கற்றுக்கொண்டு  1908-ல் கல்யாணம் நடந்திருக்கிறது..

இது எப்படி இருக்கு!

ஜெயிலில் சுய சரிதை : தலைவி ஆகி விடுவாரா சசி?

பூக்கூடை சுமந்தால் பூசாரி ஆகி விட முடியுமா? டவாலி போட்டுக் கொண்டவனுக்கு ஜட்ஜ் ஆசை வரலாமா? ஜெயிலுக்குள் இருப்பதால்  எழுதுவது எல்லாம் ஹிஸ்டரி ஆகிவிடுமா?

சசி சுய சரிதை எழுதுகிறாராம்.

சிறையிலிருந்தபடி பண்டிதர் நேரு மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள் வரலாறு ஆகியது.

கலைஞர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி திராவிடர் இயக்கத்தின் வளர்ச்சியை சொன்னது.

கவியரசர் கண்ணதாசனின் வனவாசமும், மனவாசமும்  ஒரு  சுயம்புவின் வரலாறு சொன்னது.

ஆனால் சசி எழுதுவதாக சொல்லப்படுவது... இந்த செய்தி உண்மையாக  இருக்குமேயானால் அத்தகைய  எழுத்தில் உண்மை இருக்குமா? உயிர் வாழுமா?வாய்மையே வெல்லும் என்பர். அது நீதி நெறி வழுவாமல் வாழ்கிறவர்களுக்கு!

சசிக்கு?

அதில் சத்தியம் இருக்காது.அவரை ஜெயலலிதா வேதா நிலையத்திலிருந்து வெளியேற்றியதற்கான உண்மையை  உள்ளபடி எழுதுவாரா? இப்படி ஆயிரம் சந்தேகம்!

ஆனால் அவர் சுயசரிதை எழுதுவாரா?  

புதன், 22 பிப்ரவரி, 2017

வைகோவின் எதிர்காலம் அதிமுகதான்!

கணவனை இழந்த பெண், கைம்பெண் என்கிற பழி சுமப்பதைவிட மறுமணம் செய்து சுமங்கிலி என பெயருடன் வாழ்வது சிறப்புதானே?

அதுதான்  வைகோவின்நினைப்போஎன்னவோ?

தலைமையை இழந்த அதிமுக காட்டாற்று வெள்ளத்தில்...

திருவிழாவில் தொலைந்து போனவர்களைப்போல அதிமுக தொண்டர்கள்...

அம்மா ஜெ.வின் மரணத்தில் மர்மம் என்பது இடியாக இறங்கிவிட்டது. சசிகலாவை அவர்கள் நம்பவில்லை. கட்சியும் பெரும் சொத்தும்  களவாடப்பட்டுவிடுமோ என்று நல்லவர்கள் கவலைப்படுகிறார்கள்.

இரண்டாம் கட்டத்தலைவர்கள் அதிமுகவில் உருவாக்கப்படவில்லை. அதை ஜெ.விரும்பினாரா,அல்லது சசிகலா விரும்பவில்லையா...

இப்படி எத்தனையோ சந்தேகங்கள் தொண்டர்களிடம்.

இதற்கு ஒரே வழி பேச்சாற்றல் மிகுந்த ஒரு தலைமை.

அந்த தலைமையை தன்னால் கொடுக்க முடியும் என நம்புகிறார் வைகோ ! 'அதிமுகவை அழிக்கவிட மாட்டேன் 'என்று கர்ஜித்ததின் மூலமாக  வாலண்டியராக போலீஸ் ஜீப்பில் ஏறுகிற வடிவேலுவைப்போல வைகோவும்  குரல் கொடுத்திருக்கிறார்.

தனது எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமானால் அதிமுக தலைமைபீடம் தனக்குரியதாகவேண்டும்

 சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்து விட்டதால்  அவரது சொல்படி நடக்ககூடிய விசுவாசியாக வைகோவினால் இருக்க முடியும்.

ஆக கூட்டிக்கழித்துப் பார்த்தால் வைகோவின் தேவை அதிமுகவுக்கு தேவை.தனது பிடியில் இருந்து அதிமுக தப்பிவிடக்கூடாது என நினைக்கும்  சசிக்கு வைகோ தேவை.

எகிப்து பிரமிடுகளை தோண்டிப்பார்த்து சுவைபட கதை சொல்ல இன்று அதிமுகவில் யாருமில்லை.கவரும்வகையில் கம்பீரமான ஆட்களும் இல்லை.

ஆக வைகோ வாய்தா வாங்கும் வக்கீலாக கருப்புக்கோட்டு போடாமல் கம்பீரமாக இன்னோவாவில் வலம் வருகிறவராக மற்றொரு நாஞ்சில் சம்பத்தாக வைகோவினால் இருக்க முடியும்.

பிழைக்கத் தெரிந்தவர் ,வாய்ப்பு தேடுகிறார்.


பாவனாவுக்கு நடந்த பாலியல் கோரம்?

கேரள நடிகை பாவனாவுக்கு நடந்திருப்பது கடுமையான தண்டனைக்கு உரியது ..இன்னும் சொல்லப்போனால் அரபு நாடுகளில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுகிற தண்டனையை விட இன்னும் அதிகமாக கொடுக்கப்படுமேயானால் அதை வரவேற்பதுதான் அறிவார்ந்தது.

ஆனால் பாவனாவுக்கு நடந்திருக்கிற கொடூரத்துக்கு  கிடைத்துள்ள அதிக அளவு முக்கியம், கவலை,இவையெல்லாம் சென்னையை சேர்ந்த குழந்தைக்கு நடந்தபோது ஏன் கிடைக்கவில்லை?

தமிழக அரசும் இதில் ஏனோ தானோ வென நடந்து கொண்டதுதான் வெட்கக்கேடு! அவர்களது கவலை அக்கறை எல்லாமே ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தந்திரத்திலேயே அடங்கிப் போயிருந்தது.இருந்தாலும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துவதும் பலியாவதும் சகித்துக்கொள்ளகூடியது  இல்லை.அந்த வகையில் பாவனாவையும் பார்க்கவேண்டும்.

தமிழில் சில படங்களில் நடித்திருக்கிற பாவனாவை கடத்திச்சென்று பாலியல் வக்கிரங்களை தனித்துக் கொண்டிருக்கிற அந்த காட்டேரிகளின் ஞானத்தந்தை யார்?

பல்சர் சுனில் என்பவன் யார்? இடது சாரி பொதுவுடமைக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணனின் மகனும் நடிகருமான பினிஷ் என்பவருக்கு என்ன தொடர்பு? நடிகர் திலிப்பின் பங்கு இருக்கிறதா இல்லையா? பாவனாவுக்கு மலையாளப் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல்  போனதற்கு யார் காரணம்? பாவனாவுக்கும்  கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் நவீனுக்கும்  நடப்பதாக இருந்த திருமணத்தை தடுக்கவேண்டும் என்பதற்காக போட்ட சதித்திட்டம்தானா பாவனாவுக்கு நடந்திருக்கிற பாலியல் அட்டாக் என்று சொல்லலாமா?

'நவீனிடம் உண்மைகளை சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அறுபது லட்சம் கொடுக்க வேண்டும் என்று பல்சர் கேட்டதாக சொல்லப்படுகிறது   சம்பவத்துக்கு முந்தைய காலத்தில் மூன்று நடிகைகள் கடத்தப்பட்டு  மீட்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா?பாவனா கடத்தப்பட்ட நாளன்று பல்சர் சுனில் ஆறு பெரும் புள்ளிகளுடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுவது உண்மையா?

முன்பெல்லாம் வன்புணர்வு என்பது வேறு, பலாத்கார முயற்சி என்பது வேறு என கருதப்பட்டது. ஆனால் பெண்ணின் மார்பு தொட்டாலே வன்புணர்வுதான் என்பதாக சட்டம் திருத்தப்பட்டிருப்பதால் எந்த வகையிலும் குற்றவாளிகள் தப்ப முடியாது என நம்பலாம்.

ஆனால் பாவனா என்கிற பெண்ணின் எதிர்காலம் என்னாகும்?

மனித சமுதாயம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. , செல்வாக்கு அதிகாரம்,அரசியல் ஆகியவை  நீதியின் குரல்வளையை நெரிக்குமேயானால் பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரம் என்பதாகிவிடும்.

பதில் சொல்லவேண்டிய கடமை கேரளத்தை ஆள்கிற பொதுவுடமை கட்சிக்கு இருக்கிறது.

சனி, 18 பிப்ரவரி, 2017

எடப்பாடியாரை மக்கள் காப்பாற்றுவார்களா?

நான் யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பது இரகசியம். அதை நான் வெளியில் சொல்வதில்லை!

"நீ யாருக்குப் போட்டாய்?" என்று தேர்தல் அதிகாரி கேட்டால்  அவரை அந்த  இடத்திலேயே வெளியில் அனுப்பும் அதிகாரம் ஜனநாயகத்துக்கு இருக்கிறது.

"முதலிரவில் உன் மனைவியிடம் என்ன பேசினாய்,எப்படி இருந்தாய்?"என்று  கேட்டால் எதைக் கொண்டு அடிப்பது?

அது கணவன்-மனைவி இருவரது அந்தரங்கம்.

'எனக்கு அவரைப் பிடிக்கவில்லை "என்பதை பகிரங்கமாக  சொல்வது  அநாகரீகம்..

என் கரங்களை கட்டிவிட்டு வாயை அடைத்துவிட்டு "சொல்வதைச்செய்.. இல்லாவிட்டால் அடிப்பேன் "என சவுக்கை காட்டுவது  எந்த வகையான  கட்டுக்கோப்பு.  இது ஒருவகையான பலாத்காரம்தானே!

என்னன்வோ நடந்து விட்டது,

எடப்பாடியார்  முதல்வர் ஆகிவிட்டார். தன்னை அந்த பதவியில் அமரவைத்தது சரியானதுதானா என்று மக்கள் எடை போட்டுப்பார்க்க இருக்கிறார்கள்.

அவரால் சுதந்திரமாக  நடந்து அந்த பதவிக்கு உயர்வு  சேர்க்க முடியுமா? முதல்வராக ஜெ.இருந்தபோது மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்த்தாரே...அந்த திட்டமெல்லாம் அவர் மரணம் அடைந்ததும்  சுலபமாக  ஏற்றுக்கொள்ளப் பட்டதே! அதற்கு விளக்கம் சொல்லும் கடமை அவருக்கு இருக்கிறது.

கருகிய பயிரால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவசாயிகளின் குமுறல் இன்னும் அடங்கவில்லை..அண்டை மாநில அரசுகள் தமிழகத்தின் நீராதாரங்களை அடைத்துக் கொண்டு இருக்கிறது..உள்ளாட்சி  நிர்வாகம்  முடமாகிப் போய் இருக்கிறது..நீதிமன்றமும் இது தொடர்பான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது,

நேர்மையான, நீதி வழுவாத, ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.தங்களின்  முதல்வர்  யாருடைய  பிடியிலும் இருக்கக்கூடாது .இடுப்பு வளைந்து கும்பிடு  போடும் பொம்மையாக இருக்ககூடாது என ஆசைப்படுவது நியாயம்தானே? மதுக்கடைகள்  அறவே ஒழிக்கப்படவேண்டும்.பொதுச்செயலாளர்  சசியின்  குடும்பத்தினரின் மிடாஸ் சாராய ஆலைக்கு நட்டம் வந்துவிடும் என்று  நினைக்காமல் குடி போதையிலிருந்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்.

இல்லையேல் மக்கள் உங்களை காப்பாற்ற மாட்டார்கள்.

வியாழன், 16 பிப்ரவரி, 2017

சுப்பிரமணியசுவாமியும் திருநாவுக்கரசரும் ஒரே அணியில்?

இவர்களது  அரசியல் எதை நோக்கி என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

கொள்கை வழியாக சுப்பிரமணியசுவாமி ,சு.திருநாவுக்கரசர் இருவருமே எதிர் எதிர் முகாம்களில் இருக்கிறவர்கள்

. எப்படி அதிமுகவுடன் திமுக கூட்டு வைத்துக்கொள்ள முடியாதோ அதைப்போலத்தான்  காங்,கட்சியும் பி.ஜே.பி.யும்!

ஜெயலலிதா ,சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் ஊழல் வழக்கில்  குற்றவாளிகள் என்பதாக ஓங்கி அடித்தால் பத்தரை டன் வெயிட் என்கிற கணக்கில் உச்ச நீதிமன்றம்  சொல்லியிருப்பதற்கு  வேர் சு.சுவாமிதான்! அவருக்கு சென்னை  உயர்நீதி மன்றத்தில் அப்போதைய அதிமுக மகளிரணியினர் படு அமர்க்களம் , அட்டகாசம் கலந்து காட்டிய வரவேற்பு மானமுள்ள எவராலும் மறக்கமுடியாது என்கிறபோது  சோழவந்தான்  சு.சுவாமியினால் மட்டும்  மறந்துவிடமுடியுமா? அவர் தொடுத்த வழக்கும் திமுகவின் பேராசிரியர் க.அன்பழகன் கொடுத்த நெருக்கடியும்தான் சசியின் உறவுகள் பரப்பன அகர்கர  சிறைச்சாலையின் நீள,அகலத்தை அளந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை அட்டையாக உறிஞ்சியவர்கள்  உரிய தண்டனையை  அனுபவிக்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம்.

ஆனால் சசிக்கு சு.சுவாமி எப்போது விசுவாசியாக மாறினார் என்பது தெரியவில்லை.புரியவில்லை. "பரப்பன அகர்கர சிறை சசிக்கு பாதுகாப்பு இல்லை.அதனால் அவரை சென்னைக்கு மாற்றவேண்டும் .இதை அதிமுக அரசு பதவி ஏற்றபின்னர் செய்தாக வேண்டும் என்பதாக சொல்லியிருக்கிறார்.

இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான சிறை திகாரில்தான் இருக்கிறது. அங்கு மாற்றுங்கள் என்று வேறு யாரும் மனு செய்ய மாட்டார்களா? அகண்ட பாரதம் கேட்கும் பிஜேபி கட்சி ஆட்சியில்  ஊழல் குற்றவாளிகளுக்கு சிறைச்சாலை பாதுகாப்புடன்  இல்லை என அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரே சொல்கிறார் என்றால் பிஜேபி போடுவது  இரட்டை வேடம் என்பதை தவிர வேறென்ன? சகுனியின்  சூதாட்டம் பாரதப்போருக்கு  வித்திட்டது .என்பது ஏனோ தெரியவில்லை ..நினைவுக்கு வருகிறது. ஏனெனில்  பதவியில் இருப்பவர்களைத்தவிர    சசிக்கு எதிராகவே மக்கள்  இருக்கிறார்கள்.என்பது கண்கூடு..  மக்களின் வெறுப்பை மேலும்   தூண்டிவிடுவதற்கு  சுவாமி ஆலோசனை சொல்கிறாரோ என்னவோ ?

.கட்சியை வளர்க்கவேண்டிய சு.திருநாவுக்கரசரின் கனிவான பார்வையும்   சசியின் கழகத்தின் பக்கமாகத்தான் இருக்கிறது என்பதை  அவரது பேட்டிகள் அவ்வப்போது உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

ஜெ.மரணம் பற்றி விசாரணை கமிசன் அமைக்கவேண்டும் என்று சொன்ன ஆரம்ப கட்டத்திலேயே 'தேவையில்லை" என உருத்துடன் சொன்னவர்தான்  காங்.கட்சி தலைவர் திருநாவுக்கரசர். "அதிமுகவில் இருந்திருந்தால் அவர்தான் சி.எம். ஆக ஆகியிருப்பார்"என்பது அவரது அசல் ஆசையை காட்டியது..காங்.கட்சியில் இருக்கிற கோஷ்டிகளை குறைப்பார் அவர்களை ஒன்று சேர்ப்பார் என்று எதிர்பார்த்தால் அவர் கூடுதலாக கோஷ்டியை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்கிற முணுமுணுப்பு அந்த காம்பவுண்டில்  கேட்கிறது.

ஜெ.யினுடைய  உயில் யாரிடம் இருக்கிறது என்கிற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. அவரது வேதா நிலையம் அரசுக்குப் போகுமா ,அந்த மாளிகையின் வாரிசுதாரர் யாராக இருக்கமுடியும் என்பதற்கான விடையும்  கிடைக்கவில்லை.இந்த தீர்ப்பு காரணமாக அவருக்கு அஞ்சல் தலை போடமுடியுமா? பாரத ரத்னா விருது கிடைக்குமா ,அம்மா உணவகங்களில்  குற்றவாளி அம்மாவின் படம் வைக்க முடியுமா என்பது போன்ற சந்தேகங்கள் மக்களிடம் இருக்கிறது.

இவையெல்லாம் எப்போது களையப்படும் என்பது தெரியவில்லை, அதற்குள்  கட்சியை  யாருக்காவது விலை பேசாமல் இருந்தால் சரி.

இத்தகைய நிலையில் சு.சுவாமியும் ,சு,திருநாவுக்கரசரும்  சசிக்கு ஆதரவு  அளிப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்?

புதன், 15 பிப்ரவரி, 2017

எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க .அழிந்துவிட்டது.!

அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் தொடங்கப்பட்டது  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால்.!

அவரால் கட்டுக்கோப்புடன் வளர்க்கப்பட்ட  அந்த இயக்கம் ஜெயலலிதா  காலத்திலேயே  அதனுடைய தனித்தன்மையை இழந்து  மன்னார்குடி குடும்பத்தின் கைப்பைக்குள் அடங்கிவிட்டது. ஜெயலலிதா இருந்தவரை சசியின் ஒரிஜினல் முகம் உலகுக்கு தெரியவில்லை. அது  'நாம் ஒரு சூழ்நிலைக்கைதி" என்பதை  ஜெ.மறைப்பதற் காகவும்  இருக்கலாம்.

ஆனால்ஜெ யலலிதா,சசிகலா ,இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு  வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அவர்களின் முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்புக்கு துணையாகத்தான் சசிகலாவை தன்னுடன் வைத்திருந்தார் என்பதாக நீதிபதிகள்  ஆய்ந்து அறிந்து சொல்லியிருக்கிறார்கள்..ஆக மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் லட்சியத்தை  ஜெயலலிதா அண்ட் கோ தங்களது  உயர்வுக்காக பயன்படுத்தி  வந்து இருக்கிறது.எம்.ஜி.ஆர்.நாமம் வாழ்க என சொல்லிக்கொண்டே  அவரது  பெயருக்கும் புகழுக்கும் பட்டை நாமம் போட்டு வந்திருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஜெ.யின் மர்ம மரணம் அதிமுகவை குழிக்குள் தள்ளிவிட்டது. சாவுக்கு காரணமானவர்கள்  சபை முன் நிறுத்தப்படுகிற காலத்தில் மேலும் பல  உண்மைகள் வெளிவரவே செய்யும்.

அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவித்து விட்டதாக ஒரு குற்றவாளி மற்றவர் மீது பழி போடுவதை  தமிழகம் வேடிக்கையாக பார்க்கிறது. அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் முற்றிலுமாக  ஒதுக்கப்பட்டு அந்த இடத்துக்கு சசியின் சொந்தக்காரர்கள் வந்து இருக்கிறார்கள்..அவர்கள் ஜெ.வினால் கட்டம் கட்டப்பட்டவர்கள். எம்.ஜி.ஆருக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்.

இவர்களால் அதிமுக அழிந்துவிட்டதாகவே சொல்லலாம். ஜெ.வின் சமாதியில் சசி ஓங்கி அடித்து ஒன்னரை டன் வெயிட்டை மூன்று தடவை உக்கிரமுடன் காட்டியபோது  எத்தகைய வன்மம் இருக்கிறது என்பதை உணர முடிந்தது.இழக்கமுடியாத சொத்துகளை இழந்துவிட்டோமே என்கிற கோபம்தான் தெரிந்தது  அது  அதிமுகவின் எதிர்காலத்தை  காலி பண்ணுவதாகவே  இருக்கும்,

. தனி மனித சர்வாதிகாரத்தின் விளைவுதான் கட்சியின் விதிகள் மதிக்கப்படாமல் யார் யாரையோ பதவியில் அமர்த்தியிருக்கிறது..

தமிழகத்தை  யார் தலைமை கைப்பற்றினாலும் ஆட்சியின் வாழ்க்கை அற்பாயுள்தான்!

விரைவில் தேர்தல் வந்தே தீரும் என்பது  மக்களின்  எதிர்பார்ப்பு!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

மனைவி அமைவதெல்லாம் ...நொந்துபோனவனின் வாக்குமூலம்.

"சாகலாம் போலிருக்குடா!" -கனத்த மனதுடன் எனது ஆருயிர் நண்பன் சொன்னான்.

எப்படிப்பட்ட நிலையிலும் அவன் இப்படி கலங்கியதில்லை.கண்கள் வேறு சிவந்திருந்தது. "கை நீட்டிடாடா!"என்றபடியே கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்.

"இப்ப என்ன குடிக்கனும்கிறியா?"

"இல்ல. எங்கம்மா சத்தியமா இனிமே குடிக்கவே மாட்டேன். விஷத்த குடிச்சிட்டு செத்துப் போகப்போறேன்!"

"எந்த நாயும் இப்படி சொல்லிட்டு சாகிறதில்ல...மண்டி வெளக்கெண்ணை! எதுக்கு இப்படி சீன் காட்டுறே? விஷம் குடிக்கிறதுக்கு முன்னாடி எதுக்காக குடிக்கிறேங்கிறத சொல்லிடு."

"எங்க காம்பவுண்ட்ல இருக்கிற பொண்ணு ப்ளஸ் டூ..கோச்சிங் கிளாஸ் போயிட்டிருக்கு...ஆர்க்கிமிடிஸ் தியரி பற்றி கேட்டுச்சு. சொல்லிட்டிருந்தேன்.
நிர்மலாவுக்கு கோவம்.ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போயி அடிச்சிட்டா!"

நண்பனின் மனைவி பெயர்தான் நிர்மலா தியரி கேட்டதற்காக அடிக்கிற சந்தேகப் பேர்வழி இல்லை அவனின் மனைவி. இவன்தான் ஏதோ விஷமம் பண்ணியிருப்பான்.

"நம்புற மாதிரி இல்லியே தோழா!"

"நீயே இப்படி சொன்னா எப்படிடா!"--இப்ப நண்பனின் குரல் உயர்ந்தது.

"ஆர்க்கிமிடிஸ் தத்துவம் என்னடா,,ஒரு பொருள் தண்ணீர்த்தொட்டியில் அமுங்கும்போது அது தனது எடைக்கு சமமான தண்ணீரை வெளியேற்றுகிறது ..இதுதானே அந்தாளு கண்டுபிடிச்ச தத்துவம்,?"

"நீ என்ன சொன்னே!?"

"உண்மையத்தான் சொன்னேன்.பெரிய பிளாஸ்டிக் டப்ல ட்ரஸ் இல்லாம உட்கார்ந்துபாரு. நீர் மட்டம் உயரும். அதுதான் உன் எடைன்னு சொன்னேன். அத அப்படியே  நிர்மலாகிட்ட அந்த பொண்ணு  போயி சொல்லி உங்க வீட்டு டப்ல குளிச்சுப் பார்க்கவான்னு கேட்டிருக்கு. நான் சொல்லித்தந்தது தப்பா..அந்த பொண்ணு அவகிட்ட போயி கேட்டது தப்பான்னு புரியல. ரெண்டு அப்பு அப்பிட்டா...என்னடா பொண்டாட்டி அவ..ஆர்க்கிமிடிஸ் தியரிக்கு நான் ஏன் அடி வாங்கனும்?"

என்ன சொல்வது என்று எனக்கு புரியல.

வீட்டை விட்டு வெளியே வந்தால் கற்பழிப்பு?


ச ட்டங்கள் இயற்றும் மாமன்றங்கள் சந்தைக்கடைகள் இல்லை.பேரம் பேசுவதற்கும் வாங்கிச்செல்வதற்கும் அவை மீன் சந்தைகள் அல்ல!

அறிவாய்ந்தவர்கள்,கற்றுத் தேர்ந்தவர்கள் ,நடுநிலையாளர்கள் அமரவேண்டிய அவைகள்தான் சட்டப்பேரவைகள்.

அத்தகைய பெருமக்கள்தான் அமர்கிறார்களா,அவர்களைத்தான் மக்களும் தேர்வு செய்கிறார்களா என்று எவரேனும் கேட்டால் ....?

இல்லை ..இல்லவே இல்லை என்றுதான் சொல்லவேண்டியதாக இருக்கிறது. ஒரு அமைச்சர் போதையில் பேசுகிறார். சட்டமன்ற உறுப்பினர் "கையை வெட்டுவேன்" என்கிறார்.பெண்களுக்கு உரிய தன்மை மறந்து தரக்குறைவாக  தலைவிகள் பேசுகிறார்கள்.

சட்டம் செய்கிற அவைகளில் சண்டைகள் நடக்கின்றன. குற்றம் புரிந்தவர்களுக்கு அவை புகலிடமாகி விட்டன.

இவைகளைப் பற்றி இப்போது நான் எதுவும் சொல்லப்போவதில்லை.

பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, பாதுகாப்பு இல்லாமல் போன சமூக அவலம் பற்றி எனக்குத் தெரிந்த கருத்துகளை பதிவிட விரும்புகிறேன்.

பட்டப்பகலில் இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.தனிமையில் செல்கிற பெண்களுக்கு பாலியல் பலாத்காரம்.ஒருதலையாக காதலித்தவர்களும் கொல்லப்படுகிறார்கள்.மனம் இணைந்து காதலிப்பவர்களும் கொல்லப்படுகிறார்கள்.

இத்தகைய படுகொலைகளுக்கு அரசியல்கட்சிகளை சார்ந்த தலைவர்களும்  ஆதரவாக இருக்கிறார்கள் என்பதுதான் இதயம் பிளக்கும் கோடரி!

அண்டை மாநிலத்தைச்சேர்ந்த சட்டப்பேரவைத் தலைவர் சிவபிரசாத் ராவ் என்பவர் பெண்கள் பாதுகாப்பு பற்றி தனது உயரிய கருத்துகளை சொல்லி இருக்கிறார்.

தெலுங்கு தேசத்தலைவர் சந்திரபாபு நாயுடு எப்படி அனுமதித்தார் --அனுமதிக்கிறார் என்பது இது நேரம் வரை தெரியவில்லை.

அவர் சொல்லிய 'தத்துவார்த்தம் ' மனிதர்களை தலை தாழ வைத்திருக்கிறது.பொங்கி எழுகிற பெண்ணிய அமைப்புகள்  வாய்களை  கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கின்றன.

அந்த பெரிய மனிதர் சொன்னதுதான் என்ன?

"முந்தைய காலத்துப் பெண்களைப்போல தற்காலத்துப் பெண்கள் இல்லை.கல்வி கற்றவர்கள்,பணியில் இருப்பவர்கள்,தொழில் நிறுவனம்  நடத்துகிறவர்கள்,என பன்முகம் அவர்களுக்கு! இதனால் சமூகத்தின் பார்வை அவர்கள் மீது அழுத்தமுடன் பதிகிறது. இதனால் ஈவ் டீசிங்,இதர தொல்லைகள்,அக்கிரமங்கள்,கடத்தல்,பலாத்காரம்,ரேப் என எல்லாமே  நடக்கிறது.வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்தால் இவையெல்லாம் நடக்காமல்  இருக்குமே! "

இத்தகைய உயரிய கருத்தினை பதிவு செய்திருக்கிறார் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர்.

ஆக பெண்கள் அரசியலுக்கு வருவதும் பேராபத்துதானே!

தமிழகத்து சட்டப்பேரவைத்தலைவர் தனபால் கருத்து என்ன?

சனி, 11 பிப்ரவரி, 2017

ஆட்சியை கலையுங்கள் கவர்னரே!

பஞ்சாயத்து மெம்பர்கள் இல்ல.,நகரசபை மெம்பர்ஸ்,சேர்மன்ஸ் இல்ல. மாநகராட்சி மெம்பர்ஸ்,மேயர்ஸ் இல்ல. சி.எம்..இல்ல..குறை கேட்கிற எம்.எல்.ஏ.க்களும் இல்ல.எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சொன்னா  ஆல் ஆபிசர்ஸ் கேக்கிறதில்ல. ஆனா பவரே இல்லாத புஜ்ஜிம்மா சொன்னா  போலீஸ் ஆபிசர்ஸ்ல இருந்து பொறம்போக்கு ஆபிசர்ஸ் வரை கேக்கிறாங்க.

என்ன பொழப்புடா இது? இதுக்கா ஓட்டு போட்டோம்.? கேட்டா நோட்டு வாங்கிட்டுதானே போட்டேங்கிறான்? நாசமா போற கேடு கேட்ட பன்னாடைப் பயலுக வாங்கினதுக்காக நாங்க ஏன்டா கஷ்டப்படனும்?

பேய்மழை பேஞ்சு வெள்ளக்காடாகி நாசமாகிப் போனதுக்கு ஐயாயிரம் தருவோம்னு சொன்னாய்ங்க. அதுவும் கிடைக்கல. ஆடு மாடு தருவோம்னாய்ங்க. ஸ்கூட்டி ஓட்டிட்டு போறதுக்கு அதுவும் கொடுப்போம்னாய்ங்க .அவனுக ஓட்டிட்டு போயிட்டாய்ங்க போலிருக்கு. இப்ப எங்க போயி எவங்கிட்ட குறையை சொல்லி அழுகிறது.?

ஒருத்தன் சொல்றான்  போயஸ்கார்டன் போ. அங்க சின்னாத்தா இருக்குன்றான்.இன்னொருத்தன் கிரின்வேஸ் ரோட்டுக்கு போங்கிறான். பொசகெட்ட பயலுகளுக்கு ஓட்டு போட்டதுக்கு இதுதானாய்யா பலன்?

ஒழுங்கு முறையா ஆட்சி பண்ணிய  ஒ.பி.எஸ் .சை கழட்டி விடுறதில சின்னாத்தாவுக்கு எதுக்கு அவ்வளவு ஆங்காரம்னு புரியல. சி.எம்.ஆகனும்னா எலக்சன்ல நின்னு ஜெயி. மகராசியா கொடி ஏத்தி ஆட்சி பண்ணு..ஒரு பய கேக்கமாட்டான்.

அம்மா செத்தது மர்மம் .அது எப்படின்னு தெரியல. விசாரணை நடத்தப்போறோம்னு சொல்றாங்க. எல்லோரும் ஒத்த ஆளைத்தான் குத்தம் சொல்றானுக..அந்த ஆளு குத்தம் இல்லாத ஆளுன்னு தெரியாத வரை புஜ்ஜிம்மாவுக்கு எடமில்ல.வி.பி.கலைராஜன்கிற எம்.எல்.ஏ, பகிரங்கமாகவே  ஒ.பி.எஸ்.சின் கையை வெட்டுவோம்கிறார்.இத எப்படி போலீஸ் அனுமதிக்கிது.புரியலிங்க..

பிரச்னைதான் பண்ணுவேன்னு மிரட்டுனா கவர்னர் ஐயா கலைச்சிருங்க ஆட்சியை! முறுக்கின மீசை  மேலதான் பார்க்கணும். தரையை பார்க்ககூடாது.

சொத்து குவிப்பு வழக்கில சசிகலா மேலயும் குத்தம் கண்டுபிடிச்சு பெங்களூர்ல கொடுத்த தீர்ப்புக்கு  இன்னும் சரியான முடிவு தெரியல. அதனால மக்களை முட்டாளா நினைச்சு ஆட்சியை கொடுத்தால் நாடு சர்வ நாசமாகிப் போகும்.


 .

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்?..!

அதிமுக எம்.எல்.ஏ.க்களை தன்னிச்சையாக வெளியில் விடுவதற்கு சசிக்கு அச்சம்.! ஜெயலலிதாவுக்காக  மண் சோறு சாப்பிட்டு மொட்டை அடித்து விசுவாசம் காட்டியவர்களை  சசி நம்பவில்லை.அப்பல்லோவுக்கு வரும்படி சொல்லி  கையெழுத்து வாங்கினார்கள். எத்தனை வெத்துபேப்பர் களோ! என்னென்ன வாக்குறுதிகளோ! மிரட்டப்பட்டார்களா..குளிப்பாட்டப்பட்டார்களா .?

இவையெல்லாம் பின்னொரு நேரத்தில் அவைகள்  வெளிவராது இருக்கப்போவதில்லை.

பரிசுத்த ஆன்மாவுக்கும் தெரியும். ஆனால் பணபலத்தின் பளு தாங்காது  அது மூச்சடைத்து படுத்திருக்கிறது.

எழும்....அது .எழும் நேரம் கணக்கிடப்பட்டுக் கொண்டு இருக்கிறது. எழுந்தபின்னர்  எவராலும் தணிக்கப்படாத அளவுக்கு அதனின் ஜுவாலையின்  உயரம் இருக்கும். உக்கிரமாகவும் இருக்கும்.

இதற்கிடையில் இன்னொரு நாடகமும் நடந்திருக்கிறது..

ரஜினி என்கிற தேரை இழுப்பதற்கு பிஜேபி.யின் முக்கியப் புள்ளிகள் வடம் கட்டி இருக்கிறார்கள்.

 2.ஓ  இயக்குநர் ஷங்கரின் படம் இல்லை. அது ரஜினியின் படம். அவரை நம்பி பெருமளவு தொகை அதில் கொட்டப்பட்டிருக்கிறது..அந்த படத்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யப்போவது ரசிகர்களாக இருந்தாலும் முட்டுக்கட்டை இருப்பது  மாநில அரசின் கையில்.! இதனால் ரஜினி தயக்கம் காட்டலாம்.கமலின் விஸ்வரூபம்  படத்துக்கு கொடுத்த நெருக்கடியை  ரஜினிக்கும் கொடுக்க முடியும்.!

அது சசியின் கையிலா...ஓ.பி.எஸ்.சின் கையிலா?

அதையும் சரிக்கட்டி விடலாம் என நம்பி டிசம்பர் ஐந்தாம் நாள்  சோவின் நினைவுநாள் கூட்டத்தில்  குருமூர்த்தியை ஜாடை காட்ட செய்தது  மேலிடம்.!!அவர்  பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்.

"அரசியலுக்கு வரச்சொல்லி" அவரும் பாதையை காட்டினார்.

அவர்காட்டிய காவிப் பாதை திராவிட கலாச்சாரத்தில் நிரந்தரம் அல்ல ..காலவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விடும் என்பதை ரஜினி உணராமல் இருக்கவில்லை.

சிலரின் மனதுக்குள் உறங்கிக்கொண்டிருப்பவை அவர்கள் அறியாது வெளியில் வந்து சிக்கலில் தள்ளிவிடும் அல்லவா! அது அவருக்கும் நடந்தது.

அது புத்தக வெளியீட்டுவிழாவில் வெளிப்பட்டு  அவருக்கு 'பவர்' மீது ஆசை என்பதாக சொன்னது. பின்னர் திருத்தமும் வந்தது .ஆன்மீக பவரை நினைத்துச்சொன்னதாக  ரஜினியே நழுவிக்கொண்டார்.

ஆனால் டில்லி பிஜேபி மேலிடம் சாணக்கியத்தனத்தை காட்டியது.

வடஇந்திய நடிகர் சத்ருகன் சின்காவுக்கு தேர்தல் டிக்கட் மறுக்கப்பட்டபோது  அவர் தேடிவந்த இடம் ரஜினியின் இல்லம்!

ரஜினியும் மோடியிடம் 'சின்ஹா என்னுடைய குருவைப் போன்றவர். அவருக்கு வாய்ப்புக் கொடுங்கள்" என்று மோடிஜியிடம் சொல்ல சின்கா வாய்ப்பு பெற்றார்.

ஆக இவைகளை நினைவில் கொண்டுள்ள பிஜேபி மேலிடம்  ரஜினியை களத்தில் இறக்கிவிட திட்டம் வகுத்திருக்கிறது.

2017 அல்லது 2018-ல் தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம்.அந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ரஜினியை இறக்கிவிடலாம் என்பதுதான் அந்த திட்டம் என்கிறார்கள். சென்னை வந்திருந்த மோடிஜி வேட்டி அணிந்து ரஜினியின் இல்லம் சென்று சந்தித்தது இதற்காகத்தான் என இப்போது சொல்கிறார்கள்.

"என் வழி  தனி வழி .! எப்ப வருவேன் எப்படி வருவேன் என்பது எனக்கே தெரியாது" என முத்திரை வசனம் பேசியவர்  மோடியின் மந்திரத்துக்கு கட்டுப்படுவாரா மாட்டாரா என்பது மகள் சவுந்தர்யாவின் படத்தை முடித்தபின்னர்தான் தெரியவரும்.

ஒரு வகையில் அப்பத்தை குரங்கு  பங்கிட்ட கதை மாதிரி இருக்கிறது.

அதிமுகவின் கதையை இப்படியாகவும் அவர்களால் முடிக்க முடியும்.புதன், 8 பிப்ரவரி, 2017

தமிழக மக்களின் விருப்பமே நீதி விசாரணைதான்.

நான் முன்னரே பதிவு செய்ததின் சிறு பகுதியே  நீதி விசாரணை  பற்றியது,

கார்கில் போர்முனை சென்று போர்க்கள செய்தியாளராக பணியாற்றியவர்தான்  பர்கா தத், இவரும் அப்பல்லோ ரெட்டியின் மகளும்  நெருங்கிய  தோழமை  உள்ளவர்கள்.

"அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டபோது கடுமையான நோய்த் தொற்றுக்குள்ளாகி இருந்தார்..."என்பது போன்ற பல தகவல்களை தந்திருக்கிறார் ரெட்டியின் மகள்
..அது எப்படியோ லீக் ஆகி அது அவசரமாகவும்  மறைக்கப்பட்டது.

நமது சந்தேகமே "தவறான தொடர் சிகிச்சைக்கு நீண்ட காலம் ஜெயலலிதா உள்ளாகி இருக்கலாம்" என்பதுதான்.

அத்தகைய  தவறான சிகிச்சை தந்தவர்கள் யார்..யார். அத்தகு சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு கட்டளை போட்டது யார்,எவர் என்பவை  மக்களுக்கு தெரிந்தாகவேண்டும்.

மரணத்தில் மர்மம் இருக்கலாம் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் அழுத்தமாகவே வேர் விட்டிருக்கிறது. மாநிலத்தின் முதல்வரின்  மரணம்  இயற்கையானது இல்லை கார்டியாக் அரஸ்ட் ஏற்படுவதற்கான  காரணம் வேறுபல மருந்துகள் வேதா நிலையத்தில் இருந்த காலத்தில் கொடுக்கப்பட்டதினால் இருக்கலாம் என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.

லண்டன் டாக்டர் பீலே செயலற்ற உறுப்புகளை சீர் செய்வதில் உலக பிரசித்திப் பெற்றவர் என்கிறார்கள். ஆக சென்னை அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சை வேறு வகையானது. அதாவது தவறான சிகிச்சையால் கெட்டுப்போன உள் உறுப்புகளை சீரமைப்பது  தொடர்பானதே என்கிற சந்தேகம். நமக்கு ஏற்படுகிறது.

முதல்வர் ஓ,பன்னீர்செல்வம்  அறிவிக்கப் போகிற விசாரணைக் கமிஷனில் உச்ச நீதிமன்ற நீதிபதியே இருப்பார் என்பது வரவேற்கப்பட வேண்டியது.அது காலத்தின் கட்டாயம்.

பன்னீர்செல்வத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்பியவர்கள்,மற்றும்  முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு காயை நகர்த்தி மீடியாக்களை மிரட்டி வைத்திருப்பவர்களுக்கு  நீதி விசாரணை ஆபத்தானதாக இருக்கலாம்.

இதற்காக அவருக்கு திமுக ஆதரவு, பிஜேபி ஆதரவு என்பது போன்ற அறிக்கைகளால் தங்களை மறைத்துக் கொள்ள பார்க்கிறார்கள்.

ஆனால் மக்களின் ஆதரவு முதல்வர் பன்னீர் பக்கம்தான் என்பது தற்போதுதான் பகிரங்கமாக வெளிவரத்தொடங்கி இருக்கிறது.

நேற்றுவரை சசிக்கு கடுமையான எதிரியாக இருந்த சுப்பிரமணிய சுவாமி  ஒரே  இரவில் சசியின் ஆதரவாளராக மாறியதற்கு என்ன காரணமாக  இருக்க முடியும்?

சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய தமிழர்களை இழிவாக,மிகக் கேவலமாக விமர்சனம் செய்த சு.சாமியின் கால்களுக்கு பாத பூஜை செய்தவர்கள் யார் என்பது தெரிந்தாக வேண்டும்.
படம்: பர்கா தத்


செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் திடீர் தியானம்!

நாளை ஆளுநர் சென்னைக்கு வர இருக்கிற நிலையில் இன்றைய இரவில் முதல்வர் பொறுப்பில் உள்ள பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்யவேண்டிய அவசியம் என்ன?

மூடிய கண்களுக்குள் வந்து போனவை மிரட்டல்களா?

அநியாயத்துக்கு துணை போய்விட்டோமே என்கிற உறுத்தலா?

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் முடிச்சுகள் அவிழ்க்கமுடியாமல் போய்விட்டதே என்கிற கவலையா? அதற்கு உடந்தையாக இருந்துவிட்டோமே என்கிற உறுத்தலா?

எதற்காக இந்த இரவில் தியானம்..?அதிகாரிகள் அவசரமாக கூடி ஆலோசிப்பது யாருக்காக?

தமிழகத்தில் நீதியும் இல்லை.நேர்மையும் விலை போய்விட்டது. பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாடிய பாரதியே !

என்னய்யா நடக்கிறது?

சத்தியமே ஜெயதே என சொல்கிற மத்திய அரசுக்கு மன சாட்சியும் மரணித்துவிட்டதா?

உங்களின் அரசியல் வளர்ச்சிக்கு ஜெயலலிதாவின் மர்ம மரணம் ஏணியா?

அதிமுக.வில் அடுத்தடுத்து அதிரடி செய்திகள்.

எத்தனை ஆண்டு பெருந்தவம்.அதற்காக கணவனையும் பிரிந்து வாழ்ந்த  தியாகம்,! எல்லாமே திட்டமிட்டபடி நடந்தேற கடைசி நேரத்தில்...!

அரியணையில் அமர்கின்ற நேரத்தில் மகுடத்தை எவனோ ,,,எதற்காகவோ மறைத்து வைத்து விட்டான் என்றால் ...அது அபசகுனமா அல்லது சதியா?

மணவிழாவுக்கு போட்ட மணமேடை திருமணம் நடக்காமலேயே  கலைக்கப்பட்டது என்றால் அது எதற்கான  அடையாளம்?

ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மம் இன்னும் முழுமையாக அகலவில்லை. இருட்டு அறைக்குள் வெளிச்சத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். வானளாவிய அதிகாரம் வைத்திருந்த பேரவை முன்னாள் தலைவர்  பி.எச்.பாண்டியனும் அவரது மகன் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பலவித  சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார்கள்.  வேதா நிலையத்தில் ஜெயலலிதாவுக்கு என்ன நேர்ந்தது எப்படி கீழே விழுந்தார் எத்தகைய சிகிச்சை வழங்கப்பட்டது என கேட்கிறார்கள்.தன்னை கொன்று விடுவார்களோ என்று ஜெயலலிதா பயந்து தம்மிடம் சொன்னதாகவும் சொல்கிறார்கள்..

இவையெல்லாம் அதிமுகவில் நடந்து கொண்டிருக்கிற அதிரடி செய்திகள். !

தொண்டர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்.எல்.ஏ.க்களோ தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்வதிலேயே  கவனமாக இருக்கிறார்கள்..

இத்தகைய குற்றச்சாட்டுகளை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

சசிகலாவின் சுவரொட்டியை மனம் நொந்த அதிமுக தொண்டன் கிழிக்கிறான்.அவனை மந்திரி ஒருவர் அடிக்கிறார்.அருகில் நின்ற போலிஸ்காரர் ஊமையாகி நிற்கிறார்.

அதிமுகவை பிளக்க சதி நடப்பதாக பொன்னையனும் பண்ருட்டியாரும்  சொல்கிறார்கள்.

பண்ருட்டியார் அதிமுகவிலிருந்து விலகி தேமுதிகவில் சேர்ந்ததற்கு என்ன கராணம் சொன்னார்? ஜெயலலிதாவை எப்படி எல்லாம் விமர்சித்தார், மனசாட்சி  உள்ளவராக இருந்தால் அவைகளை மறுபடியும் சொல்லவேண்டும்?

அதெல்லாம் நல்லவர்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்.

நாளை என்ன நடக்கபோகிறது?

ஆளுநர் அவசரமாக வருகிறார் என்கிறார்கள்.முகூர்த்த தேதியை குறிப்பாரா..முடிவுக்கான முகவுரையை எழுதுவாரா ?

ஓம் ஹர கர மகாதேவா!


திங்கள், 6 பிப்ரவரி, 2017

எமனின் தர்பாரில் ஜனநாயக சடலம்,!

'சித்திரகுப்தா! என்ன..... திடீர் என தர்பாரில் துர்நாற்றம்? சுடுகாட்டில் பிணங்களின் நிணநீர் நாற்றத்தை விட கடுமையாக...கொடுமையாக இருக்கிறதே?"

'தர்மபிரபு...தமிழ்நாட்டிலிருந்து ஜனநாயக சடலம் வந்து சேர்ந்திருக்கிறது, அது அழுகி பல ஆண்டுகள் ஆகிறது.. அதை சொர்க்கத்துக்கு அனுப்புவதா, நரகத்துக்கு அனுப்புவதா என்பதை இன்று முடிவு செய்தாக வேண்டும்!"

"என்ன ஜனநாயகம் மரணித்து விட்டதா...என்ன கொடுமை..என்ன கொடுமை.
எப்படி நிகழ்ந்தது  அந்த கோர நிகழ்வு?"

"புதைகுழி ஆய்வுக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளார்கள் பிரபோ!"

"அவர்கள் வரும் வரை இந்த சடலத்தை இப்படியே வைத்திருக்க முடியுமா? ஏழேழு உலகமும் நாற்றம் எடுத்து நாசமாகிவிடும்! முதலில் துர்நாற்றம் நீங்குவதற்கு  நடவடிக்கை எடுங்கள் சித்ரகுப்தரே!"

"சந்தனம்.... சவ்வாது .புனுகு,.கஸ்தூரி...அத்தர்,,,அகில்...வெட்டிவேர்...சிறு  நாகப்பூ....   .விளாமிச்சை வேர் .....நீல அல்லி....இன்னும் பல நறுமணம் ஊட்டும் பொருள்களின் கலவையை தயாரிக்க சொல்லி இருக்கிறேன். கலவை  தயாராகி வருகிறது.!"

"ஜனநாயகத்தை கொலை செய்த கொடியோர் யார் என்பதை கண்டு பிடித்து விட்டார்களா? தற்போது தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு பதிலாக என்ன  இருக்கிறது?"

"பணநாயகம்தான் மாற்று.! அதில் தமிழர்கள் வல்லவர்கள். மரணத்தை நிகழ்த்துவதும் மறைப்பதும் நமக்கு போட்டியாக நடந்துவருகிறது.! வியாசரின் பாரதத்தில் ஒரே ஒரு சகுனிதான் இருந்தான். அவன் பெற்றுப்போட்ட பிள்ளைகள் ஏராளம் . கூட இருந்தே குழியை வெட்டி புதைத்துவிட்டு அப்பாவியாக அழுவதில் அவர்களுக்கு நிகர் எவருமில்லை பிரபோ!"

"அப்படியா...நம்மை விட வல்லவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறதே? அப்படி யாராவது  தப்பித்தவறி இங்கு வந்து விட்டால் எனக்கே குழி வெட்டி
 விடுவார்களே!"

"அதுதான் எனக்கும் பயமாக இருக்கிறது."

"அந்த நாறிப்போன ஜனநாயகத்துக்கு நாராயணனால் உயிர் கொடுக்க முடியுமா?"

"முடியும் பிரபு! ஆனால் அவரும் சில சிக்கல்களில் இருக்கிறார்.அதிலிருந்து  மீண்டால் உயிர் கொடுக்க முடியும்!"

"நமது ஆஸ்தான நிமித்திகனை அழைத்து  நமக்கு ஏழரை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை  கேளும். இத்துடன் சபை கலைகிறது.....ம்ம்ம் இப்படியொரு கெட்ட நாற்றத்தை எனது நாசிகள் உணர்ந்ததே இல்லை!"
 

சனி, 4 பிப்ரவரி, 2017

முதல்வர் சசியின் ஆட்சி. ஆரம்பமாகிவிட்டது,

ஜெயலலிதாவுக்கு வேதா நிலையத்தில் எத்தகைய மருத்துவம் அளிக்கப்பட்டது என்கிற   உண்மையான விவரம் தெரியாதவரையில் மரண மர்மம்  அவிழப் போவதில்லை, பிரதமருக்கு மட்டுமே தெரிந்திருக்கிற  ரகசியம் என்கிறார்கள். சந்தேகத்தை கிளப்பி வந்த எதிர்க் கட்சியினரும்  நமக்கு வந்த விதி என்ன என்று அமைதியாகிவிட்டார்கள்.

அதிமுகவினர் சுத்தமாக ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள். மிச்சமிருக்கும்  நாலரை ஆண்டு கால ஆதாயத்தை எதிர்நோக்கியே வணங்கி வருகிறார்கள். முதல்வராக இருக்கிற பன்னீர்செல்வத்தின் பதவி நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்றே சொல்கிறார்கள்..05.02.2017-ம் நாள் மதியம் கூட்டப்பட்டுள்ள  அதிமுக சட்டமன்ற  உறுப்பினர்களின் கூட்டம்  எத்தகைய முடிவுகளை   மேற்கொள்ள விருக்கிறதோ....? அதை பொருத்தே அவரது  பந்து வீச்சு இருக்கும் என எதிர்பார்க்கலாம்,அவர்தான் துணை முதல்வர் என்கிறது கார்டன்,!

தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த சசிகலாவை  முதல்வராக முன் நிறுத்துவதற்கான வழிகளை  எவரும் ,எந்த சட்டமும்  அடைத்துவிட முடியாதபடி தீர்மானங்கள்  நிறைவேற்றப்படுமா? பதவி விலகலை ஓபிஎஸ் அறிவிப்பாரா? இப்படி இன்னும் பலவித  எதிர்பார்ப்புகளுக்கு  இன்னும் சில மணி நேரத்தில் விடை கிடைத்துவிடும் என எதிர்பார்க்கலாம்.விடை கிடைத்தே விட்டது. அவர்தான் முதல்வர்,!

தலைமைச்செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற ஷீலா பாலகிருஷ்ணனை தமிழக அரசின்  அட்வைசராக நியமித்துக் கொண்டவர் ஜெயலலிதா. மொத்த அரசும் ஷீலாவின்  விரல் அசைவில் நடந்தது. ஜெ.சிகிச்சை பெற்றுவந்த காலத்தில் இவர்தானே  ஆட்சியின் அதிகார பீடமாக இருந்தார். தற்போது இவரையும் இன்னும் இரு முக்கிய அதிகாரிகளையும் நீக்கம் செய்துவிட்டனர். ஜெயலலிதாவின்  அடையாளம் என ஆட்சியில் இருந்தவர்கள்  சுத்தமாக துடைத்து எறியப்பட்டுவிட்டார்கள் என்றே சொல்கிறார்கள்.

இத்துடன் நிற்கவில்லை. ஜெ .யினால் ஒதுக்கப்பட்டு குற்றங்களுக்கு உள்ளானவர்கள் உள்பட பலருக்கு கட்சியில் பதவிகளை கொடுத்து தன்னை  பக்காவாக பலம் படைத்தவராக மாற்றிக்கொண்டு இருக்கிறார் சசிகலா!

"மாண்புமிகு முதல்வர் அவர்களே" என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்  அழைக்கக்கூடிய நாளும்  நெருங்கி வருவதாகவே தெரிகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எத்தகைய முடிவுகளை மேற்கொள்ளும்  என்பதை மத்திய உளவுத்துறை சூசகமாக மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கலாம். பல மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கிற பாஜக அரசு  உடனடியாக  தமிழக அரசியலில் தலையிடுமா ..ஓபிஎஸ். சை காப்பாற்றுமா? இவரின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது தெரிவதற்கு எப்படியும் ஒரு வார காலம் ஆகலாம் என்கிறார்கள்.

கட்சிக்குள் மட்டுமே பலம் மிக்கவராக இருந்துவரும் சசிக்கு தொண்டர்கள்,மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாத நிலை! இன்னமும் அவரது  சுவரொட்டிகளை கிழிக்கவே செய்கிறார்கள்.இத்தகைய நிலையில் எதிர்கொள்ளவேண்டிய தேர்தல்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது  தெரியவில்லை,

என்ன நடக்குமோ?

மாண்பு மிகு முதல்வர் சசிகலா நடராஜன்,

கவுதமி சொன்னால் நம்பத்தானே வேண்டும்?

சிலர் சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும்.; அப்படித்தான் கவுதமி சொன்னதையும் நம்பினோம்.

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. மக்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். " என்கிற ரீதியில் பிரதமர்  மோடிஜிக்கு  கடிதம் எழுதியிருக்கிறேன் என்பதாக நடிகை கவுதமி சொன்னதை நம்பினோம்.

அதிமுக எம்.பி.களையே பின்னாளில் சந்திக்க மறுத்த மோடி கவுதமியை  மட்டும் சந்தித்துப் பேசியதை முன்னரே புகைப்படமாக பார்த்து ,செய்தியை படித்த நமக்கு எள்முனையளவு சந்தேகம் கூட வரவில்லை.

மக்களின் மறதி நோய்க்கு ஜெ.யின் மர்ம மரணமும் இரையாகிப் போனதால்  சிலருக்கு அது சாதகமாகிப் போனது.

யாரோ ஒரு புண்ணியவான் தகவல் அறியும் உரிமையின் கீழ் ' கவுதமியின்  கடிதத்துக்கு பிரதமர் எடுத்த நடவடிக்கை என்ன என கேட்க...

வியப்புக்குறிகளை நெற்றியில் காட்டியது.

"அப்படியா...கவுதமி என்கிற பெயரில் பிரதமருக்கு யாரும்  கடிதம் எழுதவில்லை" என்று சொடேரென சொடுக்கியது.

பிரதமர் அலுவலகத்தை நம்பாமல் இருக்க முடியாது,

நாடாளும் பிரதமர் இதற்காக பொய் சொல்லப்போவதில்லை. தேர்தல் காலத்து வாக்குறுதிகள் வேறு; இது வேறு.!

தற்போது கவுதமி சொல்வது என்ன?

"பிரதமரின் 'டிவிட்டர்" தளத்தில் கடிதத்தை வெளியிட்டேன்."என்கிறார்.. லட்சக்கணக்கானவர்கள் விமர்சித்தும் கண்டித்தும் பாராட்டியும் அந்த  தளத்தில் கருத்துகளை பதிவிடுவது அன்றாட நிகழ்வு.அவைகளை  மோடி பார்ப்பாரா என்பது உறுதி இல்லை.

அதற்கு அவ்வளவுதான் மரியாதை.! அதை பிரதமருக்கு எழுதிய கடிதமாக  ஏற்க முடியாது.

ஆக இத்தனை நாளும் நாம்  ஒரு நடிகையின் நடிப்பைத்தான் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறோம்.நிழலை நிஜமென நம்பியது நம்முடைய  அறிவாளித்தனம் தானே!

 .