திங்கள், 6 பிப்ரவரி, 2017

எமனின் தர்பாரில் ஜனநாயக சடலம்,!

'சித்திரகுப்தா! என்ன..... திடீர் என தர்பாரில் துர்நாற்றம்? சுடுகாட்டில் பிணங்களின் நிணநீர் நாற்றத்தை விட கடுமையாக...கொடுமையாக இருக்கிறதே?"

'தர்மபிரபு...தமிழ்நாட்டிலிருந்து ஜனநாயக சடலம் வந்து சேர்ந்திருக்கிறது, அது அழுகி பல ஆண்டுகள் ஆகிறது.. அதை சொர்க்கத்துக்கு அனுப்புவதா, நரகத்துக்கு அனுப்புவதா என்பதை இன்று முடிவு செய்தாக வேண்டும்!"

"என்ன ஜனநாயகம் மரணித்து விட்டதா...என்ன கொடுமை..என்ன கொடுமை.
எப்படி நிகழ்ந்தது  அந்த கோர நிகழ்வு?"

"புதைகுழி ஆய்வுக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளார்கள் பிரபோ!"

"அவர்கள் வரும் வரை இந்த சடலத்தை இப்படியே வைத்திருக்க முடியுமா? ஏழேழு உலகமும் நாற்றம் எடுத்து நாசமாகிவிடும்! முதலில் துர்நாற்றம் நீங்குவதற்கு  நடவடிக்கை எடுங்கள் சித்ரகுப்தரே!"

"சந்தனம்.... சவ்வாது .புனுகு,.கஸ்தூரி...அத்தர்,,,அகில்...வெட்டிவேர்...சிறு  நாகப்பூ....   .விளாமிச்சை வேர் .....நீல அல்லி....இன்னும் பல நறுமணம் ஊட்டும் பொருள்களின் கலவையை தயாரிக்க சொல்லி இருக்கிறேன். கலவை  தயாராகி வருகிறது.!"

"ஜனநாயகத்தை கொலை செய்த கொடியோர் யார் என்பதை கண்டு பிடித்து விட்டார்களா? தற்போது தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு பதிலாக என்ன  இருக்கிறது?"

"பணநாயகம்தான் மாற்று.! அதில் தமிழர்கள் வல்லவர்கள். மரணத்தை நிகழ்த்துவதும் மறைப்பதும் நமக்கு போட்டியாக நடந்துவருகிறது.! வியாசரின் பாரதத்தில் ஒரே ஒரு சகுனிதான் இருந்தான். அவன் பெற்றுப்போட்ட பிள்ளைகள் ஏராளம் . கூட இருந்தே குழியை வெட்டி புதைத்துவிட்டு அப்பாவியாக அழுவதில் அவர்களுக்கு நிகர் எவருமில்லை பிரபோ!"

"அப்படியா...நம்மை விட வல்லவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறதே? அப்படி யாராவது  தப்பித்தவறி இங்கு வந்து விட்டால் எனக்கே குழி வெட்டி
 விடுவார்களே!"

"அதுதான் எனக்கும் பயமாக இருக்கிறது."

"அந்த நாறிப்போன ஜனநாயகத்துக்கு நாராயணனால் உயிர் கொடுக்க முடியுமா?"

"முடியும் பிரபு! ஆனால் அவரும் சில சிக்கல்களில் இருக்கிறார்.அதிலிருந்து  மீண்டால் உயிர் கொடுக்க முடியும்!"

"நமது ஆஸ்தான நிமித்திகனை அழைத்து  நமக்கு ஏழரை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை  கேளும். இத்துடன் சபை கலைகிறது.....ம்ம்ம் இப்படியொரு கெட்ட நாற்றத்தை எனது நாசிகள் உணர்ந்ததே இல்லை!"
 

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...