ஞாயிறு, 19 மார்ச், 2017

இளையராஜாவின் வக்கீல் நோட்டிசும் பாலுவும்.!

தமிழ்த்திரை இசையில் மெல்லிசை மன்னர்களை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தவர் இளையராஜா என்பதில் எவர்க்கும் எள்ளளவும் வேறுபாடு அல்லது மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மிகப் பெரிய  சாதனையாளர். இன்றும் இரவினில் பலருக்கு  தாலாட்டு அவரது பாடல்கள்தான்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,சித்ரா, ஜானகி ,ஏசுதாஸ் என  இன்னும் பலர் அவரது  மெட்டுகளுக்கு ஜீவனாக இருக்கிறார்கள்..

சில பாடல்களை ராஜாவே பாடி இருப்பார். 'அடடா இந்த பாடல்களை பாலு பாடி இருக்கவேண்டும் அல்லது ஏசுதாஸ் பாடி இருக்கவேண்டும்.கெடுத்து விட்டாரே ராஜா ' என்கிற விமர்சனங்கள் எழுந்தது உண்டு.

அவரது மெட்டுகளின் பிறப்பிடம் நாட்டுப்புறம்தான் என்பது உண்மை. நாட்டுப்புற பாடல்களை ஆராய்ந்து அதை மேடைகளிலும் பாடிவந்தவர்கள்  ஆய்வாளர்களான விஜய லட்சுமி -நவநீதன் தம்பதி.

ராஜாவின் எந்தெந்த பாடல்கள் எந்தெந்த வட்டாரங்களில் இருந்தது என்பதை  எடுத்துக்காட்டுகளுடன் சொல்லி வந்தவர்கள்தான் அவர்கள்.'ஆயிரம் தாமரை மொட்டுக்களே" என்கிற மெட்டு "காளையார்கோவில்' என தொடங்கும் நாட்டுப்புறப்பாடலின் தழுவலே என சொன்னது நினைவில் இருக்கிறது.

ஏழு ஸ்வரங்களை பிறப்பிடமாகக் கொண்டு காலம் காலமாக ஆயிரக்கணக்கில் பாடல்கள் பாடப்படுகின்றன. மேலை நாடு மற்றும் வடநாடு  என ராஜாவின் மெட்டுகளுக்கும் பிறப்பிடம் கண்டு விமர்சிக்கப்பட்டதை  மறந்து விடக்கூடாது.

மெல்லிசை மன்னர்களின் மெட்டுகளை ராஜா கையாண்ட விதமெல்லாம் கங்கை அமரனே இன்றும் சொல்லிக்கொண்டுதான்  வருகிறார்.  ஆக சுயம்பு என்று  யாரும் சொல்லிக்கொள்ள இயலாது.

சின்னக்கண்ணன் அழைக்கிறான் என்கிற  பாடலின்   மெட்டுக்கு  ராஜாவை சுயம்புவாக சொல்ல முடியுமா?

தனது பாடல்களை பாலு மெல்லிசை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று ராஜா எச்சரித்து நோட்டீஸ் விட்டிருப்பதை  நியாயமானதாக சொல்ல முடியவில்லை.பாடலை எழுதிய கவிஞர்களுக்கும்  உரிமை இருக்கிறது !  திடீர் என ராஜா இப்படி ஒரு முடிவு எடுத்தற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.தொடக்க காலத்தில் பாலுவின் இசைக்குழுவில் வாத்தியம் வாசித்தவர்கள்தான் பாவலர் சகோதரர்கள். ரத்த சொந்தங்களை விட பாசமுடன் வாழ்ந்தவர்கள். காரணமில்லாமல் முடிவு எடுக்கமாட்டார் ராஜா! தெரியபடுத்தினால் நல்லது.

ராஜாவுக்கு தனி ராஜாங்கம் உண்டு.அவரது அரசவையில் அமைச்சர்களாக  இருந்து  பெருமைப்படுத்தியவர்களை  இழிவு படுத்துவது  ராஜாவின் பெருமை  ஆகாது.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...