செவ்வாய், 28 மார்ச், 2017

ஆர்.கே .நகரில் ஒரு ரவுண்டு....

செல்வம் கொழிக்கும் தொகுதி என்றால் அது ராதாகிருஷ்ணன் நகர்தான்!

எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் தினகரன்.

தினகரனை தோற்கடித்து நாம்தான் உண்மையான அதிமுக என்பதை  நிரூபிக்க வேண்டிய அவசியத்தில்  ஓபிஎஸ்.

பிளவு பட்ட அதிமுகவை  வீழ்த்தாவிட்டால் நமக்கென்ன பெருமை என்கிற கவுரவப் பிரச்னையில் திமுகழகம்.

தொகுதி முழுவதும் பிங்க் கலர் நோட்டுகளுக்கு பஞ்சமே கிடையாது. எந்த கட்சி ,எந்த அணி கொடுத்தது என்கிற பேதம் இல்லாமல் வாங்கி கொள்கிறார்கள் .வஞ்சகம் இல்லாத மனம் . ஆனால் மனதுக்குள் ஒரு  முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பது அவர்களது  சிரிப்பில் தெரிகிறது.'வந்ததை வரவில் வைப்போம்.யார் அப்பன் வீட்டுக்காசை  கொடுக்கிறார்கள். கொள்ளை அடித்த பணம்தானே.வாங்குவதில் தப்பே இல்லை 'என்கிற மனப்பக்குவம் அவர்களுக்கு  !

இதே மனப்பான்மை எல்லா தொகுதி மக்களுக்கும் வந்துவிட்டால் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் பழக்கம் கொஞ்சமாவது குறையும்!.

சசி அதிமுகவில் உள் குத்து வேலைகளுக்கு பஞ்சம் இல்லை என்கிறார்கள்.. தினகரன் ஜெயித்துவிட்டால் கொத்தடிமைகளை விட கேவலமாகிவிடுவோம் என்கிற பயம் எடப்பாடி குழுவினருக்குஇருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டத்துக்கு எடப்பாடியை கொண்டு வருவதற்கு தம்பித்துரை படாதபாடு பட்டிருக்கிறார் என்கிறார்கள்.ஆனால் தொகுதியில் தொப்பிகளுக்கு பலத்த ஆதரவு இருப்பது மாதிரி ஒரு தோற்றம் ! பெண்களின் குத்தாட்டம் செம பின்னு பின்னுகிறது. இந்த ஆட்டத்தையெல்லாம் அவர்களின் கணவன்மார்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு எறங்கி குத்துகிறார்கள்.அவர்கள் கட்சிக்காரர்களா,அல்லது தொழில்முறை ஆட்டக்காரர்களா என்பது தெரியவில்லை. இந்த ஆட்டம் எல்லா கட்சியிலும் இருக்கிறது என்பதுதான் உறுத்தல்.பெண்கள் மது அருந்துவதையும்  காண முடிந்தது! அவை மிடாஸ் சரக்கு!

தொப்பியை விட இரட்டை மின்கம்பம்தான் தொகுதியில் அதகளம் பண்ணுகிறது. இரட்டை இலையை நினைவு படுத்துகிற மாதிரி இரட்டை விரலை காட்டியபடியே ..ஆட்டியபடியே ஓட்டு கேட்பது சுலபமாக இருக்கிறது.
தினகரனின் ஆதரவாளர்கள் என்னதான் இது எம்.ஜி.ஆர்.தொப்பி என்று சொன்னாலும் அவர்களுக்கு புஷ்குல்லா எம்.ஜி.ஆர்.தான் நினைவுக்கு வருகிறார்.ஆங்கிலோ-இந்தியர்களது தொப்பி என்பதாகவே சொல்கிறார்கள்..

தினகரனை ஆதரித்து வாக்கு கேட்கும் சில இடங்களில் சிறுவர் சிறுமிகள்  உதய சூரியன் சின்னம் காட்டுகிறார்கள்.பொதுவாக திமுக- ஓபிஎஸ் அணிகளுக்கிடையில்தான் போட்டி இருக்கிறது. மூன்றாவது இடம் சசி அணிக்கா அல்லது பி.ஜே.பி.க்கா என்பது போக போகத்தான் தெரியும்.

தேர்தலில் போட்டியிடாத கட்சிகளைப் பற்றிய கவலையோ அக்கறையோ அந்த தொகுதி மக்களுக்கு இல்லை.வைகோ,திருமா,ராமதாஸ் ஆகியோர்  போட்டி இடாததால் எந்த கட்சிக்கும் பாதிப்பு  ஏற்படுவது மாதிரி தெரியவில்லை.

பார்க்கலாம் .இன்னும் நாள் இருக்கிறதே!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...