Saturday, March 4, 2017

கன்னட சோதரர்களும் தல படமும்....

வெட்கமாகத்தான் இருக்கிறது. தமிழ்த்திரைப்பட உலகில் நானும் பத்திரிகையாளனாக நாற்பது ஆண்டுகளை விழுங்கிவிட்டேன். இவ்வாண்டு  தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளைப் படித்தபோது  ஐ.சி.யூ.வில் கிடப்பது திரைப்படங்கள் மட்டுமல்ல.தயாரிப்பாளர்களும்தான் என்பது புரிந்தது.!

'நாங்கள் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களுக்கு 'இலவச பஸ் பாஸ்' கொடுப்போம்' என்பது உறுதிமொழிகளில் ஒன்று!

சிரிப்பது நல்லதுதான்! வாய் திறந்து உரக்க சிரியுங்கள்.

ஆனால் கன்னட தயாரிப்பாளர்களின் ஒற்றுமையையும் பிடிப்பையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

அரசாங்க சட்டத்தின் மென்னியைப்  நெரித்து கோமாவில் கிடத்தி விட்டு 1962-லிருந்து இன்று வரை டப்பிங் படங்களை வெளியிடுவதில்லை என்கிற   குரங்குப்பிடியான கொள்கையில் ஊறிப் போய் இருக்கிறார்கள்.! வன காவலன் வீரப்பனின் பிடியில் சிக்கித்  தவித்த ராஜ்குமார்  ஆதரித்த கொள்கை என்று  கவசத்தை மாட்டிக்கொண்டு அராஜகம் செய்கிறார்கள்.

'தல' அஜித் நடித்திருந்த 'என்னை அறிந்தால்' தமிழ்ப்படத்தை 'சத்ய தேவ் ஐ.பி.எஸ் ' என்கிற பெயரில் டப் செய்து நாற்பது தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது .'கர்நாடக பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ்' சில்  இருக்கிற சில விளங்காமல் போனவர்களின் மூளைகள் யாரை தூண்டிவிட வேண்டுமோ அவர்களை பணம் கொண்டு குத்தி விட்டது.

'டப்பிங் படங்களை திரையிட்டால் அந்த தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம்.சிறைக்கும் செல்வோம்" என கன்னட வெறியர் வாட்டாள் நாகராஜ் என்கிற அனாமதேயம்  அறிக்கை வாசித்தார். ஆள் பலம் இல்லாத அந்த ஆளுக்கு ஊருக்கு நாலு பேர் காசுக்கு கிடைக்காமல் போவார்களா? போஸ்டர் கிழிப்பு,பந்த் அறிவிப்பு என பூச்சாண்டி காட்ட ஹூப்ளி,பேல்கவா, குல்பர்கா ஆகிய ஊர்களில் உள்ள தியேட்டர்காரர்கள் பயந்து போனார்கள். ஒற்றை குச்சிதான் என்றாலும் உரசிப்போட்டால் பெரு நெருப்பு எழும் அல்லவா? 

"இப்படி மிரட்டுவது படம் பார்க்கிறவனின் சுதந்திரத்தை பறிப்பதாகும். இன்ன படம்தான் பார்க்கவேண்டும் என்று எவனும் உத்தரவிட முடியாது. நான் பெங்களூருவில் படத்தை ரிலீஸ் பண்ணுவேன். தடுப்பவன் யார் என்பதை பார்த்து விடலாம் " என்று படத்தின் உரிமையை வாங்கியிருக்கிற கிருஷ்ண கவுடா தடியை தூக்கிவிட்டார்.

"மாதம் ஒரு டப்பிங் படத்தை ரிலீஸ் செய்வேன்" எனவும் சொல்லியிருக்கிறார். அவரின் உறுதிக்கு பக்கபலமாக இருக்கவேண்டிய கர்நாடக பிலிம் சேம்பர் எதிரியாக தன்னை அடையாளம் காட்டி விட்டதுதான் கேவலம்.

ஒரு தமிழ்ப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு அது  பிற மாநிலங்களில் தடுக்கப்படுமானால்  தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன செய்ய வேண்டும்?

தயாரிப்பாளர்களுக்கு இலவச குடும்ப பாஸ் வாங்கிக் கொடுத்து பெங்களூரு  ரிசார்ட்டில் கொண்டு போய் அடைக்க வேண்டும்.!!!!!!!!!!

வேறென்ன!


No comments:

விவசாயம் இல்லாத மந்திரக்கிணறு...!

கிணறு வெட்டினாலே அது விவசாயம் பண்ணுவதற்காக இருக்கும் அல்லது  குடிக்க மற்ற அன்றாட வீட்டு வேலைகளுக்காக இருக்கும். கிணறு என்றால் கட்டாயம் ...