வியாழன், 27 ஏப்ரல், 2017

தினகரனை தப்ப விடுகிறது டெல்லி போலீஸ்?

கோவில் கருவறையில் காம சேட்டைகள் செய்பவனைக் கூட நம்பிவிடலாம். ஆனால் அரசியல்வாதிகளை மட்டும் நம்பிவிடக்கூடாது  என்கிறது  இந்திய  அரசியல் நாகரீகம்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக  ஐம்பது கோடி லஞ்சம் கொடுக்க  முயற்சித்தார் என சொல்லி தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ். இந்திய துணைக்கண்டம் முழுமையும் அநியாயத்துக்கு பரபரப்பு  பற்றி  எரிந்தது. ஆனால் தற்போது அது பா.ஜ.க.வின் அரசியல் நாடகத்தில் வருகிற ஒரு சீன்தான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

வலிமையுடன் இருக்கும் திமுகவை எதிர்ப்பதற்கு  ஒன்று பட்ட அதிமுகதான்  சரியாக இருக்கும்.ஆனால் சசி, தினகரன் உள்ளிட்ட  மன்னார்குடி குடும்பத்தினர்  யாரும் அந்த கட்சியில் இருக்கக்கூடாது.அது பலவீனம் என்று  கருதுகிறது . அவர்கள் இல்லாத அதிமுகவில் வேண்டிய இடங்களை  கேட்டுப் பெற முடியும் என்று பா.ஜ.க.நம்புகிறது. அதற்காகவே  தினகரன் கைது படலம் என்கிறார்கள் விவரம் தெரிந்த அரசியல் ஆய்வாளர்கள்.

இதற்கு தினகரன் இணக்கம் தெரிவித்ததால்தான்  தினகரனுக்கு எதிராக  எழுதப்பட்ட எப்.ஐ.ஆர். மிகவும் இலேசாக இருக்கிறது. சுலபமாக வெளியில்  வந்து விட முடியும் .முதல் தகவல் அறிக்கை ஸ்ட்ராங்காக இல்லை என்கிறார்கள்  சட்டம் படித்தவர்கள். நடப்பதெல்லாம் நாடகமே என்றால் இந்த அரசியல்  நாகரீகம் தேவையா?நீதி மன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு  ஒருவரை ஜுடிசியல் கஸ்டடியில்தான் வைத்திருக்க வேண்டும்.ஆனால் தினகரனை போலீஸ் கஸ்டடியில் வைத்தது ஆச்சரியம் என்கிறார்கள்.


இணக்கமாக இருப்பதுபோல நடித்து விட்டு உள்ளடி வேலைகளில்  இறங்க  மாட்டார் என்பதற்கு  என்ன உத்திரவாதம்?

அதான் ஃ பெரா இருக்கிறதே..

அம்மாவா அவள்? இல்லை பேய்.!

அந்த செய்தியை படித்தபோது பேரதிர்ச்சியாக இருந்தது.

இப்படியும் ஒரு அம்மா இருப்பாளா? தாய்மை என்பது அரிதிலும் அரிதல்லவா? பிள்ளை வரம் கேட்டு கோவில் கோவிலாக அலையும் காட்சியை இன்றும் காணலாம்.தாய்மை அடைவதால்தால் பெண் பூரணம் பெறுவாள் என்பது இந்தியர்களின் நம்பிக்கை.

'உன் கனவில் வருகிற கன்னியை விட  உன்னை கருவில் சுமந்த தாயே மேலானவள் ...சிறந்தவள்" என்று ஒரு கவிஞர் எழுதியது நினைவுக்கு வருகிறது.இன்னும் பல சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால்...?

பிங்கி என்கிற இருபத்தி நான்கு வயதான  இளம் தாய் ஒருத்தி பெண்ணிலிருந்து பேயாக மாறிய செய்தியை  வாசித்த பின்னர்.....

ச்சீ.....அவளும் ஒரு தாய் தானா?

பத்து மாதம் கருவிலே சுமந்து பெற்று எடுத்த தனது  இரண்டு மாத பெண் குழந்தையை அவளே கொன்று இருக்கிறாள் .பக்கத்து வீட்டுக்கு சென்று அங்கிருந்த கழிவு நீர் செல்லும் தொட்டிக்குள் போட்டு கொன்று இருக்கிறாள்.அந்த அழகான கொழு கொழு குழந்தைக்கு பெயர் லாலி.!

"செவ்வாடை  அணிந்து வந்தாள் ஒருத்தி. என் கையில் இருந்த குழந்தையை பறித்துக்கொண்டு ஓடி விட்டாள். நான் என்ன செய்ய?" என்கிறாள் பிங்கி. கண்ணில் ஒரு பொட்டு கண்ணீர் வரவில்லை.

கணவன் மகேந்திர சிங் என்ன சொல்கிறான்?

"லாலியை கரு தரித்த காலத்திலேயே  பிங்கிக்கு பேய் பிடித்து விட்டது.  என்ன செய்வது? இந்த சம்பவத்துக்கு பிறகு ரொம்பவே மாறி விட்டாள். அமைதியாக படுத்திருப்பாள்.திடீரென குதித்து எழுவாள்.பிள்ளையை காணோம் என்று சொல்லி தேட ஆரம்பித்து விடுவாள்..பக்கத்து வீட்டு கழிவு நீர் தொட்டிக்குள்  அவள் பாப்பாவை போட்டு விட்டாள் என்பதை எனது மகன் ( இரண்டு வயது.) சொல்லித்தான் எனக்குத் தெரியும்" என்கிறான் கணவன்.

மே மாதம் இரண்டாவது ஞாயிறு அன்று அன்னையர் தினம் வருகிறது. மகிழ்வுடன் கொண்டாடும் அவர்களுக்கு  இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் மூட நம்பிக்கைகளும் அதீத பக்தியும்தான் அத்தகைய கோர கொலைக்கும் காரணம். பிள்ளை கறி சமைத்த தெய்வீக( ? ) கதைகளை  அரும்புகளுக்கு சொல்வதை தவிர்த்து  அறிவார்ந்த செய்திகளை சொல்லி  வளர்க்க வேண்டும் என்பதே எனது அன்னையர் தின சிந்தனை.கோரிக்கை.

 தாயிலும் சிறந்ததொரு  கோவிலும் இல்லை.  

"


ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

விஞ்ஞானி செல்லூர் ராஜூவுக்கு சி.எம்.பதவியே கொடுக்கலாம்.!

 மக்கா....மதுரைக்காரய்ங்க ராசாக்களுக்கே ஐடியா கொடுத்தவய்ங்க!.கோழி முட்டைய மனுசன் அட காத்து குஞ்சு பொரிச்சிருக்கான்யா. .வெளி நாட்டான்னா ஒருமரியாதை.உள்நாட்டான்னாகேவலமா?

செடிக்கி தேர் கொடுத்தான் பாரின்னு முண்டாவ தட்டிக்கிட்டு திரியிற பயலுகளுக்கு எங்கண்ணன் செல்லூர் ராசுக்குட்டிய பத்தி என்னடா தெரியும்?  லந்து பண்ற வேலையெல்லாம் எங்க கிட்ட வேணாம்டி!.வெந்திருவிங்க!

வைகை அணைக்கி பந்தல் போடனும்னுதான் ராசண்ணன் திட்டம் போட்டிருந்தாரு. அவ்வளவு பெரிய அளவுக்கு பந்தல் போட  தென்னை ஓலை கிடைக்கல.அதான் தெர்மாகோலை அணைக்குள்ள பரப்பிட்டோம்.  எங்கள  கொங்கா பயலுக, கோயானுகன்னு நெனச்சிட்டிங்களா? எரிமலைக்கு மூடி  போடுவோம்.சூரியனுக்கு கூலிங்கிளாஸ் போடுவோம்.மதுரை மண்ணுக்கே பெரிய மரியாதையை தேடிக் கொடுத்திருக்கிற அறிவியல் மேதைடா எங்கண்ணன் செல்லூர் ராசுக்குட்டி!அவர பத்தியா நக்கலடிக்கிறிங்க. நாறிடுவிங்க!

வேற எந்த மந்திரிக்காவது தெர்மாகோல் ஐடியா வந்திச்சாவே! இதுக்கே எங்கண்ணனுக்கு சி.எம்.பதவியே கொடுத்திருக்கோணும். அம்மா  இருந்திருந்தா  பாராட்டு விழாவே நடந்திருக்கும்.அந்த அம்மாவுக்கு  கொடுத்து வைக்கல. இவரு மதுரை ஜி.டி நாயுடு. அவரு கண்டு பிடிச்சது வேற. எங்கண்ணன் கண்டு பிடிச்சது வேற.எங்கண்ணனின் கண்டு பிடிப்ப  ஜில்லா  கலெக்டரே பாராட்டிட்டாரு.அவங்க ரெண்டு பேரும் ரைட் பிரதர்ஸ்னு மக்குப்பயலுகளுக்கு  தெரியல.சரி விடு.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அதிமுகவில் மற்றொரு ஜெ.க்கு இடம் இல்லை.

ஒற்றைத்  தலைவர் என்கிற அடிப்படையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்ததுதான் எம்.ஜி.ஆர்.உருவாக்கிய அ.தி.மு.கழகம். பின்னர்  அது  தன்னை "அகில இந்திய" என்கிற அடைமொழிக்குள் அடக்கி வைத்துக் கொண்டது .அதற்கு  ஒரு காரணம் இருந்தது.

அந்த கழகத்தில்  எம்.ஜி.ஆருக்கு மாற்றாக  தலைமை என்கிற உயரத்துக்கு தகுந்தவர் எவருமில்லை. தகுதி உள்ளவர்கள் இருந்தார்கள் .ஆனால்   அவர்களை மாற்றுத் தலைவராக  ஏற்பதற்கு  மக்கள் தயாராக இல்லை. எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவரது திரைப்படங்களும் , தி.மு.கழகமும் அத்தகைய நம்பிக்கையை வளர்த்திருந்தன .அவரது 'கரிஷ்மா' அவர் என்ன சொன்னாலும் மக்களை ஏற்க வைத்தது.

அவர் சொன்ன அண்ணாயிசமும் அதற்கு சொன்ன விளக்கமும் அவருக்கே புரிந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் மக்கள் நம்பினார்கள்.இன்றைய  அதிமுக தலைவர்களிடம் அண்ணாயிசம் பற்றி கேட்டால் ஆளுக்கொரு விளக்கம் சொல்வார்கள்.

எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பின்னர் ஜெயலலிதா தலைமையை கைப்பற்றியதுடன் எம்.ஜி.ஆரை போலவே தனது செல்வாக்கை  வளர்த்துக் கொண்டார். அவரது திரைப்பட வாழ்க்கையும் எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும்  இடையில் இருந்த நட்பும் துணையாக இருந்தது. எம்.ஜி.ஆருக்கு எதிராக  அவர்  அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதிய விவகாரம் எம்.ஜி.ஆருக்கு தெரியும். ஆனாலும் அவரால் கடுமையாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.அத்தகைய ஜெயலலிதாதான் கட்சியின் சகல அதிகாரமும்  படைத்த சர்வாதிகாரியாக மாறினார். அவரை மீறி ஒரு துரும்பும் கட்சியில் ஆட்சியில் அசைய முடியாத  நிலையை உருவாக்கி இருந்தார்.

அத்தகைய சக்தி படைத்தஜெயலலிதாவை இன்னொரு பெண்ணால்தான் வீழ்த்த முடிந்தது. ஆனால் அவரைப் போல கட்சியில் சர்வாதிகாரம் படைத்த தலைவியாக மாற  முடியவில்லை. சதுரங்கத்தில் சசியினால் சரியாக காய்களை  நகர்த்த முடியவில்லை.தனி மனித வழிபாடு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரது காலத்துடன் முடிந்து விட்டது.சசியை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.கட்சியினரே வெறுக்கும் நிலைதான் இருக்கிறது.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஜெ.மரணத்தில் இருக்கும் மர்மம்தான்! எம்.ஜி.ஆரின் மரணத்துக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்ததுதான் என்றுமனைவி ஜானகி மீது ஜெ. குற்றம் சொன்னதை மக்கள் நம்பவில்லை.ஆனால் ஜெ. மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பதை கட்சிக்காரர்களே நம்புகிறார்கள்.

இன்று தனித்தனி தலைவர்கள் உருவாகி விட்டார்கள். அவர்களது எதிர்காலம் வரும் நாலாண்டு காலத்துக்குள் முடக்கப்பட்டிருக்கிறது.அதற்காக கூட்டு வழிபாடு நடத்துவதே சிறந்தது என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள் .

ஓ.பி.எஸ்.அணி --எடப்பாடி அணி இந்த இரு அணியும் சசி அண்ட் கோ உதவி  இல்லாமல் செயல்படுவது அவ்வளவு எளிதல்ல. சூது எந்த வடிவில் வரும் என்பதை சொல்ல முடியாது.

ஆனால் மக்களை கவர்கிற மாபெரும் சக்தி படைத்த ஒற்றை தலைமை இல்லை என்பது மட்டும்
உண்மை.

புதன், 19 ஏப்ரல், 2017

.ஓ.பி.எஸ் ஏமாறப் போகிறார்.!

தாறுமாறாகப் பேசி சண்டை போட்டு  சேறு அள்ளி பூசிக்கொண்ட சக்களத்திகள் "ஒத்த புருசனை கட்டிக்கிட்ட நாம்ப எதுக்கு கட்டிப்புரண்டு சண்டை போடணும்"என்று கட்டி அணைத்துக் கொண்டால் அது திருந்துனதுக்கு  அர்த்தமா,அல்லது அவளை தீர்த்துக்கட்டுவதற்கான முன்னோட்டமா?

அப்படித்தான் இருக்கிறது எம்.ஜி.ஆர். கட்டிக்காத்து வளர்த்த கழகம்.

ஜெயலலிதா செத்தது பற்றிய கவலை கூட கட்சித் தலைகளுக்கு இல்லை. சொத்தும் பதவியும்தான்இனி நமது சொர்க்கம் என்கிற மிதப்பில் இருந்தனர். யாருக்கு எவ்வளவு பங்கு என இவர்கள் கணக்குப் போட சசிகலாவோ வேறு  உலகத்தை உருவாக்க கனவு கண்டார்.

ஓபிஎஸ்--எடப்பாடி அணியினர் "சின்னம்மாவே சரணம்"என குனிந்து கும்பிட்டது.மன்னார்குடி குடும்பத்துக்கு மண்டியிட்டு கிடந்தது இவை எல்லாம் ஊர் உலகமே அறியும்.

"நான் போட்ட கணக்கு வேற அவன் போட்ட கணக்கு வேற " என்ற கதையாக  ஜெ .வின் மர்ம மரணம் விசுவரூபம் காட்டி நிற்பது ஒரு அணிக்கு சாதகமாகி நிற்கிறது.

சொத்துக்களை சுருட்டவேண்டுமானால்கட்சியையும்ஆட்சியையும்தங்கள் வசமேவைத்துக்கொள்ளவேண்டும்என்கிறதிட்டத்தினால்வந்ததுவினை.

சசி தினகரனை ஒதுக்கு என்று இன்று குரல் கொடுப்பவர்களில் எத்தனை பேர்  உண்மையானவர்கள் என்று நினைக்கிறீர்கள்? சகுனிக்கே வகுப்பு எடுக்கக்கூடிய வல்லவர்கள் குணம் மணம் நிறம் மாறி தர்மனாகி விட்டார்கள்  என்றால் நம்ப முடியவில்லை. அதிலும் திண்டுக்கல் சீனிவாசன் அவரது   ஆசான் தினகரனை விட்டு விலகி வந்து இருக்கிறார் என்றால் இரவிலும்  வானவில் வருவது மாதிரி!

ஜெ.வின் மரண மர்மம் பற்றிய நீதி விசாரணை கேட்டுவருகிற பன்னீருக்கு  தினகரனை  வணங்கி  பின் பிணங்கி  வந்து சேருகிறவர்கள் சாதகமாக இருப்பார்களா? நான்காண்டு காலம் முடிகிற வரை  பதவியும் பவிசும் பத்திரமாக  இருக்க வேண்டும் என்பதற்காக இடம் மாறியவர்கள் பதவியைத் தேடி எங்கேயும் போவார்கள்.

அடி வாங்கிய பாம்பு தினகரன். அவரது ஆட்களை எதிர் அணிக்கு அனுப்பி குண்டுகளை விதைக்க போட்டிருக்கிற திட்டம் என ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?

யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது! ஜெ.க்கு வேதா நிலையத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை,மருந்து மாத்திரைகளில் மறைந்திருக்கிறது  சூட்சுமம்.!

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

ஓபிஎஸ் அணியிடம் ஆறு மந்திரிகள் சமரச பேச்சு!

"ஆரம்பமாகி விட்டதடி அரூபத்தின் வேலைகள்!" என்று மனோகராவில் ஒரு  வசனம் வரும். வசந்தசேனையை மிரட்டுவதற்காக ஆவியாக வருகிற கணவரது குரலாக அமைந்திருந்த காட்சிஅது.!

'ஜெ' ஆவியோ என்னவோ தற்போது சசி அணியில் அப்படியொரு சிக்கல்.

ஒரு மாதத்தில் ஃ பெரா வழக்கினை முடிக்கவேண்டும் என்கிற நிபந்தனை அந்த பிரிவினரில் ஒரு பிரளயத்தை உருவாக்கி இருப்பதாக சொல்லலாம்.

சி.எம்.ஆசனத்தின் மீது தினகரனுக்கு ஒரு கண் என்கிறார்கள்.இதற்கு பனிரெண்டு மந்திரிகள் எதிர்ப்பு !மன்னார்குடியின் கையில் கட்சி போவதை  அவர்கள் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ்.வசம் போய் விட்டால் தங்களின் அணிக்கு பலத்த அடியை கொடுத்து விடும் என்று நம்புகிறார்கள்.அதனால் சமாதான கொடியுடன் ஓ.பி.எஸ் அணியை சந்தித்து இருப்பதாக சொல்கிறார்கள்,

 ஆறு மந்திரிகள் சென்றதாக சொல்லப்படுகிறது.

"ஒற்றுமையே கட்சியின் பலம்.  எம்.ஜி.ஆர்.வாங்கிய அந்த சின்னம் முடக்கப்பட்டால் பாதிப்பு கட்சிக்குத்தான்.ஆகவே ஒன்று படலாம்" என்று  சொல்லி பேசி இருக்கிறார்கள் .

ஆனால் ஓ.பி.எஸ்.அணியினர் சில நிபந்தனைகளை விதித்ததாக சொல்லப்படுகிறது.

"கட்சியின் பொதுச்செயலாளர் பதவி சசிக்கு இல்லை. முதல்வர் பதவியும்  கட்சியின் தலைமைப்பதவியும் தங்களின் அணிக்குத்தான்.இந்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் மேற்கொண்டு பேசலாம் " என்று சொல்லி விட்டார்களாம்.

சமஸ்கிருத ஆண்டில் நல்லது நடக்குமா? தெரியவில்லை.

சனி, 15 ஏப்ரல், 2017

கண்களை தோண்டி...உறுப்பு வெட்டப்பட்டு...!

பதினைந்து  வயது மாணவனை.... பள்ளியில் படித்துக்
கொண்டிருந்தபோது சிலர் கடத்திக் கொண்டு செல்கிறார்கள் .
வழி நெடுகிலும் இம்சைகள்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக  ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து அந்த மாணவனை இறக்கிவிட்டனர்.
கடுமையான தாக்குதல் தொடக்கம்,மாணவனால் எதிர்கொள்ள முடியவில்லை.

அவனால் கதறி அழத்தான் முடிந்தது,

உயிருடன் விடுவார்களா?

உடம்பு நடுங்குகிறது.

அவர்களோ காட்டுமிராண்டிகளை விட மோசம்.

அவனது டிரவுசரை கழற்றிவிட்டு ஆண் உறுப்பினை துண்டிக்கிறார்கள்.அத்துடன் நில்லாமல் அவனது கண்களையும் பிடுங்குகிறார்கள் .

மயக்கமுற்ற அவனை அப்படியே விட்டு  விட்டு அந்த விலங்குகள் சென்று விட்டன.

இது லாகூரில் ( பாகிஸ்தான்.) நடந்திருக்கிறது.

மாணவன் செய்த குற்றம் என்ன?

தன்னுடைய மகளுடன் அவன் படுத்திருந்தானாம்.அதனால் பெண்ணின் அப்பன் அவனை இப்படி தண்டித்திருக்கிறான்.

இங்கே  வல்லுறவு கொள்ளும் மிருகங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது?

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

தினகரன் தோளில் சுமக்கும் துயரங்கள்.!

கழுத்தைச்சுற்றிய 'ஃபெரா'பாம்பு நெருக்கி கொண்டிருக்கிறது.

இன்னும் ஒரு மாத காலத்தில் தனது  மீதான அந்த வழக்குகள்  முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்கிற உத்திரவினால் விழி பிதுங்கி இருக்கிறார் தினகரன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்கிற ஏமாற்றம்.தேர்தல் நடந்திருந்தாலும் ஒ.பி.எஸ்.க்கு அடுத்த இடமே கிடைக்கும்  என பத்திரிகைகள் கணித்ததினால் ஏற்பட்ட கடுப்பு, வருமானவரி துறையின்  கிடுக்குபிடி.அதனால் ஜெயிலம்மா கோஷ்டியில் ஏற்பட்டுள்ள அச்சம் ..இப்படி அடுக்கடுக்காக அவதிகள் அணி வகுத்துள்ளன.

தற்போது நச்சுப்பாம்பாக நால்வர்.அதுவும் அமைச்சரவைக்குள்ளேயே! விரிசலுக்கு வழி போட்டுள்ளது என்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தை சேர்ந்த நால்வர் அணி எடுக்கும் முடிவு முதல்வர் எடப்பாடிக்கு போகிறது. அதைத்தான் அவரும் அங்கீகரிக்கிறார் .இப்படி இருக்கிறபோது நாங்கள் எப்படி உங்களுக்கு விசுவாசமாக இருக்க முடியும் என்று ஏனைய மாவட்டத்தினர்பொங்கிஇருக்கிறார்கள்.அவரால்தான் சுகாதார மந்திரி வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் குமுறி இருக்கிறார்கள்,

"அவர் முதல்வர் பதவியில் இருப்பதுதான் நமக்கு நல்லது.வெளியில் வந்து விட்டதால் அவரால் பலவித இடையூறுகள் வரக்கூடும். பொருத்திருங்கள்" என தினகரன் அவர்களை அடக்கி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்தில் ஹோட்டல் வாங்கியதாக ஜெ.மீதான வழக்கு அவர் உயிருடன் இல்லாததால் முடித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய நிதி அமைச்சகத்தின் நெருக்கடியினால் தினகரன்,நடராசன் ஆகியோர் மீதான ஃபெரா வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் என நம்பப்படுகிறது.

எத்தனை துயரங்கள்தான் தோளில்!

வியாழன், 13 ஏப்ரல், 2017

அழ வைத்த பவர் பாண்டி...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல படங்களை பார்த்து   என்னை அறியாமலேயே  அழுதிருக்கிறேன்.

அதன்பின்னர் தியேட்டரில்எந்தப்படமும் என்னை அழவைத்ததில்லை.  ஆனால் கமல்,ரஜினி நடித்த சில படங்கள் தாக்கங்களை ஏற்படுத்தின. சமுதாயத்தின் மீது   கோபத்தை தூண்டிவிட்டன,..அதன் பின்னர் வந்த-வருகின்ற  படங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்களையே  பிரதானப்படுத்தி வருகின்றன.இது கால மாற்றம் மட்டும் இல்லை.ரசனையும் மாறி விட்டது. விஜய் .அஜித் இருவரது படங்களும் நாட்டு நடப்பின் அவலத்தை சுட்டிக்காட்டுவதாகவே அமைந்து இருப்பதால் அவர்களை ரசிகர்களும் சூப்பர்மேனாகவே பார்த்து வருகிறார்கள்.

இவர்களின் வழியில் வந்தவர்தான் தனுஷும்.! கம்புக்குச்சி மாதிரி இருந்து கொண்டு பத்து பதினைந்து ஆட்களை பந்தாடுவதை விமர்சகர்களைத் தவிர  ரசிகர்கள் மட்டுமே  ஏற்றுக்கொண்டனர் என்றே சொல்ல வேண்டும்.மசாலா என்று  சொல்லப்பட்ட படங்கள் காலப்போக்கில் ஆக்சன் என உயர்வு கொடுத்து அழைக்கப்பட்டன. ஆபாசம் என்று  கருதப்பட்ட நடன அசைவுகள் அங்கீகரிக்கப்பட்டு குத்துப்பாட்டுக்குள்ளும்  அடங்கி விட்டது..முகம் சுழித்த பெண்களும் ரசிக்கிறார்கள். தேர்தல் காலங்களில் கட்சிக்காரப் பெண்களும் குத்தாட்டம்தானே போடுகிறார்கள்.

இது கால மாற்றம்தான்.

இந்த ஆக்சன் படங்களுக்கு மத்தியில் ஒரு  நல்ல படம் வராதா என்ற ஏக்கமும் வந்தது. ஒரே மாதிரியான கதைகள் ,அடிதடிகள் என்றே கதை சொல்லப்பட்டதால் ஒருவகையான சலிப்பு! .இதனால் புதியவர்கள் வந்து  சொன்ன கதைகளை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை .சசிகுமார்,சமுத்திரக்கனி ,பாண்டிராஜ், வெற்றி மாறன்,எழில்,சற்குணம் ,கார்த்திக் சுப்புராஜ் போன்ற நல்ல கதை சொல்லிகளும் வந்தனர்.இவர்களுக்கு மத்தியில் போராளியாக வெளிப்பட்டவர்தான் ராசு  முருகன். இவர்களிடம் சமூகம் நிறைய எதிர்பார்க்கிற வேளையில்தான் .........!

நடிகனாக அறியப்பட்ட ஒருவன் நல்ல கதை சொல்லிகளையும்  தாண்டி சிறந்த இயக்குநராக முதல் படத்திலேயே அங்கீகாரம்  பெற்றுவிட்டான் என்கிறபோது அவனிடம் இன்னும் அதிகமாக  இருக்கிறது என்பது தெளிவாகிறது. அளந்து அடி வைத்து நடந்து வெற்றியும் பெற்றிருக்கிறார் தனுஷ்.

முதலில்அவரின் இயக்கத்தில்  ராஜ்கிரண்என்கிற நடிகர்  தெரியவில்லை. பவர் பாண்டிதான் தெரிகிறார்.திரை உலகில் தனக்கென ஒரு அங்கீகாரம் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் காலப் போக்கில் தனிமையை உணர்கிறபோது ஏற்படுகிற மாற்றம்தான் கதையின் பாதையை மாற்றுகிறது.அவரது வலி புரிகிறது. அது அவருக்கு அவசியமில்லைதான்.

ஆனால்  ஆபிஸ் அவஸ்தைகள் இருந்தாலும் அப்பாவை மதிக்கிற மகன் அன்பான மருமகள், பாசமிகு பேரக்குழந்தைகள் இவர்களுக்கு மத்தியில் வசதியுடன் வாழ்கிறவர்தான்  பவர் பாண்டி.இவரது சமூக அக்கறை  அந்த குடும்பத்துக்கு கெட்டபெயரைத் தருவதாக மகன் உணர்கிறான்.அவனது கருத்தும் சரிதான்.

ஆனால் பவர் பாண்டி அவ்வாறு கருதவில்லை! ஓவராக பீர் அடித்ததின்  விளைவு குடும்பத்தை விட்டு ஒதுங்க வைத்து விடுகிறதுஅப்போதுதான் .முதல் காதல் மரணம் அடைவதில்லை.மனதுக்குள் ஓரமாக உறங்கிவருகிறது. அது அவ்வப்போது விழித்துக்கொள்ளும் என்பது தனித்த வாழ்க்கை விளிம்பு நிலையை தொடுகிறபோது அவருக்கு பு ரிகிறது   .ரேவதியை தேடிச்செல்வதும்  முக நூலில் நான் இன்னமும் உன்னுடைய மனதில் இருக்கிறேனா  என கேட்பதுபோன்றவை எல்லாம் இன்றைய நிகழ்வுகள்தானே!

எளிதான வசனங்களை இயல்பாக பேசுகிறபோதுதான் உண்மை வெளிப்படும் என்பதைப்போல  ஆர்ப்பாட்டமில்லாமல் காட்சிகள் அமைந்திருக்கின்றன. ராஜ்கிரண் எங்கெல்லாம் கலங்கினாரோ  அங்கெல்லாம் நான் கண்ணீர் கசிந்தேன். அவரது முதல் காதலியும் தன்னைப்போல தனித்து வாழ்கிறவள்தான் என்கிற நினைப்புடன் வந்தவருக்கு ரேவதி ஆதரவாக இருந்தாலும் உச்ச காட்சியில்  கலாச்சாரம் சார்ந்து நிற்பது உயர்வாக இருக்கிறது. பூந்தென்றல் என்கிற அழகான தமிழ்ப்பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

இளம்வயது பாண்டியாக தனுஷே நடித்திருக்கிறார்.நினைத்தால் பஞ்ச் வசனங்கள் வைத்துக்கொண்டு தன்னை உயர்த்திக்கொண்டிருக்கலாம் ஆனால் தன்னை துஷ்பிரயோகம் செய்து கொள்ளவில்லை. முற்பாதி கஞ்சா கோஷ்டி சண்டைதான் மொக்கையாக இருந்தது.அதை எப்படி சிந்தித்தார்களோ தெரியவில்லை.

ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு  இடம்  இருக்காது என்பது எனது கருத்து.
புதன், 12 ஏப்ரல், 2017

பேய் ஆட்சி...பிணம் தின்னும் சாத்திரங்கள்.!

விசைத்தறி தொழிலாளி ஈஸ்வரி.

உச்ச நீதிமன்ற உத்திரவுக்கு முரணாக அமைந்திருக்கிற டாஸ்மாக் கடையை  அகற்றச்சொல்லி போராடிய பெண்களில் அவரும் ஒருவர்.

அவ்வழியாக வந்த சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.கனகராஜ் போராடிய பெண்களுக்கு ஆதரவாக இருப்பது போல போக்கு காட்டிவிட்டு காரில்  ஏற  முயன்றவரை பெண்கள் தடுத்திருக்கிறார்கள்.

அவர்களில் ஈஸ்வரியும் ஒருவர்." எங்களுடன் இருந்து போராடுவதாக சொல்லி விட்டு கிளம்பினால் என்னங்க அர்த்தம் ?" என்று கேட்டிருக்கிறார்.

"அட போம்மா!" என்று அவரை தள்ளிவிட்டு காரில் ஏறியவருக்கு பக்க பலமாக போலீஸ்.

டி.எஸ்.பி. பாண்டியராஜன் பாய்ந்து வந்தார். ஓங்கிய லத்தியால் அந்த மாதரசியின் தொடையைப் பார்த்து அடிக்கிறார்.

அப்பாவிகளை வேட்டை ஆடுவது  சில காக்கிகளுக்கு பிடிக்கும். தேனியில்  அய்யப்ப பக்தர்களையே பின்னி எடுத்தவருக்கு உழைப்பாளியை அடித்து துவைப்பதற்கு என்ன தயக்கம் ? இன்னும் சொல்லப்போனால் சப் இன்ஸ்பெக்டரையே பதம் பார்த்தவர்தானாம் இந்த டிஎஸ்பி.

"என்னையா தடுக்கிறாய்" என்று வன்மத்துடன் ஓங்கி அறை விட்டிருக்கிறார்.

நிலை குலைந்த ஈஸ்வரி ஓரமாக உட்கார்ந்து விட்டார்.ஏற்கனவே இடது செவியில் சிகிச்சை.தற்போது  கேட்கும் திறனை அந்த காது இழந்து  விட்டதாக அரசு டாக்டர் கூறி இருக்கிறார்.

இந்த அராஜகத்துக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? அப்பாவி மக்கள் மீது வன்முறையை ஏவுவதுதான் அதன் கடமையா? உச்ச நீதிமன்றத்தின் உத்திரவை காப்பாற்றுவது யாருடைய கடமை.?

பாரதி இதைத்தான் "பேய் ஆட்சி  செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்" என்று  சொல்லி இருப்பானோ?
   (நன்றி படம்; விகடன் )

திங்கள், 10 ஏப்ரல், 2017

அடுத்த மாதம் சட்டசபை தேர்தல்----ப.சிதம்பரம்.

உறுதி செய்யப்படாத தகவல் :

சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கைதாகும் நிலை வரலாம். அவர் கைது செய்யப்பட்டால் அடுத்த நொடியே பதவி பறி போகும். இவருக்கும்  சுரங்க ஊழல் சேகர் ரெட்டிக்கும் இடையில் நடந்த பண பரிவர்த்தனை விவரம்  விகாரமாகி விட்டதால் மூடி மறைக்கமுடியவில்லை. புழலுக்குள் தள்ளி  மறைத்துவிடலாம் என நம்புகிறார்கள்.

"ஆர்கே நகர் இடைத்தேர்தலை தடை செய்திருப்பது  திட்டமிட்ட செயலே" சட்டப்படி போராடி இரட்டை இலையை வாங்கியே தீர்வோம் "என்கிறார் டி.டி.வி.தினகரன்.

"ஜனநாயகப் படுகொலை .பண பட்டுவாடாவை தடுக்க வேண்டியவர்கள் தேர்தலை தடை செய்திருப்பது ஜனநாயகப்படுகொலை" என்கிறது தி.மு.கழகம்.

"போகிற போக்கைப் பார்த்தால் அடுத்தமாதமே சட்டசபைக்கு தேர்தல் நடந்தாலும் ஆச்ச்சரியமில்லை "என்கிறார் ப.சிதம்பரம்."தற்போதைய  அரசு தொடருமேயானால் கடன் தொகை ஐந்து லட்சம் கோடி ஆகிவிடும் என்று தனது பயத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

ஆனால் மன்னார்குடி வகையறாக்களின் கவலை எல்லாம்  சிறைக்குள் வாழும் சசியை  இனிமேல் பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவைதான்  பார்க்க முடியும் என்கிற உத்திரவு அவர்களை இம்சைக்குள்ளாக்கி இருக்கிறது .ஆனால் சிலருக்கு அதுவே  சந்தோஷத்தையும் தந்திருக்கிறது.

இன்னும் சில நாட்கள் மீடியாக்களுக்கு கொழுத்த தீ
னிதான்  

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

தினகரன் திருவிளையாடல்.

வருமானவரி துறையும் தேர்தல் கமிஷனும் கொடுத்த நெருக்கடியில் மாட்டியவர்தான் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர். யார் யார் வசம்  வாக்காளர்களுக்கு கொடுக்கவேண்டிய பணம் கொடுக்கப்பட்டிருந்தது என்கிற பட்டியல் எப்படியோ வெளியாகி இருக்கிற நிலையில் திரைமறைவில் சில வேலைகள் நடப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றன.

"சசி அணியும் ஓபிஎஸ் இணைந்தால் நான் விலகிக் கொள்கிறேன்" என்பதாக  டி.டி.வி.தினகரன் ஆப்பர் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள் .

"அத்தகைய ஆப்பர் கொடுப்பதற்கு தினகரன் யார்?"--ஜெயலலிதாவினால் வெளியேற்றப்பட்டவர் .இவரை மீண்டும் ஜெ சேர்த்துக்கொள்ளவே இல்லை. இவரது நுழைவை மட்டுமல்ல சசியின் ஆக்கிரமிப்பையும் அதிமுக தொண்டன் ஒப்புக்கொள்ளவில்லை.அப்படி இருக்கிறபோது யார் இவர் பஞ்சாயத்துப்பண்ண?

கேட்பது இன்னமும் முதல் குற்றவாளியைஅம்மாவெனகும்பிடுகிறவன்தான்!

அத்தனை எம்.எல் ஏ.க்களும் ஒன்றாக சேர்ந்து வந்து விலக சொன்னால் விலகுவதாகவும் சொல்லி இருப்பதாக சொல்கிறார்கள்.

ஓபிஎஸ் அணியுடன் சமரசம் செய்வதற்காக தினகரன் பார்முலா தயாராகி வருவதாகவும் சொல்கிறார்கள். அதன்படி ஓபிஎஸ் மீண்டும் அமைச்சர்  ஆவார்.எடப்பாடி முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பார் .சசியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக சொல்லக்கூடாது.துணைப் பொதுச்செயலாளராக பன்னீர் இருந்து கொள்ளலாம் என்பதாக அந்த பார்முலா இருக்கும் என்கிறார்கள்.

இதற்கெல்லாம் பன்னீர் செல்வம் ஒப்புக்கொள்வாரா?

தெரியவில்லை.

ஆனால் ஜெ யின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று இதுநாள் சொல்லி வருகிறார் ஒ.பி.எஸ்.

மேலும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருப்பவர்தான் பன்னீர், அவை எல்லாம் இட்டுக்கட்டப்பட்டவைதானா?

பதில் சொல்லவேண்டியது வரும். மக்களின் மறதியை சாதகமாக்கிக் கொள்வார்களா?

தெரியவில்லை.எதுவும் நடக்கும். தேர்தல் ரத்து ஆனால் பார்முலா வேலையை  தொடர தினகரனுக்கு வாய்ப்பு கிட்டும்!

திமுகவின் வெற்றி வாய்ப்பு  எப்படி எல்லாம் தள்ளிப்போகிறது என்று அவர்களும் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.வெள்ளி, 7 ஏப்ரல், 2017

காமத்துக்கும் மணம் இருக்கிறது?

பெண்ணின் கூந்தலுக்கு மணம் இருக்கிறதா ,இல்லையா என்பது பற்றி சிவனுக்கும் நக்கீரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்தது என்பர். அது மெய்யோ பொய்யோ அதனால் தமிழுக்கு பெருமை சேர்ந்தது என்பது  மட்டும் உண்மை.சங்க இலக்கியத்தின்  நாயகன் நக்கீரன்! முக்கண் காட்டிய  செக்கர்வார்சடைப்பெம்மானையே எதிர்த்து வாதாடியிருக்கிறான் என எழுதும்போதே புலவனின் மாண்பு  தெரிகிறதே!

காதலியின் கூந்தலில் அமர்ந்திருக்கிற பிச்சிப்பூவுக்கு தனியாக மணம் வந்து விடுவதில்லை. ஆனால் அதை முகருகிற காதலன் அல்லது கணவனுக்கு  ஒரு வகையான உந்து சக்தி பிறந்து
விடுகிறது.கசங்கினாலும் தலையணையில் பிச்சியின்  வாசம் மறுநாளும் இருக்கிறது. அனுபவித்தவர்களுக்கு அருமை புரியும் என நம்புகிறேன்.

காமத்தை ஊக்குவிக்கும் சக்தி மல்லிக்கும் பிச்சிக்கும் இருக்கிறது. முயங்கியவனின் கன்னங்களில் கசங்கிய இதழ்கள் ஒட்டியிருப்பதை மனைவி ரசிக்கிறாள்.அவளின் மேனியில் பதிந்துபோன மலரின் வாசமும்  களைத்துப்போன மேனியின்  வியர்வை மணமும் சேர்ந்து கிளர்ச்சி ஊட்டும்போது அவன்  அடிமையாகிவிடுகிறான் !  காமத்துக்கும் வாசம் இருக்கிறது.

ஐந்தறிவு பிராணிகளுக்கு இருக்கும் போது கவிதையும் கதையும் எழுதுகிற மானுடனுக்கு இருக்காதா? அவனது வடிகாலாக இருக்கிற அவளது காம தேவதைக்கு இருக்காதா?

வெயிலில் வியர்க்கும்போது அதனின் வாசம் வெறுப்பு ஏற்படுத்துகிறது. டியோடரென்ட் தேடுகிறான்.ஆனால் பள்ளியறை ஏசி என்றாலும் காமம் மலருகிறபோது அவர்கள் இருவரும் வியர்வையில் நனைவதையே  விரும்புவார்கள். வியர்வையின் வாசத்தை விரும்புகிறார்கள். மார்பில் தலை  சாய்கிறவனுக்கு அந்த கசகசப்பு  புனுகு வாசனையாகஇருக்கிறது.

மனைவியின் உள்ளாடைகள் ரவிக்கைகளை மறைமுகமாக முகர்ந்து ரசிக்காத ஆண் மகனே இல்லை என்பேன்.

அனுபவமா?

ஆம். இதிலென்ன வெட்கம்?

( படத்தில் இருக்கிற பெண்ணுக்கும் கட்டுரைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,)


 

சரத்,விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு...யாருக்கு பலன்?

"யோவ்..இந்த ரெய்டுனால ஆர்.கே.நகர் தொகுதியில் என்னய்யா நடக்கப் போகுது?"

"சும்மா ஒரு உதாருதான்.ஒரு மெரட்டலுதான்.ஆனா ஆடு வெட்டுறவனை பயமுறுத்த கோடாங்கி அடிக்கிறவனை கூட்டி வரலாமா? மலைய முழுங்கிட்டுசுக்கு கசாயம் குடிக்கிறவங்களை இப்படியெல்லாம்  பயமுறுத்த முடியாது சாமிகளா? ஜெயிலம்மாவ பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லாதுன்னு ஒன்ன விட்டுப்பாருங்க.அப்புறம் பாருங்க. ஆளாளுக்கு கலர் கலரா அறிக்கைய விட்டுட்டு ஓட்றத!"

'' சுகாதார மந்திரி விஜய பாஸ்கர் வீட்டில ரெய்டு நடத்தினது சரிதான்! அறுவடை முடிஞ்ச நெலத்தில பயிரை தேடுன கதையாகிப்போச்சு. மொத்தமா கெடைக்க வேண்டியது தப்பிப் போயிருச்சு. பூசணிக்காய்க்கு பதிலா முட்டைக்கோசு கிடைச்சிருக்கு. கார்டனுக்கு போயிருக்கனும்யா! இல்லேன்னா  தினகரன் வீட்டுல கைய வச்சிருக்கணும்.!"

"சரத்குமார் வீட்டுல ரெய்டு நடத்தியிருக்காங்களே?"

"மட்டன் கடை பக்கம் திரியிற நாயை புடிச்சி  மோப்பம்  பிடிக்க விட்ட கதைதான்! பாவம் அந்த மனுசனே எந்த பக்கமா போறதுன்னு தெரியாம குலுக்குச்சீட்டு  போட்டு பார்த்திட்டு தினகரனை பார்த்திருக்காரு! பெத்த பேமண்டுன்னு  இவனுங்களே ஒரு கணக்க போட்டுட்டு போயிருக்காங்க. எல்லாமே  தப்பான  ஜட்ஜ்மெண்டு!"

"அப்ப எதுக்குய்யா இந்த டிராமா?"

"நாளைக்கு தேர்தலை கேன்சல் பண்றதுக்கு இப்படியும் ஒரு கிரவுண்டு தேவைப்படுதோ என்னவோ?"

 

வியாழன், 6 ஏப்ரல், 2017

ஓர் இரவில் 128 கோடி ! தொப்பிவாலாக்களின் திறமை!

அவித்த முட்டையிலும் குஞ்சு பொரிக்க வைத்துவிடுகிற வல்லவர்கள்தான்  அரசியல்வாதிகள்.!

அம்மாடியோவ்...! ஒரு நாள் கணக்குப்படி 128 கோடி ரூபாய் ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு ஓர் இரவில் விநியோகிக்கப் பட்டிருக்கிறது.எல்லாமே  தொப்பியின் கணக்கு என்கிறார்கள். கருணாஸ் உள்பட இரண்டு எம்.எல்.ஏ. இந்த தெய்வத் திருப்பணியில் இறங்கி சேவை செய்திருப்பதாக  எதிர்க்கட்சி முகாம்களில் முணுமுணுப்பு.

எதிர்க்கட்சிகளும் வழங்கல் விழா நடத்தி இருக்கின்றன.. ஆனால் சுண்டல்.!

 ஆளும் கட்சி வேட்பாளர் தரப்பிலோ பொங்கல்.!

 மதுரையை சேர்ந்த ஒரு  வக்கீல் பொங்கல் வழங்கும்போது மாட்டி இருக்கிறார்.கேவலம்தான்! வக்கீல் செய்யக்கூடாத வேலை!  இருந்தாலும் தினகரன் காப்பாற்றுவார் என்கிற தைரியம்தான் தகாத வேலையை செய்ய வைக்கிறது.

காவல் துறை ஆளும் கட்சிக்கு சாதகமாக சலாம் வைக்கிறது. தேர்தல் ஆணையமும் கண்டும் காணாததும் மாதிரி கண்களை வைத்திருக்கிறது. வாக்காளர்களுக்கு இது திருவிழாதான்! ஆயிரக்கணக்கில்  வருமானம்  உழைக்காமல்வருகிறது என்றால் வலிக்கவா போகிறது.! சக்கப்போடு போடுராஜாதான்!ஆனால் காசு கொடுத்தவர்களுக்கெல்லாம் ஓட்டு போடுவது என்றால் ஒரு வாக்காளனின் ஓட்டு நாலைந்து சின்னங்களில் விழ நேரலாம். அவனது நேர்மைக்கு வணங்கித்தான் ஆகவேண்டும்.!

குடிக்க தண்ணீர் இல்லை.சுகாதார வசதி போதாது. சாலைகள் கெட்டுக் கிடக்கின்றன.உள்ளாட்சியோ .மாநகராட்சியோ எதுவும் இல்லை. எம்.எல்.ஏ.க்களை  தேட வேண்டியதாக இருக்கிறது. ஆனால் சரக்கு விற்பதற்கு மட்டும் சாலைகளை மாற்றுவதற்கு அரசு துடியாய் துடிக்கிறது.

இன்னும் சில தினங்களே இருக்கின்றன ஓட்டுப் போட!

தினகரனை கட்சியை விட்டு விரட்டிய ஜெ. தொப்பி வைக்கிறாராம் தினகரனுக்கு!

என்னமோடா நாராயணா...எல்லாம் தப்பாவே நடக்கிது!


செவ்வாய், 4 ஏப்ரல், 2017

எனது முதல் காதல்....பருவக்கோளாறு.!

மனைவியை மட்டுமே காதலிக்கிறேன் என சொல்கிறவர்கள் எல்லோருமே  சத்தியம் மட்டுமே பேசுகிறவர்கள் அல்லர்,!

அவர்களும் அவ்வப்போது சில பெண்களைப் பார்த்து சபலப்படுவது  உண்டு.! அது நிகழும் இடம்  ஆலயமாகவும் இருக்கிறது.. ஆண்டவனை பார்த்து மனம் கசிய வேண்டியவர்கள் பிற மனை நோக்குவதற்கு ஆண்டவனின் சந்நிதானத்தை பயன்படுத்துகிறார்கள். இதற்காகவே  கோவில்களுக்கும் செல்கிறார்கள்.அதற்கு  அவர்கள் வருத்தமோ குற்ற உணர்வோ கொள்வதில்லை.

அப்படி பார்ப்பதில் அவர்களுக்கு என்ன சுகமோ? அது வக்கிரம் என உணர்வதில்லை.தனக்கு ஒரு மனைவி அழகானவள் இருக்கிறாள் என்பதை மறந்து அடுத்தவளின் அங்கங்களில் கண்களை பதிப்பது தாயை நோக்குவதற்கு சமம் ! அது அவர்களுக்கும் தெரியும் . ஆனாலும் தெரிந்தே செய்வதில்  ஒருவித  ஆனந்தம்.

எனக்கு காதல் என்பது பிப்த் பார்ம் படிக்கிறபோது  ஜனித்தது.!

நான் படித்தது மதுரைக்கல்லூரி உயர்நிலைப்பள்ளியில்.! பள்ளிக்கு பின் பக்கம்  ரீகல் டாக்கீஸ். அங்கு ஆங்கிலப்படம் மட்டுமே ஓடும்.

பகலில் லைப்ரரி. மாலை ஆறு மணிக்கு மேல் தியேட்டர் என தினமும் தன்னை  மாற்றிக் கொள்ளும்.

எனது வகுப்புத்தோழன் ஆங்கிலோ-இந்தியன். அவனுடைய தந்தை எஞ்சின் டிரைவர்.

"நல்ல லவ் ஸ்டோரி. வாடா பார்க்கலாம்" என அழைத்தான்.

"எனக்கென்னடா புரியும்? நான் வரலடா!"

"இங்கிலிஷ் நாலட்ஜ் வளரனும்.கான்வர்சேஷன் புரியணும்னா இங்க்லீஷ் படம் பார்க்கணும்டா!"

அது ஒரு வகையில் பிரெய்ன் வாஷ் மாதிரிதான்! தொடக்கத்தில் நான் செல்லவில்லை என்றாலும் போகப்போக எனக்கும் ஒரு பொழுது போக்கு  தேவைப்பட்டது.எத்தனை நாளைக்குத்தான் நாலரை அணா டிக்கெட்டில் பெஞ்சில் உட்கார்ந்து தமிழ்ப்படம் பார்ப்பது.?

படத்தின் பெயர் நினைவு இல்லை. ஆனால் நடிகையின் பெயர் சோபியா லோரன்.தனது மகள் ரேப் செய்யப்பட்டாள் என்பதை அறிந்து அவள் கதறியது  இன்னும் மறுப்பதற்கில்லை.அதில் முத்தக்காட்சிகள் இருந்தன,யுத்தம் பற்றிய படம். அந்த முத்தக்காட்சிகள் என் உடலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதை படம் பார்க்கிறபோதே உணர்ந்தேன்.அதுதான் எனது கல்வி கற்பதில் இருந்த  ஆர்வத்தை நசுக்கியது. பாலியல் ரீதியான மானிட இன்பம், காதல் என்கிற  பத்திரிகைகளை படிப்பதற்கு காரணமாக இருந்தது. எனது மார்க்குகளும்  குறைந்தன.

 எதிரில் வரும் மாணவிகளை  தவறான கண்ணோட்டமுடன் பார்த்திராத நான்  வேட்கையுடன் பார்த்தேன். சக மாணவர்களிடம் விமர்சனம் செய்தேன். ஒரு மாணவியை லவ் பண்ணிக்காட்டுகிறேன் என சவால் விடும் அளவுக்கு மனம் சிதைந்திருந்தது.

காதல் என்றால் என்ன என்பது கடுகளவு கூட தெரியாது. வெறும் இனக் கவர்ச்சி.கல்வியின் மீது இருந்த அக்கறை குறைந்தது.நான் எந்த மாணவியை காதலித்துக்காட்டுகிறேன் என சொன்னேனோ அதே மாணவிக்கும் என்னைப் போலவே உளத்தளவில் மாற்றம். வடக்கு சித்திரை வீதியில் மொட்டை கோபுரம் அருகில்தான்கிராஸ் செய்வோம். என்னுடன் சக மாணவர்கள் வருவதைப்போல அந்த மாணவியுடனும் வகுப்புத்தோழிகள் வருவார்கள்.

"ரென் அன்ட் மார்ட்டின் கிராம்மர் புக் இருக்கா...இருந்த குடேன். ரெண்டு நாளில் திருப்பி கொடுத்துடுறேன்" என அவள் தொடங்க அதை மறுநாள் நான் கொடுக்க எங்களிடையே நட்பு வளர்ந்தது. எனது தேர்வையும் ஒரு கை பார்த்து விட்டது.

தோல்வி அடைந்ததால் அவளை பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லாது போயிற்று.எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்தது பருவத்தில் வரும் கோளாறு என்பது புரிந்தது.

திங்கள், 3 ஏப்ரல், 2017

கடம்பன் படக் குழுவின் அனுபவங்கள். அவஸ்தைகள்.

சிறந்த இயக்குநர்களை தமிழ்ச்சினிமாவுக்கு  அறிமுகம் செய்த பெருமை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரிக்கு  இருக்கிறது.முப்பதுக்கும் மேற்பட்ட  இயக்குநர்கள் அவரால் வாழ்வு பெற்றவர்கள். உச்ச நட்சத்திரங்களை இயக்கிய  திறமைசாலிகள்.

சவுத்ரியின் தேர்வு தோற்றதில்லை.

தமிழ்ப் புத்தாண்டில் வெளிவரவிருக்கும் கடம்பன் திரைப்படத்தின் முன்னோட்டம்,பாடல் காட்சிகள் அறிமுக விழாவுக்கு  அவரும்  வந்திருந்தார், மலை வாழ் மக்களின் கதைதான் கடம்பன்..காடுகளை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல்களை சொல்கிற படம்.சற்று துணிச்சலான படமும்  கூட,!

ஆர்யா கேத்தரின் தெரசா ஆகிய முக்கிய கேரக்டர்களுக்கே செருப்பு  கிடையாது   என்கிறபோது மற்ற கேரக்டர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. படத்தின் எல்லா கேரக்டர்களையும் பற்றி சொல்லி வந்த  ஆர்யா தனது ஜோடியான கேத்தரினை பற்றி எதுவுமே சொல்லவில்லை.மறதி

நினைவு படுத்தியதும் தாண்டிக்குடி காட்டு அனுபவத்தை சொன்னார் ஆர்யா.

'' நான் ஸ்பாட்டில் அவரைப் பார்த்தபோது ஏகப்பட்ட சிந்தனையில் இருப்பதுபோல் தெரிந்தது. சரி கேரக்டரை ஸ்டடி செய்பவரை தொல்லை செய்ய வேண்டாம் என்று சென்று விட்டேன். மறுமுறையும் அவரை பார்த்தபோது அதே மாதிரிதான் இருந்தார்.நாமே இன்னும் சரியாக ஸ்டடி பண்ணவில்லையே..இந்த பொண்ணு  ரொம்பவும் பாஸ்ட்டா இருக்கே எப்படி சமாளிக்கப்போகிறேன்னு போய்விட்டேன்.

மறுநாள் அவரை பார்த்தபோது ஏகப்பட்ட ஸ்டடி பண்ணிருக்கிங்க போலிருகேன்னேன்.

அதுக்கு அவர் கூலாக 'இந்த படத்தை எப்படி ஒத்துக்கிட்டேன்னு  புரியல. ஏன் ஒத்துக்கிட்டேன்னு தெரியலேன்னார் பாருங்க.அப்படியே ஷாக். அந்தளவுக்கு  காடு மலைன்னு ஷூட்டிங் ஸ்பாட் .எதுன்னாலும் இரண்டரை கிலோ மீட்டராவது எறங்கி வந்து முடிச்சிட்டு மறுபடியும் ஏறிப்போகனும்.அந்த பொண்ணுக்கும் டூப் கிடையாது. ஸ்டண்ட் மாஸ்டர்  செமத்தியா பரேடு  எடுத்து விட்டார்.ஆனாலும் கேத்தரின் பிரமாதமா பண்ணிட்டார்.டைரக்டர் ராகவா என்னை யானைகளின் குறுக்கே ஓடனும் .சண்டை போடனும்னுட்டார்
முப்பது நாப்பது யானை இருக்கும் நான் அதுகளுக்கு மத்தியில் ஓடுறேன். என் பின்னாடியே கேமராவுடன் கேமராமேனும் ஓடி வரார்..திடீர்னுகால் இடறி விழுந்து விட்டார். யானை அவரை பரிதாபமாக பார்க்கிது. அந்த சிச்சுவேஷன்  எப்படி இருக்கும்னு உங்களால் நினைச்சு பார்க்க முடியுதா?" என்றார்.

இந்த விழாவில் மொட்ட சிவா கெட்ட சிவா டைரக்டர் சாய் ரமணிதான் உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டார். உதவி டைரக்டர் ஒருவரே தனது படத்தை மட்டமாக விமர்சனம் பண்ணிய கொடுமையை சொல்லி குமுறி விட்டார்.

இதில் என்ன கொடுமை என்றால் அத்தகைய விமர்சகர்களுக்கு  ஆதரவாக இருப்பதே சில தயாரிப்பாளர்கள்தான்!