புதன், 12 ஏப்ரல், 2017

பேய் ஆட்சி...பிணம் தின்னும் சாத்திரங்கள்.!

விசைத்தறி தொழிலாளி ஈஸ்வரி.

உச்ச நீதிமன்ற உத்திரவுக்கு முரணாக அமைந்திருக்கிற டாஸ்மாக் கடையை  அகற்றச்சொல்லி போராடிய பெண்களில் அவரும் ஒருவர்.

அவ்வழியாக வந்த சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.கனகராஜ் போராடிய பெண்களுக்கு ஆதரவாக இருப்பது போல போக்கு காட்டிவிட்டு காரில்  ஏற  முயன்றவரை பெண்கள் தடுத்திருக்கிறார்கள்.

அவர்களில் ஈஸ்வரியும் ஒருவர்." எங்களுடன் இருந்து போராடுவதாக சொல்லி விட்டு கிளம்பினால் என்னங்க அர்த்தம் ?" என்று கேட்டிருக்கிறார்.

"அட போம்மா!" என்று அவரை தள்ளிவிட்டு காரில் ஏறியவருக்கு பக்க பலமாக போலீஸ்.

டி.எஸ்.பி. பாண்டியராஜன் பாய்ந்து வந்தார். ஓங்கிய லத்தியால் அந்த மாதரசியின் தொடையைப் பார்த்து அடிக்கிறார்.

அப்பாவிகளை வேட்டை ஆடுவது  சில காக்கிகளுக்கு பிடிக்கும். தேனியில்  அய்யப்ப பக்தர்களையே பின்னி எடுத்தவருக்கு உழைப்பாளியை அடித்து துவைப்பதற்கு என்ன தயக்கம் ? இன்னும் சொல்லப்போனால் சப் இன்ஸ்பெக்டரையே பதம் பார்த்தவர்தானாம் இந்த டிஎஸ்பி.

"என்னையா தடுக்கிறாய்" என்று வன்மத்துடன் ஓங்கி அறை விட்டிருக்கிறார்.

நிலை குலைந்த ஈஸ்வரி ஓரமாக உட்கார்ந்து விட்டார்.ஏற்கனவே இடது செவியில் சிகிச்சை.தற்போது  கேட்கும் திறனை அந்த காது இழந்து  விட்டதாக அரசு டாக்டர் கூறி இருக்கிறார்.

இந்த அராஜகத்துக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? அப்பாவி மக்கள் மீது வன்முறையை ஏவுவதுதான் அதன் கடமையா? உச்ச நீதிமன்றத்தின் உத்திரவை காப்பாற்றுவது யாருடைய கடமை.?

பாரதி இதைத்தான் "பேய் ஆட்சி  செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்" என்று  சொல்லி இருப்பானோ?
   (நன்றி படம்; விகடன் )

கருத்துகள் இல்லை: