வியாழன், 13 ஏப்ரல், 2017

அழ வைத்த பவர் பாண்டி...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல படங்களை பார்த்து   என்னை அறியாமலேயே  அழுதிருக்கிறேன்.

அதன்பின்னர் தியேட்டரில்எந்தப்படமும் என்னை அழவைத்ததில்லை.  ஆனால் கமல்,ரஜினி நடித்த சில படங்கள் தாக்கங்களை ஏற்படுத்தின. சமுதாயத்தின் மீது   கோபத்தை தூண்டிவிட்டன,..அதன் பின்னர் வந்த-வருகின்ற  படங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்களையே  பிரதானப்படுத்தி வருகின்றன.இது கால மாற்றம் மட்டும் இல்லை.ரசனையும் மாறி விட்டது. விஜய் .அஜித் இருவரது படங்களும் நாட்டு நடப்பின் அவலத்தை சுட்டிக்காட்டுவதாகவே அமைந்து இருப்பதால் அவர்களை ரசிகர்களும் சூப்பர்மேனாகவே பார்த்து வருகிறார்கள்.

இவர்களின் வழியில் வந்தவர்தான் தனுஷும்.! கம்புக்குச்சி மாதிரி இருந்து கொண்டு பத்து பதினைந்து ஆட்களை பந்தாடுவதை விமர்சகர்களைத் தவிர  ரசிகர்கள் மட்டுமே  ஏற்றுக்கொண்டனர் என்றே சொல்ல வேண்டும்.மசாலா என்று  சொல்லப்பட்ட படங்கள் காலப்போக்கில் ஆக்சன் என உயர்வு கொடுத்து அழைக்கப்பட்டன. ஆபாசம் என்று  கருதப்பட்ட நடன அசைவுகள் அங்கீகரிக்கப்பட்டு குத்துப்பாட்டுக்குள்ளும்  அடங்கி விட்டது..முகம் சுழித்த பெண்களும் ரசிக்கிறார்கள். தேர்தல் காலங்களில் கட்சிக்காரப் பெண்களும் குத்தாட்டம்தானே போடுகிறார்கள்.

இது கால மாற்றம்தான்.

இந்த ஆக்சன் படங்களுக்கு மத்தியில் ஒரு  நல்ல படம் வராதா என்ற ஏக்கமும் வந்தது. ஒரே மாதிரியான கதைகள் ,அடிதடிகள் என்றே கதை சொல்லப்பட்டதால் ஒருவகையான சலிப்பு! .இதனால் புதியவர்கள் வந்து  சொன்ன கதைகளை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை .சசிகுமார்,சமுத்திரக்கனி ,பாண்டிராஜ், வெற்றி மாறன்,எழில்,சற்குணம் ,கார்த்திக் சுப்புராஜ் போன்ற நல்ல கதை சொல்லிகளும் வந்தனர்.இவர்களுக்கு மத்தியில் போராளியாக வெளிப்பட்டவர்தான் ராசு  முருகன். இவர்களிடம் சமூகம் நிறைய எதிர்பார்க்கிற வேளையில்தான் .........!

நடிகனாக அறியப்பட்ட ஒருவன் நல்ல கதை சொல்லிகளையும்  தாண்டி சிறந்த இயக்குநராக முதல் படத்திலேயே அங்கீகாரம்  பெற்றுவிட்டான் என்கிறபோது அவனிடம் இன்னும் அதிகமாக  இருக்கிறது என்பது தெளிவாகிறது. அளந்து அடி வைத்து நடந்து வெற்றியும் பெற்றிருக்கிறார் தனுஷ்.

முதலில்அவரின் இயக்கத்தில்  ராஜ்கிரண்என்கிற நடிகர்  தெரியவில்லை. பவர் பாண்டிதான் தெரிகிறார்.திரை உலகில் தனக்கென ஒரு அங்கீகாரம் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் காலப் போக்கில் தனிமையை உணர்கிறபோது ஏற்படுகிற மாற்றம்தான் கதையின் பாதையை மாற்றுகிறது.அவரது வலி புரிகிறது. அது அவருக்கு அவசியமில்லைதான்.

ஆனால்  ஆபிஸ் அவஸ்தைகள் இருந்தாலும் அப்பாவை மதிக்கிற மகன் அன்பான மருமகள், பாசமிகு பேரக்குழந்தைகள் இவர்களுக்கு மத்தியில் வசதியுடன் வாழ்கிறவர்தான்  பவர் பாண்டி.இவரது சமூக அக்கறை  அந்த குடும்பத்துக்கு கெட்டபெயரைத் தருவதாக மகன் உணர்கிறான்.அவனது கருத்தும் சரிதான்.

ஆனால் பவர் பாண்டி அவ்வாறு கருதவில்லை! ஓவராக பீர் அடித்ததின்  விளைவு குடும்பத்தை விட்டு ஒதுங்க வைத்து விடுகிறதுஅப்போதுதான் .முதல் காதல் மரணம் அடைவதில்லை.மனதுக்குள் ஓரமாக உறங்கிவருகிறது. அது அவ்வப்போது விழித்துக்கொள்ளும் என்பது தனித்த வாழ்க்கை விளிம்பு நிலையை தொடுகிறபோது அவருக்கு பு ரிகிறது   .ரேவதியை தேடிச்செல்வதும்  முக நூலில் நான் இன்னமும் உன்னுடைய மனதில் இருக்கிறேனா  என கேட்பதுபோன்றவை எல்லாம் இன்றைய நிகழ்வுகள்தானே!

எளிதான வசனங்களை இயல்பாக பேசுகிறபோதுதான் உண்மை வெளிப்படும் என்பதைப்போல  ஆர்ப்பாட்டமில்லாமல் காட்சிகள் அமைந்திருக்கின்றன. ராஜ்கிரண் எங்கெல்லாம் கலங்கினாரோ  அங்கெல்லாம் நான் கண்ணீர் கசிந்தேன். அவரது முதல் காதலியும் தன்னைப்போல தனித்து வாழ்கிறவள்தான் என்கிற நினைப்புடன் வந்தவருக்கு ரேவதி ஆதரவாக இருந்தாலும் உச்ச காட்சியில்  கலாச்சாரம் சார்ந்து நிற்பது உயர்வாக இருக்கிறது. பூந்தென்றல் என்கிற அழகான தமிழ்ப்பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

இளம்வயது பாண்டியாக தனுஷே நடித்திருக்கிறார்.நினைத்தால் பஞ்ச் வசனங்கள் வைத்துக்கொண்டு தன்னை உயர்த்திக்கொண்டிருக்கலாம் ஆனால் தன்னை துஷ்பிரயோகம் செய்து கொள்ளவில்லை. முற்பாதி கஞ்சா கோஷ்டி சண்டைதான் மொக்கையாக இருந்தது.அதை எப்படி சிந்தித்தார்களோ தெரியவில்லை.

ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு  இடம்  இருக்காது என்பது எனது கருத்து.
கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...