வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அதிமுகவில் மற்றொரு ஜெ.க்கு இடம் இல்லை.

ஒற்றைத்  தலைவர் என்கிற அடிப்படையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்ததுதான் எம்.ஜி.ஆர்.உருவாக்கிய அ.தி.மு.கழகம். பின்னர்  அது  தன்னை "அகில இந்திய" என்கிற அடைமொழிக்குள் அடக்கி வைத்துக் கொண்டது .அதற்கு  ஒரு காரணம் இருந்தது.

அந்த கழகத்தில்  எம்.ஜி.ஆருக்கு மாற்றாக  தலைமை என்கிற உயரத்துக்கு தகுந்தவர் எவருமில்லை. தகுதி உள்ளவர்கள் இருந்தார்கள் .ஆனால்   அவர்களை மாற்றுத் தலைவராக  ஏற்பதற்கு  மக்கள் தயாராக இல்லை. எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவரது திரைப்படங்களும் , தி.மு.கழகமும் அத்தகைய நம்பிக்கையை வளர்த்திருந்தன .அவரது 'கரிஷ்மா' அவர் என்ன சொன்னாலும் மக்களை ஏற்க வைத்தது.

அவர் சொன்ன அண்ணாயிசமும் அதற்கு சொன்ன விளக்கமும் அவருக்கே புரிந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் மக்கள் நம்பினார்கள்.இன்றைய  அதிமுக தலைவர்களிடம் அண்ணாயிசம் பற்றி கேட்டால் ஆளுக்கொரு விளக்கம் சொல்வார்கள்.

எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பின்னர் ஜெயலலிதா தலைமையை கைப்பற்றியதுடன் எம்.ஜி.ஆரை போலவே தனது செல்வாக்கை  வளர்த்துக் கொண்டார். அவரது திரைப்பட வாழ்க்கையும் எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும்  இடையில் இருந்த நட்பும் துணையாக இருந்தது. எம்.ஜி.ஆருக்கு எதிராக  அவர்  அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதிய விவகாரம் எம்.ஜி.ஆருக்கு தெரியும். ஆனாலும் அவரால் கடுமையாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.அத்தகைய ஜெயலலிதாதான் கட்சியின் சகல அதிகாரமும்  படைத்த சர்வாதிகாரியாக மாறினார். அவரை மீறி ஒரு துரும்பும் கட்சியில் ஆட்சியில் அசைய முடியாத  நிலையை உருவாக்கி இருந்தார்.

அத்தகைய சக்தி படைத்தஜெயலலிதாவை இன்னொரு பெண்ணால்தான் வீழ்த்த முடிந்தது. ஆனால் அவரைப் போல கட்சியில் சர்வாதிகாரம் படைத்த தலைவியாக மாற  முடியவில்லை. சதுரங்கத்தில் சசியினால் சரியாக காய்களை  நகர்த்த முடியவில்லை.தனி மனித வழிபாடு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரது காலத்துடன் முடிந்து விட்டது.சசியை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.கட்சியினரே வெறுக்கும் நிலைதான் இருக்கிறது.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஜெ.மரணத்தில் இருக்கும் மர்மம்தான்! எம்.ஜி.ஆரின் மரணத்துக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்ததுதான் என்றுமனைவி ஜானகி மீது ஜெ. குற்றம் சொன்னதை மக்கள் நம்பவில்லை.ஆனால் ஜெ. மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பதை கட்சிக்காரர்களே நம்புகிறார்கள்.

இன்று தனித்தனி தலைவர்கள் உருவாகி விட்டார்கள். அவர்களது எதிர்காலம் வரும் நாலாண்டு காலத்துக்குள் முடக்கப்பட்டிருக்கிறது.அதற்காக கூட்டு வழிபாடு நடத்துவதே சிறந்தது என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள் .

ஓ.பி.எஸ்.அணி --எடப்பாடி அணி இந்த இரு அணியும் சசி அண்ட் கோ உதவி  இல்லாமல் செயல்படுவது அவ்வளவு எளிதல்ல. சூது எந்த வடிவில் வரும் என்பதை சொல்ல முடியாது.

ஆனால் மக்களை கவர்கிற மாபெரும் சக்தி படைத்த ஒற்றை தலைமை இல்லை என்பது மட்டும்
உண்மை.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...