ஒருவர் அரசியலுக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.

தனது கட்சியின் பெயர்,கொள்கை,நோக்கம் இவை பற்றி எதையும் ரஜினி சொல்லாத நிலையில் தாமாகவே கற்பனைக் குதிரையில் பயணிப்பது ,கண்டிப்பது, தமிழர் ,தமிழர் அல்லாதவர் என சிலர் குதிப்பது அறியாமையின் உச்சம்.அவரது செல்வாக்கினை பயன்படுத்திக்கொண்டு தமது வாக்கு வங்கியை வளர்த்துக் கொண்டவர்களுக்கு ரஜினியை விமர்சிக்கும் தகுதி இல்லை என கருதுகிறேன்.தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்று மூச்சு முட்ட குரல் கொடுக்கிறவர்கள் சாதிய அரசியலை கையில் பிடித்திருக்கிறவர்கள்தான்!
திராவிடக் கட்சிகளை இன்று கிழித்தெறிந்து வாய்ப்பந்தல் போடுகிற சில கட்சியினர் அந்த திராவிடக் கட்சிகளால் பலன் பெற்றவர்கள்.பதவிச் சுகம் பெற்றவர்கள்தான்!போயஸ் தோட்டம் ,கோபாலபுரம் என தேடிச்சென்றவர்கள் அவர்கள்தான்!
இல்லை என்று சொல்ல முடியுமா?
அதிமுகவின் இமாலய ஊழலுக்கு அடிகோலிட்டவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்கள்தான். அவர்கள் உயிருடன் ஆட்சியில் இருந்தபோது வாய் திறந்தது உண்டா?
ரஜினி தமிழர் அல்லர் என்று கூச்சலிடுகிறவர்கள், ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கொடியவன் ராஜபக்சேயுடன் கை குலுக்கியவர்கள் என்பதை மறக்கவில்லை.நினைவுப் பரிசுகளை சுமந்து வந்த "தன்மான தமிழர்கள்!"
அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்த முதல் குற்றவாளி ஜெயலலிதா என்று நீதிசபை தீர்ப்பு எழுதியிருக்கிறது. கூட்டாளிகளான சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் சிறைச்சாலையில்!
ஆனால் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து திரும்பி வந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.இதை தமிழர்களுக்காக கட்சி நடத்துகிறோம் என போர்டு வைத்திருப்பவர்கள் கண்டித்தார்களா? ஜெ.கன்னடத்துகாரர் என்று கூவுகிறவர்கள் என்ன சொல்கிறார்கள்?
நீதி பிறழாமல் நெறி தவறாமல்,நேர்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிற ரஜினி அதற்கான முயற்சியில் இறங்கி விட்டார். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சகாயம் அவர்களிடம் ஆலோசனை கலந்திருக்கிறார் என்கிறார்கள்.ஆனால் அதை அந்த அதிகாரி மறுத்திருக்கிறார் .அது சரியானதும் கூட! ஆளும் அரசுக்கு விரோதம் என்று சிலர் சொல்லக்கூடும்.
தனிக்கட்சி ஆரம்பித்து தளர்ந்து போன தலைவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லை. ஆந்திரத்திலும் உண்டு. சிரஞ்சீவியின் தோல்வி, அவரது தம்பி பவன் கல்யாணின் அரசியல் கட்சி இளைஞர்களின் மத்தியில் செல்வாக்கு பெற்று இருப்பதன் காரணம் இவைபற்றி எல்லாம் ரஜினி கேட்டு அறிந்திருக்கிறார்.
தன்னுடைய கட்சியில் சேர விரும்புகிற இளைஞர்களுக்கு பவன் கல்யாண் பரீட்சை நடத்துகிறார் என்பது எனக்கு புதிதாக தெரிகிறது.அது மட்டுமல்ல தனது கட்சியின் செலவுக்காக தன்னுடைய படத்தின் வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட பெருந்தொகையை சேமித்து வருகிறார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.
அரசியல் அறிந்தவர்கள், நிர்வாகம் தெரிந்தவர்கள், சட்டம் ஆய்ந்தவர்கள் என பல தரப்பினரிடமும் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் வருவதால் நல்ல மாற்றம் ஏற்படும் என்கிற போது நலிந்த கட்சியினர் மட்டும் கூச்சல் போடுவதேன்?
தனது செல்வாக்கினை மத சார்பான பாஜகவுக்கு ரஜினி பயன்படுத்தினால் அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். அந்த தவறை அவர் செய்ய மாட்டார் .தலைமையை இழந்த அதிமுக இன்று பிஜேபியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதை அறியாதவர் அல்லர் ரஜினி.
ரஜினியின் அரசியல் நிறம் இதுதான் என்பது தெரியாத நிலையில் எதிர்ப்புக் குரலை உயர்த்துவது ----அதில் சுயநலம் இருப்பது மாதிரி தெரிகிறது.