வெள்ளி, 12 மே, 2017

ஜெயா டி.வி.யில் நிர்வாக மாற்றமா?

ஜெயாவின் மர்ம மரணத்துக்குப் பிறகு எத்தனையோ மாற்றங்கள்! ஏமாற்றங்கள்.! எவன் செத்தால் எனக்கென்ன எனக்கு வேண்டியது  ஆட்சியும்  அதிகார மையமும்தான் என்று ஒரு கோஷ்டி யூதாசாக மாறியது.அதன் விளைவுதான் பளிங்கு மாளிகையில் சாணப்பூச்சு!


சாணத்தில் ஜனித்த புழுக்களை புனித பூக்களாக சிலர்  சிலாகித்தனர். சிறப்பு  வழிபாடுகள் இரவிலும் நடந்தன."மாற்றுக் கட்சிக்காரனை  பார்த்து சிரித்தாலே கட்டம் கட்டப்பட்ட" சர்வாதிகாரம் சரிந்து விட்டதால் உள்ளடி வேலைகள் லஜ்ஜை இல்லாமல் நடந்தன..

மாநில அரசும் மத்திய அரசும்    'அரசியல் இரகசிய உடன்படிக்கை ' க்காக  இருட்டு வீட்டுக்குள் முடங்கி  இருக்கும்  காரணத்தால் மக்களின் வேதனைக்குரல்  செவியை எட்டவில்லை.

சட்ட ஒழுங்கு சீரழிவு, விவசாயிகளின் தற்கொலை, குடிதண்ணீர் பஞ்சம், பாலியல் வன்கொடுமை,உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் டாஸ்மாக் சதிராட்டம்,
இப்படி இன்னும் பல அராஜகம் நடந்து கொண்டிருந்தும் பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி இருவரும் மோன நிலையில்.!

அவர்களுக்கு ஆட்சி முக்கியம். அதிகாரம் முக்கியம்.நாட்டைப் பற்றிய கவலை  அவர்களுக்கு இல்லை.

ஜெயாவுடன் இணைந்து சொத்து குவித்த சசியும்  தனது பிடியின் இறுக்கத்தை  தளர விடுவதாக இல்லை.  அரசு எந்திரம் வழியாக மோடி  அச்சுறுத்தினால்   சசி தனது  ராஜ தந்திரத்தால்  அவருக்கு தண்ணீர் காட்டுகிறார். உறவுக்காரர்கள்  பட்டியல் நீண்டு இருப்பதால் காய்களை மாற்றி காட்சிகளை  நடத்துகிறார்.

தினகரனை பிடிக்காதது போல சசி எழுதிய திரைக்கதைக்கு புதிதாக வசனம் எழுதுவதற்கு ஜெயா டி.வி.யில் ஒரு மாற்றம் என்கிறார்கள்.தினகரனின்  மனைவி அனுராதா வசம் இருந்த டி.வி. தற்போது விவேக் மனைவி கீர்த்தனா வசம். யார் வசம் இருந்தால் என்ன அது மன்னார்குடி வம்சம்தானே! வம்சாவளி ஆதிக்கம் என்பது தமிழர்களுக்கு புதிது இல்லையே!

பாஜகவின் பாசப்பார்வை தன் மீது பதிந்து விட வேண்டும் என்பதற்காக  எடப்பாடி எந்த எல்லைக்கும் போவார். பாக். எல்லைவரை பாத யாத்திரை செல்லவும் தயங்காத அதி புத்திசாலி. ஆனால் தினகரன் தனது ஊதுகுழலாக  நாஞ்சில் சம்பத்தை பயன்படுத்திக் கொண்டுஅவ்வப்போது  பயம் காட்டிக் கொண்டு  இருக்கிறார்.  தினகரன்தான் பட்டத்துக்கு உரியவர் என்பதாக பதாகைகள் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை அளக்க ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு ஒரு ஆடி கார் கொடுத்து விட்டால் நாணம் இன்றி நாணல் மனிதர் ஆகிவிடுவார்.

சிந்தாமல் சிதறாமல் மொத்த அதிமுக வையும் விழுங்குவதற்காக  ராஜரிஷி  அமித் ஷா வகுத்திருக்கும் வியூகம் வெற்றி பெறுமா, சிறைக்குள் இருந்தாலும்  சுக்கானை தன்வசம் வைத்திருக்கிற சசி கொடி  நாட்டுவாரா என்பது போகப் போகத்  தெரியும். ஆனால்  குடியரசு த் தலைவர் பதவிக்கு மோடி யாரை கை  காட்டுகிறாரோ அவருக்கு சலாம் போட்டுவிட்டு பரம விசுவாசிகளாகி விடுவார்கள் என்பது காலம் வகுத்திருக்கும் விதி.

ஜெ.வின் மர்ம மரண விசாரணை  கோரிக்கையும்  ஓசை இல்லாமல் மூச்சை  விட்டு விடும்.!

 அதுவரை  மக்கள் பொறுமை காட்டுவார்களா?

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...