வியாழன், 4 மே, 2017

உலகாயுதாவும் தமிழ்ச்சினிமாவும்..!

"நீ  ஒருநீளத் திரைப்படம் எழுதுவோன்
நீயே எண்ணி  நீயே எழுதுக!
உள்ள மதனை உறுதியால் தோண்டினால்
வெள்ளப் புதுக்கருத்து  விரைந்து பாயும்.
அயலார் பாட்டின் அடியைத் தொடாதே
அயலார் பாட்டின் சில சொல் அகற்றி
உன்பாட்டென்றே உரைக்க வேண்டாம்.
பிறரின் கருத்தைப் பெயர்த்தெழுதாதே"

தோழனிடம் பாவேந்தன் பாரதிதாசன் கேட்டுக் கொண்டபாடல் வரிகள்  ஏனோ அன்று  நினைவில் நின்றாடியது.

 தமிழ்த் தேசிய சலனப்படம் நூற்றாண்டு விழாவைத் தொடர்ந்து  'உலகாயுதா ' அமைப்பு ஓசையின்றி பாராட்டு விழாவை நடத்தி முடித்ததுதான்  பாவேந்தனை நினைவூட்டியதற்கான காரணம்.திரைத்துறைக்கு தொண்டாற்றிய தூய பெருமக்களைப் பாராட்டி பெருமைப் படுத்தினார்கள்.

மே முதல் நாள். தொழிலாளர் தினம். காமராஜர் அரங்கம். தேசியத் தலைவரின்  திருப்பெயர் கொண்ட அரங்கமோ பொதுவுடமை போராளி  ம.சிங்காரவேலரின் பெயரை அன்று  வரித்துக் கொண்டது.

உலகாயுதா அமைப்புக்கு  வடிவம் கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், மற்றும் இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன் ஆகிய படைப்பாளிகள் வழியாக  100 பேர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆளுக்கொரு பொற்பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்  விஜய்சேதுபதி.மொத்தம் நூறு  சவரன்.

பாரதிதாசனின் கருத்துக்கு நேர்மாறாக திரை உலகம் பயணித்துக் கொண்டிருக்கிற கால கட்டத்தில் இப்படி ஒரு சாதனையா?

திரைத்துறையின் வளர்ச்சிக்கு துணையாக நின்றவர்களை வலிந்து அழைத்து  வாழ்த்தி கவுரவிப்பது அரசின் கடமை.ஆனால் அரசுக்கு ஆட்சியாளர்களை  வாழவைப்பதற்கே காலமும் நேரமும் போதவில்லை என்கிறபோது இவர்களைப் பற்றி எப்படி நினைக்கும்?

ஆனால் விஜய்சேதுபதி நினைத்தார்.ஒரு தனி மனிதர்.தமிழ்ச்சினிமாவில்  அவர் இன்னும் தொலை தூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது.போட்டியும் பொறாமையும் அருகருகில்! கால் வாரும் நேரத்துக்காக காத்திருக்கிறது .இத்தகைய சூழலில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர்  சீனு ராமசாமியை மேடைக்கு அழைத்து தனது தாயின் கரத்தினால் பொற்பதக்கம்  வழங்க வேண்டும் என்பது நேர்த்திக்கடன் அல்லவே!

திரை உலகமே மறந்து விட்ட முன்னோடிகளை கவுரவிக்கவேண்டும் என்பது என்ன கட்டாயமா? மற்ற நடிகர்களைப்போல இவரும் இருந்துவிட்டால்  யார் கேட்கப்போகிறார்கள்.

"சினிமாவில் சம்பாதித்தேன். சம்பாதித்தை கொடுக்கிறேன்" என்று சொல்வதற்கும் ஒரு மனம் வேண்டும்.அது விஜய்சேதுபதியிடம் அதிகம்  இருக்கிறது. இந்த மனமே அவருக்கு விரோதிகளையும் உருவாக்கும்!

அன்று கவுரவிக்கப்பட்டவர்களுக்கு  தொப்பைகள் இல்லை. வற்றிய வயிறு ஒட்டிய கன்னம்,நடப்பதற்கும் முடியாமல் வாக்கர்கள் துணை என்றுதான்  காணப்பட்டார்கள்.

சேர்ந்திசை என்பதை நாட்டுக்கு தந்த இசைஅமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் ,ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ் ஆகியோரின் படங்களை திறந்து வைத்து பெருமைப் படுத்தினார்கள். ஆனால் அன்றைய விழாவுக்கு வரவேண்டிய  தமிழ்த்திரை நட்சத்திரங்கள் ஏனோ வரவில்லை.

பொதுவுடமை சார்ந்தவர்கள் நடத்திய விழா என்பதால் தவித்தார்களா?

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...