திங்கள், 26 ஜூன், 2017

உன் மீது மட்டுமா உன் மகன் மீதும்....!

படுக்கை அறையில் நீல நிற விளக்கு..வெகு நேரமாக சிரித்தபடியே  அந்த போம் மெத்தையை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்னும் நள்ளிரவு ஆகவில்லை.மணி பதினொன்றுதான்!

"இன்னும் என்ன யோசனை? டிரிங்க்ஸ் பத்தலியா? ஓவரா குடிச்சா உங்களால  உக்காரக்கூட முடியாது டார்லிங்! ரெண்டு பெக் எனப்  பார் யூ! டோன்ட் வேஸ்ட் ஆப்  டைம்! கமான் டியர்!"

தன்னை விட அதிக வயதான அந்த ஆம்பளையை தன் மீது இழுத்து படர விட்டுக்கொண்டாள்.அவருக்கு நரை விட்டிருந்தது.மார் முழுக்க கரடி  மாதிரி அடர்ந்த முடி.அவளுக்கு நல்ல உடல் கட்டு. அளவெடுத்து செதுக்கியது போன்ற பெரிய மார்புகள்.

விரல்களைஅவரின்  மார் மீது அலையவிட்டவள் "டார்லிங்! நீ  இன்னும் ஸ்ட்ராங்காவே இருக்கே!ஜிம்முக்கும் போறதில்ல. அப்படி  என்னய்யா சாப்டுறே?"    மெதுவாக அவனது உதடுகளில்  உதடு தடவுகிறாள் .. அவளும்  பெக்கார்டி ரம்மின் பிடியில்.!

அவனால் அவளை மீற முடியவில்லை."உடம்ப வளர்த்து வச்சு இருக்கிற அளவுக்கு புத்தி வளரலியேடி ! உனக்கு தூங்கும் போலீஸ்மென்னா என்னன்னு  தெரியுமா?"

அவருக்கு அவள் அவசரத் தேவை!

அவள் அவர் மீதுமேலும்  வசதியாக படுத்துக்கொண்டு காதை மெதுவாக  கடிக்கிறாள் .  ''தெரியாதுடா ராஸ்கல் " !

அவருக்கு அவள் அப்படி சொன்னது மரியாதைக்குறைவாக தெரியவில்லை. மிகப்பெரிய கோடீஸ்வரர்.இவரது மனைவி  ஒருநாளும் அவரை படுக்கை அறையில்  அப்படி மரியாதைக்குறைவாக சொன்னதில்லை. உச்சத்தில் கூட  முனகல் சத்தம்  அதிகமாக இருக்குமே தவிர 'டா" போட்டதில்லை.பொதுவாக  பெண்கள் கணவனை செல்லமாக கொஞ்சுவது  படுக்கையில் அந்த நேரத்தில்தான்!

"ஸ்பீட் பிரேக்கர் மாதிரி எதுக்குடி இந்த நேரத்தில் இன்னர்வேர்? வேகத்தடைக்கு பேர்தான் தூங்கும் போலீஸ்மென்.கடாசுடி!"

உதடுகள் காயப்படுமே என்று இருவருமே கவலைப்படவில்லை.

இறுக்கம் அதிகமாகியது. "அடேய்  கிழவா! உன்னை வைத்துதான் உன் மகனை பிடிக்கவேண்டும்.அவன் மாட்டுகிறவரை நீ என்னை எப்படி வேண்டுமானாலும் மேய்! எனக்காடா தூங்கும் போலீஸ்மென் தெரியாது? உனக்குத்தான் சீன சக்கரவர்த்தி  தை சுங் சரித்திரம் தெரியவில்லை."என்று  மனதுக்குள் சிரித்துக்கொண்டு அவருக்கு இடம் கொடுக்கிறாள்

தை சுங் கதை என்ன?

அவர் சீனத்தின் சக்கரவர்த்தி. சாம்ராஜ்யத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம். பதிமூன்று வயதான வு ஜெடியன் என்பவள் சகலகலாவல்லி.காமடியாக பேசி  கவர்ந்து விடுவாள். அப்படி பேசித்தான் மாமன்னர் அரசவையின் உறுப்பினரானவள். உறுப்பினராக அரசவையில் இடம் பிடித்தபின்னர்  அப்படியே  அந்தப்புரத்தையும் பிடித்து விட்டாள்.ஆசைநாயகி!

அவளுக்கு தை சுங் மீது ஆசை இல்லை! அவரது மகன் காவோ சுங் மீதுதான்  ஆசை.

மாமன்னன் மரணம் அடைந்தார். மரபுப்படி மகனும் முடி சூடினார்.

அதுநாள் வரை காத்திருந்த ஜெடியனும் காவோ சுங்கின் ஆசை நாயகியானாள். பிள்ளைகளை பெற்று  வாரிசாக வார்த்துக்கொண்டாள்!

இந்த கதைதான்  கிழவனுக்கு இடம் கொடுத்த ஆசைநாயகியின் கனவாக இருந்தது.


ஞாயிறு, 25 ஜூன், 2017

ரஜினி சி.எம்.! மாணவர்களின் கருத்துக் கணிப்பு.

அரசியலுக்கு வருவாரா இல்லையா? அவராலேயே  அறுதியிட்டு சொல்ல  முடியவில்லை.

அவர் யாரை எல்லாம் சந்தித்து அரசியல் பற்றி பேசியதாக சொல்கிறார்களோ அவர்கள் அனைவரும் அடி வாங்கியவர்கள்.அரசியலில் மக்களால் புறக்கணிக்கப் பட்டவர்கள்.அவர்களுடைய இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு   எந்த வகையிலும் கிடைத்ததில்லை.இதுதான் உண்மை.

ரஜினிகாந்த்...அவர் சூப்பர் ஸ்டார். யாருக்கும் சந்தேகம் இல்லை.

அவர் நடித்த படங்களுக்கு மக்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது.சிறப்புடன் இருந்தால் வரவேற்கிறார்கள். எதிர்பார்த்தது இல்லை என்றால் அவரது சொந்தப்படமாக இருந்தாலும் தூக்கி எறிந்து விடுவார்கள். உதாரணங்கள்  இருக்கிறது.

"போர் என வந்து விட்டால் போரில் குதிக்க வேண்டியது வரும் "என சொன்னது எதை நினைத்து சொன்னார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

அவர் அரசியலுக்கு வந்து முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டால்  மக்களின் ஆதரவு இருக்குமா?

சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தியதில் மக்களின் ஆதரவு மு.க.ஸ்டாலினுக்கே கிடைத்திருக்கிறது.

பல துறையினரிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது.5874-பேரிடம் பல கேள்விகள்.

58 சதவிகிதம் ஸ்டாலினையும் 13 சதவிகிதம் ஓ.பன்னீர்செல்வத்தையும் ,11 சதவிகிதம் ரஜினியையும் ,ஆதரித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். எடப்பாடிக்கு ஒரு சதவிகிதமும் ,அன்புமணிக்கு ஏழு சதவிகிதமும் ஆதரவு  இருந்திருக்கிறது.

இது கருத்துக்கணிப்பு மட்டுமே. மக்களின் மன நிலையை வெளிப்படுத்துவது  மட்டுமே.இது நாளை மாறலாம். மாறாமலும் இருக்கலாம்.ஆனால் ஊடகங்கள்  சொல்வது மாதிரி, பாஜக நம்புகிற  ரஜினியினால்தான் மாற்றம் கொண்டு வரமுடியும் என்பது ஏமாற்றுவேலைதான்!

கட்டமைப்பு இல்லை.கொள்கை என்னவென சொல்லவில்லை.அவரைத் தவிர வேறு யாரும் பெரிய தலை தெரியவில்லை.

விஜயகாந்த் தொடக்கத்திலிருந்தே அவரது மன்றங்களை அரசியலை முன்னிறுத்தியே வளர்த்து வந்தார்.அவரது மன்றத்தினரும் அதற்கேற்ப  உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றி பெற்று தங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

இதன்பின்னரே சரியான வாய்ப்பு வந்ததும் களம் இறங்கினார். ஆனால் அத்தகைய வளர்ச்சி ரஜினியின் மன்றங்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. தேசிய அளவில் பாஜகவுக்கு ஆதரவு தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது .

இதுதான் பலரது யூகம்.

வியாழன், 22 ஜூன், 2017

எடப்பாடியை மிரட்டும் எம்.எல்.ஏ.க்கள்.

மிரளுகிறவனை மயங்கி விழும் வரை வதைப்பதுதானே அரசியலில் முக்கிய பாடம்.! கடலில் விழுந்தவனுக்கு கட்டையை கொடுக்காமல் அதை காட்டி காட்டி காரியம் சாதித்துக் கொள்வது குரூரம் என்றாலும் அரசியலில் கருணைக்கு இடம் இல்லை.

ஜனாதிபதி தேர்தல் வருகிறது. சிந்தாமல் சிதறாமல் அத்தனை ஓட்டுகளும்  வந்து விழ வேண்டும் என்பது டெல்லி எஜமானின் கட்டளை.முதல்மந்திரி  எடப்பாடியாருக்கு நெருக்கடி! தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கிடைத்த  வாய்ப்பை கை விடத் தயாராக இல்லை. பூச்சாண்டி காட்டுவதற்குஇன்னொரு வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ..!

'வா.மச்சான் வா..வணக்கம் வைக்க வா" என்று போக்கு காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்கிறார்கள்.

எடப்பாடியார் கலந்து கொண்ட  இப்தார் நோன்பு  திறப்பு  நிகழ்வில்  முப்பத்தி நாலு பேர் ஆப்சென்ட் என்கிறார்கள்..இவர்கள் தினகரன்- சசிகலாவின் ஆதரவாளர்கள் என்று  சொல்லப்படுகிறது. உண்மையிலேயே  அவர்கள் தினகரனின் ஆதரவாளர்கள்தானா அல்லது  அந்த முகமூடியை போட்டுக்கொண்டு எடப்பாடியாரை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்ளுகிற பலே பாண்டியர்களா என்பதுபோகப்போகத்தான் தெரியவரும்.

'அவர்கள் ஏன் கலந்து கொள்ள வில்லை ?"

விசாரணை செய்யும்படி சிலரை அனுப்பினாராம் சி.எம்.!

"மந்திரிகள் காண்ட்ராக்டுகளை தர மறுக்கிறார்கள். நாங்கள் கை காட்டும்  நபர்களுக்கு தருவதில்லை.தங்களின் தொகுதிகளை மட்டுமே  மந்திரிகள் கவனித்துக் கொள்கிறார்கள்."---இது அதிருப்தியாளர்களின் குரல் என்கிறது அரசியல் வட்டாரம்.

"சரி அப்படியா ...அதை உங்களுக்கே கொடுக்க சொல்லிடுவோம். வேற  என்ன  பிரச்னை?"

"ஜெயலலிதா காலத்தில் ஒவ்வொரு மந்திரியும் கார்டன் பங்கு, கட்சி பங்கு  என்று கோடிகளை பிரித்துக் கொடுத்து வந்தனர். இப்போது அப்படி எதுவும் இல்லை.மந்திரிகளே வைத்துக்கொள்கிறார்கள்.அதனால் கார்டன் போக வேண்டிய பங்குத் தொகையை தங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்"

"ஓ! அதை முதல்வரிடம் சொல்கிறோம்" என்று கிளம்பி விட்டார்களாம்  விசாரிக்க வந்தவர்கள்.

யாரிடம் சொல்லவேண்டுமோ அவர்களிடம் சொன்னால் கவனித்துக்  கொள்வார்கள் என்று எடப்படியார் ஆதரவாளர்கள் தைரியமாக இருப்பதாக கேள்வி.

முப்பத்திநாலு பேரும் நாளைக்கு நாங்கள் பிஜேபி ஆட்கள்தான் என்று  சொல்ல மாட்டார்களா என்ன...?

தலைக்கு மேல ஏழரையை பறக்க விடுமா ,
விடாதா டெல்லி மேலிடம்.?

செவ்வாய், 20 ஜூன், 2017

எம்.ஜி.ஆருக்கே நாமம் போட்ட சசிகலா....அடேங்கப்பா!

அண்டாவையே  அலமாரியில் மறைக்க தெரிந்த வித்தைக்காரனுக்கு வெண்டைக்காயை வேட்டிக்குள் சொருகி மறைப்பது  என்ன பெரிய வித்தையா?சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதி மன்றத்தினால்   முத்திரை குத்தப்பட்டவருக்கு அப்பாவி குழந்தைகளை ஏமாற்றுவது என்பது பெரிய காரியம் இல்லையே!.

ராமாவரம் எம்.ஜி.ஆர். பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவியர் 240 பேருக்கு காது கேட்கும் கருவி வாங்குவதற்காக சசிகலா கொடுத்த காசோலைக்கு வங்கியில் மாலை மரியாதை செய்து திருப்பி அனுப்பி விட்டார்களாம்.எல்லாமே நாடகம் என்றாகிவிட்டது என்கிறார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் தினகரனுடன் சேர்ந்து ஆடிய ஆட்டமும் தப்பாட்டமாகி சங்கு ஊதி விட்டது.

'குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை  சசிகலா முடிவு செய்வார்"என்று  எதை எதிர்பார்த்து சொன்னாரோ அதற்கு  எதிராக எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது.

பேட்டியை பார்த்தபிறகு  மோடி தனக்கு போன் செய்து பேசுவார்.அதை வைத்து கட்சிக்குள் செல்வாக்கை பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்களோ என்னவோ....! போன் என்னவோ எடப்பாடி பழனிசாமிக்கு போய் இருக்கிறது. மோடி பேசியதாக சொல்லி அந்த அணியினர் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள். பொதுச்செயலாளராக சசி தேர்வு  செய்யப்பட்டது  செல்லாது என்று தீர்ப்பு வரலாம் என்பதாகவும் சொல்லுகிறார்கள். டெல்லி வரை வெடி வெடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

இதன் விளைவுதானோ என்னவோ..அதிமுக ஆதரவு அணி எம்.எல்.ஏ.க்கள்  மூவர் கருணாஸ் உள்பட  சட்டப்பேரவையில் மாட்டுக்கறி பிரச்னையை சொல்லி வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்,வெளியில் வந்தவர்கள் மோடிக்கு  எதிராகவும் பேசி இருக்கிறார்கள்.

புதை குழிக்குள் விழுந்தவன்  திக்கு  திசை பார்க்கமுடியுமா என்கிற நிலையில் அதிமுக பரிதாபமாக இருக்கிறது.
 

வியாழன், 15 ஜூன், 2017

சோனம் கபூரிடம் பட்டர் சிக்கன் கேட்ட அபிஷேக் பச்சன்...


சோசியல் மீடியாவில் தங்களின் மனதில் தோன்றுவதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது
உண்டு.மனக்குமுறலை கொட்டுவதும் உண்டு.

வாழ்த்துவதும் வசை பாடுவதும்  இங்கு புதிது அல்ல.

பிறரது அந்தரங்கங்களை அம்பலப்படுத்துவது சிலருக்கு சுகம். அது  சிரங்கு  மாதிரி! சொறியும்போது சுகமாக இருக்கும். முடிந்ததும் எரிச்சலாக இருக்கும். சுசித்ராவின் டிவிட்டரில் சிலர் சந்தியில் நின்றார்களே.!

ஆனால் இது அத்தகையது அல்ல. மனம் சார்ந்தது.

நடிகை சனம் கபூரின்  முப்பத்தி இரண்டாவது பிறந்த நாளுக்கு இந்தியாவின்  உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ஒரு பெரிய மனிதனின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டாமா சோனம்?

இல்லை.

"என்னம்மா சோனம் !என்னாச்சு உனக்கு? உனது பிறந்த நாளுக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி இருந்தேனே! நீ கண்டுக்கவே இல்லையே! பதிலையே காணோமே " என்று அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட....

சோனம் பதறிப் போய் விட்டார்.

"ஓ....மை காட்! உங்க எஸ்.எம்.எஸ். எனக்கு வரல சார்! கிடைச்சிருந்தா கண்டிப்பா பதில் அனுப்புகிறவதான் இந்த சோனம்.!அபிசேக் வாழ்த்துதான் கிடைச்சது. சாரி சார்!" என்று பதிவிட்டிருந்தார்.

அவ்வளவு பெரிய மனிதர் பொய் சொல்லி இருக்க மாட்டார். அவ்வளவு உரிமையுடன் கேட்கிறார் என்றால் எத்தகைய அன்பு வைத்திருப்பார்.

இதற்கு சோனம் "மறந்திட்டேன் சார்." என்கிற பாணியில் பதிவிட்டிருக்கலாம்.
அது ஒன்றும் கவுரவச்சிதைவு கிடையாது. உங்கள் வாழ்த்து வரல உங்கள் பையன் வாழ்த்துதான் வந்தது என்றால் அது அமிதாப்பை பாதிக்காதா?

ஒரு வேளை அபிசேக்கின் வாழ்த்து கவர்ந்த அளவுக்கு  சோனத்தை அபிதாப்  வாழ்த்து கவரவில்லையோ!

"வாழ்த்துவது அபிஷேக் பச்சன்.போன வருசத்தை விட இந்த வருசம் மிகவும்  சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். அது சரி பட்டர் சிக்கன் சாப்பாடு எப்போது?" என்று பிள்ளை கேட்டிருந்தது சோனம் கபூரை கவர்ந்து விட்டதோ என்னவோ!

திங்கள், 12 ஜூன், 2017

காதலின் வலி இதுதானோ?

இளவரசி டயானா ....உலகமே கொண்டாடிய  அழகிய  மட மாது.

அவளும் ஆசைகளை சுமந்துகொண்டுதான்  அரண்மனைக்குள் புகுந்தாள்.

இளவரசர் சார்லசுக்கு ஒரு தொடுப்பு உண்டு. அவளது  பெயர் காமிலா பார்க்கர்  என்பதும் டயானாவுக்குத்  தெரியும்.

ஆனால் சார்லசின் தொடர்பு எல்லைக்குள்  காமிலா இல்லை என்பதாக சொல்லப்பட்டதை நம்பி விரல் பிடித்து இளவரசுக்கு மோதிரம் அணிவித்தாள். அவருக்கும் விரல் கொடுத்தாள்.

மணவாழ்க்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் அற்புத விளக்கு. தேய்த்தபின்னர்  பூதம் வருவதை விட தடவினாலே சொர்க்கம் வருவதையே விரும்புவாள்.

டயானாவுக்கும் அதுவே இஷ்டம்.

சார்லசைப் பற்றி  என்னவெல்லாம் நினைத்திருந்தாள்!

"எனக்கு சார்லஸ் மீது அளப்பரிய காதல். வைத்த கண் எடுக்காமலேயே  அவரைப் பார்ப்பேன்.

நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டக்காரி! இந்த நில உலகில் என்னை விட  பேறு பெற்றவள் யாரும் இல்லை.!

அவரின் கண்ணில் என்னை வைத்து காப்பாற்றுவார். இப்படி நம்பினேன்.

ஆனால் எனது நம்பிக்கை நாசமாகிப் போனதே!"

இப்படி நொறுங்கிப் போவாள் என யார் தான் நினைத்திருப்பர்?

மண விழாவுக்கு செல்வதற்காக நடந்து வந்தவளின் பார்வை காமிலா எங்காவது இருக்கிறாளா என்றுதான் தேடியது. விழியில் அவள் பட்டதும்  சற்று ஆடித்தான் போனாள்.

ஓ....அதுதான் விதி!காதலின் வலியும் அதுதான்! அதனால்தான் கை அறுத்து  குருதி கொட்டினாள். தலைமகனை தளிர் வயிற்றில் தாங்கி இருந்தபோது  படிகளில் உருண்டு உயிர் துறக்க எண்ணியதும் காதலின் வலிதானே!

வருகிற ஜூலை 27-ம் நாள் சார்லஸ்-டயானா  மணநாள்!


 


ஞாயிறு, 4 ஜூன், 2017

நான் சூனியக்காரி!

இங்கிலாந்தின் சிறந்த பாடகர்களில் டேவிட் போவியும் ஒருவர்.

இவரை புற்று நோய் தனது வசமாக்கிக் கொள்ள இசை உலகைவிட்டு விண்ணுலகு சென்று விட்டார். இரு மனைவியர்.

எண்ணிலடங்கா ரசிகைகள். அவர்களில் ஒருத்தி லோர்டே. இருபது வயது இளம் பாடகி.டேவிட்டின் இசையை நேசித்தவள்.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை ஆல்பம் தயாரித்தாள். தன்னையே மறந்து தயாரித்த அந்த ஆல்பத்துக்காக உதவி செய்தது யார்  தெரியுமா?

"வேறு யார் உதவி இருப்பார் என்று  நினைக்கிறீர்கள்? டேவிட்டின் ஆவிதான்  எனக்குள் புகுந்து கொண்டது. நான் ஒரு சூனியக்காரி என்பதால் அது சாத்தியமாகி இருக்கிறது" என்று சொல்கிறாள் லோர்டே!

இப்படியும் ஒரு அடிமை இசைக்கு!

மது ஊறும் மார்பில் கருந்தேள்கள்.!

சாதனைகள் செய்யவேண்டுமென்றால் சாவும் துச்சம்தான்!

தேளைப் பார்த்ததுமே துடைப்பத்தைத் தேடும் கிராமத்துப்பெண்...  நகரமாக இருந்து விட்டால் கதறி அழுது காய்ச்சலில் படுத்துவிடும் நகரத்துப் பெண். இதில் ஆணென்ன பெண்ணென்ன ..இரு பாலருமே பயந்தவர்கள்தான்.

அதிலும் கருந்தேளாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு  கண்டமாக தெரியும்.

ஆனால் தாய்லாந்து பெண்ணொருத்திக்கு கருந்தேள்கள் என்றால் காதல்  பிறக்கிறது.

அவளது பெயர் காஞ்சனா கயிதேவ்.

இரவு கேளிக்கைகளுக்கும் கேபரே ஆட்டங்களுக்கும் மையமாக திகழும்  பட்டையா மியூசியத்தில் அந்த இளம் பெண் தனது கின்னஸ் சாதனையை  நிகழ்த்தினாள்.

தேனூறும் வாய்க்குள் கருந்தேளை விட்டுக் கொண்டாள். மூடிய வாய்க்குள்  மூன்று நிமிடம் முத்தத்தில் திளைத்த தேள் அவள் மெதுவாக வாயைத் திறக்க  கொடுக்கு உயர்த்தி வெளியில் வந்தது. அவளின் முத்தத்தில் கிறங்கி விட்டதோ!

இத்தோடு விட்டாளா அவள்? மதுக்குடமென உயர்ந்து நிற்கும் மார்புகளில்  கருந்தேள்களை படரவிட்டுக் கொண்டாள். அவளுக்கு அதுதான் பரவசம் போலும்! பொறாமையாக இருக்கிறது நமக்கு.!

படத்தைப் பாருங்கள்.பதட்டமில்லாமல்!
இயக்குநர் வே.பிரபாகரன் காதல் கல்யாணம். காமமா?

எத்தனையோ காதல் திருமணங்கள் ! அவை எல்லாமே பேசப்படுபவதில்லை. பிரபலங்கள் என்றால் பத்திரிகைகளில் செய்தி ஆகும். அரசியல் தலைவர்கள்  இல்லத்து திருமணம் என்றால் புகைப்படங்களுடன் ! சினிமா நட்சத்திரங்கள்  என்றால் சிறப்புச்செய்தியாக முழுப் பக்கத்தில்.!

ஆனால் இயக்குநர் வே.பிரபாகரன்- நடிகை ஷெர்லிதாஸ் ஆகியோரின்  திருமணம் அத்தகைய சிறப்புச்செய்தியாக  இடம் பெற  வில்லை.

2009 -ல் வே.பிரபாகரனின் காதல் கதை என்கிற திரைப்படம் வருவதற்கு முன்னரும்  வந்த பிறகும் அந்த படத்தின் நாயகி ஷெர்லின் தாஸ் மிகவும் பேசப்பட்டார். பிரபாகரன் விமர்சிக்கப்பட்டார்.

காரணம் பிரபாகரனின் துணிச்சல்!  அவரது துணிச்சலுக்கு  இசைந்து  ஒத்துழைத்து நடித்த  ஷெர்லினின்  துணை !

கணவனுடன் இணை சேரும்போது இருட்டிலும் உடம்பு காட்டுவதற்கு எந்த  மனைவியும் உடன்படுவதில்லை.மயங்கி முயங்கினாலும் தன் உடலின் மீது  ஆடையின் ஒரு பகுதி கிடக்கும்.

ஆனால் ஷெர்லின் கேமராவுக்கு முன்பாக ....!

புகைப்படங்களும் வெளியாகின.!

நிர்வாணம் கற்றுக் கொடுக்கப்படவேண்டும் என்பது பிரபாகரனின் கொள்கை.

அவர் பழுத்த நாத்திகர். துணிந்து சொல்வார் .அதை செயல்படுத்தவும் தயங்கியதில்லை. அவரின் முந்தைய மண வாழ்க்கை அதிர்ச்சியை கொடுத்தது. திரைத் துறையை சார்ந்த ஒருவருடனான வாழ்க்கை  முறிந்த  பின்னர் இருவருமே விமர்சிக்கப்பட்டார்கள்.

அதற்கு பிறகு தற்போதுதான் பிரபாகரன் செய்தியாகி இருக்கிறார்.

அவரது 'ஒரு இயக்குநரின் காதல் டைரி "என்கிற படம் வெளியான மறுநாள்.

சென்னை நுங்கம்பாக்கம் 'லே மேஜிக் லாண்டர்ன்' பிரி வியூ தியேட்டரில்  பத்திரிகையாளர்களுக்கான காட்சி...

தொடங்குவதற்கு முன்பாக ஷெர்லின் பின் வர பிரபாகரன் முன்னே நடந்து  வந்தார்.

"பதினைந்து ஆண்டுகால நட்பு...இன்று கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. நானும் செர்லினும் கணவன் மனைவியாக உங்கள் முன்னாள் பொறுப்பேற்கிறோம்" என்றார்  பிரபாகரன்.

மிகவும் எளிமையாக இருவருமே!

பட்டு படாடோபம் எதுவுமே இல்லாமல் மோதிரம் மாற்றிக் கொள்ள....

எனது கேள்வி 'அந்த பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு?" என எழுந்தது.

"பதிவுத் திருமணம் செய்து கொள்வோம்" என்றார்.

"உங்களுக்கு வயது அறுபது..." எனது வினா முடிவடைவதற்குள் " தனியாக பேசிக் கொள்ளலாம்" என்றபடியே புது மனைவியான தனது பழைய தோழியுடன் வெளியேறிவிட்டார்.

இது காதலா காமமா?

ஆண்களிடம் 'டேஸ்ட்ரோசன் ஹார்மோனும் ,பெண்ணிடம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் ' இருக்கும்வரை காமம் இருக்கவே செய்யும். ஆனால் காதலுக்கு எல்லை இல்லை. அது காமம் கடந்தது.

ஆனால் காதல் இல்லாமல் காமம் இல்லை. காமம் இல்லாமல் காதலும் இல்லை.

சனி, 3 ஜூன், 2017

அதிமுகவின் கருணை மனுவுக்கு பாஜக வைத்திருக்கும் தேர்வு..

ஒத்தையடிப் பாதையில் போகிறவனை பேய் அடித்தால் என்ன ,கிலி அடித்தால் என்ன என்கிற நிலையில் இருக்கிறது  அதிமுக.!

வலிமையான தலைமையை இழந்ததால் யார் யாரோ கல்லெறிந்து பழம் பறிக்கிறார்கள். கல் எறிவானேன்,கையில்தான் துரட்டி இருக்கிறதே என்று  சண்டியர்த்தனமுடன் தோப்புக்குள் பிரவேசித்திருக்கிறது  பா.ஜ.க.

ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தை  சுரண்டிய  ஜெயலலிதா, சசிகலா குழுவினர் நீதித்துறையால் தண்டிக்கப்பட்டதை தனக்கு  சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பா.ஜ.க.

விளைவு?

அதிமுக மூன்று அணியாகி விட்டது.

"நான்தான் ஒதுங்கிவிட்டேனே" என்று திகார் ஜெயிலுக்கு போவதற்கு முன்னர் சொன்ன டி.டி.வி.தினகரன் , ஜாமீன் கிடைத்த பின்னர் 'இதய தெய்வம் சின்னம்மாவுக்குத்தான் என்னை நீக்கும் அதிகாரம் இருக்கிறது.நான் மீண்டும்  கட்சிப் பணி ஆற்றப்போகிறேன்" என்று பிரம்பினை கையில் எடுத்திருக்கிறார்.

ஓபிஎஸ்.டில்லி சென்று மோடிஜியை சந்தித்தார். எடப்பாடியும் சென்று மோடிஜியை சந்தித்தார். இருவருக்கும்  பிரதமர் என்ன கொடுத்தார் என்பது  அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.இருவரும் கொடுத்தது  கருணை மனுதான் என்பது யூகம்.!

ஆனால் தினகரனுக்கு ஜாமீன் கிடைக்கும், சசிக்கும் ஒரு வழக்கிலிருந்து  விமோசனம் கிடைக்கும் என்பது மட்டும் அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக இருந்தது. அதில் ஒன்று நடந்திருக்கிறது.மற்றொன்று எடப்பாடியின்  போக்கினை பொருத்து நடக்கலாம்.

சசியின் கையில் இருக்கும் நமது எம்.ஜி.ஆர்.நாளேடு பாஜகவின் மூன்றாண்டு  சாதனையை மூக்கறுத்து மூளியாக்கியதை பாஜக.ரசிக்கவில்லை.. இது தங்களது கருத்து அல்ல என்பதாக எடப்பாடி அணி  மந்திரி மறுத்திருக்கிறார். ஜெ.உயிருடன்  இருந்தவரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு என்று கொண்டாடப்பட்ட அந்த பத்திரிகை தற்போது  கறுப்பு ஆடு,!

தினகரனுடன் எடப்பாடி அணி அனுசரித்துப் போகுமா அல்லது எதிர்த்து நின்று  பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ளுமா என்பதுதான் அதிமுகவின்  கருணை மனுவுக்கு பாஜக .வைத்திருக்கும் தேர்வு . யார் வலிமையைக் காட்டுகிறார்களோ அவர்களுடன் டில்லி அனுசரித்துப்போகும் என்பது எதிர்பார்ப்பு,

எடப்பாடி அணி வலிமையானதாக அமையுமானால் அதை சிதைப்பதற்கு டில்லி விரும்பாது. சிதைக்க விரும்புகிற அதிமுக புள்ளிகளையும் சும்மா விடாது. கையில் வைத்திருக்கிற ஆதாரங்களை வைத்துக்கொண்டு  சோதனைகளை நடத்தலாம்.

இப்படியெல்லாம் நடக்குமா என்று வியக்கும் அளவுக்கு எதிர்காலத்தில்  மாற்றங்கள் நிகழலாம்.