திங்கள், 31 ஜூலை, 2017

கமல்ஹாசனை எதிர்ப்பவர்களுக்கு....!

அதிமுக அம்மா அணி மந்திரிகளின் கமல் எதிர்ப்பைப் பார்த்ததும்  எனக்கு  வந்த சந்தேகமே இவர்களுக்கு அந்த அம்மா எந்த அடிப்படையில்  பதவியை  கொடுத்திருப்பார்கள் என்கிற சந்தேகம்தான் வந்தது.

 மந்திரிக்கு அழகு  வரும்  பொருள் உரைத்தல் என்பதாக ஏட்டுப்பள்ளியில்   படித்திருக்கிறேன்.காலப்போக்கில்  அரசியல் மாற்றங்களால் அந்த பொன்மொழி 'மந்திரிக்கழகு பெரும்பொருள் சேர்த்தல் 'என்று திரிந்து விட்டதோ என்னவோ!

அணைக்கு மூடி போடும் அறிவாளிகளை பெற்ற திருநாடு என்ற பெருமை  நமக்கு மட்டுமே உண்டு.

சாதிக் கொடுமையைப் பற்றி  1989-ல் கமல் பேசிய போது  சிலர்  முணுமுணுத்தார்கள் .தற்போதைய  ஜெயக்குமார்களைப் போலவே!

அப்போது  அவர்களுக்கு கமல் சொன்னது......

" என்ன பெரிய பேச்செல்லாம் பேசுகிறான் இந்த நடிகன்" என்பவர்களுக்கு....

நல்ல விஷயத்தைப் பேச ஒருவன் மகாத்மாவாகத்தான்  இருக்கவேண்டும்  என்று அவசியமில்லை.!என்னைப் போன்ற சற்றே பிரபலமான பாமரனும்  பேசலாம்.அணுவை  ஆராய்ந்து  E = M C ஸ்கொயர்  என்று முதன் முதலில் சொல்லவேண்டுமானால் ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞான அறிவாளி  அவசியம்.அதை வழி மொழிபவனுக்கு ஐன்ஸ்டின் அளவுக்கு விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டியதில்லை..ஐன்ஸ்டினின் ரசிகனாக இருந்தாலே  போதுமானது."

கமல் அரசியல் பேசலாமா என்பவர்களுக்கும் அவரை கண்டிப்பவர்களுக்கும்  இது சரியான பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 நான் மிகவும் ரசித்த அவரது  கேள்வி -பதில்களில் சில  இங்கே  நினைவூட்டப்படுகிறது.

"அறிவாளி முட்டாளிடம் தோற்பது எப்போது?"
"மெஜாரிட்டி வெல்லும்போது!"

"உண்மையைச்சொல்பவர்கள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவதேன்?"
"அதிகம் பழக்கமில்லாத வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பதால் வரும் விளைவு.!"

"தங்களுக்கு  பிடித்தது  ராமாயணத்தில் வரும்  ராமனா, பாரதத்தில் வரும் கர்ணனா?"
"நிஜமாய் வாழ்ந்த வால்மீகியின் பாத்திரம்."

"கடவுள்  உங்கள் முன் தோன்றி 'உனக்கு தேவையான வரம் ஒன்று கேள்' என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?"
"எனக்கு ஒன்றும் வேண்டாம். மூட நம்பிக்கைகளையும், உன்  பெயரையும் சொல்லி  பல்லாயிரம் வருடமாய் ஊரை  ஏமாற்றுகிறவர்களை  நின்று கொல்லாதே, முடிந்தால் அரசன் மாதிரி இன்றே கொள் என்பேன்."

"ஒரு பெண்  பிறந்ததுமே பூவும் போட்டும் சொந்தமாகி விடுகிறது.அப்படி இருக்க கணவன் இறந்ததும் அவற்றை இழக்கச்செய்யும் இந்தச்சமுதாயம்  பற்றி?"
"இந்த சமுதாயத்தில் எந்த மதாசாரத்தில் அவள் பிறக்கிறாள் என்பதை பொறுத்தது. அவள் இழப்பதும் இழக்காமல் இருப்பதும்."

இப்படி இன்னும் பல இருக்கின்றன. அவசியம் ஏற்பட்டால் இன்னும் வரும்.!

வியாழன், 27 ஜூலை, 2017

மைத்ரேயன் மத்திய மந்திரி ஆவாரா?

கிளி, குருவி ,ஜோசியம் பார்க்கிற காலமெல்லாம் மலை ஏறிப் போச்சு. இப்ப  நாட்டு நிலவரத்தைப் பார்த்தே 'அரசியலில் இப்படியெல்லாம் நடக்கப் போகுது'ன்னு சொல்லிடறாங்க.அவசரத்தில் கலியாணத்தைப் பண்ணி  சாவகாசமாக கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது.!

பிரதமர் மோடி கூப்பிட்டு அவசரம் அவசரமா ஓ.பி.எஸ் .டில்லிக்குப் போனாரே ..அப்படி என்ன தலைபோகிற காரியம்னு ஒருத்தரிடம் கேட்டேன்.

அரித்தால் அவன்தானே சொரிஞ்சிக்கனும்.அடுத்தவனைக் கூப்பிட்டு சொரிய  சொல்ல முடியுமான்னார் அந்தாளு!

"புரியலிங்க. விவரமா சொல்லுங்க"ன்னேன்!

"இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே ஓட்ட முடியும். சீக்கிரமா ஒன்னா  சேருங்கன்னு சொல்லப்பட்டதாம். ஓபிஎஸ் அணி எம்.பி.க்கள் ஆதரவு மட்டும்  இருந்தாப் போதும். தினகரன் ஆதரவு எம்.பி.க்கள பத்தி கவலைப்பட வேணாம். எடப்பாடியும் ஓபிஎஸ்.சும் சேர்ந்தாப் போதும். சட்டசபையில் ஒரே அணியா ஆகி  தினகரனை தனிமைப் படுத்திடுங்க. நீங்க ஒற்றுமையாக இருந்தால்தான்  இரட்டை இலை உங்களுக்கு கிடைக்கும்னு சொல்லப்பட்டதாம். சசிகலாவை  தனிமைப்படுத்த எப்படியெல்லாம் காயை நகர்த்தனுமோ அப்படியெல்லாம் காரியம் நடக்கிறதா சொல்லப்பட்டதாம்.இரண்டு அணியும் ஒன்னா சேர்ந்தால் மைத்ரேயனுக்கு மந்திரிபதவி கிடைக்கும்னு சொல்லப்பட்டிருக்கு. ஏன்னா  அவர் ஆரம்பகாலத்தில் ஆர்.எஸ்.எஸ்..அப்புறம் பிஜேபி.பிறகுதான் அதிமுக. அதனால அவருக்கு பதவி கிடைக்கலாம்னு அந்தாளு ஜோசியம் சொன்னார்.

"ஓ...அப்படியா, இந்த இரண்டு அணியும் ஒன்னா சேருகிற வரை ரெட்டை இலை தீர்ப்பு தள்ளிட்டே போகும்.உள்ளாட்சி தேர்தலும் சீக்கிரம் நடக்காதுன்னு  ஊகிக்க முடியிது. பரவாயில்ல.அந்தாளின் ஜோதிடமும்  ஓரளவுக்கு நல்லாத்தான் இருக்கு."

"மத்தியில் பிஜேபி கவர்மென்ட் இருக்கும்போதே தமிழ்நாட்டில் தேர்தலை நடத்தி முடிக்கணும்.அப்பத்தான் கால் ஊன்ற முடியும்னு நினைக்கிறதா  சொல்லலாம்.அதிகாரமும் பணமும் இருந்தால் போதுமே! சாதிக்க முடியும். அதுதானே அரசியல். ஜனநாயகம்னு பேசுறதெல்லாம் சும்மா!"
 

சனி, 15 ஜூலை, 2017

சசிகலாவும் பிகபாசும்...!

சிறைத்துறை அதிகாரி ரூபா கண்டுபிடித்த பிறகும் மற்ற அதிகாரிகள் அவர்களது  குற்றச்செயலை மறைப்பதற்குத்தான் முயற்சிக்கிறார்கள். அரசியலில் நேர்மை நியாயம் நீதி என்கிற வெங்காயமெல்லாம்  பணபலத்துக்கு முன்னால் சவம்தான் என்பதற்கு பரப்பன அக்ரகர சிறைச்சாலை நல்ல உதாரணமாகி இருக்கிறது.

அரசியலில்செல்வாக்கைப் பயன்படுத்தி சொத்துக் குவித்த வழக்கில் குற்றம்  நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட  குற்றவாளி சசிகலா. அவருக்கு சிறையில் தனிச்சமையல் அறை அமைத்து  வேண்டியவை,விரும்பியவைகளை உண்பதற்கு  வசதிகள்.இதற்கு லஞ்சமாக கோடிக்கணக்கில் பணம்.மற்றொரு மாநில குற்றவாளிக்கே இத்தகைய  வசதிகளை செய்து கொடுத்திருக்கிற கன்னட அதிகாரிகள் சொந்த மாநில குற்றவாளிகளுக்கு கையூட்டுப் பெற்று எவ்வளவு சலுகைகளை செய்திருப்பர்.

வாங்கியவர்க்கு வாங்கிப் பழக்கப்பட்டவர்கள் உதவியிருக்கிறார்கள். ஒரே  வர்க்கம். சசிக்கு உதவி செய்ததாக இருபது குற்றவாளிகள் வரை பெல்லாரி  சிறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.ஆக குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கைதிகளுக்கு உதவியாக இருந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை?

தமிழ்நாட்டைசேர்ந்த  ஒரு காங்கிரஸ் பிரமுகர்  வழியாக சிறைத்துறை அதிகாரிகளை மடக்க முடிந்திருக்கிறது என்பது செவி வழிச்செய்தி. இது  உண்மையாக இருக்குமேயானால் அந்த பிரமுகரை கண்டு பிடித்து அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். இரண்டு  கோடிகள் கொடுத்தவர்கள் தங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ள  அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு இன்னும் எத்தனை கோடிகளும் செலவு செய்வார்கள்.இந்த இழி செயலை கர்நாடக அரசு எப்படி கண்டிக்கப்போகிறது  என்பது காங்.மேலிடம்தான் தீர்மானிக்க வேண்டும்!அவர்களின் ஆட்சிதானே  அங்கு இருக்கிறது.

அடுத்து பரபரப்பாகி இருப்பது பிக் பாஸ்.கையில் ஏதாவது ஒரு வண்ணத்தில்  கொடியைக்கட்டிக்கொண்டு பிரபலங்களின் வீட்டுக்கு முன்னால் பத்து பேர்  ஆர்ப்பாட்டம் செய்தாலும் மீடியாக்களுக்கு அதுதான் தீனி.

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக தேசிய கீதம் பாட வைத்திருந்து  அதை எழுதியவர் பாபுபாய் படேல் என தப்பாக சொல்லியிருந்தால் நாட்டில் என்ன  நடந்திருக்கும்? பொங்கி எழுந்திருக்கமாட்டார்களா? தமிழ்க்கவி என தன்னை அறிமுகம் செய்துகொண்டிருக்கிற சினேகன் என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்தினை  எழுதியவர் தாயுமானவர் இல்லை என அன்றே சொல்லி இருக்கவேண்டுமல்லவா?  தொடர்ந்து தமிழ்ப்பள்ளி என்பதற்குப் பதிலாக  தமிழ் பள்ளி என்பதாகத்தானே காட்டினார்கள்!

'நமீதாவின் கவுன் எப்படி நிக்கிது ?" என்பது வையாபுரிக்கு சந்தேகம். காயத்ரி ரகுராம் சரியான சகுனி என்கிறார் சினேகன்.பெண்களை அவள் இவள் என சொல்வதில் அவருக்கு திருப்தி.ஆர்த்தியின் திமிர்த்தனம் தெளிவாகவே  தெரிகிறது. நடிப்புப் போலி என் று ஜூலியை சொல்லலாம்.

எல்லாமே திட்டமிடப்பட்டவை என தெரிகிறது. கோடிக்கணக்கில் ஓவியாவுக்கு ஓட்டு என்பதுதான் நெருடலாக இருக்கிறது. நாடகமே உலகம்.!


வியாழன், 6 ஜூலை, 2017

இளமையின் ரகசியம் அளவான செக்ஸில்!

எழுபது வயதிலும் அவருக்கு தோலில் சுருக்கம் இல்லை. முகத்திலும்தான்!

"என்ன சார் ..சாப்பிடுறீங்க. தங்கபஸ்பம் ? காய கல்பம்?"

"ரெண்டும் இல்ல ..தோழா!"

"அப்படின்னா...சிலபேரு சொல்றமாதிரி  சின்ன வயசு பொண்ணுகளுடன் செக்ஸ் வச்சிருக்கிங்களா?"

"நீங்க ஏன் தப்பு தப்பா கேக்கிறிங்க? யாரு இந்த மாதிரி சின்னத்தனமா சொன்னது?தங்கபஸ்பம், காய கல்பம் சாப்பிட்டெல்லாம் இளமையா  இருக்க  முடியாது.ஆக்டிவ் லவ் லைப் இருக்கிறவங்க இளமையா இருக்கலாம்."

"புரியல. ?"

"ஆண் பெண் ரெண்டு பேர் மனசும் ஒன்னா இணைஞ்சு உண்மையான  அன்புடன்  செக்ஸ் வச்சுக்கிட்டால் இளமையா இருக்க முடியும்.!"

"தினமும் செக்ஸ் வச்சுக்கணுமா?"

"உடம்பு கெட்டுப்போகும். வாரத்தில் ரெண்டு நாள் செக்ஸ் போதும். குழந்தை உருவாகும்  வாய்ப்பு அதிகம். விந்தணுக்கள் பலம் பெறும்! இங்கிலாந்து  மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சததான் சொல்றேன்!"

"சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டா நல்லதுன்னு பேப்பர்ல விளம்பரம்  வருதே?"

"அதுக்கு நீ தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டா போதுமே ராசா! கணவன் மனைவி இருவரும் மனம் கலந்து வாரத்தில் ரெண்டு நாள்  உடல் கலந்தா அவங்களுக்கு  ஜலதோஷம்,ப்ளு வராது. .முதுமை தள்ளிப்போகும்.முப்பது  நிமிஷம் கடுமையாக செக்ஸ் வச்சுக்கிட்டால் நூறு கிலோரி பர்ன் ஆகுமாம்.
அடுத்து  செக்ஸ் கொள்ளும் முறையில் மாற்றம் வச்சுக்கிட்டா எலும்புகள்  வலிமையா இருக்கும். ஹார்ட் அட்டாக் வராமஇருக்க பாதுகாப்பாக இருக்குமாம்.தலைவலி வராது.பிராஸ்டேட் கேன்சர் ஆபத்து குறைவு. இப்படி  எல்லாம் இங்கிலாந்து ஆராய்ச்சி நிலையம் கண்டு பிடிச்சு சொல்லியிருக்கு.அறுபது வயசு ஆளுங்களை அஞ்சாறு வயசு குறைச்சு காட்டுமாம்.அளவான செக்ஸ்.இளமையின் ரகசியம்." என்றார் எழுபது வயது  இளைஞர்.

திங்கள், 3 ஜூலை, 2017

நர மனிதர்களின் பெண் வேட்டை.!

ச்சீய் ...மிருகத்திலும் இழிவான மனிதப் பிறவிகள் என காறி உமிழத் தோன்றுகிறது அவர்களை!

இரக்கம் என்பது  அற்றுப் போனதா?

சிந்திக்கும் ஆற்றல் அற்ற இரும்பு மனமா அவர்களுக்கு?

மன நலம் அற்றவளால் பத்து வயது சிறுமியை கடத்திச்செல்லமுடியுமா? அந்த சிறுமியின் அப்பன் திலீப் கோஷ் என்ன முடவனாகிப் போனானா, என்ன?

அச்சமுற்று ஒடுங்கிப்போனானாம் ..காரணம் சொல்கிறார்கள்.

ஒட்டேரா பீவி என்பது அவளது பெயர்.நாற்பத்திரண்டு வயது. மன நோயாளி. இன்னும் சொல்வதென்றால் பைத்தியக்காரி.

வீட்டில் இருக்காமல் ஊர் சுற்றிவருகிறவள்!

அவளைப் பிடித்து டிராக்டரில் கட்டி வைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள் .கல் எறிந்திருக்கிறார்கள்.கம்புகள் கொண்டு மானாவாரியாக அடித்திருக்கிறார்கள். சிகை மழித்து நிர்வாணம் செய்திருக்கிறார்கள். அவள் கதறி அழுது சொன்னது அவர்களுக்கு புரியவில்லையாம். என்ன  சொல்கிறாள் என்பது தெரியாமல் போனதாம்.

எல்லாம் மேற்கு வங்கத்தில் ஒரு கிராமத்தில் நடந்து முடிந்திருக்கிற துயர நிகழ்வு.

பிள்ளை பிடிப்பவள் என நினைத்து அடித்ததாக போலீசில் சொல்லி இருக்கிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீவி சிகிச்சை பலன் தராமல் மாண்டு போய்விட்டாள்.

என்ன கொடுமை!








ஞாயிறு, 2 ஜூலை, 2017

அரசியல் அவசியமா, ரஜினிக்கு குடும்பம் கேள்வி?

இன்னும் பெண்ணே முடிவாகல..அதுக்குள்ளே பிரசவ மருந்தெல்லாம் வாங்கி  வச்ச அம்மா மாதிரி ரஜினியின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

வருவாரா....அல்லது ஆண்டவன் இன்னும் உத்தரவு கொடுக்கல என்று வானத்தை நோக்கி கையை காட்டி விடுவாரோ என்கிற பயம் அவர்களுக்கு.!

ஆனால் திருமாவளவன் 'அவர்தான்யா, விடிவெள்ளி.அவரை விட்டால் வேற  ஆளே இல்லை" என்கிற ரேஞ்சுக்கு கருத்துகளை அள்ளிவிட ,மற்றொரு பக்கம் ராமதாஸ் "அவரெல்லாம் வந்தால் வெளங்காதுய்யா!" என்கிற அளவுக்கு பாதையெல்லாம் நெருஞ்சி முள்ளை பரப்பி இருக்கிறார் .ஆள் இல்லாத வீட்டுக்கு  விளக்கேத்தி வைப்பதற்கு ஆளை தேடிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு  பாஜகதான் ஆளுயர மாலைகளை ரஜினிக்காக தயார் பண்ணி இருக்கிறது.

"அய்யா...நீங்க வராவிட்டாலும் பரவாயில்ல.! உங்க ஆதரவு எங்களுக்குத்தான் என்பதை  மட்டும்  சொன்னாப்போதும்" என்கிற நிலைமையில் அந்த கட்சி  தொங்கிக் கொண்டிருக்கிறது.

"ஜி.எஸ்.டி. வரியினால் தமிழ்ச்சினிமா மூச்சு முட்டிக்கிடக்கிது.அதுக்காக  குரல் கொடுங்க  சாமி.நீங்க சொன்னா மோடி கேப்பாரு "என்கிற கனவில்  தமிழ்ச் சினிமா பிரபலங்கள் .! அமிதாப்பச்சன் அந்த வரியை ஆதரிக்கிற போது ரஜினி எதிர்த்து குரல் கொடுத்தால் அது எடுபடுமா என்கிற சிந்தனை கூட  அவர்களுக்கு இல்லையே என்பதுதான் பரிதாபம்.!

விஷால் ஸ்டிரைக் அறிவிப்பு கொடுத்தபோது அதை எதிர்த்த அபிராமி ராமநாதன் போன்ற பிரபலங்கள் தற்போது தியேட்டர்ஸ்டிரைக்என்கிறார்கள்.

விஷால் சொல்லி நாம் கேட்பதா? என்கிற ஈகோ அவருக்கு!

ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? அமெரிக்காவில் மருத்துவ சோதனை  செய்து கொண்டு திரும்பும்போது விடை கிடைத்து விடும் என்று ஒரு சாரார்  நம்புகிறார்கள்.ஆனால் அவரது குடும்பத்தினர் அரசியல் பிரவேசத்தை  விரும்பவில்லை என்று ஒரு தகவலை 'தமிழ்நாடு சென்ட்ரல்" என்கிற ஆங்கில இணையதளம் வெளியிட்டிருக்கிறது.அவரால் தீவிர சுற்றுப்பயணம் செய்யவோ,பிரசாரம் பண்ணவோ அவரது உடல் இடம் தராது என்கிறது. பகல் இரவு என பாராது தமிழ்நாட்டின் கடைக்கோடி வரை சென்றாக வேண்டும். அதனால் அவரது குடும்பத்தில் அரசியலுக்கு ஆதரவில்லை.'வாய்ஸ் 'மட்டும் கொடுத்து விட்டு வீட்டுடன் இருந்து விடுங்கள் என்பதாக சொல்கிறார்களாம்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விட அவரது உடல்நலம்தான் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

பார்ப்போம்.