
"கெட்டவர்கள் தங்களுக்கே பொருந்தக்கூடிய சட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் "
சொன்னவன் பிளாட்டோ..தத்துவ ஞானி .
இந்தியாவின் இன்றைய நிலைமைக்கும் பிளாட்டோ சொன்னதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்திய இறையாண்மை மீது சத்தியம் பண்ணி விட்டு சொல்ல விரும்புகிறேன்.
எடப்பாடியின் ஆட்சியின் மீது கழுவிக் கழுவிக் குற்றப்பத்திரிகை வாசித்த அண்ணன் ஓபிஎஸ் அணியினர் இணைந்து பதவிகள் பெற்றதும், அதற்காக ஓபிஎஸ்.க்கு பிரதமர் மோடி ஆசிர்வாதம் செய்ததும் அடடே காட்சிகள்.
எடப்பாடியார் மீதும் அவரை சார்ந்த கட்சி வி.ஐ.பி.கள் மீதும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காள பெருமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக ஒரு நினைவு. தமிழக அரசு தலைமை செயலராக பணியாற்றிய ராம் மோகனராவ் வீடு, மற்றும் அவரது மகன் இதர உறவுகள் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதாகவும் ஒரு நினைவு. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டு நடந்ததாக பத்திரிகையில் படித்த ஞாபகம். நத்தம் விசுவநாதன் பெயரும் இதில் இருந்ததாக சொன்னார்கள். இப்படி எத்தனையோ நினைவுகள்.
எல்லாமே நீத்தார் நினைவுகள்.
குழிகளை தோண்டினால் வெறும் எலும்புகளே!
"தனி மனித சிந்தனை இல்லாமல் சமூக சிந்தனையோடு மனிதன் வாழவேண்டும்" என்றான் அரிஸ்டாட்டில்.
மக்களின் நினைவாற்றல் நீர்க்குமிழியின் ஆயுளை விட குறைவே.!
அதனால் அவர்களுக்கு அவ்வப்போது நினைவூட்டுகிறார் கமல்ஹாசன். அது அவரின் சமூக சிந்தனையின் வெளிப்பாடு..
பாவம் சுமக்காதீர்கள் என்று சொல்வது என்ன தேச விரோதமா?
ஊடக நண்பர் மைக்கை நீட்டி "கமல்ஹாசன் சொல்லும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறீர்களா " என்று கேட்டால் அத்தனை அமைச்சர்களும் கேளாக் காதினராக காரின் கண்ணாடிகளை ஏற்றி விட்டுக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருத்தர் "அவனுக்கென்ன பதில் சொல்ல?" என்று மரியாதையை மென்று துப்புகிறார்.அவர்களைத்தான் 'மாண்புமிகு' என்கிறோம்.
உண்மையைச்சொல்வதென்றால் "இந்த பீரியடு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை பேரதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். அவர்களின் மதிப்பு பிளாட்டினத்தின் பண மதிப்பை விட பன்மடங்கு உயர்வு. மன்னர்களை விட சக்கரவர்த்தி வாழ்க்கை. அத்தனை பேரும் சக்கரவர்த்தி திருமகன்கள்.!
"எடப்பாடியாரை மாற்ற வேண்டும்'" என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருப்பவர்கள் கட்சி தலைமையிடம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும். அவர்களது சட்ட மன்ற பார்லிமெண்டரி குழுவின் தலைவரிடம் கொடுக்காமல் ஆளுநரிடம் கொடுத்தது ஏன்?
பத்தினித்தன்மை காப்பவர்கள் என்கிற நம்பிக்கை இருந்திருக்குமேயானால் அவர்களை புதுவையில் காவலில் வைத்திருக்க வேண்டாமே? அந்த உயர்தர விடுதியில் அறையின் ஒரு நாள் வாடகை எட்டாயிரமாம். தனியார் அலுவலக தொழிலாளியின் ஒரு மாத சம்பளம்.!
ஆக அவர்களைத் தனியாக விட முடியவில்லை. அவர்களை நம்ப முடியாது என்று தினகரன் நம்புகிறாரா தினகரன்?
"தனியாக விட்டுப்பாரேன்.அவர்களை ஈரத்துணியால் கோழியை அமுக்குவதுபோல அமுக்குகிறோம்" எடப்பாடி அணி என தயாராக இருக்கிறது.
இந்த நிலையில்தான் சசிகலாவின் சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து நான்காண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்திருக்கிறது. அப்படியானால் ஒரு குற்றவாளியை பொதுச்செயலாளர் என்று ஒப்புக்கொள்ள தொண்டர்கள் தயாரா என்பது இனிதான் தெரிய வரும்.தினகரன் மீதான வழக்குகளின் நிலை எப்படி இருக்கும் என்பது அவரது அணுகுமுறையை பொருத்து அமையலாம்.
"சட்டரீதியான எல்லா கதவுகளும்அவர்களுக்கு அடைபட்டு விட்டன." என்கிறார்கள்.
ஆக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் 'மனநிலை 'யில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எஞ்சிய நான்காண்டு கால பதவியை இழக்க மாட்டார்கள்.
இதனால் எடப்பாடி-ஓபிஎஸ் பதவிகளுக்கு ஆபத்து இல்லை என்றே சொல்லலாம். சசிகலாவை பொதுச்செயலாளராக தொண்டர்கள் ஏற்பார்களா என்பதும் சந்தேகமே.!
வால் அறுந்த நரியினால் வளைக்குள் இருக்கும் நண்டை பிடிக்க முடியாது.
''இவன் போட்ட கணக்கு அவள் போட்ட கணக்கு இரண்டுமே தவறாகியது"
என்று கே.பி.எஸ்..பாடியது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.