Friday, August 4, 2017

மந்திராலயம் ...ஆன்மீகப் பயணம்.

என்னமோ  தெரியவில்லை. இந்த ஆண்டு பிறந்த நாளினை மந்திராலயத்தில்  வைத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது. அது எனது நெடுநாள்  ஆசையும் கூட!

தொடக்க காலத்தில் ரஜினிகாந்த் அங்கு  சென்று வந்ததால் ஏற்பட்டிருந்த  ஆசை.! அண்மையில் அவரை சந்தித்து  பேசிக்கொண்டிருந்தபோது ஆன்மீகம் பற்றிய பேச்சும் வந்தது..அப்போது என் பயணத்தைப் பற்றியும்   சொன்னேன். அவரிடம் பேசி முடித்துவிட்டு வீட்டுக்கு  வந்ததும் எனது பெயரனிடம் சொல்லி  மந்திராலயம் சென்று வருவதற்கான ரயில் பயண சீட்டுகளை முன்பதிவு செய்து கொண்டேன்.

இரண்டு மாதங்கள் சென்று  ஜூலை ௨௦ -ம் தேதி  சென்னை எழும்பூரில்  இருந்து  மந்திராலயம் பயணம் தொடங்கியது. சென்னை- மும்பை  தாதர்  சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் காலை ஆறு ஐம்பதுக்கு  புறப்பட்டது. பயணித்தது  இரண்டடுக்கு ஏசி பெட்டி. வசதியாகவே இருக்கிறது. ஆனால் டாய்லெட்  மிகவும் மோசம்.நோய்  தொற்று ஏற்படும் அபாயம்  இருக்கிறது. பயணிகள்  முன் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பேப்பர் படிப்பதற்கு  மட்டும் அல்ல  'அதற்கும் "மேலாக ...! புரிந்திருக்கும்.

தமிழக எல்லையை கடந்ததும் ஏர்டெல் சேவை துண்டிக்கப்பட்டது. ஆந்திராவுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்பது  மந்திராலயம்  அடைந்த பின்னர்தான் தெரிந்தது. தமிழகத்தைப் போல ஆந்திராவும்  வறட்சிதான்! ஆனால் காற்றாலை வழியாக  மின்சாரம் தயாரிப்பதில்  அவர்கள் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள் என்பதை  வழி  எங்கும்  பார்க்க  முடிந்தது.

மாலை  நான்கு மணி ஐம்பது நிமிடம். மந்திராலயம் சாலை . சின்ன ஸ்டேஷன்தான். ஐந்து நிமிடம் நேரம்தான் அங்கு ரயில்  நிற்கிறது. வெளியில் வந்தால் ஆட்டோ, பஸ், டாக்சிகள். ஆட்டோக்களில் ஆட்களை வழிய வழிய  ஏற்றுகிறார்கள். நான் இருநூறு ரூபாய் கொடுத்து தனி ஆட்டோவில்  சென்றேன். சாலைகள் பள்ளமும் மேடுமாக இருப்பதால் பத்து நிமிடம் அவஸ்தை. ஆனால் அதற்கு பின்னர் சீரான சாலைகள். ராயல சீமை என்பதால்  வறுமையின் நிறம் தெரிந்தது. இதனால்தானோ என்னவோ அதானி குழுமத்தின்  கால்கள் அங்கும் பதிந்திருக்கிறது. பெரிய போர்டு வைத்திருக்கிறார்கள்.

சாலையின்  இரு பக்கமும் சாணக்குவியல்கள். பொட்டுப் பொட்டாக  விழுந்த  மழையில் சாணத்தின்  'மணம்."

மந்திராலயத்தில்  தனியார்  லாட்ஜ்களை விட  ராகவேந்திரர் மடம் நடத்தும்  தங்குமிடம் தரமாக இருக்கிறது. ஆனால் அறை கிடைப்பது  குதிரைக் கொம்பு. துங்கபத்ரா நதியின்  இக்கரையில்  ராகவேந்திரர் ஆலயமும்  அக்கரையில்  கர்நாடகாவும்  இருக்கிறது. நதியில் நீரோட்டம் இல்லை. குட்டையாக  தேங்கி கிடக்கிறது. குளிப்பதற்கு நல்ல தண்ணீர்  கிடையாது. குடிப்பதற்கு மினரல்  வாட்டர்  பாட்டில்கள்.! கொள்ளை விலை இல்லை. ஓட்டல்களிலும்உ ணவில் கடுமையான காரம். மந்திராலயத்தில்  மதியம் இலவச உணவு. சாம்பார்  காரம் என்பதை மறந்து விடக்கூடாது. . ஊரே  வந்து சாப்பிடுகிறது. நல்ல  காரியம்தான். அவர்கள் வழங்கும் குடிநீரை  வாங்குவதற்கு  வெளியில்  ஐந்து  ரூபாய்க்கு பிளாஸ்டிக் டம்ளர் கிடைக்கும். டாஸ்மாக்கில் கிடைக்குமே அதே மாதிரியான  டம்ளர்தான். தொட்டுக்க காய்கறி  இல்லை. காரணம் என்னவென  தெரியவில்லை.

நான் சென்றிருந்தபோது  ஏகாதசி என்பதால் கோவிலில்   பிரசாதங்கள் வழங்கப்படவில்லை.. மாலை மயங்கிய நேரத்தில் ஆலயம் சென்றேன். அவ்வளவாக  கூட்டம் இல்லை.இரண்டு  முறை  தரிசனம்  செய்ய முடிந்தது.
அவ்வப்போது  மின் தடை. சாலைகளில்  குறுக்கும் நெடுக்குமாக  மாடுகள். ஊரும் அவ்வளவாக பெரிதில்லை. சின்ன சின்ன சந்துகள். இதுதான்  மந்திராலயம்.

ஆலயத்துக்குள் செல்வதற்கு முன்னரும் பின்னரும்  புகைப்படம் எடுத்து தருகிறவர்களின் அன்புத் தொல்லை. இருபது ரூபாய்க்கு ஒரு படம். அரைமணி நேரத்தில் கிடைத்து விடுகிறது.

இன்னும் அனுபவம்  இருக்கிறது.

No comments:

இது மகா கேவலம்!

"என்னதான் கோவம் இருந்தாலும் போய்த்தான் ஆகனுங்க. கல்யாணம் காட்சிக்கு போவலேன்னாலும் கேத காரியம் .துஷ்டிக்கு போகணும்!" சர்வ சாதா...