
இருபது ஆயிரம் வரை கொள்ளை அடிக்க வசதி வாய்ப்பு செய்து கொடுத்த புண்ணியவான் அல்லது புனிதவதி யார் என்பதை சொல்லும் கடமை அமைச்சருக்கும் எடப்பாடி அண்ட் ஓபிஎஸ் கம்பெனிக்கும் இருக்கிறதா இல்லையா? இவ்வளவு பகிரங்கமாக தினகரன் குடும்பத்தின் சொத்து விவரம் கொடுத்திருக்கிற போது வருமானவரி துறை என்ன செய்ய வேண்டும்? மொட்டைக்கடுதாசிகளையும் நம்பி நடவடிக்கை எடுக்கிற புலனாய்வு துறை என்ன செய்யப்போகிறது? பொறுப்பு ,கடமை, சத்தியம் தவறாத அமைச்சரின் தகவலை கப்சா என்று சொல்லிவிடுமோ? தெரியவில்லை.நாம் எத்தகைய நியாயவாதி நேர்மையாளர்களிடம் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிகிறபோது அடிவயிறு கலங்குகிறது.
"எப்படியும் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் " என்று எடப்பாடி ஓபிஎஸ் அணியினர் நம்புகிறார்கள்.பாஜகவும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. எனது நம்பிக்கையும் அதுதான்.இரட்டை இலை கிடைத்த பிறகுதான் இரண்டாவது இன்னிங்க்சை ஆரம்பிப்பார்கள். ஸ்லீப்பர் செல்கள் யார் யார் என்பதும் அப்போதுதான் தெரியவரும்.
"ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் பொய் "என்று அமைச்சர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததை மத்திய அரசு மாநில அரசு இரண்டுமே கண்டு கொள்ளவில்லை. ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு 505 என்கிற தகவலே அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அளவுக்கு உயர்ந்திருந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் அது சதியாகவும் இருக்கலாம் அல்லவா? திட்டமிட்டுத்தான் நடந்திருக்கிறது என்று சந்தேகம் வருகிறது.
உண்மை வெளிவரும் வரை நாம் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கப் போகிறோம் .