செவ்வாய், 31 அக்டோபர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 7.) விஜய்க்கு அடுத்து நயன்?

                             " அம்மா நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டிங்க. கை நெறய உங்க பிள்ள சம்பாதிக்கிறான். அவள வெச்சு காப்பாத்த மாட்டானேன்னு நெனக்கிறிங்களா...உன்னயும் அப்பாவயும் கை விட்ர மாட்டேன்மா!"

                          "தெரியும்பா. உன்ன விட்டா எங்களுக்கு வேற  நாதி ஏது.? .அப்பா  கவர்மெண்டுல வேலை பாத்திருந்தா பென்சனாவது வரும். லாரி ஆபீஸ்ல மானேஜர் வேலை.ராத்திரி பகல்னு கெடந்தார். சக்கையானதும் கையில கொடுத்த பணத்திலதான் இந்த வீட்டை வாங்கினார்.சொந்த வீட்லதான் ஆவி பிரியனும்னு ஆசை.அதான் இங்கேயே ரெண்டு பெரும் கெடக்கிறோம். உன்  சந்தோசத்துக்கு குறுக்க நிக்க மாட்டன்பா!.அந்த பொண்ணையவெ கட்டிக்கோ .?"
                     பார்வை இல்லாத சாந்திக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தது. நண்பர்கள் அனைவரும் என்னுடைய மனைவியின் அழகைப் புகழ்ந்தார்கள். நான் கொடுத்து வைத்தவன் என்பதாக சொன்னார்கள். கோவில் சிலையை  விட  அழகாக இருக்கிறாள் என்று பொறாமை வருவதாகவும் சொன்னார்கள்..நவீன சிகிச்சை முறையில் பார்வையை பெற முடியும் என்றார்கள் இது போதாதா எனக்கு! எழுத முடியாத அளவுக்கு மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு. முதலிரவு எனக்கு.!

                  நான் அறைக்குள் சென்றதை உணர்ந்து எழுந்து நின்றாள் சாந்தி. ஒவ்வொரு அசைவையும் அவளால் உணர முடிகிறது.

                  "உக்காரு சாந்தி!"

                 "மாமா அத்த சாப்பிட்டாங்களா?"

                "ம்ம்.! இந்நேரம் படுத்திருப்பாங்க. பத்து மணிக்கு மேலதான் நல்லநேரம்னு அய்யர் குறிச்சு கொடுத்திருக்காரு.அதான் லேட்!" பக்கத்தில் அமர்ந்து தோள் அணைத்தேன். எனக்கு சிலிர்த்தது. அவளுக்கும்  அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.மெல்லிய நடுக்கம் .எங்கள் குடும்பம் பற்றிய எல்லா விவரங்களையும் முன்னதாகவே சொல்லி விட்டதால் அதைப் பற்றி பேச வில்லை.அவள் தலையில் வைத்திருந்த சாதி மல்லிகையின் மணம் என்னை என்னவோ செய்கிறது. எழுந்து  நின்றவள் என்னை கைகளால் தடவி, என் பாதம் அறிந்து கண்களில் ஒற்றிகொண்டு  எழுந்தாள்.அவளது  நெருக்கம் எனக்குள் போதையாகியது. நெஞ்சு படபடக்கிறது.

             "அவசரமா?" என்னுடைய கையை அழுத்துகிறாள்.

             பொய் சொன்னேன். "இல்லம்மா!"

             "மடியில படுத்துக்கவா..?.தூங்கறதுக்கு முன்னாடி அம்மா மடியிலதான்  படுத்துப்பேன்."

           படுக்கவைத்தேன். ஆதரவாக தலையை தடவி, கன்னம் தொட்டேன்.
" சந்தோஷமா இருக்குங்க."என்றவளின் கண்களில் நீர் வழிவதை  உணர முடிந்தது. "எதுக்கு சாந்தி அழற?"
             "கண்ணு தெரியாத எனக்கு இப்படி ஒரு வாழ்வா? உங்களை  பாக்க முடியலியே!  நீங்க கருப்போ செவப்போ  தெரியாது.......குட்டையா நெட்டையா, முரடரா, நல்லவரா ,கெட்டவரா..... எதா இருந்தா என்ன  எனக்கு நீங்கதாங்க   கடவுள். கடேசி வரை  வச்சு என்னை காப்பாத்துவிங்கள்ல."?  என் மடியில் முகம் புதைத்து விம்மி அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது என்பது தெரியவில்லை. எனக்கு பேச்சும் உடனடியாக  வரவில்லை.நான் அவளை கை விட்டால் மனிதனே இல்லை என்பதை மனம் அறைந்து சொன்னது.....

          மெர்சல் படத்துக்கு  எப்படி  தளபதி விஜய்க்கு மத்தியிலும் மாநிலத்திலும்  இருந்து நெருக்கடிகள் வந்ததோ அதைப் போல  அறம் படத்துக்கும் தொல்லைகள் வரலாம் என எதிர்பார்க்கிறார்கள். அந்த படத்தில் நயன்தாரா பேசியிருக்கிற வசனங்கள் சமூக அவலங்களை கடுமையாக சாடி இருக்கிறதாம்.இந்த படத்தில் அரசு அதிகாரியாக வருகிறார்.அதாவது நேர்மையான கலெக்டர்.

                

                  "      

சனி, 28 அக்டோபர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 6.) அதிரடிகளுடன் கமல் !


                     "அம்மா ..இப்ப என்னதான் சொல்ல வர்றிங்க?"

                    "அந்த பொண்ணு உனக்கு வேண்டாங்றேன்.பார்வை தெரியாத அவளுக்கு  வீட்ல அவங்கம்மா ஹெல்ப் பண்ணிருப்பாங்க. டாய்லெட் ,பாத்ரூம் ,இப்படி எல்லா விஷயத்துக்கும். ஒவ்வொரு வேலைக்கும் அம்மா துணை,உதவி  வேணும்! பெத்தவங்க கடமை.குருட்டுப்பொண்ணை வளர்த்து ஆளாக்கிற கஷ்டம் அவங்களுக்குத்தான் தெரியும். அவ மருமகளா வந்தா நானும் செய்வேன்.ஆனா எனக்கே இன்னொருத்தர் ஹெல்ப் வேண்டியிருக்கு. அப்பா கஷ்டம் பார்க்காம பண்றார்.நம்மள நம்பி வந்திட்டவளை விட்ரக்கூடாதேன்கிற  கடமை. நடக்கமுடியாம அவர் என்னை தாங்கிக்கிட்டு  தள்ளாடி தள்ளாடி படுக்க வைக்கிறபோது எனக்கு கண்ல முட்டிக்கிட்டு வரும்.இப்படி இருக்கிற நான் அவளுக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு நம்புறியா?" சன்னமான குரலில் சரஸ்வதி அம்மா பேசுகிறாள்.

          "அப்பா உனக்கு செய்றமாதிரி நானும் அவளுக்கு தேவையான எல்லா உதவியையும் பண்ணிடுவேன். ஒரு புருசனா ஒய்புக்கு செய்ற கடமைம்மா! அப்படி செய்றதும் ஒரு சுகம்தானே."

         "இதிலேயும் சுகம் பார்க்கிற.!ம்ம்ம்! அது உன் வயசுக்கேத்த ஆசைதான். கட்ன புருசனா இருந்தாலும் உன் அப்பாவை என் பாத்ரூமுக்குள்ள விடமாட்டேன். அந்த வெட்கம்,கூச்சம் இருட்டிலேயும் இருக்கும்டா! கண்ணு தெரியாத பொண்ணுங்கிறதால நீ உதவிங்கிற பேர்ல செய்றத அந்த பொண்ணு அனுமதிப்பான்னு நம்புறியா?அனுமதிக்கவே மாட்டா.தட்டுத் தடுமாறி டாய்லட் போவாளே தவிர உன் உதவியை தேடமாட்டா.நீ எதையோ எதிர்பார்த்து அந்த ஆர்வத்தில சொல்றே? கல்யாணத்துக்குப் பிறகு அவளுக்கு சேவை செய்றதை கடமையா நினைக்க மாட்டேங்கிறது எனக்கு தெரியும். உன் மனசுல சினிமாவ பார்க்கிற. நான் உன்னை பெத்து வளர்த்தவப்பா! எனக்கு தெரியாதா?"

         எனக்கு என்னமோ அம்மா சொன்னதில் எதுவுமே நியாயமாகப் படவில்லை. புதிதாக கல்யாணம் செய்து கொள்பவர்கள் ஒரே பாத்ரூமில்  குளிப்பதும் ஒரு சுகம்தானே.பொண்டாட்டியின் பாவாடையை,ரவிக்கையை  முகர்வது கூட ஒரு பரவசம் என்பதாக என் ஆபீஸ் தோஸ்த் சொல்லும்போதே எனக்குள் உணர்வுகள் அலை அடிக்கும். ரதி மாதிரியான ஒருவளை எனது  மனைவியாக அடைந்த பிறகு ரசனையுடன் அணுகுவது என்ன தப்பு?,

     "அம்மா...உங்க கவலை தேவையில்லாததும்மா! வீணா ஏன் கண்டதை நினைச்சு உங்களை கஷ்டப்படுத்திக்கிறிங்க?" என்றபடி அவளின் அருகில் சென்றதும், " நம்ம மூணு பேருக்கும் சமைக்கிறதுக்கே நான் மூச்சு வாங்கிப் போறேன்.சரிப்பா இன்னொரு ஆளுக்கும் சேர்த்து சமைக்கிறதில என்னா செத்தா போயிடுவேன்?"என்று பெருமூச்சு விட்டது என்னை சுட்டது. ஆனாலும் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கொள்வதில் பிடிவாதமாகவே இருந்தேன். கோமாளி தேசத்தின் குடிமகன் அல்லவா!

        அம்மா எனது பதிலை கேட்டதும் அதிர்ந்தாளா என்பது தெரியாது.

             மந்திரி பிரதானிகளோ ,தலைவர்களோ யாரும் செய்யாததை  இந்த கமல் பண்ணுவார் என்று எந்த கட்சியினருமே எதிர்பார்க்கவில்லை. சூரிய உதயத்தையே பார்த்திருக்கமாட்டார்கள். நுரை மெத்தையில் இதமான வெதுவெதுப்பில் எப்படி எப்படியோ உருண்டு புரள்கிற கோட்டை சீமான்களுக்கு இதுநாள்வரை கொசஸ்தலை ஆற்றில் சேர்ந்துள்ள கழிவுகளும் சாம்பலும் கமல்ஹாசன் கண்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது? 

              இன்னும் பல அதிரடிகள் ரெடியாக காத்திருக்கிறது என்கிறார்கள் .கமலின் வட்டாரத்தில்!

         அரசியலிலேயே ஊறி வளர்ந்தவர்களைப் போல வாய் கிழிய கமலை சாடியவர்களும் நக்கலாடிய வாயினரும் பேச்சிழந்து கிடக்கிறார்கள். பிஜேபி தலைகள் தொங்கிகிடக்கிறது. வஞ்சகம் இன்றி பாராட்டியவர்களை இனம் கண்டு தொல்.திருமாவளவனுக்கும் மத்திய அமைச்சர பொன்னாருக்கும் நன்றிகளை தெரிவித்திருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. ஆட்சியர் சுந்தரவல்லிக்கும் மக்களின் நன்றிகளுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு விட்டார்,

     'எனது அரசு, எனது தலைமையிலான அரசு' என்கிற ஏகாதிபத்தியத்தின் ஆணவக்குரலையே கேட்டுப்பழகிப்போன செவிகளில் கமலில் அடக்கமான குரல் ஆளுமைக்கு உரியதாக விழுகிறது.

         இதோ தெர்மாகோல் ஸ்பெஷலிஸ்ட் செல்லூர் ராசு சொல்கிறார் 'ஏழைகளை சர்க்கரை விலை உயர்வு ஒன்றும் செய்யாது.பாதிக்காது" என்கிறார்  அந்த பொருளாதார மேதை .

              இன்னொருவர் இந்த அரசு பொங்கலுக்கு இருக்காது என்று ஜோதிடம் சொல்கிறார் தினகரன்.கட்டம் கட்டியே பழக்கமானவர்களுக்கு எந்த கட்டத்தில் ராகு இருக்கிறான், சனி பார்க்கிறான் என்பது தெரியாமல்  போகுமா?   

வெள்ளி, 27 அக்டோபர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 5.) தப்பினாரய்யா சேகர் ரெட்டி.

                         வளைப் பார்த்ததும் எனக்குள் இனம் புரியாத கிளர்ச்சி. பாறையில் விழும்  அருவியின் பனிச்சிதறல்கள் நிர்வாண உடம்பில்  பட்டதும் ஏற்படுகிற   சிலிர்ப்பு. அவள் அத்தனை அழகு. தமன்னாவைப் போன்ற  பால் வண்ண தேகம். நெற்றியில் சின்னப் பொட்டு. புருவத்தை நேர்த்தியுடன்  திரட் பண்ணியிருந்தாள். சற்று புஷ்டியான கன்னம்.வெள்ளைப் பணியாரம் போல! இதழ்கள் சிவந்திருந்தன லிப்ஸ்டிக் பூச்சு இல்லாமல்.! அவள் முகத்துக்கு அந்த கருப்புக்கண்ணாடி எடுப்பாகவே இருந்தது.

                     சற்றே கீழே இறங்கினால் கச்சைக்குள் அடங்காத கர்வமாய் நிமிர்ந்து பார்க்கிறது அவளது பருவக் கிண்ணங்கள்..மெல்லிய ஷிபான் சேலை  வழுக்கும் போதெல்லாம் முந்தானையை எடுத்து இடது பக்கத் தோள் மீது போடுகிறாள் .அப்போதெல்லாம் அவளது கர்வத்தில் ஒன்று ஏறி இறங்கியது.அவளைப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள். ரதியின் சிலையை விட இவள் அழகானவள் ஆயிற்றே,.! மணந்தால்  அவளுடன்தான் என்பதாக அகத்தில் எழுத்தாணியால் கீறி வைத்து விட்டேன் . அக அழகு எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனாலும்  புற அழகினால் அவளுக்கு நிரந்தர அடிமையாகி விட்டேன்.அவள் என்னை புறந்தள்ளினால் இருக்கவே இருக்கிறது நித்தியானந்தா ஆசிரமம்.அங்கே  அவரடி கிடக்கலாம் என்பதாக ஆறாம் அறிவு சொல்லியது. எந்த அளவுக்கு நான் பைத்தியமாகி விட்டேன் என்பதை இப்படித்தான் சொல்ல முடியும்.

               கழுத்தில் தாலி இல்லை. மெல்லிய சங்கிலி கிடந்தது.அது தாலியை சுமக்கும் அளவுக்கு வலிமை பெற்றிருக்கவில்லை.காலில் மிஞ்சி கிடையாது. நெற்றி வகிட்டில் குங்குமமும் இல்லை.இதைவிட வேறு என்ன அடையாளம்  மணமாகாதவளுக்கு இருக்க முடியும்?

                  இவ்வளவு சொன்னவன் கட்டாயம் ஒன்றை சொல்லாமல் இருக்க முடியாது. அவளுக்கு பார்வை இல்லைங்க.! அதனால் என்ன ? அம்மா என்னுடன் சண்டையிட்டாளா என்ன சொன்னாள் என்பதை அப்புறமாக சொல்கிறேன்.

                            மோடி அரசு எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது  வருமானவரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஓபிஎஸ்.சின் நண்பர் என சொல்லப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் சிலர் வீடுகள் அலுவலகங்களில் இருந்து 134 கோடி  ரொக்கம்,130 கிலோ தங்கம் கைப்பற்றப்படடன.

                      அதில் 34 கோடிக்கு புதிய 2000 நோட்டுகள்.புதிய நோட்டுகள் வெளியான ஓரிரு நாட்களில் இவருக்கு மட்டும் எப்படி கோடிகளில் கிடைத்தது? சி.பி.ஐ.யின் கண்களுக்கு தெரியாமல் போகாது என்று அப்பாவி மக்கள் நம்பினார்கள் .கோமாளி தேசத்து பிரஜைகள்தானே! நம்பினார்கள்.

               ஆனால் மாதங்கள் பல கடந்தும் குற்றப்பத்திரிகை எழுதப்படவில்லை. ராஜீவ்காந்தி படுகொலையில் புலிகளாக இருந்தோம் என சொல்லிக்கொண்ட சி.பி.ஐ.யினால் சேகர் ரெட்டியின் நோட்டு விவகாரத்தில் துப்புத் துலக்க முடியாமல் போனதேன்? 

                  இதுக்குப் பெயர்தான் அரசியல் ! எந்த வங்கியில் இருந்து நோட்டுகளை பெற்றிருப்பார் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும் நாம் கோமாளி தேசத்து பிரஜைகள்.        

புதன், 25 அக்டோபர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள். ( 4 ) எஸ்.ஏ.சி. அக்னிப்பார்வை.

                                     ஜெயமோகனின் எத்தனையோ சிறுகதைகள் இருந்தும் அவள் 'மன்மதனை' படிக்க சொன்னதின் நோக்கம் எதுவாக இருக்கும்?

                                 எனக்குத் தெரியவில்லை. அவள் எங்காவது தென்பட மாட்டாளா என்று  தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்து மகிழும் ஜாதியாக இருப்பாளோ! உருண்டு திரண்டு இருக்கிற தனங்களைத் தடவிப்பார்த்து  கர்வம் கொள்பவளாக இருப்பாளோ! தனது இளமையை யாராவது பாராட்ட மாட்டார்களா, பெருமூச்சு விடமாட்டார்களா  என்கிற ஏக்கம் இருக்குமோ?இப்படியெல்லாம் அவளைப்பற்றி நினைக்கத் தோன்றுகிறது. என்னை மிகவுமே காயப்படுத்தியிருக்கிறாள்.!

                            இளம்  பெண்ணின் கர்வமே அவளது மார்புகள்தான்! அவை தெய்வீகமானவை. உளி அழுந்தி பதிந்து விடக்கூடாது என்பதில் சிற்பியும்  கவனமாக இருப்பான்.ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறிதாகவும் இருந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாகவும்  இருப்பான். இயற்கையில் அவ்வாறு இருப்பதில்லை என்றாலும் கூட அவைகள் சம அளவில் திரட்சியுடன் இருக்கவேண்டும் என்பது நியதி.

                    ஜெயமோகன் வர்ணித்த அந்த பூக்கடைக்காரி கற்பனை என்றாலும் எங்கோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பாள்.!

                     "அவளுடைய முழுமையான உடல் மேல் பட்டுத்துணி போல் பரவிப்பரவி வழிந்தாலும் கூட அவளுடைய மார்புகளிளிருந்து ஒரு கணம் கூட தன் பிரக்ஞையின் மையம் விலகவில்லை என உணர்ந்திருந்தான். சிற்பங்களில் எப்போதுமே செப்புகளை கவிழ்த்தது போல பெரிதாக திரட்சியாக செதுக்குவார்கள்." என்கிறார் ஜெயமோகன். இனியும் தொடர்ந்து மன்மதன் கதையைச்சொன்னால் எனக்கு கெட்ட பெயர் வந்தாலும் வரலாம். கோமாளி ராசாவுக்கு அந்தப்பெயர் வேண்டாம்.

                   களவாணியை நாட்டாமையாக நியமித்துவிட்டால் திருட்டுப் பயம் ஒழிந்துவிடும் என்று ஒரு கிராமத்தினர் நம்பினார்கள். அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்பது பிறகுதான் தெரிந்தது. " ஓகோ  அவ்வளவு பெரிய பதவிக்கு களவாணித்தனம்தான் தகுதியாக இருக்கும் போலிருக்கிறது என்று யாருக்கும் தெரியாமல் ஆளுக்காள் திருடத் தொடங்கி விட்டார்கள்.அந்த ஊர் எப்படி உருப்படும்?  

               வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறிய பெண் உண்ண உணவு  இல்லாமல் பட்டினியுடன்  நடந்து களைத்து ரயிலடி ஓரமாக ஒதுங்கி படுத்துக் கிடந்திருக்கிறாள். பால் வரண்ட பசுவின் மீது சாலையில் திரியும் காளை ஏறினால் எப்படி இருக்கும்?அப்படி ஒரு ஓநாய் அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறது. நாய்களின் செக்ஸ் கூட  மனிதனுக்கு ரசனைதான். அதையும் படம் எடுப்பார்கள். சிலர் கல் எறிவார்கள். ஆனால் பலவீனமாய், போராடும் வலிமையையும் இழந்த  அந்த பெண்ணை காமாந்தகன் கெடுத்ததை படம் எடுத்திருக்கிறார்கள். நாய் கூடுவதை ஆபாசமாக கருதி கல்  வீசும் கண்ணியவான் ஒருவன் கூட அங்கில்லை. இத்தகையவர்கள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்கப்போகிறார்களாம். போங்கடா நீங்களும் உங்கள் மனிதாபிமானமும்.

                   உழைத்து சம்பாதிப்பதை விட அரசியலில் சம்பாதிப்பதுதான் லாபம் என்றாகிவிட்ட நாட்டில்தான் நாமும் வாழ்கிறோம். கந்து வட்டிக்  கொடுமையால் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு குடும்பமே கருகிப்  போயிருக்கிறது.நாடெங்கும் டெங்கு சாவுகள். ஆனால் எம்.ஜி.ஆர். பெயரைச்  சொல்லி அரசு விழா கொண்டாடிவருகிறது.கோடிகளில் செலவு. மக்கள் பணம் இப்படியெல்லாம் பாழாகிறது!

             தளபதி விஜய் நடித்த மெர்சலுக்கு பிஜேபி குடைச்சல் கொடுத்ததைப் போல மோகன்லால் -விஷால் நடித்திருக்கிற ஒரு மலையாளப்படத்துக்கு கேரளா பிஜேபி பிரச்னை பண்ணப் போகிறது என சொல்கிறார்கள். அந்த படத்தில் விஷால் வில்லனாக நடித்திருக்கிறார். மாட்டுக்கறி
பிரச்னையை   படம் சொல்கிறதாம்.இது போதாதா? மத ரீதியான பயமுறுத்தல்,அதிகாரத்தை வைத்து அச்சுறுத்தல் என ஆட்சி நடக்குமேயானால் அதை ஜனநாயகத்தின் துணையுடன் அகற்றுவது  நமது கடமை. 

            தற்போது மெர்சல் படத்தின் வசூல் 20௦ கோடியை எட்டும் என்கிறார்கள். சும்மா இருந்த விஜய்யை மத ரீதியாகவும் தாக்கத் தொடங்கி விட்டார்கள். விஜய்யை 'ஜோசப் விஜய்' என்பதாக சொல்ல அவரும் அதே பெயரில் நன்றி தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். பிஜேபி அதிமுக இரண்டும் சினிமாக்காரர்களின் வெறுப்பையும் இலவசமாக சம்பாதித்திருக்கிறது.




             "தமிழகத்தின் அரசியல் அசிங்கமாக இருக்கிறது. அருவெறுப்பாக இருக்கிறது.கேவலமாக இருக்கிறது" என்று தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரை கர்ஜிக்க வைத்திருக்கிறது. வெகுண்டெழுந்து அவர் 
சொல்லியிருக்கும் புரட்சி என்று வெடிக்குமோ, தெரியவில்லை.
சொல்லியவை விஜய்யின் குரல் என்றே கருத வேண்டியிருக்கிறது.    

சனி, 21 அக்டோபர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள் .3



                   "என்ன ஆளுய்யா நீ..ஜெயமோகன் என்ன எழுதிருக்காருங்கிறத சொல்லாமல் எஸ்கேப் ஆயிட்டியே?"ன்னு கேட்பிங்க என்பது எனக்கு புரியாமல் இருக்குமா? இருந்தாலும் கொஞ்சம் தயக்கம்.

                   கோவிலில் பூ கட்டி விற்கும் ஒரு கருத்தப் பெண்ணை சிலைகளைப்  பார்க்க செல்லும் ஒருவன் பார்த்து விடுகிறான். அவன் கண்களுக்கு அவள்  எப்படி இருக்கிறாளாம் என்பதை . ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.

              "அப்பழுக்கற்ற வடிவ கச்சிதம் கொண்ட  மகத்தான உடல்.துதிக்கை என உருண்டு கனத்த இரு தொடைகள். இரு மடிப்பு வளைவுகள் கொண்ட  ஒடுங்கிய வயிறு.இறுக்கமான உருண்ட சிற்றிடையில் வியர்வையின் மெல்லிய ஈரம். அவன் கண்களை  நிறைத்து ,அவன் பிரக்ஞையை நிறைத்து , அவனை முழுமையாக்கிய மார்புகள். இரு இளநீர்க்காய்களைப் போல நெருக்கமாக ஒன்றை ஒன்று மெல்ல, முட்டி, ஒரு மென்மையான குழியை  உருவாக்கியபடி மெல்ல அதிர்ந்த ஈரமான குழி..எத்தனை அற்புதமான மு.."!

          இப்படியாக அவளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிற ஜெயமோகன்  ரதியின் சிலையை எப்படியெல்லாம் வர்ணித்திருப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை. ,அதற்கான சிற்பக்கலை சாத்திரங்களுடன் வர்ணத்திருப்பது  எந்த எழுத்தாளரும்  எழுதாதது என்றே நினைக்கிறேன்.. வாசகனை எப்படி தனது ரசிகனாக மாற்றுவது என்கிற வார்த்தை வித்தை அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.   கோமாளி தேசத்து பிரஜையான எனக்கு  சில நிமிடம்  பில்லியன் ரைடராக வந்திருந்த  தேவதை என்னிடம் எதையோ சொல்ல நினைத்திருக்கிறாள்? மீண்டும் ஒரு வாய்ப்பு வருமேயானால் அவளிடம் நிறைய பேசுவேன்.

           எப்படியாவது ஊருக்குப் போகவேண்டும் என்று  தவித்தவர்களின்  வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டவர்கள் ஆம்னி பஸ்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன் .ஆம்னி  பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி இங்கு இல்லை என்பது அரசுக்கும் தெரியும்.அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் ஆன்லைனில் பதிவு  செய்து கொள்ளும் வசதியுடன் அத்தகைய பஸ்கள் சர்வ சாதாரணமாக  சாலைகளில் செல்கின்றன. கல்யாணம்,காதுகுத்து ,சுற்றுலா என மொத்தமாக காண்ட்ராக்ட்  அடிப்படையில் செல்வதாக இருந்தால் மட்டுமே ஆம்னி பஸ்கள் அனுமதிக்கப்படும்.

           ஆனால் திருச்சி, மதுரை,திருநெல்வேலி என ஆங்காங்கே பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லும் பஸ்களுக்கு எப்படி அனுமதி? அதுவும் விழாக் காலங்களில் பயணிகளிடம் ஆயிரங்களில் கட்டணம்  வசூலிப்பது அரசுக்கு தெரியாதா? ஊழல் இல்லை ..இல்லவே இல்லை என  சொல்கிற கோமாளிகள் மனசாட்சியின் குரல்வளையை  நெரிக்காமல் பதில் சொல்லவேண்டும்.

              "சென்னை கொசுக்களுக்கு வீரியம் இல்லை. மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் இருக்கிற கொசுக்களுக்குத்தான் வீரியம் அதிகம். அந்த கொசுக்கள் பஸ்கள் வழியாக சென்னைக்கு வந்து டெங்குவை பரப்புகின்றன"என்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சொன்னதாக ஒரு செய்தியை விகடன்  இணைய தளத்தில் படித்தேன்.

           மதுரை ,சேலம் வாழ் கொசுக்களுக்கு மட்டும் வீரியம் எப்படி வந்திருக்கும்? மதுரையில் இருந்து கோட்டைக்கு வந்திருக்கிற அமைச்சர்  செல்லூர்காரர்தான் பதில் சொல்லவேண்டும்.

கோமாளி தேசத்து ராசாக்கள். 2

                             பெரியார் பாதை வரை பில்லியனின் அமர்ந்து  வந்தவள்  உன்னுடன் எதுவுமே பேசவில்லையா? உங்களுக்கு நிச்சயம் இந்த கேள்வி எழும்.

                    பேசினாள். நல்லாவே பேசினாள் .! எனக்கு சற்று உறைக்கவும்  செய்தது.

                 "பிரஸ்னு சொல்றிங்களே..உங்களுக்கு  ஜெயமோகனை தெரியுமா?"என்பது அவளது முதல் கேள்வியாக இருந்தது.

                 எங்கள் வட்டத்தில் அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. பிரஸ்  கான்பரன்ஸ் என்றால் இருநூறுக்கும் அதிகமான ஆட்கள் வருகிறார்கள். டிவி, நெட் ,என கடந்து பேஸ்புக்,டிவிட்டர் ஆட்களும் வந்துவிடுகிறார்கள். அவர்களில் யார் யாரோ ஜெயமோகன்கள். !எனக்கெப்படி தெரியும்? "தெரியாது " என்றேன்.

              செல்லமாக வலது தோள்பட்டையில் ஒரு தட்டு. "என்னங்க நீங்க. ஜெயமோகனை தெரியலேன்றீங்க? எவ்வளவு  பெரிய எழுத்தாளர். சினிமாவுக்கும்  எழுதுறார்.அவரை தெரியலேன்னா...?" என்றவாறே இழுத்தாள். இதற்காக அவள் இன்னொரு தட்டு தட்டினாலும் சுகம்தான்
.தேவதை குட்டினாலும் சுகம்தானே!

               "அவரை தெரியாது. ஆனால் கேள்விப்பட்டிருக்கேன். கமல் சார் பிரண்ட்"

                "எஸ் எஸ்..அவரேதான்.  அவரோட மன்மதன் சிறுகதை படிச்சிருக்கிங்களா?" என்று கேட்டு விட்டு அவளே பதிலையும்  சொல்கிறாள். "நீங்க எங்கே படிச்சிருக்கப் போறிங்க!சிஸ்டம் இருந்தா ஜெயமொகன்னு சர்ச் பண்ணி  கதையைப் படிங்க."என்றாள். எனக்கு வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால் கதைகள் மீது அவ்வளவாக ஈடுபாடில்லை.

                அவள் அந்தளவுக்கு அழுத்தம் கொடுத்ததால்    வீடு சென்றதும் மன்மதன் கதையைத்தான் தேடிப்பிடித்துப்  படித்தேன். அவள்  பெரிய  ஆள்தான் என்பது புரிந்தது.  அடேங்கப்பா! என் முதுகு  பெரிய பாக்கியம்தான் செய்திருக்கிறது.

                     பெண்ணின் மார்பழகை  அப்படி வர்ணித்திருக்கிறார் ஜெயமோகன்!

                     இந்த கோமாளி ராசாவுக்கு நன்றாக  புரிந்தது. வலிய வந்து லிப்ட் கேட்டு அமர்ந்தவளுக்கு நான் கோயானாக தெரிந்திருக்கிறேன்.


"பிரதமர் மோடி இருக்கும்வரை அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது" என்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  பேசி இருப்பதாக  வாட்ஸ் அப்பில் செய்தி. அதற்கு  பருத்திவீரன் சித்தப்பு சரவணன் பேசிய வசனத்தைப் போட்டு கிண்டல்  செய்திருந்தார்கள்."அப்ப ஓனர் நீ இல்லையா?"என்கிற அந்த சொல்லுக்கு எவ்வளவு பெரிய அர்த்தம் கண்டு பிடித்திருக்கிறார்கள்!நம்மவர்களுக்கு நக்கல் நன்றாகவே வருகிறது.!

                நமது அமைச்சர்கள் எந்த அளவுக்கு பிஜேபிக்கு விசுவாசிகளாகி   இருக்கிறார்கள் என்பதை விட அரண்டு போய் இருக்கிறார்கள் என்கிற  அச்சமே  தெரிகிறது. இதே அளவுக்கு மெர்சல் திரைப்படத்தைக்கண்டு   பிஜேபி தலைவர்களும் மிரண்டு போய் இருக்கிறார்கள்.

             விஜய் பேசுகிற ஜி.எஸ்.டி வரி பற்றிய வசன வரிகள் அவர்களது மோடியின் இமேஜில் கோடுகளை  வரைந்து விட்டதைப்போல் உணர்கிறார்கள். போதாக்குறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் அவர்களை ரொம்பவே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. விஜய் ரசிகர்களோ  பிஜேபி சொன்ன தேர்தல் கால வாக்குறுதிகளை  நினைவு படுத்தி கேள்விகளை அடுக்கி வருகிறார்கள் .எதிரிகளை உருவாக்குவது நமது நடவடிக்கைகள்தான் என யாரோ சொன்னதாக நினைவு!

               'எங்கள் வங்கி கணக்கில் இன்னமும் மோடிஜி பணத்தைப் போடவில்லையே ?" என கேட்கிறார்கள்.

              மெர்சல் திரைப்படத்துக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய விளம்பரத்தை  அகில இந்திய அளவில் பிஜேபி தேடிக் கொடுத்திருக்கிறது.         

          

வெள்ளி, 20 அக்டோபர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.

                         அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். ஸ்கை  வாக் நெருங்கியபோது அழகான பெண்--இளம் பெண்தான் கட்டை விரல் காட்டி லிப்ட் கேட்டாள். மொபெட்,பைக், ஸ்கூட்டர் என நான் மாறி இருந்திருந்தாலும்  ஒரு கிழவி கூட லிப்ட் கேட்டதில்லை.

                       அதிசயமாக இன்று.! அழகான தேவதை ! பேயே இரங்கும் என்கிற போது இளம் பெண்ணுக்கு நான் இரக்கம் காட்டாவிட்டால் மனிதனே இல்லை என மன சாட்சி இடித்தது. ஜீன்ஸ் தேவதை வாகாக கால்களை இரு பக்கமும் போட்டு  பில்லியன் ரைடராக எனது தோள்கள் மீது கையைப் போட்டுக்கொண்டு "ம்..ஓகே ,போலாம்" என அனுமதி கொடுக்க  மெதுவாக எனது ஸ்கூட்டர் வேகமெடுத்தது.சற்று நடுக்கம்தான்.
                                 
                                 "ஏன்..பேலன்ஸ் பண்ண முடியலியா? " நடுக்கம் காட்டிக்கொடுத்துவிட்டதால் " வேணும்னா நான் ஓட்டவா?" என்று கேட்டு விட்டாள் அந்த தேவதை.

                   "அதெல்லாம் இல்ல. நீங்க கம்பர்ட்டபிளா உட்கார்ந்துக்கங்க" அது எனக்கு வெட்டி வீராப்பு என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும் 'நான் ஆம்பள'

             அந்த அற்ப சுகம் நூறு அடி ரோடு பெரியார் பாதை வரை கிடைத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும்  பெண்ணின் உடல் உரசுதல் பேரின்பமாக  தெரிகிறது.அவள் முகம் தெரியாத பெண் என்பதால்.! சகோதரி அல்லது மனைவியாக இருந்தால் அவன் பரிசுத்தமானவன். மேடு பள்ளம் பார்த்து  கவனமாக ஓட்டுகிறான். நான்  கோமாளி தேசத்து ராசா!

               என்னை விட  பெரிய ராசாக்களும் இருக்கிறார்கள்.

              "இந்த தேசத்தில் இருக்கிற காய்ச்சல் என்ன காய்ச்சல் என்பதே  தெரியாது. அதிகாரிகள் டெங்கு இல்லீங்கன்னாங்க. அதத்தான்  நான் சொன்னேன்." என்கிறார் சீனிவாசன் என்கிற அமைச்சர். இப்படியும்  ஒருவர். 

           நாட்டு நிலவரம் இன்னதென அறியாமல் இருப்பவர் நமக்கு தேவைதானா?

          துணை முதல்வர் ஓபிஎஸ்.சிடம் டெங்கு பற்றி கேட்டால் "விடுய்யா." என ஊடகங்களை மறுத்து விடுகிறார்.

       "  நில வேம்புக் குடிநீர் குடித்தால் மலட்டுத்தன்மை ஏற்படுமா இல்லையா என்பது பற்றி நாங்கள் இன்னமும் ஆராய்ச்சி பண்ண வில்லை. இனி பக்க விளைவுகள் பற்றி விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் "என்கிறார்  புகழ் பெற்ற கிங் இன்ஸ்ட்டிடியூட் மைய இயக்குநர் டாக்டர் குணசேகரன்.

          உண்மை நிலவரம் இப்படி இருக்க அமைச்சர் பெருமக்கள் கமல்ஹாசன் மீது கோபம் கொள்ளலாமா? டெங்கு காய்ச்சலுக்கு  நாள் ஒன்றுக்கு குறைந்தது எட்டுப் பேராவது சாகிறார்கள். ஆனால் பளபளப்பான மேடைகள்,பேனர்கள்,கட் அவுட்கள்,விழாக்கள் என்று  முதல்வர் எடப்பாடி கலந்து கொள்வது எம்.ஜி.ஆர். மீதுள்ள பற்று ,பாசத்தினால் என்றால் அது மக்களை ஏமாற்றுவது ஆகும்.அவர்கள்  உள்கட்சி வில்லங்கத்தை மறைப்பதற்காக நடக்கிற நாடகமே.

          மற்றொரு பக்கம் மெர்சல் படத்தில் வருகிற ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனத்தை நீக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்னார் போர்ப்பிரகடனம் செய்கிறார்.

                இது கோமாளித்தனமாக இல்லையா? கருத்து சுதந்திரம் கிடையாதா? சிவன் கோவில் இருந்த இடத்தில்தான் தாஜ்மகால் இருக்கிறது என பிஜேபி தலைவர் ஒருவர் கூறி இருப்பதை கவனித்தால்  பாபர் மசூதிக்கு ஏற்பட்ட கதி ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
        
           கோமாளி தேசத்து ராசாக்களைப் பற்றிய அச்சம் வந்திருக்கிறது.           

                     

               

சனி, 14 அக்டோபர், 2017

எடப்பாடியும் ஓபிஎஸ்சும் மோதல்.கோமாளி தேசமாகிறது.!

வலைப்பூ வாசிப்பாளர்களே,
               வணக்கம். வீட்டு விஷேசங்களுக்கு வருகிற சொந்தங்கள் " உங்க ஊர்ல டெங்கு எப்படி இருக்கு, எத்தனை பேர் செத்தாங்க.அதில சின்னப் பசங்க எத்தனை பேரு?" என்று கேட்டு விட்டுதான்  சொந்த பந்தங்களின் சுக,துக்கம் பற்றி கேட்கிறார்கள்.பெரும்பாலான உறவுகள்டெங்குவை சாக்காக வைத்துக் கொண்டு "வரவே பயமா இருக்கு மச்சான்.டெங்கு போனதுக்கு அப்புறமா வந்து முறை செஞ்சிடறேன்" என்று நழுவுகிறார்கள்.

             "ஊரை சுத்தம் பண்ணுங்க" என்று  பிரதமர் மோடி அய்யா அவர்கள் 'போஸ்' கொடுத்து விளம்பரத்துடன் சொன்னதும் நம்ம ஊர்ல இருக்கிற அத்தனை பிரபலங்களும் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு குப்பையை அள்ளி போஸ் கொடுத்ததுடன்  அவங்க கடமை அத்தோடு போச்சு என்று வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால் பராமரிப்பு வேலைகள் அனந்த சயனத்தில்! ' ஏன்யா குப்பையை அள்ளலே"  என்று கை நீட்டி ஒரு ஆளை கேட்க முடியவில்லை. சென்னையில் மந்திரிகளின் வீடுகளுக்கு முன்பாக குப்பைகள் குவிந்திருப்பதை விகடன் போட்டோ எடுத்து போட்டிருக்கிறது. இப்படி மந்திரிகள் வீட்டு வாசலே  நாறிக் கிடக்கிறபோது மத்த இடங்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்?

"டெங்குக்கு மருந்து என்னங்க?' என்று கேட்டால் " வாசலுக்கு முன்னாடி சாணியை கரைச்சி தெளி" என்று மேதாவி மந்திரி நாசா விஞ்ஞானி  செல்லூர் ராசு சொல்கிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் என்று மதுரைக்கு இலக்கிய பெருமை உண்டு.அந்த நகரத்தின் கண்மாய் பகுதி அந்தப் பெருமையை அள்ளிக்கொண்டு போய்விட்டது செல்லூர் கண்மாய்க்குள் அவருக்கு ஒரு சிலை வைத்தாலும் தப்பில்லை.மக்களே!.  

மொத்த டெங்கு தேசமும் நில வேம்பு கசாயத்தை நம்பிக்கொண்டு இருக்கிறது. டில்லியிலிருந்து வந்த ஆய்வுக்குழுவோ "நிலவேம்பு சரியான மருந்து இல்லை.மத்திய மாநிலஅரசுகள் அங்கீகரிக்கவில்லை." என்று குண்டு போட்டு  மக்களின் நம்பிக்கையை நாசமாக்கி இருக்கிறது.

இத்துடன் நிற்கவில்லை."நாற்பது பேர் செத்திருப்பதெல்லாம் பெரிய சாவா?" என்று கேட்டு அராஜகத்தின் உச்சம் பார்த்திருக்கிறார்கள்.நமது கோமாளி ராசாக்களும் மண்டையை ஆட்டி ஆட்டி ரசித்திருக்கிறார்கள்.

                "ஒண்ணா சேர்ந்திட்டோம்" என்று கை குலுக்கி விட்டு கட்டித் தழுவிக்கொண்ட  ஓ.பி.எஸ்.தற்போது   "கவுத்திப்புட்டா மச்சான்"என்று வடிவேலு ரேஞ்சுக்கு பீல் ஆகி  இருக்கிறார் என்கிறார்கள். "மெட்ராஸ் வேணாம் சார்!என்னைய  டில்லிக்கி  ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க"என்று கேட்ட கதையை தலைநகரம் முழுவதும் பேசுகிறார்கள். இடமாற்றம் கேட்பதற்காகத்தான்  மோடிஜியை சந்தித்தார் என்று எடப்பாடி தரப்பும் சொல்கிறது.

துணை முதல்வர் என்கிற பதவி அழுகிற குழந்தைக்கு கொடுக்கிற ரப்பர் சப்பி மாதிரி ஆகி விட்டது. சொந்தமாக ஒரு பைலையும் பார்க்க முடியவில்லை. எல்லாமே எடப்பாடியின் பார்வைக்குத்தான் செல்கிறது என்கிறார்கள்.ஒ.பி. எஸ்.சின் படத்தை எடப்பாடியின் ஆதரவாளர்கள் பேனர்களில் வைப்பதில்லை என்பது குமுறலில் ஒரு பகுதி. இதெல்லாம் டில்லிக்கு தெரியாமலா நடக்கும்?


தினகரனுக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ என்பதுதான் தற்போதைய  கவலை.  

புதன், 11 அக்டோபர், 2017

குஜராத்தில் காங்.கட்சியின் ஒய் திஸ் கொல வெறி பாட்டு தூள்!

குஜராத்தில் காங்.கட்சி கையில் எடுத்திருப்பது  தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொல வெறி?'யை.!

தனுஷின் பாடல் பகுதியை அப்படியே எடுத்துக் கொண்டு வாயசைப்புக்கு  ஏற்ப  வார்த்தைகளைப் போட்டு பின்னி எடுத்திருக்கிறார்கள். யூ டியூப்பில் 'ஒய்  திஸ் விகாஸ்.... விகாஸ் கண்டோ தயோ ஜி' தற்போது இதுதான்  வைரல்!

"கெட்டுப்போன ரோடுகள்,முடங்கிப்போன தொழில் முதலீடு, வேலை இல்லாக் கொடுமை, வரிச்சுமை இதையெல்லாம் வரிசைப்படுத்தி ரகளை  பண்ணியிருக்கிறார்கள். இப்போது குஜராத்தில் தனுஷ்தான் காங்.கட்சியில்  பிரசாரப் பீரங்கி.

பிஜேபி.க்கு முன்னைப்போல குஜராத்தில் செல்வாக்கும் இல்லை. உட்கட்சி குத்து, நிர்வாகச்சீர்கேடு என ஏகத்துக்கும் மைனஸ்கள். மோடி பிரதமராகிப் போனதும் திறமையான சி.எம்.கிடைக்கவில்லை என்பதாக மீடியாவில்  சொல்கிறார்கள். வாக்குறுதிகளும் காற்றோடு கலந்து விட்டன என்கிறார்கள்.

பிஜேபி சொன்ன எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்று  குஜராத்தில் மட்டுமா குமுறுகிறார்கள்.தமிழ்நாட்டிலும்தான் பாங்கி கணக்கில்  ஒவ்வொரு நாளும் பணம் சேர்ந்து விட்டதா , பிஜேபி சொன்ன வாக்குறுதிகள்  நிறைவேறிவருகிறதா என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் படு பாதாளம் போய் விட்டதாக பிஜேபி யின்  மூத்த  தலைவர்களே வருத்தப்பட்டிருக்கிறார்கள்.

என்ன செய்வது ..விதி !
 

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

முதல்மரியாதையை நடராசன்-சசியுடன் ஒப்பிடலாமா?

என்ன சொல்லபடுகிறது என்பதை உணர்த்த  கவர்ச்சிகரமான தலைப்பு தேவை.

யாரோ ஒரு பெண்ணாக இருந்தாலும் வீதியில் செல்பவளின் மார்பகம் அவனது  விழிகளுக்கு இலக்காவதைப் போல ,தலைப்பை பார்த்து விட்டே கட்டுரைக்குள்  நுழைகிறார்கள்.

அது சரிதானா?

பதில் தெரியவில்லை.கடற்கரை ஓரமாக விண் முட்ட வரிசையாக நிற்கின்ற  கட்டிடங்களைப் பாருங்கள். சுனாமியின் போது யாரோ ஒரு கெட்டிக்காரன் எடுத்த படம் என நினைக்கத் தோன்றும்.

உண்மையில் அப்படி இல்லை.! ஏன் அது மேகமாக இருக்கக்கூடாது? யாருக்கும் அப்படி நினைக்கத் தோன்றாது..படத்தின் தன்மை அத்தகையது. ஒருவன் ஹெலிகாப்டரில் பறந்து சென்றபோது இந்த காட்சி  அவனது விழிகளுக்கு  விருந்தாகப் பட்டிருக்கிறது .அலையையும் முகிலையும் இணைத்து கவிதை  எழுதி விட்டான். அவன் உண்மையை சொல்லும்வரை  "இது சுனாமி" என நாம் கதை விட முடியும்.

எனது வலைப்பூ வாசிப்பவர்களின் மனநிலை உணர்வதால் இதை சொல்ல முடிகிறது. இப்படி சொன்னது தவறு என நினைத்தால் எனது எழுத்தில் என்ன பிழை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். திருத்துவதற்கு அல்லது என்னை நானே அறிந்து கொள்வதற்கு  உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.நான் பெரிய எழுத்தாளன் இல்லை என்பதை நன்றாகவே தெரிந்திருக்கிறேன். செய்திகள் எழுதுவதுடன் சரி,! அதையே ஆசிரியர்தான் திருத்தம் செய்வார். வலைப்பூ நண்பர்களையும் ஆசிரியர் நிலையில் இருத்திப் பார்க்க விரும்புகிறேன்.என்னை புறம் தள்ள வேண்டாம்.

'தமிழ் மணம் ' நான் நேசித்து மணந்து கொண்டிருக்கிற தளம். அற்புதமான வாய்ப்பை தந்திருக்கிறது. அதை முழுமையாக பயன்படுத்த விரும்புகிறேன்.

இனி--

இன்று காலையில் எனக்கு வாட்ஸ் அப்பில்  நடராசன்- சசிகலாவை 'முதல் மரியாதை'படத்தில் வந்த ஒரு காட்சியுடன் ஒப்பிட்டு ஒரு காணொளி .

கட்டிலில் படுத்திருக்கிறார் நடிகர் திலகம். சோகத்தின் உச்சம் காட்டிய காட்சி .நடிகை  ராதா சோகம் சுமந்து  கண்ணீர் மல்க மெதுவாக அவரை நோக்கிச் செல்வார் .இசைஞானியின் பின்னணி இசை நமது நரம்புகளில் தடதடத்து  கடக்கும்.ரசிகர்களின் கன்னங்களில் கண்ணீர் முத்துக் கோர்த்தது போல வழியும்.

இந்த காட்சியுடன் நடராசனையும் சசிகலாவையும் ஒப்பிட்டது சரியெனப் படவில்லை.

ஐந்து நாள் பரோலில் வந்துள்ள சசிகலா  மருத்துவமனையில் ஒரு நாளில்  உச்சபட்சம் இரண்டு மணி நேரமே இருந்தார் என்கிறது செய்தி.   ஆனால் அப்பலோவில் அவர் எத்தனை மணி நேரம் தங்கி இருந்தார்? அதற்கான  காரணம் ஆதாயம் அப்பல்லோவில் படுத்திருந்தது.

கணவன்-மனைவி உறவு வேறு. அரசியல் உறவு வேறு. முன்னதை விட  அரசியல் உறவுதான் தெய்வீகமானது என்றாகிவிட்டது இக்காலத்தில்!
 

வியாழன், 5 அக்டோபர், 2017

என் ஆசை புதிய தமிழகம்.--கமல்ஹாசன்.

"என் ஆசை புதிய தமிழ் மாநிலம்.அடுத்த  தலைமுறையாவது காண வேண்டும் என்ற பல தலைமுறை ஆசையை  என் தலைமுறையாவது  நிறைவேற்றத் துடிக்கும் தமிழனின் ஆசை. யாம் முதல்வர் என்பது  என்னை மட்டுமே குறிப்பிடாது. என் மக்களைக் குறிக்கும். யாமே  முதல்வராக ,முதன்மையானவராக இருத்தல்  வேண்டும்."

  கமல்ஹாசனின் கருத்தில் எவர்க்கேனும் மாறுபாடு இருக்கலாம். குறிப்பாக  இற்றை நாள் வரை தங்களை மட்டுமே தமிழர்க்கான தலைவராக நினைத்துக் கொண்டு அரசியல் செய்யும் சிலருக்கு !

அவர்களை மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. எலிப் பொந்துக்குள் திசைகள் பார்த்துக் கொண்டிருக்கிற சிந்தனைவாதிகள்.! அவர்களுடைய  கோபம் இயல்பானதுதான்.

அரிதாரம் பூசியவன் நாட்டு அரசியல் பேசக் கூடாது  என்கிற பித்தம் சித்தம் நிறைய!

ஒரு வகையில் அது சரியாகவே இருக்கிறது. வாங்கிய அடியின் வலி ! அவர்களது ஆசையையும் சிதைத்திருக்கிறது. அவர்களை விட மக்கள் ரணமாகிப் போய் இருக்கிறார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டார்கள்.
கமலின் அரசியல் பிரவேசம் இவர்களுக்கு போட்டி இல்லை. கமல் வனம். இவர்கள் சாலை ஓரத்து செடிகள்.இவை புரியாமல்தான் அவர்கள் புகைகிறார்கள்  .

 கமலை நம்புகிற   மக்கள் தங்களை நம்பாமல்தான் இருந்திருக்கிறார்கள்   என்கிற உண்மை  புரிந்திருப்பதால் உள்ளம்  உலைக்களம் ஆகி இருக்கிறது.

இது குற்றம் ஆகாது.

காவி ஆடைக்குள் கத்தி மறைந்திருக்கிறது என்பது உண்மையாக இருக்குமேயானால்  தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களின் விழிகளில் சிவப்பேறுவது ஏன்.?

காரணம் இல்லாது போகுமா?

தமிழா...கண்டு பிடி!


.   

செவ்வாய், 3 அக்டோபர், 2017

சசிக்கு பரோல் கிடையாதா?

சசிகலாவுக்கு பரோல் கிடைக்காது என்று சில ஊடகங்களில் செய்தி.

மனசுக்கு கஷ்டமாக இருக்கு. ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு இந்த அம்மாவும் காரணமாக இருக்கலாம்னு மக்கள் நினைக்கிறாங்க.உண்மைதான். இன்னும் எவ்வளவோ சொல்றாங்க. ஆனாலும் அந்தம்மாவின் புருசன் நடராசன் உடல்நிலை கவலைக்கிடம்னு பத்திரிகைகளில் செய்தி வருது. கல்லீரல் கெட்டுப்போச்சு.கிட்னியும் செயல்படல. மாற்று உறுப்புகள் பொருத்தினால்தான் மனுஷன் உயிர் பிழைக்க வாய்ப்புன்னு சொல்றாங்க.

சாவு வாசக்கதவு  பக்கமாக வெயிட் பண்ணிட்டு இருக்கு, இவ்வளவு மோசமான  நிலைமையில் தாலி கட்டுன சம்சாரம் பக்கத்தில இருக்க வேணாமா? அந்த மனுஷன் மனசு ரத்தக்கண்ணீர் வடிக்குமா வடிக்காதா? அந்த அம்மாவை விட்டுத்தள்ளுங்க.ஆஸ்பத்திரியில் கிடக்கிற நடராசனுக்கு பொண்டாட்டியை  ஒரு தடவை பார்த்து விடலாம்கிற ஆசை,ஏக்கம் இருக்குமா இருக்காதா?மனசுள்ள மனுசங்க இரக்கம் காட்டுங்கய்யா!

நல்லா இருந்தப்பவும்  புருசனோடு சேர்ந்து வாழ அந்தம்மா விடல.செத்தும் வாழவிடல.சொத்தாசை பிடிச்சு இரண்டு பேரும் சேர்ந்து நாட்டை வேட்டையாடுனா தர்மம் விட்டிருமா?அதான் சோதிக்கிதுன்னு ஜனங்க  பேசிக்கிறாங்க.

எப்பவோ சசிகலாநடராசன் என்கிற பெயரை விவேகானந்தா சசிகலா என்று  கெஜட்டில் மாத்திக்கிட்டாங்களாம்.அதான் பரோலில் வெளிவர சிக்கலாக இருப்பதாக ஆங்கில இணையத்தில் செய்தி வந்திருக்கு.விவேகாநாதன் கிருஷ்ணவேணி சசிகலா என்பதுதான் முழுப் பேர்.அப்பாவின் பெயர் விவேகானந்தன் .இது தப்பு இல்லையே!

அந்த அம்மா வெளியில் வந்தால் சிலருக்கு சிக்கல் வரலாம்னு பயப்படுறாங்க. புருஷனை பார்த்து கத்தி கதறி அழுதா ஜனங்களின் அனுதாபம் கிடைக்கலாம்னு நினைக்கிறாங்க போல் இருக்கு. இதுக்காக புருசனை பார்க்கவிடாம இருக்கிறது பெரிய தப்புங்க.

எனக்கென்னமோ பரோல் கிடைச்சிரும்னுதான் தோணுது.

திங்கள், 2 அக்டோபர், 2017

சசிகலாவின் வருகை.அதிரடியாக இறங்குகிறார் தினகரன்

 பீமபுஷ்டி அல்வா சாப்பிட்ட தெம்பில் இருக்கிறார் தினகரன்.

அவருடைய ஆதரவு ச.ம.உ.க்களும் காயகல்பம் சாப்பிட்ட தெம்பில்.!

"சின்னம்மாவுக்கு பரோல் கேட்டிருக்கிறோம்.எம்.என்.னை பாக்க வர்றாங்க! வந்திட்டா! எடப்பாடி ஓபிஎஸ்.சுக்கு வேட்டுத்தான்.எத்தனை ச.ம.உ.க்கள்  எங்க பக்கம் வரப் போறாங்கங்கிறதை  நாடு பாக்கத்தான் போகுது" என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

ஆனால் கட்சிக்காரர்கள் யாரையும் சந்திக்கக்கூடாது .பேசக்கூடாது என்கிற நிபந்தனையுடன்தான் பரோல் அனுமதிக்கப்படும் என்கிற நம்பிக்கை  எதிர் அணி  எடப்பாடியாருக்கு இல்லாது போகுமா என்ன?

ஜெயலலிதாவை வெச்சு செஞ்சவங்களுக்கு எடப்பாடி அணியை என்ன செய்யனும்கிறது தெரியாமல் போய்விடுமா மக்களே!" சின்னம்மா வந்த பிறகு  என்ன நடக்கப்போகிறது என்பதை பாருங்கய்யா" என தினகரனே சொல்கிறார் என்றால் .....சங்கதி பெரிசுதான்!



உலகப் பெரு நடிகனின் புகழை டப்பா வீட்டுக்குள் அடைத்து விட்டவர்கள்  மட்டும் என்ன சாமான்யமானவர்களா? அவர்களுளை மந்திரிச்சு விட்டிருப்பது  பிஜேபி பெரிசுகள் ஆச்சே ?  காவிக்குல்லா போட்டுக்க சொன்னாலும் தலைகளைக் கொடுக்கும்  தன்மான சிங்கங்கள்தான் இவர்கள்.!

எல்லாம் சரி.! பரோல் கிடைக்குமா?
 

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

நடிகர் திலகம் மணிமண்டபம் திறப்பு விழாவும் எடப்பாடியாரும்.!

 தமிழ்த் திரை உலகின் கம்பீரம், புகழ்,பெருமை என்பதுடன் நில்லாமல் மேலும் பல கவுரவங்களை  உலக அளவில் பெற்றவர்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

அய்யா,அறிஞர், கலைஞர்.மக்கள் திலகம், மக்கள் என ஐவகை காப்பியங்களும் போற்றிப், புகழ்ந்து வளர்ந்தவர்  நடிகர் திலகம்  சிவாஜி கணேசன்.

அவருடைய 89- வது பிறந்த நாளன்று அவருக்கான 'மணிமண்டபத்தை' எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அதிமுக அரசு திறந்து வைத்திருக்கிறது..

மகிழ்ச்சி.

அந்த மாபெரும் கலைஞருக்கு சிலை வடித்து பெருமை சேர்த்தவர் கலைஞர் கருணாநிதி.உலகின் அழகிய மெரீனா கடற்கரையின் கரையில் இடம் கொடுத்து அழகு சேர்த்தார்.

ஆனால்...

திமுக அரசின் சாதனைகளை சொல்கிற எந்த அடையாளங்களிலும் கருணாநிதியின் பெயர் இருந்து விடக்கூடாது என்கிற காழ்ப்பில் இருந்த  ஜெயலலிதாவின் தலைமையில் நடந்த அதிமுக அரசு கலைஞரின் பெயர்களை அகற்றியது. செம்மொழிப் பூங்காவின் கல்வெட்டிலும்  காழ்ப்பு வழிந்தது. உலகப்புகழ்ப் பெற்ற மெரினாவில் சிவாஜி கணேசனின் சிலை கம்பீரமுடன் நெஞ்சு நிமிர்த்தி நிற்பதா என்கிற எரிச்சல் சிலையை அங்கிருந்து  அகற்ற வைத்தது.இவையெல்லாம் ஜெ.ஆட்சி செய்த காலத்து சிறப்புகள்!!!

மணிமண்டபம் கட்டுவதற்கு அரசு அளித்த நிலத்தில் நடிகர் சங்கம் மண்டபம்  எழுப்பாமல் காலம் தாழ்த்திய குற்றம் அந்த சங்கத்திற்கும் முந்தைய நிர்வாகிகளுக்கும் மட்டுமே உரித்தானது.இதை நடிகர்கள் மறந்துவிடக்கூடாது.

 சிவாஜியின் ரசிகர்களும் அபிமானிகளும் எழுப்பிய கண்டனக்குரலால் அன்றைய முதல்வராக இருந்த  ஜெயலலிதா தமது அரசே மணிமண்டபத்தை கட்டித்தரும் என்று சட்டசபையில் அறிவித்தார்.

அவர்  அறிவித்தபடி இன்று பிளவுபட்டு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிற  எடப்பாடியின் அரசு கட்டி முடித்து திறந்து வைத்திருக்கிறது..நன்றி.

இந்த மண்டபத்தை திறந்து வைப்பதற்கு அரசின் உயர் பதவியில் இருப்பவர்களில் எவரேனும் ஒருவர் வந்திருக்க வேண்டும்.முதல்வர் பதவியில் இருக்கிற எடப்பாடி வரவேண்டும் என்பதாக சிவாஜியின் குடும்பம் வருத்தமுடன் வற்புறுத்திய பின்னர் துணை முதல்வர் ஓபிஎஸ்.சை அனுப்பி வைப்பதாக அறிவித்தார் எடப்பாடி! இவர்   தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில்  நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார் என்கிறது  சன் தொலைக்காட்சி.மணிமண்டபம்திறப்பு விழாவுக்கு சென்றால் பதவி பறிபோய்விடும் என்பதாக சோதிடர்கள் சொன்னார்களாம்.



மணிமண்டபம் கட்டுவதில் அரசியல் செய்திருக்கிறது அரசு.

அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு உலக நடிகனின் விழாவில் அரசியல் பண்ணலாமா?

நடிகர்திலகத்தின் முக்கியமான படங்கள் அங்குள்ள கண்காட்சியில் இடம் பெறவில்லை.

சிலை அமைத்த கருணாநிதி யாரோ ஒருவர் அல்லர். முதல்வராக இருந்தவர்.
முதுபெரும் முத்தமிழ் அறிஞர்.இந்திய அரசியல் அறிந்தவர் புரிந்தவர். அவரது பெயர் சிலையின் பீடத்தில் இடம் பெறக்கூடாது என்பது இழிவான அரசியலாக தெரியவில்லையா?

"கலைஞர் பெயரை எங்கேயாவது ஓரத்திலாவது இடம் பெற செய்யுங்கள் " என  இளைய திலகம் பிரபு கேட்டுக் கொண்டதையாவது  நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.

அரசு அமைத்துள்ள மணிமண்டபம் முழு மனதுடன் கட்டப்படவில்லை. ஏதோ  ஒரு கடமைக்காக கட்டப்பட்டதாகவே இருக்கிறது.

விழாவில் யாரெல்லாம் கலந்து கொண்டிருக்க வேண்டுமோ அவர்களெல்லாம்  அழைக்கப்படவில்லை.பாலிவுட்டில் சிவாஜிக்கு வேண்டிய நண்பர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

"தற்காப்பு பெரிதல்ல.தன்மானம்தான் பெரிது" என்று முரசொலி விழாவில் கமல் பேசியதற்கு இன்றைய விழாவை பயன்படுத்திக் கொண்டு பதில் சொல்லியிருக்கிறார் ரஜினி.