ஞாயிறு, 24 டிசம்பர், 2017

மானஸ்தர்கள் தினகரனுடன் சேரலாம்!

      
( இது பில்டர் பண்ணி வடிகட்டிய கற்பனை. எவனாவது "என்னைத்தான் சொல்லிருக்கே"ன்னு கம்பு கபடாவை தூக்கிட்டு வந்தே... மவனே! சத்தியமா நான் உன் கையில மாட்டமாட்டேன்.! )

"மாப்ள. இவனுக நிச்சயம் ரெண்டு மாசம் கூட தாங்க மாட்டானுக. மானம் , ரோசம் இல்லாம பொழப்ப பார்க்கிறவனுக. நமக்கு முன்னாடியே போயி  குக்கரை  தூக்கிட்டு வாழ்கன்னு கத்தி கால்ல விழுந்துருவானுங்க.நாம்ம  பிந்துனோம்னு வெச்சுக்க. பழையபடி இவன்கிட்டதான் கை ஏந்தனும். முன்னாடியே போய் ஜோதியில சேந்தோம்னு வையி.! நாம்ம தான் சீனியர். என்ன சொல்றே?"

"கரெக்டா சொன்னடா மச்சான்! சீனியர் மட்டுமில்ல ..வட்டம் கிட்டம்னு எதாவது பொறுப்பு வாங்கலாம். இன்னிக்கே ஒரு எம்.பி. சொவத்தை தாண்டி  வந்திட்டார், "சின்னம்மாவின் செல்லப்பிள்ளையே.நாளைய மொதல்வரே! மோடிய மிரட்டும் சிங்கப்பிள்ளையே"ன்னு  வெளம்பரத்த தட்டி விட்டோம்னு வெச்சுக்கோ.அதான் நமக்கு அட்வான்ஸ் புக்கிங் மாதிரி!"

"சின்னம்மா -அண்ணன் படம் போட்ட பனியனை மொதல்ல வாங்கு! அதான்  நமக்கு மொதலு. "

"அதெல்லாம் அண்ணன் வீட்ல ப்ரீயாம் .அண்ணனை பாத்ததும் டபக்னு கால்ல விழறோம்.கூர் இல்லாத பிளேடால கைய கிழிச்சி ரத்தப்பொட்டு வெச்சுட்டு  "நீதாண்ணே சின்னம்மாவின் நிச வாரிசு"ன்னு கூவுறோம். . சுத்தி நிக்கிற அத்தனை பயலும் சேந்து கத்துவானுங்க. அப்புறம் நம்ம இமேஜ்தான் டாப்பு! டிவிகாரனுங்க அத்தனை பேரும் மூஞ்சில கொண்டாந்து மைக்கை செருகிடுவானுங்க.  பேப்பர்ல போட்டோ,பேட்டின்னு தூள் . என்ன சொல்ற?"

"அசத்துரடா மாப்ள! எனக்கொரு ஐடியா! அம்மா சமாதிக்குப் போனா அங்கேயும் டிவி பேப்பர்காரனுங்க .சும்மா கற்பூரத்த கொளுத்தி காட்டிட்டு  "அண்ணன் தினகரன் ஜெயிச்சா அம்மா சமாதில இருந்து அண்ணன் தினகரன் வீட்டுக்கு உருண்டுபோறதா பிராத்தனைன்னு " சொன்னம்னு வையி. பிரேக்கிங் நியூஸ் போட்ருவானுங்க."

"தார் ரோடுடா. ஒடம்பு வெந்திரும்"!

"அயே! அதுக்குள்ளே போலீஸ்காரனுங்க வந்து தூக்கிட்டு போயிருவானுங்க .அண்ணன் ஆளை அனுப்பி நம்மள மீட்டுருவாரு.அண்ணன் தனியா கூப்ட்டு பேசுவாரு.நெருக்கமாயிடலாம்.!"  

"மச்சான். நீ பிஜேபில இருக்கவேண்டிய ஆளு. என்னா மூளை! "

"ரொம்பவும் புகழாதே! அங்கே தமிழிசை இருக்கார்"

கருத்துகள் இல்லை: