ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஆர்.கே. நகர் தேர்தல் திமுகவுக்கு பின்னடைவா?

           "தினகரனை தோற்கடிக்காவிட்டால் நமக்கு மரியாதை இல்லை" என்று அதிமுகவும், "எப்படியாவது உங்களை வீட்டுக்கு அனுப்பியே தீருவேன்" என  டி.டி.வி.தினகரனும் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வாரி இறைத்து  கொண்டாடிய இடைத்தேர்தல்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.
         இங்கு நடந்து முடிந்திருக்கும் முடிவு தமிழகம் முழுவதும்  வருகிற  பொதுத் தேர்தலிலும்  எதிரொலிக்கும் என எதிர்பார்ப்பது  கடலில் காசைப் போட்டுவிட்டு தேடுவதைப்போலாகும். 
       இரண்டு பணத் திமிங்கலங்களுக்கு இடையில் நிகழ்ந்திருக்கும் 'ஆதிக்க எல்லையை ' வசப்படுத்துவதற்கான போட்டி என்பதாகவே கருதுகிறேன். தினகரன் ஒற்றை ஆளாக இருந்தாலும் தற்போதைய எடப்பாடி- ஓபிஎஸ் அணியை தகர்ப்பதற்கான வெடிகுண்டாகவே அவரை எடுத்துக் கொள்ள முடியும். ஆட்சியில் இருக்கும் அதிமுக வினர் அதிகாரத்தை முழுமையாகவே பயன்படுத்தினார்கள்.கட்டுக்கட்டாக பணம் இறைக்கப்பட்டது. குக்கர் அணிக்கு  அதிகாரப் பலமின்றி போனாலும் பணபலத்துடன் சகல உத்திகளிலும் வாக்காளர் களை  அணுகியது.இரு அணியினரும் பணம் கொடுத்தது தேர்தல் கமிஷனுக்கும்  தெரியும்.தெரிந்தே அனுமதித்தது சகுனித்தனம்.!
          "யார் அதிகமாக பணம் தருவார்கள் "என்கிற மனப்பான்மையில்தான் வாக்காளர்கள் இருந்தார்கள். அவர்களின் சிந்தனையில் உதயசூரியனோ, இரட்டை இலையோ இருக்கவில்லை. இரட்டை இலைக்கு வாக்களித்தால்  தொகுதியின் நிலை உயரப்போவதில்லை. உதயசூரியனுக்கு ஓட்டு அளித்தாலும்  தொகுதியின் நிலை அப்படியேதான் இருக்கும். மொத்தத்தில்  அதிமுகவில்தான் மாற்றங்கள் நிகழலாம்.ஒரே ஒரு ஆள் போனால் போகட்டும் .அடுத்த தேர்தலில் எவன் இந்த அளவுக்கு பணம் கொடுக்கப் போகிறான் என்கிற மனப்பான்மையே வாக்காளர்களிடம் இருந்தது. மேலும்  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மூச்சுடைக்கத் தேவையில்லை  என திமுக கருதியதால் அவர்களின் ஓட்டுகள் சிதறிவிட்டன என்றும் கருதலாம் . ஆனால் கடந்த தேர்தலில் வாங்கிய அளவுக்குக் கூட வாங்க வில்லை என்பது பரிதாபமே!இது பின்னடைவு இல்லை என்றாலும் தொண்டர்கள் மத்தியில்  சோர்வை ஏற்படுத்திருக்கும் என நம்பலாம்.
            தினகரனின் வெற்றிக்குப் பின்னர் திமுக தலைமை எத்தகைய முடிவு எடுக்கும் என்பது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தெரிய வரலாம்.
         எடப்பாடி -ஓபிஎஸ் அணி நிலைக்குமா? அணி மாறல் நிகழுமா?
         நீக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு தினகரனுக்கு  சாதகமாக இருக்குமா?
         சசிகலாவின் பிடிக்குள் மறுபடியும் அதிமுக சிக்கிவிடுமா?
         ஊழல் குற்றவாளி என உச்ச நீதி மன்றமே சொன்ன பின்னரும் ஜெ.யின்  பெயரை உயர்த்திப்பிடிக்கிற போது  சசிகலாவின் பெயரையும் சேர்த்து சொன்னால் என்ன குடி முழுகிப்போகும் ?  
        மோடியை நம்புவதைவிட  பங்காளியை நம்பலாம் என எடப்பாடி -ஓபிஎஸ் அணி முடிவு செய்தால் அது 

நன்மையா தீமையா? ரெய்டுகள் பாயுமா?
      இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு எத்தகைய முடிவுகளை அதிமுக எடுக்குமோ அதை முன்னிறுத்திதான் திமுக முடிவு எடுக்கும்.
      வைகோவின் ராசிதான் திமுகவை தோற்கடித்திருக்கிறது என திமுகவில் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
      அது திமுக தலைமைக்குத்தான் தெரியும்!
     தினகரன் வளர்கிறார்.மறக்காதீர்.
     

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

பாவம் கடைசியில் வைகோவும் வந்து பழிச்சொல்லுக்கு ஆளாகி விட்டாரே...

-கில்லர்ஜி

பெயரில்லா சொன்னது…

ஆர் கே நகர் வாக்காளர்க\ளில் பெரும்பாலோர் பணம் வாங்கி
பழக்கப்பட்டுவிட்டார்கள் . வோட்டு என்பது ஜனநாயக கடமை
என்பது மாறி தீபாவளி போனஸ் மாதிரி ஆகிவிட்டது. எவன் வந்தால்
எனக்கென்ன குடிக்க காசு வந்துச்சா போன்ற வாக்காளர்கள்
இருக்கும் தொகுதி அது. HIGHEST BIDDER யாரோ அவரே வெற்றி பெறுவார்.
இதை நன்கு உணர்ந்த தினகரன் கொடுக்க வேண்டியதை கொடுத்து
MLA ஆகி விட்டார். . இதே நிலைமை மற்ற 234 தொகுதிகளுக்கும்
வந்தால் தமிழகம் அதோகதிதான்.