புதன், 27 டிசம்பர், 2017

காற்றில் வாள் வீசும் ஓபிஎஸ் அண்ட் இபிஎஸ் கம்பெனி!

    தினகரனுக்கு வலது கரமாக இருந்தார் தங்க.தமிழ்ச் செல்வன்.

   வார்த்தைகளில் காரம் தடவி கபாப் போட்டார் நாஞ்சில் சம்பத்.

   'பச்சைத் துரோகிகள்' என்று சி.ஆர்.சரஸ்வதி வறுத்து எடுத்தார். காட்சி ஊடகங்களில் கார சார விவாதம்,தனிப்பேட்டி என்று இவர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.அணியை செமத்தியாக புரட்டி எடுத்தார்கள்.சவால்கள் விட்டார்கள்.

   அப்போதெல்லாம் விபாசனா தியானத்தில் இருந்தவர்களைப் போல  நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்தவர்கள் ஆர்.கே.நகரில் இடத்தைப்  பறி கொடுத்ததும் ஆவேசம் வந்தவர்களாக நடிக்கிறார்கள் பாருங்கள்.

    நல்ல வேளை நடிகர்திலகம் செத்துப் போயிட்டார்.

    அவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்களாம்.

    "நீ யார் நீக்குவது? பதவியிலிருந்து நீக்கி இருக்கிறீர்களே அந்த எம்.எல்.ஏ. அத்தனை பேரையும் நீக்கி விட்டதாக சொல்லேன் ,பார்க்கலாம்" என்று இ.பி.எஸ்.அணியைப் பார்த்து நையாண்டி செய்கிறார்கள் 'குக்கரன்" அணியினர். எந்தப் பக்கம் போனாலும் அடிக்கிறார்களே என்று கவலையில்  ஊறிப் பொய் இருப்பவர்களுக்கு சற்றே ஆறுதலாக வருமானவரித் துறை  சசியின் தொடர்புள்ள உறவுகள்,ஆதரவாளர்கள் அலுவலகங்களை குறி  வைத்து இன்று சோதனை நடத்தியது.குறிப்பாக மிடாஸ் மது ஆலை! ஆனால் எதைப்பற்றியும் கவலையில்லாமல் ,ஆர்.கே.நகர் தொ குதிக்கு நன்றி சொல்லவும் போகாமல் தினகரன் மவுனியாகி விட்டார்.
 
     தொகுதிப்பக்கம் போனால் எங்கே மீதிப் பணம் என்று கேட்பார்களோ என்கிற பயத்தில் குக்கர் தூக்கிகள்.

    'ஓட்டு வாங்கி ஜெயிச்சாச்சு .இனி காசு கழட்டினால் என்ன,கழட்டாவிட்டால் என்ன ?' என்கிற மிதப்பில் இருக்கிறார்கள் தினகரன் அணியினர்.ஆட்சியில் இருப்பவர்களோ காற்றில் வாள் சுழற்றுகிறார்கள்.முன்னதாகவே தினகரன்  பக்கமாக போய் விட்டவர்களை நீக்கிவிட்டதாக சொல்லி  அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள்.

     சனிப்பெயர்ச்சி இவர்களுக்கு தனியாக நடக்குமோ என்னவோ?
 

கருத்துகள் இல்லை: