சனி, 30 டிசம்பர், 2017

ஜெயாவின் வீட்டை நினைவகமாக்குவது நீதியா?

    திங்கள் மலர்ந்தால் புதிய ஆண்டு.

   மாற்றங்கள் நிகழும் , நிகழ வேண்டும் என்கிற நம்பிக்கையில் நல்லவர்கள்.

   யார் நாசமாகப் போனால் நமக்கென்ன என கிடைத்த  பிறர் சொத்துகளை பங்கு போட்டுக்கொள்ள திட்டங்கள் வகுக்கும் ஆட்சியாளர்கள். அவர்களை நம்பி உடந்தையாக இருக்கிற அதிகார வர்க்கம்.

   ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த  பின்னரும் அவரது போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவகமாக  மாற்றுவதற்கு எடப்பாடி அரசு ஆயத்த வேலைகளில் இறங்கி இருக்கிறது.

  ஜெயாவின் மரணத்திற்கு பின்னர் அந்த இல்லம் யாருக்குச் சொந்தம் என்பது  பற்றி உயில் எழுதி வைத்திருக்கிறாரா?

   தெரியவில்லை.உயில் இருக்கிறதா, மறைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது  புனைந்து எழுதப்பட்டவை ஏதேனும் உள்ளதா? மர்மம்.அல்லது சிதம்பர ரகசியம். ஜெயாவின் மர்ம மரணத்தைப் போலவே அவரது உயிலும் மர்மமாகவே இருக்கிறது.

  முறைப்படி,நியாயப்படி, தர்மப்படி அந்த இல்லம் ஜெயாவின் ரத்த உறவுகளுக்கே சொந்தமாக வேண்டும்!

    ஆனால் எந்த உறவும் இல்லாமல் சசிகலா உரிமை கோருவதாக சொல்கிறார்கள். உடன்பிறவா சகோதரி என சொன்னதாலேயே  சொத்துக்கு  சொந்தமாகி விட முடியுமா?

  ஜெயா முதல்வராக இருந்ததாலேயே அவருக்குப் பின் அவரது இல்லத்தை அரசு நினைவிடமாக்க முடியுமா? உறவுகள்,மனைவி சம்மதம் பெற்ற பின்னர்தான் எம்.ஜி.ஆரின் இல்லத்தை நினைவிடமாக்கியது அரசு. இங்கே  ஜெயாவின் ரத்த சொந்தம் தீபா ,தீபக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து  இருக்கிறார்கள்.அப்படி இருக்கும்போது தன்னிச்சையாக அரசு முடிவு எடுக்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது என்பது எனக்கு தெரியாது. நான் பாமரன்.

  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இல்லம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது, அவரது வாழ்ந்த ராமாபுரம் இல்லம் எப்படியெல்லாம் சேதாரம் அடைந்து  இருக்கிறது என்பது அவற்றை பார்த்தவர்களுக்கு தெரியும்.

   இவை மட்டுமல்ல  வருமானத்துக்கு அதிகமாக அதிகாரத்தைப்பயன்படுத்தி சொத்துக்குவித்த முதல் குற்றவாளிக்கு அரசு நினைவகம் கட்டுவது நல்ல  உதாரணம் இல்லை. இவருக்கு நினைவகம் என்றால் நாளை வீரப்பனுக்கு  நினைவகம் கட்டினால் என்ன என்கிற கேள்வி எழும். இனவெறியர்களால்  கொல்லப்பட்ட, கொடூரமாக வேட்டையாடப்பட்ட எம்மின மக்களுக்கு நினைவகம் எழுப்பியதை தவறு என வாதாடுகிற வம்பர்கள்தான் இன்று ஜெயலலிதாவுக்கு நினைவகம் அமைப்பதற்கு வாதாடி வருகிறார்கள். அவர்களுக்கு போராளிகளுக்கும்,கொள்ளை அடித்தவர்களுக்கும் வேறுபாடு  தெரிந்தும் தெரியாதவர்களைப் போல நடிக்கிறார்கள்.

அவர்கள் யாராக இருந்தாலும் பொதுவாழ்க்கைக்கு தகுதி அற்றவர்கள்.
     

கருத்துகள் இல்லை: