ஞாயிறு, 10 டிசம்பர், 2017

விஷால் அரசியல்வாதியா?

                              நான் அரசியல் பேசினால் அரசியல்வாதி  ஆகி   விடுவதில்லை .எனக்கு  சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது.கவலை இருக்கிறது. எனது கடமை  தீயவன் கையில் அதிகாரம் போய்விடக்கூடாது என்பதற்காக தேர்தலில் ஓட்டுப் போடுகிறவன்.வசதி இருந்தால் வேட்பாளனாகவும்  நிற்கலாம் . அதனால்  எனக்கு சுயேச்சை என்கிற பெயர்.
             அரசியல் பேசுவது உரிமை.யாரும் பேசலாம்.விஷால் பேசினால் என்ன குடிமுழுகிப் போகும்? அந்த நடிகரைக் கண்டு எதற்காக ஆளும் கட்சி பயம்  கொள்கிறது? ஒரு சுயேச்சையைக் கண்டு அதிர்வதேன்? தோற்கடிக்கும் வலிமை இருப்பின் பொறுப்புத்தொகையை இழக்கச்செய்யலாமே!
          உச்சநீதிமன்றத்தினால் குற்றவாளி என சுட்டிக்காட்டப்பட்டவர்களுக்கு  மாலை போட்டு மண்டியிட்டு வணங்கும் அடிமைகள் ( அவர்களே  தங்களை  இப்படித்தான் சொல்லி விளம்பரப்படுத்தினார்கள்.) சின்னம் கிடைத்து    விட்டதால்  வெற்றி பெறுவது சுலபம் என நினைக்கிறார்கள். காய்ந்த இலையில் கறிச்சோறு பரிமாற முடியுமா?
        ஒகி புயலால் உடைந்து கிடக்கும் குமரி மாவட்டத்துக்கு செல்ல எடப்பாடி ,ஓபிஎஸ் இருவருக்கும் வழி தெரியவில்லை.வாகனமும் கிடைக்கவில்லை. ஆர்.கே.நகரில் புதையலைத் தேடுகிறார்கள்.அதை யாரிடம் கொடுக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன!
      களவாணியை கக்கத்தில் வைத்துக்கொண்டே 'பட்டணம் பறி போகிறது' என்கிறது பிஜேபி. சாலை மறியல் என்கிற  நாடகம் வேறு! ஓரங்க நாடகம் போட்டாலே ஆள் சேராது.இதில் இப்படி ஒரு கூத்து.! 
     இந்தியாவின் உயர்ந்த அதிகாரத்துடன் இருக்கிற நீதிமன்றத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப் பார்க்கிறது மத்திய பிஜேபி அரசு. வருமான வரித்துறை,உளவுத்துறை, சிபிஐ மூன்றும் தனது சுய அதிகாரம் இழந்து அரசிடம் அடமானம் போய்விட்டது.தற்போது மிச்சம் இருப்பது நீதித் துறை  மட்டுமே! அதுவும் ஐசியு போகிறது என்பதை முன்னாள் நீதியரசர்கள்  சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
           

கருத்துகள் இல்லை: