சனி, 30 டிசம்பர், 2017

திமுகவுக்கு எதிரி ஆகிறார் ரஜினிகாந்த்.!

 ஆண்டவன் சொல்லிவிட்டான்

"நீ அரசியலுக்கு செல்லலாம் "என்று!

அதனால் "அரசியலுக்குவந்துவிட்டேன்.தமிழகத்தின்அத்தனை தொகுதிகளிலும் போட்டியிடுவேன்" என்கிற அறிவிப்பையும் இன்று அறிவித்து விட்டார் ரஜினிகாந்த்.

திரைத்துறையிலிருந்து அரசியல் பிரவேசம் செய்கிற நடிகர்களில் இவர் விஜயகாந்துக்கு அடுத்து கால் வைத்திருக்கிறார்.ரஜினியை அடுத்து  கமல் வரலாம்.யாரும்அரசியலுக்குவரலாம்!

கட்சியின் பெயர், கொள்கைகள் என எதையும் அறிவிக்கவில்லை. கொள்கைகளைப் பார்த்து வாக்களிக்கும் அளவுக்கு தமிழர்களின் அறிவு வளரவில்லை என நினைத்திருக்கலாம்.ஏனென்றால் அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்கு மாறாகவே எல்லா கட்சிகளும் நடந்து கொண்டிருப்பதால்  அது அவசியமில்லை எனநினைத்திருக்கலாம்.

ஆனால்  " ஆன்மீக அரசியல்" என்பதை  அவரின்  இன்றைய பேச்சில் அழுத்தமுடன் பதிவு செய்திருக்கிறார்.


ஆன்மீகஅரசியல் என்பது பிஜேபியின் மறைமுக வழி. ஆனால்  ரஜினி அதை  பகிரங்கமாக சொல்லி இருக்கிறார்.. ஆக ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பின் பின்பலமாக பிஜேபி இருப்பதாக நம்பலாம். தனித்து நின்று  சாதிக்க முடியாததை மக்கள் செல்வாக்குள்ள ஒருவரது துணையுடன் செய்து முடிக்க பிஜேபியின் சாணக்கியம் பயன்பட்டிருக்கிறது. .!பிஜேபியின் கிளைக்கழகம் என்றே கருதுகிறேன்.

திராவிட அரசியலுக்கு எதிரானதுதான் ஆன்மீக அரசியல்.

"பெரியார், அண்ணா, கலைஞர் என்கிற வழி வந்த திராவிட அரசியலுக்கும் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும்தான் போட்டி!

ஆன்மீக அரசியல் என்றால்  என்ன என்பதை  ரஜினியும் சொல்லவில்லை. ஆனால் கீதையை  சொல்லித் தொடங்கியதற்கு என்ன காரணம்.? குரான்,பைபிளில் இருந்தும் சொல்லி இருக்கலாமே? தமிழர்களின் வேதமான குறளில் இருந்து சொல்லி இருக்கலாம். ஆனால் அவருக்கு மெட்ராஸ்தான் பிடிக்கும்.தமிழ்நாடு பிடிக்காது. இது அவர் சொன்னதுதான்.!

'மண்ணின் மைந்தர்கள்தான் ஆளவேண்டும் 'என்பதை ஆழக் குழி தோண்டி புதைப்பதுதான் ஆன்மீக அரசியல் !

"அரசியல் சிஸ்டத்தில் மாற்றம் வேண்டும் " என்கிறார். "எது கெட்டு இருக்கிறது" என்பதையும் சொல்லி இருக்கலாம். "தமிழகத்தைப் பார்த்து  மற்ற மாநிலங்கள் சிரிக்கின்றன" என்கிறார் ரஜினி.இதுகாலம் வரை அந்த சிரிப்பை  ரஜினி ரசித்துக் கொண்டிருந்தது ஏன்?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகம் கொள்ளை அடிக்கப்பட்டது. முதல் குற்றவாளியான அவருக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது எதுவும் சொல்லாதவர்தான் ரஜினி.ஜனநாயகம் கெட்டதே ஜெயலலிதாவின்
காலத்தில்தான்!

அவர் தற்போது கட்சிக்கான அடிப்படைக்கட்டத்தை வலுவாக அமைக்கும் வழியாக தனது மன்றங்களை முறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.இது சாமர்த்தியமான நடவடிக்கை. கட்சியின் தலைவனாக இருந்து கொண்டுகிராம மக்களை,அப்பாவிகளை இணைக்க முடியாது என்பதை தெளிவாக அறிந்திருப்பதால்தான் நடிகனாக இருந்துகொண்டு அவரது திரைப்படம்  வெளிவரும் காலகட்டத்தில் மன்றங்களை வலுவாக்குகிறார் .இது  அவருக்கு  எளிது.எளிது.!

அரசியலுக்கு வந்து விட்டேன் என சொல்லும் ரஜினி "நாளையிலிருந்து எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன் ,விமர்சிக்க மாட்டேன் " என்றால் அன்றாட அரசியலை விமர்சிக்கிற  கடமையில்  இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது ஏன்? 

காலா திரைப்படத்தின் கட்டணம் ஆயிரம் வரை விற்கப்படும் வாய்ப்பை தடுத்து விட்டு அரசியல் பேசலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

இப்படி எத்தனையோ கேள்விகள். 

  

கருத்துகள் இல்லை: