ஞாயிறு, 24 டிசம்பர், 2017

இபிஎஸ்--- ஓபிஎஸ் அணி. கை கழுவுவாரா மோடிஜி?

          புட்டிப்பால் புகட்டி புகட்டி வளர்த்த எடப்பாடி,ஓபிஎஸ் அணி மூக்கு உடைந்து  புழுதியில் புரள்கிறதே போலித்தாய் பிஜேபியின் நிலை என்ன?

        அடித்த கொள்ளையை கண்டு கொள்ளாமல் சீராட்டி வளர்த்த  அந்த வளர்ப்புக்   குழந்தையை என்ன செய்யப்போகிறது?. பெற்ற குழந்தை பிஜேபிக்கு பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து வளர்த்தால் அது சவலைப் பிள்ளையாக ஆர்.கே. நகரில் ஆடை கிழிந்து நிற்கிறது.அதை வளர்த்தும் இனி பயனில்லை.ஆகவே  ஆதரவற்றோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கவேண்டியதுதான்! சத்துணவு கொடுத்து வளர்த்தாலும் ,சலைன் ஏற்றி காத்தாலும் பலன் என்னவோ பூஜ்யம்தான்!

      "கிலுகிலுப்பையை காட்டியதும் பின்னாலேயே போயிட்டோம்.தப்புத்தான் தாயே .திரும்பி வந்திட்டோம்.ஏத்துக்க" என்று சின்னாத்தாவிடம் கெஞ்சு  கெஞ்சு  என கெஞ்சினாலும் கட்டையடிதான் கிடைக்கும். ஆத்தாவே  ஒடுங்கி 'அடங்கியே' போனார் என்கிற போது இந்த செல்லாத நோட்டுக்கு என்ன மதிப்பு இருக்கும்?
          பிஜேபியின் அடுத்த கட்ட மூவ் என்னவாக இருக்கும்?

       ஆளுநர் ஆட்சிக்கு 3 மாதம் வரை அவசியம் இருக்காது.

        எம்.எல் .ஏக்கள் நீக்க வழக்கை வைத்துக் கொண்டு தினகரனுடன் பேசிப் பார்க்கலாமா? சின்னாத்தாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கலாமா என்றால் காங்கிரஸ் அரசு கை கொடுக்காது. ஆனால் ஆபத்து  இருப்பதாக சொல்லி பிஜேபி ஆளும் மாநிலத்துக்கு மாற்றலாம் அல்லவா?

          குக்கரை கைக்குள் போடுவதற்கு  சின்னாத்தாவின் தயவு கண்டிப்பாக வேண்டும்.  

         தினகரனை வழக்குகளால் முடக்க முடியுமா? அது முடியாமல் போனதால்  தானே வருமானவரித்துறையினரை ஏவி விட்டு அச்சத்தை  விதைக்கப் பார்த்தார்கள். அப்படி சோதனை நடத்தி அள்ளிச்சென்றதாக சொன்னாலும் ஆர்.கே.நகரில் பணமழை பொழிந்ததே  அது எப்படி? கண் கொள்ளாக்காட்சியாக விநியோகம் இருந்தும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருந்ததற்கு யார் காரணம்?

       அதிமுகவை வைத்து பிஜேபியை வளர்க்கலாம் தமிழகத்தில் கால்  ஊன்றி  விடலாம் என கணக்குப் போட்டார்கள்.நோட்டாவுடன் கூட  அவர்களால் போட்டியிட முடியவில்லை.நச்சுச்செடி என வேரோடு பிடுங்கி எறிந்து விட்டார்கள்.

     அதிமுகவின் தோல்வியைப் பற்றி கருத்து சொல்லாமல் இபிஎஸ்.அண்ட் ஓபிஎஸ் அணி திமுகவின் தோல்விக்கான காரணத்தை சொல்லி தப்பித்துக் கொள்ளப்பாத்திருக்கிறது.எந்த புண்ணியவான் எழுதிக் கொடுத்த அறிக்கையோ? ஜெயலலிதாவின் தொகுதியில் இரட்டை இலையை வைத்துக் கொண்டு வெற்றி பெற முடியாத இவர்களை மோடி நம்பமாட்டார் என்றே தோன்றுகிறது.
   

கருத்துகள் இல்லை: